Published:Updated:

நாளை நமக்காக!

நாளை நமக்காக!

நாளை நமக்காக!

நாளை நமக்காக!

Published:Updated:
நாளை நமக்காக!
##~##

தெய்வங்களைக் குழந்தை வடிவில் போற்றுகிறோம். 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே!’ என்ற மனப்போக்கோடு, தெய்வத்தையே குழந்தையாக்கிக் கொண்டாடுகிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குருவாயூரில் கையில் புல்லாங்குழலோடு கலகலவெனச் சிரித்துக்கொண்டே நிற்கிறான் குழந்தைக் கண்ணன். வெண்ணெய் திருடிய அவன், அடியவர்களின் தூய மனமென்னும் வெண்ணெயையும் சேர்த்தே திருடுகிறான். 'நான் பிரகலாதப்ரியன் மட்டுமல்ல; பக்தப்ரியனும்கூட!’ என்று, நாராயணீயம் எழுதிய நாராயண பட்டத்திரியின் காதில் விழுமாறு கணீரென்று குரல்கொடுத்த கருணையே உருவான வடிவல்லவா அந்த தெய்வக் குழந்தை!

பழநியில் ஆடை அணிகள், ஆபரணங்கள் ஏதுமின்றி வெறும் கோவணத்தைக் கட்டிக்கொண்டு ஆண்டியாக நிற்கிறது முருகக் குழந்தை. ஆயிரம் கோடி நிலவுகள் பூத்தது, அதன் அழகு முகம்! அந்தக் குழந்தையை அப்படியே எடுத்து இடுப்பிலே வைத்துக் கொள்ளலாம்போல், அதன் பேரழகு நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.

எத்தனைக் காலமானாலும் முருகனுக்கு வயதே ஆகாது; அவன் என்றும் குழந்தைதான் என்பதை உணர்ந்த கண்ணதாசன், 'யுகங்களெல்லாம் மாறி மாறிச் சந்திக்கும்போது, அவன் முகமலரில் மட்டும் என்றும் முதுமை வராது!’ என்று முருகனின் நிரந்தரக் குழந்தை வடிவத்தைக் கொண்டாடினார்.

அந்த முருகக்குழந்தை சூரனை வதைத்த தலம் திருச்செந்தூர். அங்கே அந்த முருகக் குழந்தையின் சந்நிதியில்தானே ஆதிசங்கரர் சுப்ரமண்ய புஜங்கம் அருளினார்?!

முருகன் சந்நிதியிலிருந்து ஒரு பாம்பு புறப்பட்டு வளைந்து வளைந்து விறுவிறுவென வெளியே சென்றது. பார்த்து வியந்தார் சங்கரர். பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு, எப்படி இமயமலையை விட்டு இங்கே வந்தது? ஏற்கெனவே செந்தூரில் உள்ள பாம்புதானோ அது? 'எங்கள் இனத்தாரை நாகாபரணமாய் அணியும் உன் தந்தையான அந்த நஞ்சுண்டனிடம் கோபித்துக்கொண்டு வந்தாய் அல்லவா? நானும் உன்னிடம் கோபித்துக்கொண்டு வெளியேறுகிறேன்!’ என்று அது வெளிநடப்புச் செய்ததோ? வளைந்து செல்லும் பாம்பைப் பார்த்த சங்கரர், அதே விதத்தில் வளைந்து வளைந்து செல்லும் சந்தத்தில் அங்கே இயற்றிய சுலோகம்தானே 'ஸதாபால ரூபாபி விக்னாத்ரி ஹந்த்ரி’ எனத் தொடங்கும் சுப்ரமண்ய புஜங்கம்!

நாளை நமக்காக!

ஆனால், கண்ணனுக்கும் முருகனுக் கும் கிடைத்த குழந்தை வடிவம், ஏனோ ஸ்ரீராமருக்குக் கிட்டவில்லை. குலசேகர ஆழ்வார்  'மன்னுபுகழ் கோசலை மணிவயிறு வாய்த்தவனே!’ என்று தாலாட்டுப் பாடி, ராமக் குழந்தையைத் தூங்க வைக்க முயன்றபோதுகூட, அவரால் ஸ்ரீராமனின் பிள்ளை விளையாட்டுகளைப் பாடித் தாலாட்ட இயலவில்லை. 'தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய்!’ என்றெல்லாம் பின்னாளில் ஸ்ரீராமன் செய்த செயல்களைச் சொல்லித்தான் குழந்தை ஸ்ரீராமரைத் தாலாட்டுகிறார் அவர்.

ராமக் குழந்தை நிலவு வேண்டும் என அழுத போது, சுமந்திரர் வெள்ளிக் கிண்ணத்தில் இருந்த தண்ணீரில் வெண்ணிலவின் பிரதிபிம்பத்தைக் காட்டிச் சமாதானப்படுத்தினார் என்கிறது ஒரு ராமாயணம். மற்றபடி, ராமனின் பிள்ளைப் பிராயத்து லீலைகள் அதிகம் பாடப்படவில்லை.

ஒருவேளை, சிறுவனாக இருந்தபோது உண்டி வில்லில் சிறு கல்லை வைத்து கூனியின் முதுகில் அடிக்க, அதனால் வெஞ்சினம் கொண்ட அவளால் தன் எதிர்கால வாழ்வில் நிகழவிருப்பதையெல்லாம் ஸ்ரீராமன் முன்னரே உணர்ந்தான் போலும்! அதனால் நம் வாழ்வைக் குலைக்க இந்த ஒரு பிள்ளை விளையாட்டு போதும், வேறு விளையாட்டு வேண்டாம் எனக் கருதிவிட்டானோ?

திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ், மீனாட்சி யம்மைப் பிள்ளைத் தமிழ் என்றெல்லாம் தெய்வங்களைக் குழந்தையாக்கி இலக்கியம் படைத்திருக்கிறார்கள் புலவர்கள். குமரகுருபரர் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழில், 'தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே!’ என்று அன்னையை வருகைப் பருவத்தில் சிறுமியாக அழைத்தார். அப்போது, அன்னையே சிறுமியாக வந்தாளாம். பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த அரசர் திருமலை நாயக்கரின் கழுத்திலிருந்த முத்துமாலையை உரிமையோடு எடுத்து, குமர குருபரரின் கழுத்தில் பரிசாய் அணிவித்து மறைந்தாளாம். அன்னையை அன்னையாய்ப் பாடி மனம் குளிர்விப்பதைவிட, குழந்தையாய்க் கண்டு பாடி, குளிர்விப்பது சுலபம் என்ற ரகசியத்தைக் கண்டுகொண்டுவிட்டார் குமரகுருபரர்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த பிரபல சொற் பொழிவாளர் புலவர் கீரனின் மறைவைத் தாங்க முடியாமல் தவித்தது, அவரது காதல் மனைவி திருமதி செல்லப்பாப்பாவின் மனம். செல்லப்பாப்பா தன் துயரைப் போக்கிக் கொள்வதற்காக, கணவர் பெயரிலேயே கீரன் பிள்ளைத் தமிழ் என்ற செய்யுள் நூல் எழுதினார். 'மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும், மடிமீது விளையாடும் சேயாக வேண்டும்!’ என்று கவியரசர் சொன்ன இல்லறத் தத்துவம், கீரன் இறந்த பின்னர் அவர் மனைவி விஷயத்தில் உண்மையே ஆயிற்று.

கண்ணனை, பாரதி குழந்தை வடிவில் எப்படியெல்லாம் கொஞ்சுகிறார்! 'நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்’ பாரதி, கண்ணனை எத்தனை வடிவங்களில் வழிபட்டாலும், கண்ணனை அவர் குழந்தையாய்க் கொஞ்சும்போது, அது கூடுதல் கவித்துவத்தோடு பிரகாசிக்கிறது. தீராத விளையாட்டுப் பிள்ளை ஒன்று போதுமே இதற்கு உதாரணம்!

தனக்கு ஆண் குழந்தை இல்லை என்ற குறையை, கண்ணனை ஆண்குழந்தையாக்கிக் கொஞ்சுவதன் மூலம் தீர்த்துக்கொண்டதோ மகாகவியின் மனம்! அவருக்கு ஆண் குழந்தை இல்லை என்பதால்தானே, அவர் காலமானபின் அவருக்கு மாதந்தோறும் அமாவாசைத் தர்ப்பணம் கொடுக்க ஆரம்பித்தார் அவரது அன்பரான கவிஞர் திரிலோக சீதாராம்.  

நாளை நமக்காக!

குழந்தைகளைத் தெய்வமாகவே கொண்டாடுகிற மரபுடைய நாம் இன்று குழந்தைகளை எப்படி நடத்துகிறோம்?

ஓயாத வீட்டுப் பாடங்களால் அவர்கள் சலித்துக் களைத்துவிட்டார்கள். அவர்களின் குழந்தைப் பருவத்தை அவர்கள் அனுபவிப்பதற்கு முன்பே, அது அவர்களை விட்டு நழுவி அவர்கள் இளைஞர்களாகிவிடுகிறார்கள்.

'மாலை முழுதும் விளையாட்டு’ என்று வழக்கப்படுத்திக்கொள்ளச் சொன்னாரே பாரதி? மாலை முழுதும் குழந்தைகள் விளையாடுகிறார்களா என்ன? பள்ளியிலிருந்து வந்ததிலிருந்து மறுநாள் பள்ளிக்குச் செல்லும் வரை வீட்டுப் பாடமே அவர்களின் கதி!  

'கூடி விளையாடு பாப்பா’ என்று பாரதி சொன்னதில் பெரும் பொருள் இருக்கிறது. கூடி விளையாடினால்தான் சமூக நல்லிணக்கம் ஏற்படும். முன்பெல்லாம் நாம் எத்தனை வகையான விளையாட்டுக்களை ஆனந்தமாகக் கூடி விளையாடினோம்? கல்லா மண்ணா, கீச்சுக் கீச்சுத் தாம்பாளம் போன்று நாம் விளையாடிய விளையாட்டுகளைப் பற்றி இன்றைய குழந்தை களுக்கு என்ன தெரியும்? அவர்கள் கணிப்பொறி முன் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகளால், அவர்களின் உடலுக்கு என்ன பயிற்சி கிடைக்கும்?

'கொல கொலயா முந்திரிக்கா! நரியும் நரியும் சுத்திவா! கொள்ளையடித்தவன் எங்கிருக்கான்? கூட்டத்தில பார், கண்டுபிடி!’ என்று வட்டமாக உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுத்தான் எத்தனை ரசமானது! எல்லோரோடும் கூட்டாக இணைந்து எப்படி வாழ்வது என்பதை இந்த விளையாட்டுகள் நமக்கு மறைமுகமாகக் கற்றுத் தந்தன. அதையெல்லாம் இழந்த குழந்தைகள், பெரியவர்களான பின்னும் தனிமைத் தீவில் அவஸ்தைப்படுகிறார்கள்.

படி, படி என்று குழந்தைகளைச் சித்திரவதை செய்யும் போக்கு ஒருபுறம் இருக்க, இன்னொரு போக்கு தங்களின் பொருளாதாரத் தேவைக்காகச் சின்னஞ்சிறு பிஞ்சுகளை வேலைக்கு அனுப்புவது. கவிஞர் நெய்வேலி பா.சத்தியமோகன், 'பலூன் வாங்கும் சிறுவனின் வயதுதான் இருக்கும் பலூன் விற்கும் சிறுவனுக்கும்’ என்று கவிதை எழுதியிருந்தார். பலூன் விற்கும் சிறுவன் தன் குழந்தைப் பருவத்தை எப்படி அனுபவிப்பான்? குழந்தைப் பருவத்தை ஒரு குழந்தை அனுபவிப்பதைத் தடுக்க நமக்கு ஏது உரிமை?

எதிர்கால இந்தியாவின் சக்தியே இன்றைய குழந்தைகள்தான். சாந்தியும் சமாதானமும் மத நல்லிணக்கமும் கொண்ட தேசத்தை உருவாக்க வேண்டுமானால் குழந்தைகளைச் சரிவர உருவாக்க வேண்டும். அதற்குக் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். எல்லாக் குழந்தைகளையும் நன்கு படிக்க வைக்கவேண்டும். அதுமட்டும் போதாது. படிக்கும் காலத்திலேயே அவர்கள் விரக்தி அடையாமல் இருக்கவும், அவர்களின் உடல் நல்ல ஆரோக்கியம் பெறவும், அவர்களை மாலை நேரங்களில் மைதானங்களில் ஆனந்தமாக விளையாடவும் நாம் அனுமதிக்க வேண்டும்.

நாம் அனுமதிப்பது என்ன? அது அவர்களின் உரிமை. அந்த உரிமையை அவர்கள் பெற, நாம் கைகொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் எதிர்காலத்தில் சரியான இந்தியா உருவாகும்.

கண்ணன், முருகன் போன்ற தெய்வக் குழந்தைகளை மதிப்பதும், குப்பன் சுப்பன் போன்ற மனிதக் குழந்தைகளை மிதிப்பதும் ஒரே நாட்டில், ஒரே காலத்தில் நடைபெறும் முரண் விந்தை! எல்லாக் குழந்தைகளுமே தெய்வத்தின் வடிவங்கள்தான் என்பதைப் புரிந்துகொண்டாலன்றி இந்நிலை மாறாது.

(சிறகு விரிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism