Published:Updated:

மனிதம் வளர்போம்!

லதானந்த்

மனிதம் வளர்போம்!

லதானந்த்

Published:Updated:
மனிதம் வளர்போம்!

ன்னிடம் இல்லாத ஒன்று, தன்னால் அடையமுடியாத ஒன்று... வேறொருவரிடம் இருந்தால், அவர் மீது எழுகிற ஒருவித வெறுப்புக்குப் பெயர்- பொறாமை!

அழுக்காறு  அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா  இயன்றது அறம்

- என்கிற குறளில், அழுக்காறு எனப்படும் பொறாமையைத் தவிர்ப்பது குறித்து விளக்குகிறார் திருவள்ளுவர்.

##~##
அக்வினாஸ் எனும் புனிதர், 'பிறரின் மேன்மையைக் கண்டு நாம் துன்பப்படுகிறோம். அதுதான் பொறாமை’ என விவரிக்கிறார். 'நெருப்பானது விறகை அழித்துவிடுவதுபோல், நற்செயல்களைப் பொறாமை அழித்துவிடுகிறது’ என்கிறார் நபிகள் நாயகம். மகாபாரத யுத்தத்துக்கு, பாண்டவர்கள்மீது கௌரவர்கள் கொண்ட பொறாமைதானே காரணம்!

பொறாமை என்பது, குழந்தைப் பருவத்தில் இருந்தே துவங்கிவிடுகிறது. அடுத்ததாக குட்டிப்பாப்பா பிறந்ததுமே, பெற்றோர்களிடத்தில் அதிகம் ஒட்டிக்கொண்டிருப்பது  நீயா நானா என்கிற போட்டியும், அதைத் தொடர்ந்து பொறாமையும் இரண்டு குழந்தைகளிடத்திலும் துளிர்க்கத் துவங்கிவிடுகிறது. நல்ல துணிமணிகள், அழகான விளையாட்டுச் சாமான்கள் ஆகியன மற்ற குழந்தைகளிடம் இருந்தால், அந்தப் பொருட்கள் தனக்கு வேண்டுமே எனும் ஆசை முதலிலும், அதையடுத்துப் பொறாமையும் வந்து விடுகிறது. படிப்பு, திறமை, வளர்ந்ததும் கிடைக்கிற வேலை, பதவி உயர்வு, ஆரோக்கிய உடல் நிலை, வாழ்க்கைத் தரம்... எனத் தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தையும், எதிர்வீட்டு, அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளின் முன்னேற்றத்தையும் கண்டு ஒப்பிட்டுப் பார்த்து, பெற்றோர்களும் பொறாமை கொள்கின்றனர்.  

பக்குவப்பட்ட மனத்தை உடையவர்கள், எவர் மீதும் பொறாமைப்படுவதில்லை. மாறாக, அவர்கள் தங்களது தகுதியை வளர்த்துக்கொண்டு, முன்னுக்கு வருவதற்காக முயற்சிக்கின்றனர். இன்னும் சிலர், 'அவரது தகுதிக்குத் தக்கபடி அவர் இருக்கிறார்; நம்முடைய தகுதிக்குத் தக்கபடி நாம் இருக்கிறோம்’ என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்கின்றனர். இன்னும் சிலர், 'எல்லாம் விதிப்படிதாம்பா நடக்கும்’ என்று கடவுளின் மீது குறைப்பட்டுக் கொள்வார்கள்.

எது எப்படியோ... பொறாமையானது மனதுக்குள் குடிவந்துவிட்டால், அது பல வடிவங்களிலும் வெளிப்படும். எவரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறோமோ, அவரை சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம், முடிந்த அளவுக்கு மட்டம் தட்டி, குரூரத் திருப்தி பட்டுக்கொள்ள மனம் ஆசைப்படும்!

வீட்டில் 'கரன்ட் கட்’ ஆனதும் நாம் செய்கிற முதல் காரியம்... எதிரிலும் அக்கம் பக்கத்திலும் கரண்ட் கட்டாகியிருக்கிறதா என்று பார்ப்பதுதான்! தன் வீட்டில் மட்டும் போகவில்லை என்று தெரிந்து திருப்தி அடைவதும், 'சே! மத்த எல்லா இடத்திலும் இருக்கு! நம்ம வீட்ல மட்டும்தான் இந்த சனியன் பிடிச்ச கரன்ட் போய் தொலைஞ்சிருக்கு!’ என்று புலம்புவதும்கூட ஒருவகையில் பொறாமையின் வெளிப்பாடுதான்!

அக்பரிடம் மிகுந்த நன்மதிப்பைப் பெற்றவர் பீர்பால். இதனால் சபையினருக்கு, பீர்பால் மீது பொறாமை. அவர்களுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினார் அக்பர். ஒருநாள், பீர்பால் மீது அதிகம் பொறாமைப்படுகிற நபரை அழைத்து, ''தூரத்தில் ஏதோ ஊர்வலம் போகிறதே... என்ன விஷயம் என்று பார்த்து வாருங்கள்'' என அனுப்பி வைத்தார் அக்பர். பீர்பாலிடமும் அதேபோல் பார்த்துவரும்படி கட்டளையிட்டார். சிறிதுநேரம் கழித்து, முதலில் சென்றவர் திரும்பி வந்து, ''மன்னா, அதுவொரு கல்யாண ஊர்வலம்'' என்றார். உடனே அக்பர், ''ஆமாம்... எந்த ஊருக்குச் செல்கிறார்களாம்?'' என்று கேட்க, ''அடடா... அதை விசாரிக்கவில்லையே!'' என்று மலங்க மலங்க விழித்தார் அவர். பிறகு, பீர்பால் வந்தார். அது என்ன ஊர்வலம், எங்கிருந்து புறப்பட்டது, எங்கே செல்கிறது, மணமக்கள் விவரம்... என அனைத்தையும் விளக்கிச் சொன்னார். இதைக் கேட்டதும் அக்பர், சபையினரைப் பொருள் பொதிந்த பார்வையுடன் பார்த்தார். பீர்பால் மீது பொறாமைப்பட்ட அனைவருமே கூனிக்குறுகி நின்றனர்.

ஆக, சின்ன விஷயங்களில்கூட, தங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுபவர்கள் உயரத்துக்குப் போகிறார்கள். அப்படிச் செயல்பட முடியாதவர்கள், வெறுமனே பொறாமைப்படுகின்றனர்.

மனிதம் வளர்போம்!

உலக கோடீஸ்வரர்களைப் பார்த்துத் தங்களின் தகுதியை மீறிச் சிலர் பொறாமைப் படுவதும் உண்டு. தங்களுக்கு நன்மை செய்பவர்கள் மற்றும் ஊருக்கு நல்லது செய்பவர்களைப் பார்த்தும் பொறாமைப் படுபவர்கள் இருக்கிறார்கள்!

தி.ஜானகிராமனின் 'பாயசம்’ என்ற சிறுகதை, பொறாமையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒப்பற்ற சிறுகதை! சாமநாது என்பவர், அவருடைய அண்ணனின் மகனான சுப்பராயன் மீது கொண்டிருக்கிற பொறாமைதான் கதையின் அடித்தளம். இத்தனைக்கும் சாமநாதுவுக்கு, பல உதவிகளைச் செய்திருப்பார் சுப்பராயன். ஆனாலும், சுப்பராயன் வீட்டுக் கல்யாணத்தில், சுமார் 600 பேருக்குப் பரிமாற வைக்கப்பட்டிருக்கும் பாயசத்தைச் சாக்கடையில் கொட்டுகிற அளவுக்கு, சாமநாது பொறாமையில் புழுங்குவார்!  

பொறாமையால் மனம்- உடல் ஆகிய இரண்டும் பாதிக்கப்படுகின்றன. ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு ஆகியன அதிகரிக்கிற வாய்ப்புகள் உண்டு. பொறாமையால் மனச் சோர்வு, கழிவிரக்கம், தாழ்வுமனப்பான்மை ஆகியவையே மிஞ்சும்!  

பொறாமைப்படுவதைக் கைவிடுவதே உத்தமம். முன்னேற்றம் அடைந்தவர்களைக் கண்டு, நாமும் உயரவேண்டும் என நேர்மறையாகச் சிந்தித்துச் செயல்பட்டால், வானம் வசப்படும்; வாழ்க்கை வளமாகும்!

(தொடரும்)