Published:Updated:

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

Published:Updated:
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

திவேகத்தில் செல்லக்கூடிய வாகனங்கள் எத்தனையோ வந்துவிட்டன. இரண்டு சக்கரங்களில், நான்கு சக்கரங்களில், ஆறு மற்றும் எட்டுச் சக்கரங்களில் என பிரமாண்டம் காட்டி, சாலைகளில் சர்... சர்ரென்று வாகனங்கள் கடப்பதைப் பார்த்தால், பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம்விட அதிவேகமாக இயங்கக்கூடியது என்ன தெரியுமா? நம்முடைய மனம்தான். மனத்தின் வேகத்துக்கு இணையாக இயங்குகிற எந்த வாகனத்தையும் இதுவரை எந்த விஞ்ஞானியும் கண்டுபிடிக்கவில்லை!

##~##
இத்தனைக்கும், மனம் என்பதற்குத் தனித்த, எந்த உருவமும் இல்லை என்பதுதான் சுவாரஸ்யம். அந்த அரூபமான மனத்தைக் கட்டியாளுவதற்குத்தான், கடிவாளம் போடுவதற்குத்தான் ஞானிகளும் முனிவர்களும் சித்தர்களும் மகான்களும் கடும் தவம் மேற்கொண்டனர். தவமிருந்து, மனத்தை அடக்கியாளுகிற வித்தையை கைவரப் பெற்றனர். பிறகு, அந்த மனத்தைக் கட்டி நிறுத்துகிற சூட்சுமத்தை, இன்னும் இன்னும் எளிமையாக்குகிற வித்தையைப் பெறுவதற்காகத் தவமாய் தவமிருந்தனர். அந்தத் தவத்தாலும் பலன்கள் கிடைத்தன; பலமும் கூடியது!

'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கிற அன்பும் கருணையும் கொண்ட வாக்கியத்துக்குத் தக்கபடி, இந்த எளிய முறைகளை, மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிற வழிகளைத் தங்களின் சீடர்களுக்கு உபதேசித்தார்கள் அவர்கள். 'புரிந்ததா... தெளிந்ததா..?’ என்று வாஞ்சையுடன் கேட்டுக்கேட்டு, மனசைப் பூட்டுகிற மந்திரத்தை, சூட்சுமத்தை அருளினார்கள். அந்தச் சீடர்கள் தேசத்தின் பல பகுதிகளுக்கும் சென்று, அங்கே உள்ளவர்களுக்கு அவற்றைப் போதித்தார்கள். சீடர்கள், குருவானார்கள்; இளைஞர்கள் பலரும் சீடர்களானார்கள். சின்னஞ்சிறிய விதையிலிருந்து மிகப் பெரிய விருட்சம் வளர்வதுபோல, ஒவ்வொரு மரமும் சேர்ந்து, தோப்பாக நிற்பது போல், பரதக் கண்டத்தில் ஆன்மிகமும் மனதை அடக்குகிற வலிமையும் மெள்ள மெள்ளப் பரவியது!

ஆக, மனத்தை அடக்கி, உள்ளுக்குள் தெளிவுடன், வெளியே தேஜஸ் பொருந்திய முகத்துடன் வாழ்வதற்கான வழிகளும் முறைகளும் இங்கே ஏராளமாகவே உள்ளன. அவற்றை அடைவதற்கு, அந்த வழிகளையும் முறைகளையும் கற்றுக்கொண்டு, மனக்குதிரைக்குக் கடிவாளம் பூட்டிவிட்டால், வையகத்தில் உள்ளவர்கள் வாழ்வாங்கு வாழலாம்!

அப்படி வாழ்வதற்கான பயிற்சிகளில் ஒன்றுதான் வஜ்ராசனமும், அந்த ஆசனமிட்டபடி செய்கிற பயிற்சிகளும்!

பள்ளிகளில், மாணவர்களை முட்டி போடச் சொல்வது இன்றைக்கு வெகுவாகக் குறைந்துவிட்டது. அப்படி முட்டி போடுகிற வகையில் இருந்து, அப்படியே பின்னங்கால்களில் உங்களின் பின்பக்கம் அழுந்துவதுபோல் அமருங்கள். முதுகை நேராக்கிக் கொள்ளுங்கள். இரண்டு கைகளின் ஆட்காட்டி விரலையும் பெருவிரலையும் வளையம் போல் ஆக்கிக்கொள்ளுங்கள். மற்ற விரல்கள் நேராக விரித்தபடி இருக்கட்டும். இதைத்தான் சின்முத்திரை என்கிறோம். ஆக, உங்களின் இரண்டு கைகளிலும் சின்முத்திரை இருக்க... இரண்டு கைகளையும் இரண்டு பக்கங்களிலுமாக லேசாகத் தூக்கியபடி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக, சின்முத்திரையில் உள்ள விரல்களை, தொடையின் ஆரம்பப் பகுதிக்குக் கொண்டு வாருங்கள். அப்போது, உங்களின் கட்டைவிரல் எனப்படும் பெருவிரல், அடிவயிற்றுப் பகுதியை அழுத்தும்படி இடுப்பில் இருக்கட்டும். மற்ற மூன்று விரல்களும் தொடையின்மீது இருக்கட்டும்.

