தொடர்கள்
Published:Updated:

நாளை நமக்காக!

திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்

நாளை நமக்காக!
##~##

மோகம் வேறு, காதல் வேறு என்று சொல்லப்படுகிறது. மோகம் என்பது காமம் சார்ந்தது என்று சிலரும், காதல் என்பது காமம் சாராதது என்று சிலரும் சொல்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.

உடல் இச்சை முற்றிலும் இல்லாத புனிதக் காதல் என்று ஏதும் உண்டா என்ன? அப்படி இருக்குமானால், அதைத் தூய நட்பு என்றோ, சகோதர பாசம் என்றோ சொல்லிக் கொள்ளலாமே? காதல் என்பது சந்தேகமில்லாமல் உடல் கவர்ச்சியும் பாலுணர்ச்சியும் சேர்ந்ததுதான். அப்படியல்ல என்று சொல்வது வெறும் பம்மாத்து.

அதே நேரம், உடல் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அது இரண்டாம் பட்சமாகிறபோது, அது காதலாகிறது. உடல் கவர்ச்சியே பிரதானமாகிறபோது அது மோகமாகிறது. மற்றபடி, உடல் கவர்ச்சி முற்றிலுமே இல்லாத காதல் என்பது நூறு சதவிகிதப் பொய்.

காதலுக்கு உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் அனுமதி உண்டு. அதை உலகம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், வரம்பு கடந்த பாலுணர்வைத் தூண்டும் மோகத்துக்கு என்றும் அனுமதி இல்லை. அது மனிதனின் வாழ்வைச் சீரழித்துவிடும். காமமும் கோபமும் இரட்டைக் குழந்தைகள். காமம் இருக்குமிடத்தில் கட்டாயம் கோபமும் இருக்கும். காம உணர்வு அதிகம் உள்ளவர்கள், அதிகம் கோபம் கொள்பவர்களாகவும் இருப்பதை நடைமுறையில் பார்க்கலாம்.

தனது அளவுகடந்த கோபத்தின் காரணமாக எல்லோரையும் நடுநடுங்க வைத்துக் கொண்டிருந்த விசுவாமித்திரரின் சரித்திரத்தைப் பாருங்கள். அவர் தமது தவத்தைக் கலைக்க வந்த மேனகை மேல் அளவற்ற காமம் கொண்டு, தவநிலையிலிருந்து கீழிறங்கி, சகுந்தலை என்ற பெண் குழந்தையைப் பெற்றார்.

மோகவயப்பட்டுப் பெற்றதுதான் பெற்றார்; தான் பெற்ற குழந்தையின் தந்தை என்ற பொறுப்பை ஏற்றாரா? தன்னால் தாயாக்கப்பட்ட மேனகையையும், தன் குழந்தை சகுந்தலையையும் நிர்தாட்சண்யமாக நிராகரித்துவிட்டு, மீண்டும் தவம் செய்யப் போய் விட்டாரே, அது எந்த விதத்தில் நியாயம்?

தாய் மேனகையும் தன் குழந்தை சகுந்தலையை நிராகரித்தாள். குழந்தையை அநாதரவாகக் கானகத்தில் விட்டுவிட்டு, வானுலகம் சென்றாள். ஆனாலும், தாய்மை தன் பொறுப்பை முற்றிலுமாகக் கைகழுவ இயலாமல் தத்தளித்தது. எனவேதான், பின்னாளில் துஷ்யந்தன் சகுந்தலையை நிராகரித்தபோது, தன் மகளுக்கு அடைக்கலம் கொடுக்க முனைந்தாள் அவள். கணவனால் கைவிடப்படுவதன் கொடுமையை ஏற்கெனவே உணர்ந்திருந்ததுதான் அவள் தன் மகள் சகுந்தலைக்கு அடைக்கலம் அளிக்க முயன்றதற்குக் காரணமோ?

புறக்கணிக்கப்பட்ட பெண் சிசுவான சகுந்தலையை கண்வ மகரிஷி கண்டெடுத்து வளர்க்கவில்லை எனில், அவள் கதி என்னவாகியிருக்கும்? காதலோடு இருவர் கைப்பிடித்து மணந்து நடத்தும் இல்லறத்தால் சமுதாயம் பாழாவதில்லை. அத்தகைய அளவான புலன்நுகர்ச்சியை சமூகம் ஆதரிக்கவே செய்கிறது. ஆனால், காமம் கொண்டு புலன்நுகர்ச்சியில் ஈடுபட்டு, அதனால் விளையும் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதால்தான் சமுதாயத்தில் பற்பல இடையூறுகள் உருவாகின்றன.

பாலுணர்வை ஓர் இயல்பூக்க உணர்வு என்றும், அது முறையாகத் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டியதுதான் என்றும் இன்று பலர் பேசுகிறார்கள். அந்த வாதத்துக்கு ஆதரவாக உடலியல், உளவியல் காரணங்களை அடுக்குகிறார்கள். ஆனால், காந்தி சொல்லும் கருத்துகளும் சிந்தனைக்கு உரியவையே!

நாளை நமக்காக!

புலனின்ப நினைவுகளை மன அளவிலும் துறந்துவிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்றும், மனதளவில் மோகச் சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு உடலளவில் கட்டுப்படுத்த முனையும்போதுதான் புலனடக்கம் விபரீத விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும் மகாத்மா ஆராய்ச்சிகளுடன் ஆதாரபூர்வமாகச் சொல்கிறார் (பார்க்க: காந்தி எழுத்துகளின் தொகுப்பு வரிசை-4).

உடல் சுகத்தில் நாட்டம் உள்ள மனிதர்கள் எவ்விதம் அதிலிருந்து விடுதலை பெறுவது என்பது பற்றியும், அதற்கான வழிவகைகள் பற்றியும், 'காமத்தை வெல்லுதல்’ என்ற தலைப்பில் உளவியல்

ரீதியாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் அலசுகிறார் சுவாமி சிவானந்தர் (பார்க்க: 'வாழ்விலும் ஆத்மானுபூதியிலும் வெற்றிக்கு நிச்சயமான வழிகள்’ என்ற நூல்).

பசி போன்ற அடிப்படை உணர்வோடு பாலுணர்வை ஒப்பிட முடியாது என்றும், பசியை அடக்கச் சாப்பிடாமல் இருந்தால் உயிர் வாழவே இயலாது என்றும், ஆனால், மனதளவிலும் பாலுணர்வுச் சிந்தனை களைத் துறந்துவிட்டால் உடல் ஆரோக்கியம் பெரிதும் மேம்படும் என்றும் காந்தி அறிவிக்கிறார்.

பாலுணர்வைத் தோன்றும்போதே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இல்லாதுபோனால் அது உடலளவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இன்று பலரால் முன்வைக்கப்படும் கருத்தை ஒரு வாதத்துக்காக  உண்மையென்றே கொள்வோம்.

மது அருந்தியும் புகை பிடித்தும் உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்பவர்கள் எத்தனை பேர் இங்கே? 'பாலுணர்வை முற்றிலும் துறப்பதால் உடல் நலம் கெடுமெனில் அதையும் ஏற்பேன்; ஆனால், அந்த உணர்வுக்கு இடம் கொடுக்க மாட்டேன்’ என்று எண்ணும் கம்பீரம் இன்று இளைஞர்களிடம் ஏன் இல்லை? பாலுணர்வுக்கு ஆதரவாகச் சொல்லப்படும் வாதங்களுக்கெல்லாம் அடிப்படை, ஆழ்மனத்தில் அதை அனுபவிப்பதில் ரகசியமாகப் பொதிந்திருக்கும் தீவிர இச்சைதான் என்று சொல்வது சரியாக இருக்குமா?

இவையெல்லாமே விவாதத்துக்கு உரிய சிந்தனைகள்தான். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. புலன்நுகர்ச்சியில் அளவோடு ஈடுபடுவதைவிட்டு, அளவுகடந்து ஈடுபடுவது என்பது உடல் நலத்தையும் மன நலத்தையும் பெருமளவில் கெடுத்துவிடும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. புலன்நுகர்ச்சியில் அளவுகடந்து ஈடுபடுவதே மோகம் எனப்படுகிறது. அதனால்தான் 'மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு!’ என்று கதறினார் பாரதியார்.

இன்று இணைய தளங்கள் மூலமும், நாலாந்தரத் திரைப்பாடல்கள் மூலமும், வெளிப்படைப் பாலியலை எழுதி எழுத்துப் புரட்சி செய்வதாகக் கூறும் சில தற்கால இலக்கியப் படைப்பாளிகள் மூலமும் பாலுணர்ச்சி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. புலனடக்கத்தோடு வாழ்வது என்பது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த இளைஞர்களுக்கு எவ்வளவு சுலபமாக இருந்ததோ, அவ்வளவு சுலபமாக இன்றைய இளைஞர்களுக்கு இல்லை. மன அடக்கத்துக்கு விரோதமான போக்குகள் சுற்றிலும் இருக்கும்போது, மனத்துக்கு வேலியிட்டு வாழ்வது கடினம்தான்.

ஆனாலும், இன்றைக்குப் பெரும்பாலான இளைஞர்கள் மன முதிர்ச்சியோடு, தங்கள் வாழ்வியல் முன்னேற்றம் ஒன்றையே கருத்தில் கொண்டு, எச்சரிக்கையாக புலன் அடக்கத்துடன் வாழ்கிறார்கள் என்பது பெருமைக்கு உரியதாக இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சில விஷயங்களை, ஊடகங்களால் பெரிதுபடுத்தப் படும் செய்திகளை மனத்தில் கொண்டு, இன்றைய இளைஞர்களே இப்படித்தான் என்று தப்புக்கணக்கு போட வேண்டியதில்லை. எத்தனை விஞ்ஞான முன்னேற்றங்கள் வந்தாலும் உடல்ரீதியான சில அடிப்படை உண்மைகளில் என்றும் எந்த மாற்றமும் இல்லை என்பதிலும், பிறப்பதிலோ பிறந்தவர் என்றேனும் ஒருநாள் இறப்பதிலோ மாற்றமில்லாததுபோல், வாழ்கிறவரைக்கும் உடல் நலத்தைப் பராமரித்து வாழவேண்டும் என்ற கருத்திலும் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.

புலன்நுகர்ச்சியை முற்றிலுமாகத் துறந்து வாழ்வதில் வேண்டுமானால் மாற்றுக் கருத்து இருக்கலாமே தவிர, அளவுகடந்த புலன்நுகர்ச்சி உடல் நலத்தைக் கெடுத்துவிடும் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. காதலிக்க இயற்கை அனுமதிக்கிறது. ஆனால், அளவுகடந்த பாலுணர்ச்சி எனும் மோகத்தை மனித உடலின் தன்மைகள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி புலன்நுகர்ச்சியைப் பொறுத்தவரை முற்றிலும் உண்மை.

நாளை நமக்காக!

காதலுக்காக இளம் வயதினர் பலர் உயிரை விடவும் தயாராக இருக்கிறார்கள். என்ன பைத்தியக்காரத் தனம்! வாழ்க்கையில் காதலும் ஓர் அங்கம்தான். ஆனால், காதலை விடவும் உயர்ந்த விஷயங்கள் உலகில் இல்லையா என்ன?

96 வயது வாழ்ந்த தன் தந்தையைப் பராமரிப்பதற்காக, திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து, தந்தையின் அந்திம காலம் வரை அவருக்கு உறுதுணையாக இருந்து, இறுதியாத்திரைக்கும் பரிவோடு வழியனுப்பி வைத்த ஒருவரை நீங்கள் அறிவீர்களா? அவர் முகத்தில் தென்படும் ஆனந்தத்தை நீங்கள் பார்த்து வியந்தது உண்டா?

மூத்த பெண்ணாகவோ ஆணாகவோ பிறந்து, இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால் முழுக் குடும்ப பாரத்தையும் நிர்பந்தத்தால் மட்டுமின்றி, தானேயும் விரும்பிச் சுமப்பவர்கள் எத்தனை பேர்! தனக்குப் பின் பிறந்த உடன் பிறப்புகளுக்கெல்லாம் மணம் செய்துவைத்து, தான் மணம் புரிந்துகொள்ளாமலே வாழும் அத்தகையோர் இன்றும் பாரத தேசத்தில் பலர் உண்டே! எனவே, புலன்நுகர்ச்சி, காதல் என்பதெல்லாம் வாழ்வின் லட்சியங்களாக இருக்க முடியாது. காதலைத் தாண்டியும், வாழ்வில் என்றும் நம்மைக் கைவிடாத அற்புதமான லட்சியங்கள் பல இருக்கின்றன.

எதிர்பாலினரை மட்டுமே ஏன் காதலிக்க வேண்டும்? சக மனிதர்களை நேசிக்கலாமே? நாம் சார்ந்திருக்கும் துறையைக் காதலிக்கலாமே? துறைசார்ந்த காதல் அல்லவா வாழ்வின் இறுதிநாள் வரை கூட வரும் நிலையான காதல்? அத்தகைய காதல் கொண்ட இன்னும் பல அப்துல்கலாம்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது பாரதம்.

(சிறகு விரிப்போம்)