Published:Updated:

நாளை நமக்காக!

திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்

நாளை நமக்காக!

திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்

Published:Updated:
நாளை நமக்காக!
##~##

முற்காலத்தில் திருமணங்கள் எப்படி நடந்தன என்று சிந்தித்தால் வியப்பாக இருக்கிறது. அன்று, திருமணங்கள் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்திருக்கின்றன. இன்றுதான் நிலைமை தலைகீழாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்று, மணமகனின் செல்வ நிலை எத்தகையது என்ற கேள்வி எழுந்ததேயில்லை. மணமகனின் வீரமும் பண்பு நலனும் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டன.

பெண்களின் பெற்றோர் மட்டுமல்ல, பெண்களேகூட மணமகனின் செல்வ வளத்தைப் பற்றி அக்கறை காட்டவில்லை. நல்ல வாலிபனாக இருந்தால், பின்னாளில் எப்படியும் செல்வ வளத்தை அடைந்துவிடுவான் என்று அவர்கள் நம்பினார்கள். வாழ்க்கைக்கு அடிப்படையான விஷயங்களில் செல்வம் இரண்டாம் இடத்தில்தான் வரும்; பண்பே முதலிடத்தில் வரும் என்ற உண்மையை உணர்ந்திருந்தார்கள்.  

ராமாயண சீதைக்கும் மகாபாரத திரௌபதிக்கும் எப்படி மணமகனைத் தேடினார்கள் என்று சிந்தித்தால், உண்மை விளங்கும். மணமகனின் வீரம்தானே சோதிக்கப்பட்டது? ஸ்ரீராமன், வில்லைக் கரத்தால் ஒடித்து சீதையின் கரம் பற்றினான். அர்ஜுனன் இலக்கை அம்பால் அடித்து, திரௌபதியை மணந்தான்.  

நாளை நமக்காக!

ஒரு ராமாயணத்தில்... வியப்பான விசாரணை ஒன்று நடைபெறுகிறது. ராமன் வில்லொடித்து சீதை அவனுக்குத்தான் என்று உறுதியான பின்னரும், சீதையின் வளர்ப்புத் தாயும் ஜனகரின் மனைவியுமான சுனயனாவுக்கு ஒரு சந்தேகம். அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள ஸ்ரீராமனை அழைத்து வந்த விஸ்வாமித்திரரை, அன்று மாலை யில் தனிமையில் சந்திக்கிறாள் சுனயனாதேவி.

'ஸ்ரீராமனின் தந்தை தசரதர் மூன்று மனைவிகள் உடையவராமே? தந்தையைப் போல மகனும் சீதையை மணந்த பின்னர் மேலும் பலரை மணந்தால் சீதையின் கதி என்ன?’ என்று விஸ்வாமித்திரரிடம் விசாரிக்கிறாள். அவளது நியாயமான கவலையைக் கண்ட விஸ்வாமித்திரர் நகைத்தவாறே அவளுக்குத் தரும் விளக்கம் ஆச்சரியகரமானது:

''தாயே! குழந்தைகள் ஜாடையில்தான் தகப்பனைக் கொள்வார்கள். குணத்தில் குருவையே பின்பற்றுவர். ராமனின் குரு யார் என்று யோசித்துப் பாருங்கள். அருந்ததி என்ற உத்தமமான ஒரே பத்தினியுடன் வாழும் வசிஷ்டர் அல்லவா ராமனின் குரு? ராமன், குணங்களில் வசிஷ்டரைப் போன்றவன். சீதையைத் தவிர, இன்னொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். இதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்!''  

இந்த பதிலால் மனக்கவலை தீர்ந்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறாள் சுனயனாதேவி. ஸ்ரீராமனது செல்வ வளத்தைப் பற்றிப் பெண்வீட்டில் யாரும் எங்கும் விசாரித்ததாக எந்த ராமாயணத்திலும் செய்தியே இல்லை. ஒருவேளை, ராமன் பரம ஏழையாக இருந்து போட்டியில் வென்றிருந்தாலும், அரசகுமாரியான சீதை அவனையே மணந்திருப்பாள். ராமனின் வங்கிக் கணக்கில் இருப்புத் தொகை எவ்வளவு என்று ரகசியமாக யாரும் ஆராயவே இல்லை!

அக்காலத்தில் ஒரு வீரப் போட்டி மூலம் கணவனைத் தேர்ந்தெடுக்கும் முறையும் உண்டு; எந்தப் போட்டியும் இல்லாமல் சுயம்வரம் நடத்தி, அதற்கு வரும் வாலிபர்களில் மனத்துக்கு உகந்த வனைப் பெண் மாலையிட்டுக் கணவனாக்கிக் கொள்ளும் வழக்கமும் உண்டு. தமயந்தி நளனைக் கணவனாக்கிக் கொண்டது இத்தகைய சுயம்வர முறையில்தான். யாருடைய நிர்பந்தத்துக்கும் ஆட்படாமல் சுயமாக வரனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைதான் சுயம்வரம்.

தமயந்தியின் சுயம்வரத்தில் கலைவாணியே ஒரு சிறுமியாக வடிவெடுத்து, தமயந்தியின் தோழியாக இயங்கினாள் என்கிறது நளசரிதம். சுயம்வரத்துக்கு வந்த எல்லா மன்னர்கள் முன்னும் தமயந்தியை அழைத்துச் செல்கிறாள் கலைவாணி. காமத்தால் சிவந்து காணப்படும் மன்னர்களின் விழிகளாகிய செந்தாமரை மலர்கள் பூத்த சுயம்வர மண்டபத்தில், வெள்ளை அன்னப் பறவை போல தமயந்தி கையில் மணமாலையுடன் நடக்கிறாள்.

நாளை நமக்காக!

அவள் காதலன் நளன் சுயம்வரத்துக்கு வந்திருக்கிறான். ஆனால், என்ன சோதனை! அவளது பேரழகால் கவரப்பட்ட இந்திரன், வருணன், வாயு, அக்கினி முதலிய தேவர்களும் அதே சுயம்வரத்துக்கு நளன் வடிவிலேயே வந்திருக்கிறார்கள்! உண்மை நளனை இப்போது எப்படி இனங்காண்பது?

ஏன் இனம் காணவேண்டும்? தேவர்களில் ஒருவருக்கு தமயந்தி மாலையிடலாமே? கேவலம் மனிதனான நளனை விட்டுவிட்டு, தேவன் ஒருவனைத் திருமணம் புரிந்துகொண்டால், அவள் பெருவாழ்வு வாழலாமே?  

ஆனால், தன் காதலனைவிட எந்த வகையில் எத்தனை உயர்வுகள் உடையவர்களாக தேவர்கள் இருந்தாலும், அவர்களில் யாரையும் மணக்க தமயந்தி விரும்பவில்லை. கண்ணிமைப்பது, கால் நிலத்தில் பதிந்திருப்பது, சூடிய மலர்மாலை வாடியிருப்பது, நிழல் நிலத்தில் விழுவது ஆகிய அடையாளங்கள் மூலம் மனிதனான நளனைக் கண்டுணர்ந்து, அவனுக்கே மாலையிடுகிறாள்.

நாற்பதாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்கு பவன், அறுபதாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்குபவன் இருவரது ஜாதகங்களும் தன் மகளுக்குப் பொருந்தினாலும் உடனே அறுபதாயிரம் ரூபாய் சம்பளக்காரனையே மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுக்கும் இன்றைய வணிக நோக்கு, திருமணத்தில் அன்று இருந்ததே இல்லை.    

இன்று எப்படி மணமகனைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? அக்கம்பக்கம் மற்றும் உறவுகளில் சொல்லியும், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தும் பொருத்தமான மாப்பிள்ளையை வலைவீசித் தேடுகிறார்கள் பெண் வீட்டார். வலை தளங்களிலெல்லாம் தேடுகிறார்கள். அப்போது, முதல் விஷயமாக எதை அலசுகிறார்கள்? சந்தேகம் இல்லாமல் மாப்பிள்ளையின் சம்பளத்தைத்தான்.

இப்போதெல்லாம் பெண்ணுக்கும் அதே நிலை என்றாகிவிட்டது. பெண்ணின் சம்பளம் என்ன என்பதைப் பெண் பார்ப்பதற்கும் முன்னரே கேட்டுத் தெரிந்துகொண்டு, அதன்பின்புதான் நேரடி அறிமுகத்துக்கே வருகிறார்கள்.

நாளை நமக்காக!

மாப்பிள்ளைப் பையனின் தனி மனித ஒழுக்கத்துக்கோ சமுதாய ஒழுக்கத்துக்கோ கல்யாணச் சந்தையில் பெரிய அளவில் மதிப்பெண் கிடையாது.

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை. பொருள் இல்லாதவர்கள் வாழ முடியாது. சந்தேகமில்லை. ஆனால் பொருள், வாழ்க்கைக்காகத்தானே? வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுப் பொருளை மாத்திரம் வைத்துக்கொண்டு என்ன செய்வது? ஐந்து ரூபாய் நாணயத்தை அப்படியே வாணலியில் வறுத்துச் சாப்பிட முடியுமா? பணத்தைக் கொடுத்துக் காய்கறியும் பருப்பும் அரிசியும் வாங்கினால்தானே சாப்பிட முடியும்? அப்படியானால், பணத்தின் நோக்கம் வாழ்க்கைதானே தவிர, பணமே நோக்கமாக இருக்க முடியாதல்லவா?

மாப்பிள்ளைப் பையன் பெரும் வசதி உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிரமமில்லாமல் வாழ்வதற்குத் தேவையான வகையில் ஓரளவு பொருள் இருந்தாலும் போதுமானது. மேலும் மேலும் முன்னேறக்கூடிய வகையில் சுறுசுறுப்பானவனாய் இருந்தால் அதுவே நல்லது. வருங்காலத்தில் மிகச் சிறப்பாகப் பொருளாதார வளத்திலும் முன்னேறிவிடுவான். ஆனால், அவன் நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளவனாக இருக்க வேண்டும். அதுபற்றி முதலில் விசாரிப்போம். இப்படி எத்தனை பெண்வீட்டார் நினைக்கின்றனர்?

மது அருந்தாத பையன் சற்றுக் குறைவாக சம்பாதித்தாலும் சிக்கல் இல்லை. அவன் சம்பளத்தில் பெரும்பகுதியைக் குடிப்பழக்கத்துக்காகச் செலவு செய்யப் போவதில்லை. ஆனால், மதுவுக்கு அடிமையான ஒருவன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், அதில் பெரும்பகுதியைத் தன் தீய பழக்கத்துக்குதானே செலவு செய்வான்? ஆகையால், அவனின் அதிகமான சம்பாத்தியத்தால் குடும்பத்துக்கு எந்தப் பயனும் இல்லை என்பதோடு குடிகாரக் கணவனிடம் அந்தப் பெண் படும் துயரங்கள் அநேகம். இதை ஏன் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை?

ஒருவன் மது அருந்துகிறவனா இல்லையா என்பதை அக்கம்பக்கத்திலோ அலுவலகத்திலோ விசாரித்தால் தெரியாமல் போகுமா என்ன? ஆனால், அதை விசாரிப்பதில் பெண் வீட்டார் அக்கறை காட்டுவதில்லை. சம்பளம் எவ்வளவு என்பது மட்டுமே அவர்களின் பிரதான கேள்வி. அந்தக் கேள்வியின் முன்னால் மற்ற கேள்விகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன; அல்லது, முக்கியமில்லை என விசாரிக்கப்படாமலே தவிர்க்கப்படுகின்றன.

திருமணமாகி மிகச் சில மாதங்களிலேயே கணவன் குடிகாரன் என்று, மனைவி கண்ணைக் கசக்கிக்கொண்டு பிறந்த வீட்டில் வந்து நிற்கும் அவல நிலை நேர்கிறது. இல்லாவிட்டால் 'கணவன் ஓயாமல் சிகரெட் பிடிக்கிறான்; அவனோடு என்னால் வாழ இயலாது’ என்று மனைவி வழக்கு மன்றத்துக்குச் செல்கிறாள். இந்த நிலைக்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன? மாப்பிள்ளையின் சம்பளம் என்ற அம்சம் மற்றவற்றைப் பற்றிச் சிந்திக்க விடாமல் கண்ணை மறைத்துவிட்டது என்பதுதானே?

முதலில், ஒரு பையனைப் பற்றி விசாரிக்கும்போது, அவன் எப்படிப் பட்டவன், நல்லவனா, அவனது பழக்க வழக்கங்கள் எப்படி, அவன் நண்பர்கள் யார் யார் என்பதையெல்லாம் விசாரித்து அறிந்திருந்தால், பெண்ணுக்கு இந்த நிலை வந்திருக்குமா? தங்கள் பெண் உயிரும் உணர்வும் உள்ளவள். புகுந்த வீட்டில் போய், அதே போல் உயிரும் உணர்வும் உள்ள ஓர் ஆணோடு வாழப் போகிறாள். அவள் மனமகிழ்ச்சியோடு வாழ்வதுதான் முக்கியம். மனமகிழ்ச்சிக்குப் பணமும் தேவைதான். ஆனால், பணத்தைத் தாண்டியும், பணத்துக்கு மேலாகவும் எத்தனையோ அடிப்படை விஷயங்கள் வாழ்வில் இருக்கின்றன என்ற உண்மையைப் பெண்ணைப் பெற்றவர்கள் ஏன் உணர்வதில்லை?

ஆணின் சம்பளத்துக்கு இரண்டாம் இடமும், அவனது குண நலன்களுக்கு முதலிடமும் கொடுக்கும் போக்கு என்றைக்கு வரும்? அப்படிப்பட்ட போக்கு ராமாயண- மகாபாரத காலத்தில் இருந்தது. அன்று விவாகரத்துகள் இருந்ததில்லை. அத்தகைய போக்கு மீண்டும் தலைதூக்குமானால், இப்போதும் விவாகரத்துகள் நடைபெறாது. பெண்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

(சிறகு விரிப்போம்)