வாழ்க வளமுடன்!

அடுத்ததாக, இந்த நிலையில் இருந்தபடி, மெதுவாக, நிதானமாக, ஆழமாக, ஆத்மார்த்தமாக மூச்சை மெள்ள இழுங்கள். பிறகு, அப்படியே மூச்சை மெள்ள விடுங்கள். அப்படி விடுகிறபோது, உங்கள் இடுப்புக்கு மேலுள்ள பகுதியில் இருந்து தலை வரைக்குமான பகுதியைக் கொண்டு அப்படியே குனியுங்கள். கைகள் ஏற்கெனவே சொன்னபடி, சொன்ன இடத்தில் இருக்க... மூச்சை இழுப்பது, பிறகு குனிந்தபடி மூச்சை வெளியேற்றுவது எனச் செய்ய வேண்டும். மூச்சை வெளியேற்றக் குனிகிற போது தலை, கழுத்து, முதுகெலும்பு ஆகிய மூன்றும் நேராக, நேர்க்கோடாக இருக்கவேண்டும். இப்படியாக, ஐந்து முறை செய்தால், உடலுக்கும் நல்லது; உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்!

இந்தப் பயிற்சியை, நரம்பு மற்றும் தசை நார்ப் பயிற்சி என்பார்கள். இந்தப் பயிற்சியை தினமும் செய்தால், கல்லீரல், மண்ணீரல், குடல் மற்றும் மூத்திரக்காய்கள், அடிவயிற்றுத் தசைகள் ஆகியவை பலம் அடைகின்றன. அந்தந்த உறுப்புகள், எந்தச் சேதாரமும் இன்றி, தங்களது வேலையை செவ்வனே செய்துகொண்டிருப்பதற்கு, இந்தப் பயிற்சி பேருதவி புரிகிறது.

அவ்வளவு ஏன்... சர்க்கரை வியாதியால் உண்டாகக் கூடிய சிக்கல்களும் பிரச்னைகளும் மிக விரைவாக நீங்கிவிடுவதை அன்பர்கள் பலர், தங்கள் அனுபவத்தின் மூலமாக உணர்ந்திருக்கின்றனர்.

இந்தப் பயிற்சியின் இன்னொரு வகையைப் பார்ப்போமா?

அதே வஜ்ராசன நிலை; இரண்டு கைகளின் கட்டை விரல்களையும் உள்ளங் கையில் வைத்துக்கொண்டு, மற்ற நான்கு நான்கு விரல்களையும் அதன் மேல் அப்படியே மடித்து மூடிக்கொள்ளுங்கள்.  

இப்போது, இரண்டு கைகளையும் இரண்டு பக்கமும் தொங்கவிட்டுக்கொண்டு, பிறகு அப்படியே மெள்ள மெள்ளத் தொப்புளுக்குக் கீழே வைத்துக் கொள்ளுங்கள். முதுகுத்தண்டு, தலை, கழுத்து ஆகியவை ஏற்கெனவே உள்ளதுபோல், நேர்க்கோட்டில் இருக்கட்டும்.

இப்போது தொப்புளுக்குக் கீழே, அதாவது அடிவயிற்றுப் பகுதியில், கைகள் இருக்கின்றன. அதையடுத்து, ஏற்கெனவே செய்ததுபோல், மூச்சை வெளியே விட்டுக்கொண்டே குனியுங்கள்; பின்பு அப்படியே நிதானமாக, மென்மையாக, எந்த அவசரமும் இல்லாமல், மூச்சை உள்ளிழுத்தபடி, மெள்ள நிமிருங்கள். முடிந்தவரைக்கும் நிமிர்ந்தாலே போதுமானது. பல்லைக் கடித்துக்கொண்டு, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, கஷ்டப்பட்டுச் செய்யாதீர்கள். மிகவும் சந்தோஷமாக, உற்சாகத்துடன், மலர்ந்த முகத்துடன், எந்த மன இறுக்கங்களும் இல்லாமல் நிறுத்தி நிதானமாகச் செய்யுங்கள்.

இப்படியாக... மூச்சை வெளியேற்றியும் மூச்சை உள்ளிழுத்தும் என ஐந்து முறை, தினமும் செய்யுங்கள். இந்த இரண்டு நிலைகளிலும் வளைந்து கொடுப்பது உங்கள் இடுப்புப் பகுதி மட்டும்தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பயிற்சியைச் செய்தால், பெண்களின் கருப்பைப் பகுதிகள் ஒழுங்காகிவிடும். மாதவிடாய்ப் பிரச்னையில் சிக்கித் தவிக்கிற, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிற பெண்கள் பலரும், இந்தப் பயிற்சியால் சந்தோஷம் அடைந்துள்ளனர். மாதவிடாய்ப் பிரச்னைகளும் இல்லை; மன உளைச்சலும் ஓடியே போய்விட்டது என்னும் நிலை வந்த பின்பு, பெண்களின் நிம்மதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கேட்கவா வேண்டும்?!

பெண்கள் நாட்டின் கண்கள் என்கிறோம். என்னைப் பொறுத்தவரை, ஒரு வீட்டின் இதயமும் அவள்தான்; மூளையும் அவள்தான்!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா