Election bannerElection banner
Published:Updated:

திருமண வணிகம்!

நாளை நமக்காக!திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்

##~##

திருமணங்களில் அன்பளிப்புத் தரும் வழக்கம் புராண காலத்திலேயே தொடங்கிவிட்டது. மணமக்கள் மீது தாங்கள் கொண்ட அன்பின் அடையாளமாக, தங்களால் இயன்ற அன்பளிப்பை நண்பர்களும் உறவினர்களும் அளித்தார்கள். தங்களது அன்பளிப்பின் மூலமாகத் தங்களின் வாழ்த்துக்களையும் அவர்கள் தெரியப்படுத்தினார்கள். இதில் எந்த வற்புறுத்தலும் இல்லை.

மகாபாரதத்தில் கிளைக் கதையாக வருகிறது நள தமயந்தி சரிதம். அவர்கள் கல்யாணம் சிறப்பாய் நடந்து முடிந்தது. தேவர்கள் பலர் அங்கே நளன் வடிவில் இருந்தும்கூட, அவர்களுக்கு மாலையிடாமல் உண்மையான நளனைக் கண்டுபிடித்து, அவனுக்கே மாலையிட்டாள் தமயந்தி. அதுகுறித்து தேவர்கள் மகிழவே செய்தார்கள்.

நளனுக்குத் திருமணப் பரிசாக, அவர்கள் சில வரங்களைத் தந்தார்கள். நெருப்பில்லாமலே சமைக்கும் வரம், தேவைப்படும்போதெல்லாம் தானே தண்ணீர் கிட்டும் வரம், நளனின் ஸ்பரிசம் பட்ட மலர்கள் வாடாமல் இருக்கும் வரம் என இன்னும் பல வரங்கள். இந்த வரங்களெல்லாம்தான் பின்னாளில் நளனைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு தமயந்திக்கு உதவின. அன்பளிப்பு என்பதே எதிர்கால வாழ்வில் சிக்கல்கள் ஏற்படும்போது உதவுவதற்காக வழங்கப்படுவதுதான்.

திருமண வணிகம்!

மணமகளுக்குச் சீர்வரிசையாகப் பல பரிசுப் பொருட்களைத் தந்து புகுந்த வீட்டுக்கு அனுப்பும் வழக்கமும் தொன்றுதொட்டே இருந்திருக்கிறது. கைகேயி புகுந்தவீடு வரும்போது, சீர்வரிசைகளோடு அனுப்பப்பட்டவள்தான் மந்தரை என்ற கூனி. மிதிலையிலிருந்து திருமணம் முடிந்து சீதாதேவி அயோத்தி வந்தபோது, அவளுக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களில் ஒன்றுதான் அவள் வளர்த்து வந்த சின்னஞ்சிறு கிளி. அயோத்தி வந்ததும், தான் வளர்க்கும் கிளிக்குப் பெயர் சூட்டும்படி ஸ்ரீராமனிடம் வேண்டுகிறாள் சீதை. 'நான் பெரிதும் நேசிக்கும் ஒரு பெண்ணின் பெயரைச் சூட்டுகிறேன்!’ என்று சொல்லிச் சிரிக்கிறான் ஸ்ரீராமன். தன் பெயர்தான் சூட்டப்படுமோ என்று சீதை நாணித் தலைகுனிகிறாள். ஸ்ரீராமனோ, கிளியின் சிறகுகளைத் தடவிக் கொடுத்து, அதைக் 'கைகேயி’ என அழைக்கிறான்.

கிளிப்பிள்ளை, சொன்னதைச் சொல்லும் அல்லவா? கைகேயியும் எதிர்காலத்தில் மந்தரை சொன்னதையெல்லாம் தன் சொற்களாகத் திருப்பிச் சொல்லப் போகிறாள் என்பதை உணர்ந்துதான் ஸ்ரீராமன் அவள் பெயரைக் கிளிக்கு வைத்தானோ?

பரிசுப் பொருள், சீர்வரிசை தருதல் எல்லாம் இப்போதைய வழக்கத்திலும் தொடர்கின்றன. வரதட்சணை என்று ஒரு தொகையை வற்புறுத்திக் கேட்டு வாங்கும் வழக்கமும் முளைத்தது. ஆனால், வரதட்சணை வாங்குவது தவறு; தவறு மட்டுமல்ல, சட்டப்படி குற்றம் என்பது இப்போது பரவலாக உணரப்பட்டுவிட்டது.

என்றாலும், குறிப்பிட்ட தொகையைக் கேட்டு வாங்கும் வரதட்சணைப் பழக்கம்தான் குறைந்திருக் கிறதே தவிர, வரதட்சணை தன் பெயரை மாற்றி ஒளித்துக்கொண்டு, முன்னைவிட சாமர்த்தியமாக சீர்வரிசை, தங்கம், ஸ்கூட்டர் என்றெல்லாம் பல புனைபெயர்களில் வாழ வழிகண்டுவிட்டது. மாறுவேடத்தில் புதிய புதிய ஒப்பனைகளுடன் அது வரும்போது பலருக்கு அதை அடையாளம் தெரிவதில்லை. மணமகனோடும் மணமகளோடும் அதையும் சேர்த்து கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்து மணமேடையில் உட்கார வைத்து விடுகிறார்கள். 'என்ன செய்வது? பாரம்பரியப் பழக்கங்களை விட்டுவிடக் கூடாதில்லையா?’ என்று இத்தகைய சம்பிரதாயங்களுக்கு அற்பமாக ஒரு சமாதானம் வேறு.

திருமண வணிகம்!

சீர்வரிசை வாங்குவதை பாரம்பரியப் பழக்கம் என்கிறார்களே... முன்பு பெண்கள் வேலைக்குப் போனார்களா? மாதாமாதம் குடும்பச் செலவுக்குப் பொருள் ஈட்டினார்களா? அந்தப் பழக்கம் மாறும்போது திருமணம் சார்ந்த பாரம்பரியப் பழக்கங்களும் மாறத்தானே வேண்டும்? பிறகு ஏன் 'எத்தனை பவுன் போடுவீர்கள்?’ என்ற கேள்வி இன்றும் பெண்ணைப் பெற்றவர்களை நோக்கி வீசப்படுகிறது? இந்தக் கேள்வியை வீசிவிட்டு, 'வரதட்சணை வாங்க மாட்டோம்!’ என்று பெருமை பேசிக்கொள்வது அபத்தமில்லையா? மறைமுக வரதட்சணைகளும் ஒழிந்தால் அன்றி, வரதட்சணைப் பழக்கம் முற்றாக ஒழிந்ததாக நாம் எப்படி மார்தட்ட முடியும்?

'வேண்டாம் வரதட்சணை!’ என்ற ஈற்றடிக்குப் பிரபல எழுத்தாளர் அமரர் சுஜாதா ஒரு வெண்பா எழுதியிருந்தார்:

'பத்துபவுன் தங்கம் பளிச்சென்று கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி மத்தபடி
பாண்டுவைத்து ஊர்கோலம் பாட்டு, இவைதவிர
வேண்டாம் வரதட்சணை!’

- என்பதே அந்த வெண்பா!

நாசூக்கான பகல்கொள்ளையில் இன்னொரு பாணி உண்டு. 'உங்கள் பெண்ணுக்கு நீங்கள் செய்யப்போகிறீர்கள். எனவே, நீங்கள் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம்!’ என்று ஆசையே இல்லாத புத்தரைப் போன்ற முகபாவனை காட்டும் பிள்ளை வீட்டார் பலர். 'சரி. உங்கள் பெண்ணுக்கு விருப்பம்போல் செய்யுங்கள்’ என்று சொன்ன பிறகு, வரும் அடுத்த பேச்சு என்ன தெரியுமா? 'எங்கள் மகளைக் கட்டிக் கொடுத்தபோது இவ்வளவெல்லாம் நாங்கள் செய்தோம். எங்கள் மூத்த மருமகள் இவ்வளவெல்லாம் கொண்டு வந்தாள்’ என்பன போன்ற வாக்கியங்கள்தான்! பெண்வீட்டார் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதற்கான ரகசிய சமிக்ஞைகள்தான் இவை.

'எங்கள் மூத்த மருமகள் இத்தனைச் சீரோடு வந்திருக்கிறாள். இப்போது உங்கள் பெண் எங்கள் இளைய மருமகளாக வாழ்க்கைப்படுகிறாள்.

அவளும் எங்கள் இல்லத்தில் மூத்த மருமகளுக்குச் சமமான கௌரவத்தோடு இருக்க வேண்டும் இல்லையா? மற்றபடி நீங்கள் செய்வதைச் செய்யுங்கள். நாங்கள் வற்புறுத்த மாட்டோம்!’ என்று உதட்டளவில் போலியாகப் பேசுவதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா?

இப்படிப் பசப்புவதற்குப் பதிலாக முன்புபோல் 'கல்யாணச் சந்தையில் எங்கள் பிள்ளையின் விலை இவ்வளவு. வரதட்சணையை இவ்வளவு ரூபாய் தொகையாகக் கொடுத்துவிடுங்கள்!’ என்று திருமண வணிக ஒப்பந்தம் போட்டுக் கொள்வது தெளிவான வியாபாரமாய் இருக்குமே? நாமென்ன திருமணம் என்ற பெயரில் வாழ்க்கை ஒப்பந்தமா செய்துகொள்கிறோம்? அது முழுமையான வணிக ஒப்பந்தம்தானே? அந்த விஷயத்தை மறைமுகமாய் வளைத்து வளைத்துப் பேசுவதை விட, நேரடியான வணிக ஒப்பந்தமாய் அமைத்துக்கொள்வது இரு தரப்பிலும் சௌகரியம்தானே?!

மணமக்களுக்குத் தாங்கள் விரும்பிய அன்பளிப்பைத் தரும் நடைமுறை நம்மிடையே இருக்கிறது. இதில் கண்டிக்க ஒன்றுமில்லை. ஏனென்றால், இதில் வற்புறுத்தல் இல்லை. அன்புதான் முக்கியம். அன்பளிப்பு, அந்த அன்பை வெளிப்படுத்தும் அடையாளம் மட்டுமே! ஆனால், திருமணம் என்ற சடங்கு எந்த அளவு உச்சகட்ட வணிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் சம்பவம் ஒன்று, அண்மையில் திருமணம் ஒன்றில் நடந்தது. மணமகன், மணமகள் இரு வீட்டாரை மட்டுமல்ல, திருமணத்துக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவரையுமே வணிக நோக்கம் கொண்டவர் களாக சாமர்த்தியமாக மாற்றிய திருமணம் அது. (இது கற்பனையல்ல. உண்மைச் சம்பவம்தான்.)

திருமண வணிகம்!

திருமண மண்டபத்தின் முக்கியமான பகுதியில், இரு இளைஞர்கள் மேசை நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார்கள். மொய்ப்பணத்தை வாங்கி, யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டிருந்தார்கள். கூடவே, ஒலிபெருக்கியில் ஓர் அறிவிப்பும் செய்து கொண்டிருந்தார்கள்.

'அன்பர்கள் உடனடியாக வந்து மொய்ப் பணம் தரலாம். யார் எவ்வளவு மொய்ப் பணம் தருகிறார்கள் என்பது குறித்துக் கொள்ளப்படும். ஐந்நூறு ரூபாய்க்கு மேல் மொய் எழுதுபவர்களின் பெயர்கள் சீட்டுக் குலுக்கிப் போடப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்ட சாலிக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசு உண்டு!’

புனிதமான திருமணச் சடங்கு, எவ்வளவு தூரம் கீழிறங்கிவிட்டது! அன்பளிப்பு என்பது யாராக இருந்தாலும், அவரவர் அன்பாய் அளிப்பதுதான். அவர்கள் மணமக்கள் மேல் கொண்ட அன்பின் அடையாளம்தான் அதுவே தவிர, அவர்கள் செலுத்தும் அன்புக்கு விலையில்லை. தனது வசதிக்குத் தக்கவாறு ஒருவர் அன்பளிப்பை அளிக்கக்கூடும். அன்பளிப்பை ஆசைகாட்டிப் பெறுவதோ வற்புறுத்திப் பெறுவதோ அளவுகடந்த அநாகரிகம்!

திருமணத்தை எவ்வளவு சிக்கனமாக நடத்த முயன்றாலும், கைமீறிச் செலவாகிறது என்பது உண்மையே! அந்தச் செலவை நம்மால் இயன்ற அளவு குறைப்போம் என்ற கண்ணோட்டத்தோடுதான் அன்பளிப்புகள் தரப்படுகின்றன. சிறு துளி பெரு வெள்ளம் என்ற வகையில், அன்பளிப்புத் தொகை ஏதோ கணிசமான அளவில் ஒரு குறிப்பிட்ட செலவையேனும் ஈடுகட்டும் என்பது நம்பிக்கை. மற்றபடி அன்பளிப்பை வழிப்பறிக் கொள்ளை ஆக்குவது முறையா?  

அன்பளிப்பே வாங்காத திருமணங்களும் சிற்சில நடைபெறத்தான் செய்கின்றன. 'அன்பளிப்பைத் தவிர்க்கவும்!’ என்று அச்சிட்டே பத்திரிகை அனுப்புபவர்களும் உண்டு. 'நீங்கள் தரும் அன்பளிப்புத் தொகை குறிப்பிட்ட சமூக சேவை நிறுவனத்துக்கு வழங்கப்படும்!’ என்று அழைப்பிதழிலேயே தெரிவிப்ப வர்களும் உண்டு. இவை எல்லாம் வரவேற்கத்தக்க போக்குகள்.

ஒருவர் செலுத்தும் மட்டற்ற அன்பின் முன், அவர் தரும் அன்பளிப்பு கால்தூசு பெறாது. அன்பளிப்புக்கு விலை இருக்கலாம். அன்புக்கு விலையே கிடையாது.  

ஒரு நண்பரிடம் கேட்டேன்... 'இன்று மாலையில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதாக இருக்கிறீர்களே? என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று. நண்பர், 'எல்லாத் திருமணங்களிலும் எப்படிக் கலந்துகொள்வேனோ, அப்படித்தான் இதிலும் கலந்துகொள்ளப் போகிறேன்!’ என்றார்.

'அது என்ன சங்கதி?’ என்று விசாரித்தேன். 'எல்லாத் திருமணங்களிலும் ஆனந்தமாக 'மொய்’ மறந்து கலந்துகொள்வதே என் பழக்கம். இந்தத் திருமணத்திலும் விடைபெறும்போது 'மொய்’ மறந்து விடைபெற்றுவிடுவேன்!’ என்றார் அவர்.

(சிறகு விரிப்போம்)

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு