Published:Updated:

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

Published:Updated:
வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி
வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி
வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

'சுவாமி. என் பையனுக்கு பன்னிரண்டு வயதாகிறது. ஆனாலும் இன்னும் விளையாட்டுத்தனமாகவே இருக்கிறான். ஒரு உற்சாகத்தில் விளையாடப் போனால், இருட்டி ஏழானதும் வீட்டுக்கு வருகிறான். அப்படி வருகிறவனைப் படிக்கச் சொன்னால், அவனும் ஒன்பது மணி வரைக்கும் படிக்கத்தான் செய்கிறான். ஆனால், எதுவும் அவனுடைய மனதில் பதிவதே இல்லை. ஒவ்வொரு தேர்விலும் குறைவாகவே மார்க்குகள் வாங்குகிறான். அவனுடைய ஜாதகத்தில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்கின்றனர், சிலர். இதற்கு என்ன பரிகாரம் செய்வது, சுவாமி!'' என்று தன் மகனுடனும் கணவனுடனும் வந்திருந்த பெண்மணி கேட்டாள். அப்படிக் கேட்கும்போதே அழுதுவிட்டாள், அந்தத் தாயார்!

நான் அந்தப் பையனையும் தாயையும் ஒருகணம் பார்த்தேன். அந்தப் பெண்ணின் தந்தை, மிகுந்த கவலையுடன் இறுக்கமாக அமர்ந்திருந்தார்.

அந்தப் பெண்ணிடம், ''உங்கள் மகன் விளையாடப் போய்விடுகிறான், சரி. அவனை நீங்கள் அழைத்து வருவீர்களா? அல்லது, நீங்கள் அழைப்பதற்கு முன்பே அவனாக வந்துவிடுவானா?'' என்றேன். உடனே அந்தப் பெண், ''எங்கே சுவாமி... எந்த வீட்ல, எந்த ஃப்ரெண்டோட விளையாடறான்னு தேடுறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடும் எனக்கு. அவன் கையைப் பிடிச்சு, தரதரன்னு இழுத்துக்கிட்டு வர்றதுலயே, என் பாதி ஜீவனே போயிடுது'' என்று அலுத்துக் கொண்டாள்.

##~##
''சரி...புத்தகத்தை எடுத்து, அவனாகவே படிப்பானா? அல்லது நீங்கள் சொல்லித்தான் படிப்பானா?'' என்று கேட்டதும்... ''ஐயய்யோ... அப்படி அவனே புஸ்தகத்தைத் திறந்து படிச்சான்னா, அன்னிக்கி மழை கொட்டித் தீர்த்துடும் சுவாமி. படிபடிபடின்னு படிச்சுப் படிச்சுச் சொன்னாத்தான் சார், புஸ்தகத்தையே தொடுவாரு'' என்று சொல்லிவிட்டு, அந்தப் பையனைப் பார்த்து முறைத்தாள்.

பிறகு அந்தப் பையனிடம், ''நீயும் நானும் விளையாடுவோமா?'' என்று கேட்டேன். அவன் உடனே சரியென்றான். அந்தப் பெற்றோரை சற்றே தள்ளியிருக்கும்படி சொல்லிவிட்டு, அவனுடைய உச்சந்தலையில் கைவைத்து, ஆசீர்வதித்தேன். ''உங்கள் பள்ளியில், மதிய உணவின் போது, பிரார்த்தனை செய்துவிட்டுச் சாப்பிடும் பழக்கம் உண்டா?'' என்று கேட்டேன். ஆமாம் என்றவன், அந்தப் பிரார்த்தனைப் பாடலைப் பாடிக் காட்டினான். அவனுடைய குரலும் தெளிவான உச்சரிப்பும் அழகுற இருந்தன. வார்த்தைகளுக்கு அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதற்குத் தக்கபடி ஏற்ற இறக்கத்துடன் பாடிய விதம், அவனுடைய புத்திசாலித்தனத்தை, கிரகிக்கும் திறனைக் காட்டின.

''நாம் விளையாடுவதற்கு முன்னதாக, சின்னதாக உடற்பயிற்சி ஒன்றைச் செய்வோமா? அது உடற்பயிற்சி மட்டுமின்றி, மனப்பயிற்சியும் கூட!'' என்றேன். உடனே அவன், ''ஓ... விளையாட்டில் ஜெயிக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்கணும்; அதுக்கு அப்புறமா விளையாடணும். அதானே?!'' என்று உற்சாகத்துடன், கண்டுபிடித்துவிட்டதான குதூகலத்துடன் கேட்டான். நானும், ''கிட்டத்தட்ட அப்படித்தான்!'' என்றேன் சிரித்துக்கொண்டே!

அந்தப் பையனை எனக்கு எதிரே, முதுகை நேராக வைத்துக் கொண்டு உட்காரச் சொன்னேன். வலது உள்ளங்கையை, தொப்புளிலும் இடது உள்ளங்கையை வலது காதிலும் வைத்துக் கொள்ளச் சொன்னேன். அப்படியே செய்தான். கண்களை மூடிக்கொண்டு, மூச்சை நன்றாக உள்ளே இழுத்துவிட்டு, பிறகு வெளியே விடச் சொன்னேன். கண்களை மூடிக் கொண்டவன், சட்டென்று திறந்தான். 'ஜெயிக்கணும்னு எப்ப வேண்டிக்கறது?’ என்று கேட்டான்.

அவனுடைய ஞாபக சக்தியும், ஜெயிப்பதில் உண்டான முனைப்பும் என்னை ரொம்பவே கவர்ந்தது.

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

''உனக்கு எந்த விளையாட்டு ரொம்பப் பிடிக்கும்?'' என்று கேட்டேன். அவன், ''ஃபுட்பால்'' என்றான். அட... கிரிக்கெட் ஆட்டத்துக்கு கிறங்கிப் போகிறவர்களுக்கு மத்தியில், கால்பந்தை ரசிக்கிற சிறுவன். வியப்பும் சந்தோஷமுமாக, அவனுடைய தலையைத் தடவி, கன்னத்தில் செல்லமாகத் தட்டினேன்.

''முதலில், கண்களை மூடிக்கொள்; கால்பந்து விளையாட்டில் 'கோல்’ அடிப்பது ரொம்பவே முக்கியம், இல்லையா? அப்படிச் சரியாக

'கோல்’ அடித்தால்தானே, விளையாட்டில் நமக்கு வெற்றி கிடைக்கும். ஜெயிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்; அடுத்ததாக, நன்றாக மூச்சை உள்ளே இழு; அப்படி மூச்சு விடுகிறபோது, அந்த மூச்சுக் காற்றை, காற்று அடைக்கப்பட்ட பந்தாக நினைத்துக் கொள். மூச்சு எனும் பந்தை, மெள்ள, நிதானமாக, அவசரமே இல்லாமல் உள்ளே இழுத்துக்கொள்.

கால்பந்து விளையாட்டில், 'கோல் போஸ்ட்’ என்கிற இடம்தானே நம்முடைய இலக்கு. கவிழ்த்துப் போட்ட 'ப’ வடிவத்திலான கம்பமும், அங்கே கட்டப் பட்டிருக்கிற வலையும்தானே முக்கியம்?! அந்த இடத்தை இலக்காகக் கொண்டு, பந்தை உதைத்துக்கொண்டே சென்று, ஓங்கி ஒரு உதை உதைக்க... அது சரியானபடி பறந்தோடிச் சென்றுவிட்டால், 'கோல்’ அடித்துவிட்டதாகக் கணக்கு. இந்தக் கணக்கு, வெறும் கால்பந்து விளையாட்டுக்கு என்று நினைக்காதே. மொத்த வாழ்க்கைக்குமான சூத்திரமும் இதுதான்!

ஆகவே, உன் மூச்சு உனக்குள் ஓரிடத்தை இலக்காகக் கொண்டு, பயணிக் கும். பிறகு அந்த இடத்தை அடையும் போது, உள்ளுக்குள் ஒரு நிம்மதி; சின்ன தான சந்தோஷம்; மெல்லியதான அமைதி என்று பரவும். அந்த உணர்வுதான், 'கோல்’! அதுதான் வெற்றிக்கான சாட்சி.

என்ன... புரிகிறதா? எங்கே... உன்னுடைய மூச்சு என்கிற பந்தை, மெள்ள மெள்ள உதைத்துக் கொண்டு, அது எங்கே செல்ல வேண்டுமோ... அந்த இலக்கை நோக்கி, நிதானமாக வா, பார்க்கலாம்'' என்றேன். அப்படியே செய்தான். பிறகு அந்தப் பந்தை, 'கோல் போஸ்ட்’ இடத்தில் இருந்து, வெளியே கொண்டு வந்துவிடு. அதாவது, மூச்சை வெளியே இழுத்து விடு. இப்படி, மூச்சை உள்ளிழுப்பது கோல் என்றும்; மூச்சை வெளியேற்றுவதை பந்தை வெளியே தள்ளிக் கொண்டு வருவது என்றும் நினைத்துக்கொண்டே, கால்பந்து விளையாட்டை, விளையாடு'' என்றேன்.

அப்படியே செய்தான். இந்த முறை, இடது கை, தொப்புள் பகுதி; வலது கை இடது காது... என்று வைக்கச் செய்து, விளையாடச் சொன்னேன். 'புரியுது புரியுது... 'கேம்’ல இடம் மாறுறது மாதிரி, இங்கே கையையும் காதையும் மாத்திக்கணும், கரெக்ட்டா?'' என்று கேட்டான். என் பதிலுக்குக் காத்திருக்காமல், சட்டென்று செயலில் இறங்கினான்.

பிறகு அவனிடம், ''இந்த விளையாட்டை, இதேபோல் தினமும் செய்கிறாயா?'' என்று கேட்டேன். ''நிச்சயமா செய்றேன். நல்லாருக்கு இந்த விளையாட்டு'' என்றான். அவனிடமே, ''நீ தினமும் எப்போது படிக்க நினைக்கிறாயோ, அதற்கு முன்னதாக ஒரு ஐந்து நிமிடம் இந்த விளையாட்டை விளையாடிவிட்டுப் படி! விளையாடிய சந்தோஷத்துடன், படிக்கும்போது, நீ படிக்கின்ற யாவையும் மனதுள் பதியும்; மதிப்பெண்ணும் கிடைக்கும்'' என்றேன்.

பிறகு நான்கைந்து வருடங்கள் கழித்து அந்தப் பையனைப் பார்த்தபோது, அவனுடைய அம்மா... ''என் பையன், டென்த்ல ஸ்கூல்லயே ஃபர்ஸ்ட்!'' என்றாள் பெருமிதத்துடன்!

மூச்சுப் பயிற்சி என்கிற கால்பந்து விளையாட்டை நீங்களும் விளையாடிப் பாருங்கள்; வாழ்க்கை வசப்படும்!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா