பிரீமியம் ஸ்டோரி
வாழ்க வளமுடன்!

ருவம், அருவம் என்பவை நம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை. ஜாங்கிரி எனும் இனிப்புப் பதார்த்தம் உருவம்; அதனுள் இருக்கிற இனிப்புச் சுவையானது அருவம்.

கடவுள் உருவமில்லாதவர். அவருக்குக் கைகளோ, கால்களோ இல்லை. முகமோ, கண்களோ கிடையாது. கடவுள் என்பது மிக உன்னதமான சக்தி. அந்தச் சக்தியை, அதன் வீரியத்தை எப்படிச் சொன்னாலும், நம்மால் புரிந்து கொள்ள முடிவது கடினம். அதற்காகத்தான் முன்னோர்கள், கடவுளுக்கு உருவம் கொடுத்தார்கள்; கடவுளின் மிகப் பிரமாண்டத்தை, அதன் பேரொளியை நாம் உணரவேண்டும் என்பதற்காகத்தான், விக்கிரகத்தையும் ஆலயங்களையும் பிரமாண்டமாக அமைத்தார்கள்.

'நமக்கு ஏதேனும் துன்பமோ பிரச்னையோ என்றால், ஓடோடி வந்து நமக்குக் கரம் கொடுப்பார்; கை தூக்கி விடுவார்’ என்று உணர்த்துவதற்காகத்தான், கடவுளுக்கு ஏராளமான கரங்களையும் படைத்தார்கள்.

##~##
கடவுள் எனும் சக்தியை முதலில் உணரவேண்டும்; அந்தச் சக்தியை உணர்வதற்கும் அறிவதற்கும், அறிந்து தெளிவதற்கும் நமக்குள் ஓரளவேனும் சக்தி வேண்டும். ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம் நம்மூர் மைதானத்தில் நடக்கிறது என்றால், அதில் கலந்துகொள்வதற்கு முன்பாக, 100, 200, 300 மீட்டர் தூரம் வரை ஓடிப் பயிற்சி பெற வேண்டும்; முதலில் அதற்கு நமக்குத் தெம்பு வேண்டும்.

100 மீட்டர் தூரத்தை மூச்சிரைக்காமல் எளிதாக ஓடிக் கடந்தால்தான், அடுத்து 200 மீட்டர் வரை ஓடிச் செல்ல, மனமும் கால்களும் தயாராகும். அந்த 200 மீட்டர் இலக்கும் அருமையாக முடிந்துவிட... 400, 500, 600 மீட்டர் என ஓட்டங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும். பிறகு, 1000 மீட்டர் ஓட்டப் பந்தயம் கடினமாக இருக்காது; வெற்றியை அடைவதும் சுலபமாக இருக்கும்.

'அட... பார்க்கறதுக்கு நோஞ்சான் மாதிரி இருக்கான். ஆனா, குதிரைப் பாய்ச்சல்ல ஓடி, மிரட்டிட்டானே!’ என்று பாராட்டுவார்கள் பார்வையாளர்கள். குதிரையின் வேகத்துக்கு இணையாக என்று சொல்லும்போது, எல்லோருக்கும் குதிரையின் உருவம் மட்டுமே மனக்கண்ணில் தோன்றும். ஆனால், அதனுள் இருக்கிற அதிவேக சக்தியை நம்மால் பார்க்க முடியாது; உணரத்தான் முடியும்.

வாழ்க வளமுடன்!

கடவுள் சக்தியாகட்டும்; குதிரைச் சக்தியாகட்டும்; இவை எல்லாமே நம் மூச்சுக்கு இணையானவை என்பதை உணருங்கள். இன்னும் சொல்லப்போனால், மூச்சு என்பதிலும் உருவமில்லை; அதுவொரு அருவம்தான்! ஆகவே, கடவுளைப் போலவே நம் மூச்சுக்கும் உருவமில்லை; ஆனால், உயிர்ப்பானது; சக்தியானது நம் மூச்சு!

அந்த மூச்சின் வீரியத்துக்குத் தக்கபடி, நம் அன்றாடப் பொழுதுகள் அமைகின்றன. அதேபோல், நம் அன்றாட வாழ்வுக்குத் தக்கபடியே, நம் மூச்சின் செயல்பாடுகள் இருக்கின்றன. ஒருநாளின் 24 மணி நேரமும் நல்ல பொழுதாக அமைவதற்கும், நம் மூச்சானது எந்தச் செய்கூலியும் சேதாரமும் இன்றி இயங்குவதற்கும் நமக்குத் தேவை ஒன்றே ஒன்றுதான். அது, சாமர்த்தியம்!

இந்தச் சாமர்த்தியம் தேவையெனில், அதில் தேர்ந்தவர்களாக நாம் இருக்க வேண்டும் எனில், சில பயிற்சிகள் தேவை. அதில் முக்கியமானதும் முதன்மையானதுமானது...

மூச்சுப் பயிற்சி!

''ரெண்டு பக்கமும் பெடல் இருக்கு; சீட்ல உட்கார்ந்துக்கிட்டு, ரெண்டு கால்களாலயும் அந்தப் பெடல்களை மிதிச்சா, சைக்கிள் ஓடும். கீழே விழாம இருக்கிறதுக்கு, ஹேண்டில்பாரை கவனமா பிடிச்சு பேலன்ஸ் பண்ணணும். அவ்ளோதான். சைக்கிள் ஓட்டுறது ரொம்ப சிம்பிள்!'' என்று சைக்கிள் ஓட்டும் வித்தையை வாய் வார்த்தையாக எளிமையாகச் சொல்லிவிடலாம். ஆனால், பயிற்சிதான் முக்கியம்!

பெடல் செய்து, சைக்கிளை வேகமாக ஓட்டவும் கற்றுக் கொண்டுவிட்டோம். இப்போது, ஓடிக்கொண்டிருக்கிற சைக்கிளை நிறுத்தவேண்டும்; அல்லது, வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்; எனில் 'பிரேக்’ போடவேண்டும் அல்லவா?! குதிரைக்குக் கடிவாளம் போன்று, வாகனங்களுக்கு பிரேக்! அதேபோல், உருவமற்ற மூச்சை உற்றுக் கவனிக்கிற சாமர்த்தியத்தில்தான், நம் ஆரோக்கியத்துக்கான வேகம் இருக்கிறது; நோய்களுக்கான பிரேக் இருக்கிறது.

ஆரோக்கியம் அதிகரிக்கவும், நோய்கள் தாக்காமல் ஓடிப் போவதற்குமான விஷயம்தான், மூச்சுப் பயிற்சி.

முதலில், சுகாசனத்தில் அமர்ந்துகொள்ளுங்கள். முதுகை நேராக்கிக் கொள்ளுங்கள். உங்களின் வலது உள்ளங்கையால், வயிற்றின் தொப்புள் பகுதியை மூடிக்கொள்ளுங்கள். அடுத்து, இடது கையை நெஞ்சுப் பக்கமாகக் கொண்டு வந்து, இடது விரல்களால் வலது காதை மூடிக் கொள்ளுங்கள். உங்களது இடது கையின் முதல் பாதியும் புஜமும், நெஞ்சுப்பகுதியை, அதாவது மார்பை அழுத்தியபடி இருக்கட்டும். மீண்டும் ஒருமுறை, உங்கள் முகமும் முதுகும் நேராக இருக்கிறதா என்று கவனித்துக் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்!

என்ன, சரியா? அடுத்து, அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்தபடி, கண்களை மூடிக்கொண்டு, ஆழ்ந்து, நிதானமாக, எந்தப் படபடப்பும் இல்லாமல், பதற்றமும் தொற்றிக் கொள்ளாமல், எந்தத் தடையேதும் இல்லாமல் மூச்சை நன்றாக உள்ளிழுத்து, வெளியே விடுங்கள். மூடியிருக்கும் கண்கள், மூடினபடியே இருக்கட்டும்; நிமிர்த்திய முகமும் முதுகும் அப்படியே இருக்கட்டும்; இடது கை நெஞ்சுப்பகுதியை அழுத்தியதிலும், வலது காதைப் பொத்திக்கொண்டதிலும் மாற்றங்கள் ஏதுமின்றி இருக்க, தொப்புளில் வலது கையை வைத்த படி, ஒரு ஐந்து முறை நன்றாக மூச்சை இழுத்து, பிறகு நன்றாக வெளியே விடுங்கள்.

உங்கள் நுரையீரலானது, நன்றாக விரிவடைந்து, மொத்த மூச்சையும் உள்வாங்கிக் கொள்வதை உங்களால் உணர முடியும்!

என்ன... ஐந்து முறை செய்துவிட்டீர்களா? அடுத்து, உங்களின் இடது கையின் உள்ளங் கை, தொப்புள் பகுதியை மூடிக்கொண்டிருக் கும்படி செய்யுங்கள். இப்போது, வலது கையின் முன்பகுதியும் புஜமும் நெஞ்சுப் பகுதியை அழுத்த, வலது கை விரல்களால், இடது காதைப் பொத்திக் கொள்ளுங்கள். மீண்டும் முதுகு, முகம் - இந்த இரண்டும் நேராகவே இருக்கிறதா என்று கவனியுங்கள். கண்களை மூடிக்கொண்டு, மூச்சை உள்ளிழுத்து, அதேபோல் வெளிவிடுங்கள்.  

'அடடா... பொது பைப்ல தண்ணீ வர டைமாச்சே இது...’ என்கிற பரபரப்பு வேண்டாம். 'இப்படிக் காலங்கார்த்தால, கால் மணி நேரம் உக்கார்ந்திருந்தா, குளிச்சு, கிளம்பி, பஸ் பிடிச்சு, ஆபீசுக்குப் போறதுக்கு லேட்டாயிடுமே’ எனும் பதைபதைப்பு தேவையே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, 'இப்படி உட்கார்ந்து கண்ணை மூடி மூச்சுப் பயிற்சி செஞ்சா, மனைவியும் குழந்தைகளும் 'இவர் சாமியார் ஆயிடுவார் போல இருக்கே...’ என்று நினைத்து பயப்படுவார்களோ என்று கவலைப்பட வேண்டியதும் இல்லை. மூச்சுப் பயிற்சி என்பது சாமியார் ஆவதற்கான டிப்ளமோ கோர்ஸ் அல்ல; நம் வாழ்வை எளிமையாகவும் வளமையாகவும் ஆக்கிக்கொள்வதற்கான, எனர்ஜி டானிக்! மிக அருமையான புத்துணர்ச்சி போஷாக்கு!

ஆகவே, மூச்சுப் பயிற்சி குறித்த குழப்பமோ கலவரமோ அவசியமே இல்லை, அன்பர்களே! சொல்லப் போனால், குழப்பக் கலவரங்களையெல்லாம் அடித்து விரட்டுவதற்கான ஆயுதம்தான், இந்த மூச்சுப் பயிற்சி என்பதை மறந்து விடாதீர்கள்!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு