சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

வாழ்க வளமுடன்!

பிஞ்சுக் கால்களுடன்.. ஒரு அஞ்சு நிமிஷம்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

பூக்கள், ஆரவாரமாக ஓடும்; அன்னமென நடக்கும்; பகீரெனச் சிரிக்கும்; பரக்கப்பரக்கப் பேசும்; கண்கள் உருட்டிப் பார்க்கும். கவலைகளையெல்லாம் மறக்கச் செய்யும். அந்த வண்ண வண்ணப் பூக்களை, யாருக்குத்தான் பிடிக்காது?!

நான் பூக்கள் என்று சொன்னது, குழந்தைகளை!

நீலம், சிவப்பு, ரோஸ், பச்சை என எந்த நிறத்தில் சீருடை இருந்தாலென்ன... அந்தச் சீருடைகளை அழகாக அணிந்துகொண்டு, கால்களுக்கு ஷூ போட்டுக்கொண்டு, முதுகில் புத்தகப் பையும், கையில் பிளாஸ்டிக் கூடையுமாக, பூக்கள் நடந்து வரும் அழகுக்கு ஈடேது, இணையேது?

மாலை வேளையில், பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் வழியில் அந்தக் குழந்தைகளை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா? நடையில் வேகமும் பார்வையில் படபடப்புமாக, விநாடிகள் நிமிடங்களாகாதா எனும் ஏக்கத்துடன் கூட்டை நோக்கித் திரும்புகிற பறவைகள்போல், பரபரத்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? சற்றே ஆழ்ந்து, கூர்ந்து அவர்களைக் கவனித்தால், நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி... சட்டென்று உங்களுக்குள் தாய்மையின் கனிவு, நிறைந்து வழியும். அவர்கள் அனைவரையும் அள்ளியெடுத்துத் தலை கோதிவிட்டு, ஒழுகுகிற மூக்குச் சளியை துடைத்து, அவிழ்ந்திருக்கிற சட்டைப் பட்டனையும், ஷூ லேஸையும் போட்டுவிடுவதற்குக் கைகள் ஆசைப்படும். தாய்மை என்பது உணர்வு சம்பந்தப்பட்டது; எனவே, அது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல!

##~##
ஒவ்வொரு ஆணுக்குள் பெண் தன்மையும், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆணின் குணாதிசயமும் உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள். ஆக, நமக்குள்ளே தாய்மை எனும் தாமரை பூத்த தடாகம் நீர் நிரம்பி, பூக்கள் மலர்ந்து மணம் பரப்பக் காத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அப்படிப்பட்ட தாய்மையின் கனிவுடனும், வாஞ்சையுடனும் நாம் இருக்கப் பழகிக்கொண்டால், எங்கும் எதிலும் ஏற்றமும் இல்லை; இறக்கமும் இல்லை. இன்ப- துன்ப மாற்றங்கள் நம்மை ஒன்றும் செய்துவிடாது. படபடப்பு குறையும்; நிதானம் அதிகரிக்கும். அந்த நிதானம் தருகிற அமைதி, ஆடி மாதக் காவிரியென இன்னும் இன்னும் அன்பைப் பெருக்கும்; காற்றைப் போல், நாலாதிசையிலும் எல்லோரிடத்திலும் பரவி வியாபிக்கும்! அப்படி, அன்புக்குப் பஞ்சமின்றி நாமிருக்க, நம்மைத் தேடியும் அன்பு ஓடிவரும்; மனசை இதப்படுத்தும். ஒன்றைக் கொடுத்தால்தான் ஒன்றைப் பெற முடியும்; நாம் அன்பைக் கொடுத்தால் அன்பைப் பெறலாம்தானே!

'அடடா.. குழந்தைகளை வாரியணைத்துக் கொஞ்சுவதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார், சுவாமி’ என்பதாக மட்டுமே நினைத்துவிட்டு, அடுத்தடுத்த பயிற்சிக்குச் சென்றுவிடாதீர்கள். சற்றே நின்று, நிதானித்து, கவனிக்க வேண்டிய இடம் இது.

வாழ்க வளமுடன்!

பூக்கள் என்று குழந்தைகளைச் சொன்னேன். பள்ளி முடிந்து வருகிற அந்தக் குழந்தைகளை, தாயானவள் என்ன செய்வாள்? 'கன்னுக்குட்டி... வாடா செல்லம்’ என்று சொல்லிக்கொண்டே, வாரியெடுத்து மடியில் போட்டுக் கொள்வாள். குழந்தையின் பிஞ்சுக் கால்களை நீவி விட்டபடியே, சாக்ஸ் மற்றும் ஷூக்களைக் கழற்றி வைப்பாள். இறுக்கத்தில் கிடந்த அந்தப் பிஞ்சு விரல்களை மெள்ள வருடுவாள்; சொடுக்கெடுப்பாள். பாதங்களைப் பிடித்துவிடுவாள்; அந்த இரண்டு பாதங்களையும் தன் கன்னங்களில் வைத்துச் சீராட்டுவாள். அவ்வளவுதான்... அந்தக் குழந்தை அடுத்த ஆட்டத்துக்கும் குதியலுக்கும் தயாராகிவிடும்!

வீடுகள்தோறும் நடைபெறுகிற, தினம் தினம் எழுதப்படுகிற கவிதை இது! 'இந்தத் தாய்மைக் குணத்தின் பரிவு நமக்குக் கிடைக்காதா? நமக்குக் கரிசனம் காட்டமாட்டார்களா?’ என ஏங்கித் தவிக்கிற குழந்தைகளைத் தெரியுமா, உங்களுக்கு?! அந்தக் குழந்தைகள்... உங்களின் கால்கள்!

கால்கள் குழந்தையெனில், அதற்குத் தாயும் தகப்பனும் நீங்கள்தான்! தாயின் மடியில் கிடைக்கிற நிம்மதிக்கு இணையானது இந்த உலகில் எதுவுமில்லை, அல்லவா! ஆகவே, உங்கள் குழந்தைகளை, உங்கள் கால்களை தாய்மையின் பேரன்புடன் கொஞ்சம் கவனியுங்கள். தாலாட்ட வேண்டாம்; சீராட்டுங்கள், போதும்!

உங்களின் இடது மடியில் வலது காலின் பாதத்தை வைத்துக் கொள்ளுங்கள். விரல்களில் இருந்து ஆரம்பமாகிற பாதத்தை மறு முனை வரைக்கும், அப்படியே மெள்ள மெள்ள அழுத்திவிடுங்கள்; இரண்டு கைகளின் கட்டை விரல்களைக் கொண்டு, அப்படியே பிடித்துவிடுங்கள். அவசரம் வேண்டாம்; காக்கா குளியல் போலின்றி, அடுப்படியில் நின்றுகொண்டு, தட்டேந்தியபடி, ஐந்து நிமிடத்தில் ஆறு இட்லியைச் சாப்பிடுகிற அவசரமின்றி, அருவிக் குளியலைப்போல நிறுத்தி, நிதானமாக, மென்மையாக, ஆரவாரமில்லாத அமைதியுடன் பாதங்களைப் பதமாகப் பிரித்து, வாஞ்சையுடன் வருடிக் கொடுத்து, கனிவுடன் பிடித்துவிடுங்கள்.

வாழ்க வளமுடன்!

கால்களின் பெருவிரல், அடுத்த இரண்டு விரல்கள், கடைசி இரண்டு விரல்கள் என மெதுவாக அழுத்தி விடுங்கள்; அடுத்து, பெருவிரலின் கீழ்ப்பகுதியிலிருந்து சுண்டுவிரலின் கீழ்ப்பகுதி வரை, ஒரே நேர்க்கோடிட்டபடி அழுத்திவிட்டு, பிறகு... குதிகாலில் இருந்து மேலிருந்து கீழாக மெள்ள அழுத்திவிடுங்கள். அடுத்ததாக, உள்ளங்கால் பகுதியை மறந்துவிடாதீர்கள். இந்தத் தருணங்களில், உங்களின் இரண்டு கைகளின் பெருவிரல்கள் அழுத்துவதற்கும், மற்ற எட்டு விரல்களும் கால்களின் இன்னொரு பக்கத்திலுமாக இருக்கவேண்டும்.

அடுத்து, பாதத்தின் பக்கவாட்டுப் பகுதி, கணுக்கால் மூட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி, கீழிருந்து மேல், மேலிருந்து கீழ் என மூன்று முறை அழுத்துங்கள். பிறகு, வலது உள்ளங்கையை மேலேயும், இடது உள்ளங்கையை கீழேயுமாக வைத்துக்கொண்டு, மூன்று முறை அழுத்திக் கொடுங்கள்.

அதையடுத்து, இடது தொடையில் வலது புறங்கையை வைத்துக்கொண்டு, வலது காலின் கணுக்காலில் இருந்து முழங்கால் வரை, மெள்ளப் பிடித்து விடுங்கள். மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் அப்படிச் செய்யும்போது, புத்துணர்ச்சி ஒன்று உங்கள் உடம்பில் மெள்ளப் பரவியோடுவதை உணர்வீர்கள்.  

இப்படியாக, வலது மற்றும் இடது கால்களைக் கனிவுடன் பிடித்துவிட, வாஞ்சையுடன் அழுத்திக் கொடுக்க... அவை ஒன்றுக்கு நான்கு பங்காக உங்களுக்குத் திருப்பித் தரும்; உங்களை சோர்வடைய வைக்காமல், சுறுசுறுப்புடன் நடக்கும்; தெம்புடன் ஓடும்; படிக்கட்டுகளில் ஏறினாலும் ஆடுகால் தசைக்கு ஒரு இறுக்கமும் ஏற்படாது; முழங்காலின் கீழ்ப் பகுதிகளில், தடித்துப்போனதான உணர்வு எழாது.

அதனால்தான், ஆரம்பத்திலேயே சொன்னேன்... ஒன்றைக் கொடுத்தால்தான் ஒன்றைப் பெற முடியும். அதாவது நம் கால்களுக்கு அன்பைக் கொடுப்போம்; அந்தக் கால்களிடமிருந்து அன்பை அபரிமிதமாகப் பெறுவோம்!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா