Published:Updated:

இளமையே இனிமை

இளமையே இனிமை

இளமையே இனிமை

இளமையே இனிமை

Published:Updated:
 
இளமையே இனிமை
இளமையே இனிமை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்டியிடமும் அரசனிடமும் மாம்பழம் பட்ட பாடு!

இளமையே இனிமை

ர்த்ருஹரியின் அரசவைக்கு விஜயம் செய்தார் ஒரு முனிவர். அவர் கையில் ஒரு மாம்பழம். அரசனைக் காணச் செல்லும்போது வெறுங்கையுடன் போகக் கூடாது என்பது நடைமுறை. ஆகவே, பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை காய்க்கும் அந்த அபூர்வ மாம்பழத்தை எடுத்துச் சென்றார். அதை உட்கொண்டால், இளமை நிலைத்திருக்கும் என்பது அதன் சிறப்பு!

‘அரசனுக்கு இளமை செழித்திருக்க வேண்டும். அவரது நல்லாட்சியில் மக்கள் மகிழ்ச்சியடைவர். நீண்ட நாள் அரசாள அவருக்கு இந்தப் பழம் உதவும்!’ என்ற எண்ணத்துடன் எடுத்து வந்திருந்தார் அவர். தவிர, சிறப்பான ஒரு பொருளை சிறப்புக் குடிமகனான அரசனுக்கு அளிப்பதே பொருந்தும் என்றும் அவர் மனம் நினைத்தது.

முனிவரை வரவேற்று உபசரித்தார் பர்த்ருஹரி. அரசருக்கு மாம்பழத்தை அளித்ததுடன், முனிவர் அதன் பெருமையையும் விளக்கினார். விடை பெற்றார். காணிக்கையாகக் கிடைத்த கனியை என்ன செய்வதென்று ஒரு கணம் யோசித்தார் பர்த்ருஹரி. ‘எப்போதும் அழகோடும், இளமையோடும் திகழ வேண்டும்’ என்ற எண்ணம் பெண் இனத்துக்கு இயல்பாகவே இருக்கும். எனவே, தேவை இருப்பவர்களுக்கு, இதைக் கொடுப்பது சிறந்தது என்று பழத்தைத் தன் மனைவியிடம் அளித்தார். அவளுக்கும் அதன் பெருமை தெரியும். அவளது சிந்தனை வேறு திசையில் திரும்பியது. அவளுக்கு மற்றொரு வாலிபரிடம் உறவு இருந்தது. ‘இதை அளித்தால், அவனுக்கு இளமை குன்றாமல் இருக்கும். அது எனது மகிழ்ச் சிக்கு மெருகூட்டும்!’ என்று எண்ணி, பழத்தை தன் மறைமுகக் காதலனுக்குக் கொடுத்தாள். அவன் அதை தன் மனைவியிடம் கொடுத்தான். அவள் அந்தப் பழத்தின் வரலாறைக் கணவனிடம் கேட்டறிந்தாள்.

‘என்னைப் போன்ற ஏழைகளுக்கு இளமையின் நீட்டிப்பு தேவையற்றது. குடிமக்களைக் காப்பாற்றும் அரசனுக்கு அளித்தலே நன்று’ என்று முடிவு செய்தாள். அவள் அரசு மாளிகையில் துப்புரவுப் பணி செய்பவள். மறு நாள் காலை வழக்கம் போல் அரண்மனைக்குக் கிளம்பியவள் தனது கூடையில் மாம்பழத்தை எடுத்துக் கொண்டு அரசரிடம் வந்தாள். ‘‘அரசே! ஒரு மாம்பழம் இருக்கிறது. அதை உண்டால் இளமை குன்றாது. தாங்கள் நலமுடன் நீடூழி வாழ, இந்த ஏழையின் கோரிக்கையை ஏற்று, பெற்றுக் கொள்ள வேண் டும்!’’ என்று வேண்டினாள். மாம்பழத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டான் அரசன். தன் மனத் தடுமாற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல், புன்முறுவலுடன் அதைப் பெற்றுக் கொண்டு அவளுக்கு விடைகொடுத்தான்.

