சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ஜன்னல் - மனிதம் வளர்போம்

லதானந்த்

ஜன்னல் - மனிதம் வளர்போம்

நாம் பேசும் பேச்சு, மற்றவர் துன்பத்தைப் போக்குவதாக இருத்தல் வேண்டும்.

- கபீர்தாசர்

ன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள், கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் மகிழ்ச்சியை மட்டும் தருவதில்லை; நிம்மதியையும் தருகின்றனர்! அவர்கள் இருக்குமிடத்தில், கலகலப்புக்குப் பஞ்சமிருக்காது. சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்கள்; பேச்சுக்கு நடுவிலும் சிரிப்பார்கள். இவர்களது பேச்சில் உள்ள முக்கியச் சாராம்சம்... மற்றவர்களை ஊக்குவிப்பது; உற்சாகப்படுத்துவது!

இன்னும் சிலர் உண்டு. அவர்களிடம், 'எப்படி இருக்கீங்க?'' என்று கேட்டால், முகத்தை முழம் நீளத்துக்குத் தூக்கி வைத்துக்கொண்டு, ''ஹூம்... ஏதோ இருக்கேன்'' என்று விரக்தியாகச் சொல்வார்கள். இவர்களிடம் ஐந்து நிமிடம் பேசினால்... நம்மிடம் உள்ள கொஞ்சநஞ்ச உற்சாக நதியும் வற்றிப் போய்விடும். இவர்கள், தன்னைப் பற்றியே அதிகம் பேசுவார்கள். தேவையில்லாமல் விமர்சிப்பார்கள்; பிறர் தெரியாமல் செய்த தவறுகளையும் அவர்களுக்கு நேர்ந்த அவமானங்களையும் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்துப் பல்லிளிப்பார்கள்!  

மேற்கண்ட இரு வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்களைக் குறிப்பிடும் வகையில், 'Some bring happiness where ever they go. And some bring happiness whenever they go!’என்பார்கள், ஆங்கிலத்தில்!

##~##
துக்கத்தில் இருப்பவர் களுக்கு உங்களது பேச்சு ஆறுதலைத் தந்தால், அதுவே புண்ணியம்! தான- தருமம் செய்து சேர்க்கும் புண்ணியத்தை விட, காயப்பட்ட நெஞ்சத் துக்குக் களிம்பு தடவுவது போல், கனிவாகப் பேசுவதே புண்ணியம்! துன்பப்படுகிறவர், கூனிக்குறுகும் வகையில் குத்திக் காட்டப் படுவதை விரும்பமாட்டார். ஆனால் நம்மில் நிறையபேர், 'இதுதாண்டா வாய்ப்பு’ என்று, 'நீங்க அப்படி செஞ்சிருக்கக் கூடாது; இப்படிச் செஞ்சிருக்கணும்’ என்று ஆலோசனைப் புலியாகப் பாய்ந்து குதறிவிடுவார்கள்.

ஒரு சம்பவத்தைப் பார்ப்போமா?

அந்த மருத்துவமனையின் இரண்டாவது மாடியில், மாதப்பன், ஜேம்ஸ் என இரண்டு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஜன்னலோரப் படுக்கை, மாதப்பனுக்கு! வேதியியல் துறைப் பேராசிரியர், ஜேம்ஸ். முனைவர் பட்டம் பெறுவதற்காக, அவர் மேற்கொண்டிருந்த ஆய்வின்போது, ஏற்பட்ட ஒரு விபத்தில்  அவரது கண்கள் பாதிக்கப்பட்டன. ஆனால், பார்வை பறிபோகவில்லை. கண்களில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, கட்டுகள் போடப்பட்டிருந்தன. அவரின் ஒரே ஆறுதல்... மாதப்பனின் பேச்சுத்துணை!

''மாதப்பன், எனக்கு உறவுன்னு யாரும் கிடையாது. என் ஆர்வமெல்லாம், முனைவர் பட்டம் வாங்கணுங்கறதுதான்! ஆனா, அதுக்குள்ளே இப்படி ஆயிருச்சே''... என்று புலம்புவார் ஜேம்ஸ். இதைக்கேட்டதும் மாதப்பன், ''கவலைப்படாதீங்க புரபஸர். இன்னும் பத்துநாள்ல கட்டைப் பிரிச்சுருவாங்க. அதுக்கப்புறம் ஆய்வைத் தொடரலாம், நீங்க! இதோ... ஜன்னலுக்கு வெளியே அவ்வளவு அழகா இயங்கிக்கிட்டிருக்கு, உலகம். பத்து நாள்ல, நீங்களும் அந்த உலகத்துல ஐக்கியமாயிருவீங்க!'' எனச் சொல்லித் தெம்பூட்டுவார். அந்த ஆறுதல் வார்த்தையில் நெகிழ்ந்த ஜேம்ஸ், ஜன்னலுக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதைச் சொல்லச் சொல்வார். ''இங்கே... எதிர்த்தாப்ல அழகான பார்க் ஒண்ணு இருக்கு. வாசல்ல, தின்பண்டங்கள் வித்துக்கிட்டிருக்காங்க. பெத்தவங்க, குழந்தைங்களோட வந்திருக்காங்க. அட... ஸ்கூல்லேருந்தும் ஸ்டூடன்ட்ஸை, கூட்டிக்கிட்டு டீச்சர்ஸ் வந்திருக்காங்க'' என்று மாதப்பன் சொல்ல, ''ஒரு நிமிஷம்,  டீச்சர்ஸ் எத்தனை பேரு? குழந்தைங்க எவ்வளோ பேரு?'' என்று

கேட்பார் ஜேம்ஸ்! மாதப்பனும் ''அடடா... நீங்க பேராசிரியர்ங்கறதையே மறந்துட்டேன். விடைத்தாள் திருத்தற மாதிரியே கேக்கறீங்களே?!'' என்று கிண்டலடித்தபடியே, ''குழந்தைங்க முப்பது பேரு; நீலமும் வெள்ளையுமா சீருடைல ஜொலிக்கிறாங்க. டீச்சருங்களும் யூனிஃபார்ம்லதான் வந்திருக்காங்க; அடர் பச்சைக் கலர்ல புடவை!'' என பொறுமையாகப் பதில் சொல்வார் அதுமட்டுமா... ''மஞ்சள் மஞ்சளா, சூரியகாந்திப் பூக்கள், வரிசையா இருக்குங்க. ஸ்பாத்தோடியா மரத்தில இருக்கற சிவப்புப் பூக்கள், கொள்ளை அழகு...'' என பூங்காவின் அழகையும் எடுத்துச் சொல்வார். இதில் நெகிழ்ந்து போவார் ஜேம்ஸ்.

9-ஆம் நாள். அந்த அறையில் பரபரப்பு!  உடனே ஜேம்ஸ், என்ன ஏதென்று நர்ஸ் ஒருவரிடம் விசாரித்தார். அவள், வருத்தம் தோய்ந்த குரலில்... ''இன்னிக்கிக் காலைல மாதப்பன்  இறந்துட்டார்'' என்றாள். இதைக் கேட்டு அதிர்ந்து போனார் ஜேம்ஸ்.

''ஆமாம்... ரெண்டு மாசத்துக்கு முன்னால, சாலை விபத்துல, அவருக்குத் தலையில் அடிபட்டுருச்சு. அதுல, மூளைக்குப் போற ரத்தக் குழாய் சேதமாயிருச்சு. டாக்டருங்க எவ்வளவோ போராடியும், மாதப்பனைக் காப்பாத்த முடியலை'' என்றவள், ''இன்னொரு விஷயம்... அப்பவே அவருக்கு ரெண்டு கண்பார்வையும் போயிருச்சு, பாவம்!'' என்றாள்.

(தொடரும்)