Published:Updated:

நாளை நமக்காக!

ஆறுவது சினம்!திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்

நாளை நமக்காக!

ஆறுவது சினம்!திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்

Published:Updated:
நாளை நமக்காக!
##~##

முற்றும் துறந்த முனிவர்கள், விஸ்வாமித்திரரும் துர்வாசரும். ஆனால், அவர்களால் கோபத்தை மட்டும் ஏனோ துறக்க முடியவில்லை. அடுத்தடுத்து சீற்றம் கொண்டு, அள்ளியள்ளிச் சாபம் வழங்கியதில், இந்த இரண்டு முனிவர்களுக்கு நிகரானவர்கள் நமது புராணங்களில் வேறு எவருமில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகரிஷி விஸ்வாமித்திரரின் சீற்றத்துக்கு மகாராஜா தசரதரே அஞ்சியதையும், அதனாலேயே வசிஷ்ட முனிவரின் அறிவுரைப்படி ராம லட்சுமணர்களை விஸ்வாமித்திரருடன் காட்டுக்கு அனுப்பியதையும் பதிவு செய்திருக்கிறது, இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம்.

துர்வாச முனிவரின் சீற்றத்துக்குப் பாஞ்சாலி பயப்பட்டதையும், அவளது அட்சயப் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரே ஒரு கீரைத் துணுக்கை தான் உண்டு, உணவு வேண்டி வந்த துர்வாசரின் பசியை கிருஷ்ணன் அடக்கியதையும் பதிவு செய்திருக்கிறது, மற்றொரு இதிகாசமான மகாபாரதம்.

ஆனால், கடும் கோபத்தால் விஸ்வாமித்திரரும் துர்வாசரும் சாதித்ததுதான் என்ன? ஒவ்வொரு முறை சாபம் அளிக்கும்போதும் இவர்களது தவச் சக்தி வீணாயிற்று. பல்லாண்டுகளாகத் தியானத்தின் மூலம் சேமித்த ஆன்மிக ஆற்றல் கிடுகிடுவெனக் குறைந்தது. அதைச் சரி செய்வதற்காக மறுபடியும் கானகத்தையும் மலைப் பிரதேசங்களையும் நாடிப் போய், மீண்டும் தவத்தில் ஈடுபட்டார்கள். இவர்கள் நிகழ்த்திய தவத்துக்கு, இவர்கள் மட்டும் கோபத்தை முற்றிலுமாக வென்றிருந்தால், இவ்விருவரும் அடைந்திருக்கக்கூடிய நிலையே வேறு! மாபெரும் உன்னத நிலையை அடைய ஒட்டாமல், சீற்றம் இவர்களைக் கட்டியிழுத்துக் கீழேயே நிறுத்திவிட்டது.

ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றியும், காஞ்சிப் பரமாச்சார்யர் பற்றியும், ரமண மகரிஷி பற்றியும் எத்தனையோ ஆதாரபூர்வமான செய்திகளைக் கேள்விப்படுகிறோம். ஆனால் அவர்கள், யாரையேனும் கடுமையாகக் கோபித்துக் கொண்டதாக எங்காவது கேள்விப்பட்டிருக்கிறோமா? படித்திருக்கிறோமா?

நாளை நமக்காக!

உண்மையான மெய்ஞ்ஞானிகள், எவரிடமும் கோபம் கொள்வதில்லை. மனிதர்கள் இப்படி இருக்கிறார்களே என்று அவர்கள் வருத்தப்பட்டிருக் கிறார்கள். ஆனால், மனிதர்களை அவர்கள் சினந்து சீறியதில்லை. அவர்களின் தவ ஆற்றல் குன்றாமல் குறையாமல் செயல்பட்டதற்கு, அவர்கள் கோபத்தை முற்றிலுமாகத் துறந்திருந்தார்கள் என்பதே முக்கியக் காரணம்.

கோபம் குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஒருவனின் மதிப்பைக் குறைக்கிறது. கோபம், கோபப்படுபவனின் தேக ஆரோக்கியத்தைக் குலைக்கிறது.

'செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்,  அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்’ - என்கிறது வள்ளுவம். நம் கோபம் யாரிடத்தில் செல்லுபடியாகிறதோ, அவரிடத்தில் நாம் கோபப்படாமல் இருக்கப் பழக வேண்டும். நம் கோபம் யாரிடம் செல்லாதோ, அவர்களிடம் நாமே கோபம் கொள்ளாமல்தான் இருப்போம்.

ஒருவன் தன் மேலதிகாரியிடம் கோபிப்பதே இல்லை. கோபித் தால் வேலையை விட்டுப் போக வேண்டியதுதான். ஆனால், அவன் தன் மனைவியிடமும் குழந்தைகளிட மும் கோபிக்காத நாள் இல்லை. ஏன்? அவர்கள் வேறு வழியின்றி வாலைச் சுருட்டிக்கொண்டு இவனது கோபத்துக்கெல்லாம் ஈடுகொடுத்துப் போகிறார்கள் அல்லவா, அதனால்தான்! தன் கோபத்தில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ, மனைவி என்பவள் தன்னால் கோபித்துக் கொள்ளப்படுவதற்காகவே பிறந்த பிறவி என்பது பல ஆண்களின் எண்ணம்.  

நாம் பெரிதும் அன்பு செலுத்துபவர்கள் மீது தான் அதிகம் கோபம் கொள்கிறோம் என்றும், ஆனால் அவ்விதம் கோபம் கொள்வது தவறு என்றும் அழகாக அறிவுறுத்துகிறார் வேதாத்திரி மகரிஷி. அதனால்தான் தியானத்தில் ஆழ்ந்து, தியானம் முடியும்போது, நாம் பாசம் செலுத்தும் மனைவியையும் குழந்தைகளையும் மனத்தில் நினைத்து 'வாழ்க வளமுடன்!’ என்ற அந்த உயர்ந்த தமிழ் மந்திரத்தை ஜபிக்க வேண்டும் என வற்புறுத்துகிறார்.

அப்படி ஜபிக்கும்போது உண்மையிலேயே நம்மால் பாசம் செலுத்தப்படுபவர்கள் வாழ்வார்கள் என்பது மட்டுமல்ல; அவர்கள் மேல் அடிக்கடி கோபம் கொள்ளும் நம் குணமும் முற்றிலும் மாறிப் போகும். நம் ஆழ்மனம் அவர்கள் நம் பாசத்துக்கு உரியவர்கள் என்ற உண்மையை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.

என் நண்பர் ஒருவரிடம் சாதாரணமாகக் கேட்டேன், 'உங்கள் பையன் நன்றாகப் படிக்கி றானா?’ என்று. உடனே வள்ளென்று விழுந்தார் அவர். 'நல்லாத்தான் படிக்கிறான். ஆமா, அதுக்கென்ன இப்போ?’ என்றார்.

எனக்குத் திகைப்பாக இருந்தது. நான் செய்த குற்றமென்ன? அடிக்கடி குடும்ப விஷயங்களை நாங்கள் எங்களுக்குள் விசாரித்துக்கொள்வது வழக்கம்தானே? இந்தக் கேள்வியில் ஏதேனும் தவறா? அவரும் இதுபோன்ற கேள்விகளை என்னிடம் கேட்டு, அதன்வழி தன் அன்பைத் தெரிவிப்பவர்தானே? இப்போது மட்டும் அவர் ஏன் என்னிடம் இப்படிக் கோபித்துக் கொள்ள வேண்டும்?  

கொஞ்ச நேரம் சென்றது. நண்பரே என்னைத் தேடி வந்தார். 'மன்னிக்கவேண்டும். நான் வேறு ஏதோ யோசனையில் இருந்தேன். அதுதான் கோபித்துக் கொண்டுவிட்டேன்’ என்றார்.

மன்னிப்புக் கோரியது அவரின் பெருந்தன்மை. ஆனால், அவர் சொன்ன பதில் எனக்குப் புரியவில்லை. அவர் வேறு ஏதோ யோசனையில் இருந்தார் என்றால், அது அவர் பாடு. அதற்காக என்னிடம் கோபித்துக்கொள்வதற்கு எங்கிருந்து உரிமை பெற்றார் அவர்? என்றேனும் ஒருநாள் அவர் என்னிடம் பேசும்போது, நான் வேறு ஏதோ யோசனையில் இருந்தேன் என்று சொல்லி, அவர் கன்னத்தில் பளாரென்று ஓங்கி ஓர் அறை விட்டால், அதை ஒப்புக்கொள்வாரா? முகத்தில் அறைவதற்கும் முகத்தில் அறைவதுபோல் பேசுவதற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா?

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களும் மன நிம்மதி வேண்டும் என்று நினைப்பவர்களும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நம் பிரச்னை நமது தனிப்பட்ட பிரச்னை. அதனால் ஏற்படும் உணர்ச்சி அலைகளை அடுத்தவரிடம் காட்ட நமக்கு ஒருபோதும் உரிமை இல்லை.

ஆரோக்கிய ரீதியிலான பிரச்னைகளும் பொருளாதார ரீதியிலான பிரச்னைகளும் ஏதோ நமக்கு மட்டுமே இருக்கின்றன என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை. எல்லோரும் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கித் தவிப்பதாகத்தான் இருக்கிறது இன்றைய வாழ்க்கை முறை. இந்த வாழ்க்கையை நாம் ஜெயிக்க வேண்டுமானால், நண்பர்களைத்தான் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, விரோதிகளை அல்ல!

நாளை நமக்காக!

நமது சுபாவங்கள் மட்டமாக இருக்கும்போது அவற்றை மெள்ள மெள்ள மாற்றி, இன்னும் சிறப்பான பண்புகள் உடையவர்களாக நம்மை உருவாக் கிக் கொள்ள முயல வேண்டும். அதற்கான தொடர்ந்த மனப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு, 'எனக்குச் சில பிரச்னைகள் இருக்கிறது; நான் வேறு ஏதோ யோசனையில் இருந்தேன்’ என்றெல்லாம் நமது தப்பான நடவடிக்கைகளுக்கு சால்ஜாப்பு தேடுவது பரிதாபகரமானது. இதைப்போன்ற சமாதானங்களால் நாம் தொடர்ந்து அதே கீழ்நிலையிலேயே இருக்க வழி தேடுகிறோம்.

நமது தேவையற்ற கோபதாபங்களே, நம் முன்னேற்றத்துக்குக் குறுக்கே நிற்கும் இமயமலைகள். அவற்றைத் தகர்ப்பது என்பது நம்மிடமே இருக்கிறது; அடுத்தவர்களிடம் இல்லை. 'என்ன வரங்கள் பெருமைகள் வெற்றிகள் எத்தனை மேன்மைகளோ, தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது சத்தியம்’ என்றான் மகாகவி பாரதி. தன்னை வெல்வதில் தலையாயது தனது கோபத்தை வெல்வது.

கோபம் தோன்றும்போது, ஒன்று இரண்டு மூன்று என்று மனத்தில் வரிசையாக எண்ணத் தொடங்கினால், கோபம் உடனே மட்டுப்படும் என்கிறார்கள். கோபம் தோன்றும் சந்தர்ப்பத்தில், தெய்வ பக்தி உள்ளவர்கள் அவரவர்களுக்கு விருப்பமான இறைநாமத்தை ஜபிக்கத் தொடங்கலாம்.

கோபப்படுவதால் நண்பர்களை இழக்கிறோம்; நமக்கு உதவுபவர்கள் எண்ணிக்கை குறைகிறது; இவற்றை விட முக்கியமானது, கோபம் நம் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி, நம் ஆரோக்கியத் தைக் குலைக்கிறது.

வாழ்வின் முக்கியமான இரண்டு பேறுகள் மன நிம்மதியும் ஆரோக்கியமும்தான். இரண்டையுமே கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கும் கோபத்துக்கு நாம் இடம் அளிக்கலாமா?

(சிறகு விரிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism