Published:Updated:

மனிதம் வளர்போம்! - நன்றி

மனிதம் வளர்போம்! - நன்றி

மனிதம் வளர்போம்! - நன்றி
மனிதம் வளர்போம்! - நன்றி

'தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்’
  - திருக்குறள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மனிதம் வளர்போம்! - நன்றி

ன்றி என்பது, நேர்மறையான உணர்வு. ஒருவரால் பெற்ற நன்மைக்காக, அவருக்குத் தெரிவிக்கிற மரியாதைதான் நன்றி! முதலில், நமக்கு இந்த உடலையும் உயிரையும் தந்து, அதைப் பேணி வளர்த்து வளமோடு வாழ்வதற்குத் தேவையான இயற்கை வளங்கள் நிறைந்த இந்த உலகையும் தந்தருளிய இறைவனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்!

பெற்றெடுத்த பெற்றோர், கற்பித்த ஆசிரியர், ஊதியம் அளிக்கும் முதலாளி, உறுதுணையாக இருக்கும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், நோய் தீர்க்கும் மருத்துவர் என நாம் நன்றி சொல்ல வேண்டியவர்களின் பட்டியல் நீளமானது. தினமும் நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளிலும், கண்ணுக்குத் தெரியாத பலரின் உழைப்பு மறைந்திருக் கிறது. நமது நன்றிக்கு உரியவர்கள் அவர்கள். உலகின் பெரும்பாலான மதங்கள், 'மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை நன்றியுணர்வே!’ என போதிக்கின்றன.

நாம் உண்ணும் உணவைத் தாவரங்கள் உற்பத்தி செய்ய உறுதுணையாக இருக்கும் சூரிய பகவானுக்கும், விளைநிலங்களுக்கும், உழவுக்குப் பயன்படும் எருது களுக்கும் நன்றி சொல்லும் நாளாகக் கொண்டாடப் படுவது, பொங்கல் திருநாள். அஃறிணைப் பொருளான பொங்கல் பானைக்கும்கூட அன்று வழிபாடு செய்து நன்றி செலுத்துவது நமது மரபு. மேலை நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகளில், விளைச்சலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 'Thanks giving day’ என்ற பெயரிலேயே அறுவடைத் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

நன்றியை 'நன்றிக் கடன்’ என்று சொல்வர். கடன் என்ற சொல்லுக்குத் திருப்பித் தரவேண்டிய பணம் என்பது மட்டுமல்ல; கடமை என்றும் ஒரு பொருள் உண்டு. உணவு, உடை, அந்தஸ்து, நல்வாழ்வு போன்றவற்றைக் கொடுத்தவர்களுக்குத் தங்கள் உயிரையும் கொடுத்து நன்றிக்கடன் செலுத்துவோர் இருக்கிறார்கள். மகாபாரத கர்ணனின் செஞ்சோற்றுக் கடன், நன்றியின் வெளிப்பாடுதானே!

##~##
பயணச் சீட்டு கொடுக்கும் நடத்துநராகட்டும், கடிதத்தைக் கொடுக்கும் தபால்காரராகட்டும்... அவர்களிடம் 'தேங்க் யூ’ என்று சொல்லிப் பாருங்கள்; அவர்கள் முகம் ஒரு விநாடி மகிழ்ச்சியில் மின்னுவதைக் காணலாம். மற்றவரை மகிழ்விக்க எளிய இனிய வழி, 'நன்றி’யை மனதாரச் சொல்வதுதான்! மனித உறவுகளை மேம்படுத்துவதிலும், இறுக்கத்தைக் குறைத்து மனத்தைத் தெளிவுறச் செய்வதிலும், நன்றி எனும் பண்பு அதிகம் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

'ஒரு மனிதன் செய்கின்ற பாவங்களுக்கெல்லாம் கழுவாய் உண்டு. ஆனால், நன்றி கொன்ற பாவத்துக்கு மட்டும் கழுவாய் இல்லை. எனவே, கழுவாய் இல்லாத பாவம் ஒன்று உண்டெனில், அது 'நன்றி மறத்தல்’தான்! இதற்கு நேர்மாறாக, புண்ணியங்களில் எல்லாம் மிகச் சிறந்த புண்ணியம் நன்றி மறவாமையாகும்!' என்பது வாரியார் வாக்கு.

''கடவுள் ஒருவனிடம் கண்ணை தானமாகப் பெற்றார். அவன் கண்ணப்பன். அவன் அன்பின் வடிவம். கடவுள் ஒருவனிடம் ரத்த தானம் பெற்றார். அவன் கர்ணன். அவன் நன்றியின் வடிவம். கடவுளிடம் யாசிக்கின்ற மனிதர்களின் நடுவே, கடவுளையே யாசிக்க வைத்த மனிதப் புனிதர்கள் இவர்கள். இவர்களின் மூலம் கடவுள் நமக்கு வலியுறுத்திய ஆன்மிகம்- அன்பு, நன்றி ஆகியவைதான்!' என்பார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

சிலர் தாங்கள் எழுதும் புத்தகங்களை, குறிப்பிட்டவருக்குக் காணிக்கையாக்கித் தங்கள் நன்றியினைத் தெரிவிப்பது வழக்கம். கம்பர், தான் எழுதிய ராமாயணத்தில், தன்னை ஆதரித்த புரவலரான சடையப்ப வள்ளலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பத்து இடங்களில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

இள நீல நிறம் கொண்ட மலரின் பெயர் 'ஐபோமியா’ (Ipomea). இந்த மலர், நன்றியறிதலின் சின்னமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீஅரவிந்த அன்னை, 'The Virtues’ என்னும் தலைப்பில், நன்றியறிதலைப் பற்றி அற்புதமான கதை ஒன்று எழுதியுள்ளார்.

தேவதைகளுக்கான திருவிழா ஓரிடத்தில் நடை பெற்றதாம். சத்தியம், திறமை, கொடை, பாசம், பொறுமை, சாந்தம், கருணை போன்ற தேவதைகள் அந்த விழா மண்டபத்துக்கு வந்திருந்தனர். அப்போது, வெண்மை நிற உடையில், எளிமையான தோற்றத்துடன் ஒரு தேவதை, தயக்கத்தோடு அந்த மண்டபத்துக்கு வந்தாள். அந்தத் தேவதையை அங்கிருந்தவர்கள் முன்பின் பார்த்திராததால், அவள் யாரென்று அவர்களுக்குத் தெரியவில்லை. மெள்ள அவளிடம், 'உன்னை  இதற்கு முன் அதிகமாகப் பார்த்ததில்லையே... யார் நீ?' எனக் கேட்டார்கள். அந்தத் தேவதை பதில் சொன்னாளாம்... 'என்னை அதிகமாக யாரும் எங்கும் அழைப்பதில்லை. என் பெயர்... நன்றியறிதல்!'

விமானத்தில் கோளாறு ஏற்பட்டு வெடித்துச் சிதறும் முன், 'தவிர்க்க இயலாத காரணத்தால் இன்னும் சில நிமிடங்களில் விமானம் வெடித்துச் சிதறப் போகிறது. இதுவரை எங்களுடன் பயணம் செய்து, எங்களின் விமான சேவையைப் பயன்படுத்திக்கொண்ட பயணிகள் அனைவருக்கும் நன்றி!' என்று அறிவித்துவிட்டு, பாராசூட் மூலம் குதித்துத் தப்பினாளாம் விமானப் பணிப்பெண் ஒருத்தி!

நன்றி சொல்வது சிறப்பு. ஆனால், அதை உதட்டளவில் சொல்லாமல், இதய சுத்தியுடன் மனத்தின் ஆழத்திலிருந்து பகிர்வதே சிறப்பு!

(தொடரும்)