மனைவிக்கு அளித்த மாம்பழம், வேலைக்காரி வழியாகத் தன்னிடம் திரும்பி வந்த விதத்தை ஒற்றன் வழியாகத் துப்பறிந்த மன்னன், மனம் கலங்கினான். ‘என் மனதில் குடி கொண்டிருப் பவள், என்னை ஒதுக்கி விட்டு, மற்றொருவனை நேசிக்கிறாள். அவனோ தன் மனைவியின் மீது அன்பு செலுத்துகிறான். அவன் மனைவி என் மகிழ்ச்சியை விரும்புகிறாள். இதென்ன விபரீதம்? ஒரு மனதுக்கு இத்தனை வழித் தடங்களா? ஆசையைத் தூண்டி விடும் மன்மதனுக்கு விவேகம் இல்லையா? எதை, எதோடு சேர்ப்பது என்ற பகுத்தறிவு இல்லாமல் செயல்படுகிறானே? ஆசையில் கட்டுண்ட மனம் சூழலை மறந்துவிடும் என்பது உண்மையானதே! அந்தோ பரிதாபம்... இப்படியரு சூழலைச் சந்திக்க வேண்டியதாயிற்றே! பட்டத்தரசிக்கு இப்படியோர் அற்ப ஆசையா? பால் குடம் என்று நினைத்தேன். மேல் பரப்பில் தென் படும் பால், உள்ளே இருக்கும் நஞ்சை மறைத்து விட்டது. உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தேனை விட்டு விட்டு, கால் விரலுக்கு இடையில் இருக்கும் ரணத்தின் சீழை நோக்கிப் படையெடுத்ததாம் ஈக்கள் கூட்டம்! ‘அத்திப் பூவையும் பார்க்கலாம், ஒரே ஒரு கால் கொண்ட வெள்ளை நிறக் காகத்தை யும் பார்க்கலாம். தண்ணீரில் நீந்தும் மீன்களின் கால்களையும் பார்த்து விடலாம். ஆனால், பெண் மனதில் இருப்பதைக் காண்பது கடினம்’ என்ற கவியின் கூற்றை மெய்ப்பித்து விட்டாளே இவள்!

இளமையே இனிமை

இவளின் காதலனோ தன் மனைவியை நேசிக் கிறான். ஒருதலைப் பட்சமான நட்பு, என்ன நட்பு? அவலம். கணவன் கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு திருப்திப்பட வேண்டிய அவன் மனைவியின் மனமும் நிலையாகச் செயல்படவில்லை. பண்புக்கு முன்னுரிமை அளித்து, கைப்பிடித்த கணவனோடு இணைத்து வாழ்வது சிறப்பு என்று அவளுக்குத் தோன்றவில்லை. கணவன் அளித்த உயர்ந்த பரிசு அது என திருப்திப் படாமல், பழத்தை என்னிடம் தந்து விட்டாள். இதென்ன விந்தை. எல்லோரிடமும் விரும்பத் தகாத மன மாற்றங்கள், ஆசை அல்லவா இப்படியரு விபரீதத் தொடர்பை செயல் படுத்துகிறது. நான் உட்பட எல்லோரும் ஆசையில் கட்டுண்டவர்களே!’ என்று மனம் வெறுத்து அரசைத் துறந்து, துறவறம் ஏற்றார் பர்த்ருஹரி. இந்தத் தகவல் அவரது நீதி சதகத்தில் தென்படுகிறது.

ஈசனிடம் ஒரு மாம்பழம் சிக்கியது. உமையும் ஈசனும் சேர்ந்து அதை தம் மகன்களுக்கு அளிக்க விரும்பினர். அப்போது, ‘பிள்ளைகள் இருவரில் யாருக்குப் பழத்தை அளிப்பது?’ என்ற கேள்வி எழுந்தது. அதற்காக ஒரு பந்தயம் வைத்தனர். உலகை, யார் முதலில் வலம் வருகிறாரோ அவருக்கு மாம்பழம் என்று தீர்மானமாயிற்று. சின்னவன் முருகன் மயிலேறிப் புறப்பட்டான். கணபதி தாய்- தந்தையை உலகாகக் கருதி, அவர்களை வலம் வந்து, பழத்தைப் பெற்றுக் கொண்டான். முருகனுக்கு ஏமாற்றம். எனவே, தாய்- தந்தையை விட்டுப் பிரிந்து ஆண்டியாக பழநியில் குடிபுகுந்தான் என்று ஒரு கதை உண்டு. ஏமாற்றத்தால் விளைந்த முடிவு நிலைத்திருக்கவில்லை. பழனியாண்டி பின்னர் இரு பெண்களை ஆட்கொண்டு அறுபடை வீட்டை நிறைவு செய்தான். இளமையில் இன்பத்தையும் சுவைக்கலாம். புலனடக்கம் பெற்று ஆன்மிகத்திலும் திகழலாம். ஒன்று, மற்றொன்றுக்கு எதிரானதல்ல. கட்டுப்படுதல், விடுபடுதல்- இரண்டும் மனம் சார்ந்த விஷயம்.

இலக்கை நிர்ணயித்து, இறங்கிய பிறகு இக்கட்டான சூழலையும் எதிர்த்துச் செயல்படும் மனப் பக்குவம் இளைஞர்களிடம் இருக்க வேண்டும்.

ஏமாற்றத்தால் கலக்கமுற்ற முருக னின் மனம், தாய்- தந்தையின் பரிந் துரையைப் புறக்கணித்தது. தனது முடிவிலிருந்து விலகவில்லை. பழநியைப் பரிசுத்தமாக்கினான். மாம்பழத்தில் தனக்கு இடையூறு விளைவித்த அண்ணனை, வள்ளித் திருமணத்தின்போது இடையூறை விலக்கப் பயன்படுத்திக் கொண்டான். இந்திரன், தேவயானையை அளித்து முருகப் பெருமானைப் பெருமைப்படுத்தினான். முருகப் பெருமான் தன்னிச்சையாக வள்ளியை ஆட்கொண்டு, அவளைப் பெருமைப்படுத்தினான். தந்தை சொல்லை நிரா கரித்த முருகன், தந்தைக்கே தத்துவ விளக்கம் அளித்து சாமிநாதன் ஆனான். முருகனின் விளையாட்டு ஆன்மிகத்தை அளித்தது. ஆறுமுகன் தனது சிறு வயதில் ஐந்து முகனுக்கு (சிவன்) நான்கு வேத சாரத்தை விளக்கினான். மாம்பழத்தை இழந்தவன், ஞானப்பழமாகத் திகழ்ந்தான். அப்படியரு திருப்பத்தை மாம்பழக் கதை ஏற்படுத்தியது.

இளமையே இனிமை

‘‘ஈசனின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, அவரது தவறை உணரச் செய்யாமல், தனக்குத் தானே தண்டனையை ஏற்றுக் கொண்டு பழநியில் ஒதுங்குவது சரியா?’’ என்று அந்த ஆண்டியைக் கேட்டான் ஒருவன்.

அதற்கு, ‘‘எனது மனமாற்றம், அவரது தீர்ப்பின் எதிரொலி அல்ல. என் தந்தை நீர்- நெருப்பையும் தாங்கி மயானத்தில் உலாவுபவர். முழு அழிவுக்குப் பின் படைப்பைத் தொடரத் தேவைப்படும் உயிரினங்களின் விதையைத் தன்னில் சேமித்து வைப்பவர். அவர் சம்ஹார மூர்த்தி. எல்லாம் துறந்த அவருக்கு இளமையில் ஆசை முளைத்தது. ஒரு வேளை சாப்பாட்டுக்குப் பிச்சை எடுப்பவர்- பிச்சாண்டி என்ற பெயர் பெற்றவர்- சிவனே என்று இருப்பவர். அப்படிப்பட்டவரின் சித்தம், திருமணத்தை விரும்பியது, அன்னை பார்வதியை மணந்தார். குடும்பம் நடத்தப் பொருளாதாரம் போத வில்லை. அவருக்கு வேலையும் இல்லை. அவருக்குக் கிடைக்கும் உணவு ஒரு வயிற்றுக்குத் தான் போதுமானது. மனைவியை உடலோடு இணைத்துக் கொண்டார். இரு வயிறு, ஒரு வயிறானது. ஒரு உணவில் இருவரும் வாழ்கிறார்கள். அவலத்தை மறைக்க தன்னை அர்த்தநாரீஸ்வரராக மாற்றிக் காட்டினார்.

அதைப் பார்த்து நான் விழித்துக் கொண் டேன். தந்தையின் சங்கடம் என்னைக் குடும்ப வாழ்க்கையிலிருந்து விலக்கி ஆன்மிகத்தில் நுழைத்தது. அதற்கு ஆண்டி வேஷம் தேவைப்பட்டது!’’ என்று முருகனிடம் இருந்து பதில் வந்தது. இந்தத் தகவலை செய்யுள் வாயிலாக கவி ஒருவர் விளக்கி இருக்கிறார் (உதரத்வய பரணபயா தர்த்தாங்காஹிததார: ...). இது கற்பனை ஆனாலும், அற்பனையும் ஆன்மிகத்தில் ஆழ்த்தும் ஆற்றல் படைத்தது என்பதில் சந்தேகமில்லை.

விபரீத விளைவுகளைச் சந்தித்த பர்த்ருஹரி, சிந்தனையில் ஆழ்ந்தார். சமுதாயத்தில் கசப்பான விளைவுகள் தோன்றாமல் இருக்க வழி வகைகளை ஆராய்ந்தார். வாழ்க்கை நெறிமுறைகளை நூறு செய்யுளில் அடக்கி, நீதி சதகம் என்ற நூலை சிறுவர்களுக்கு வழங்கினார். சிருங்கார சதமதம் என்ற நூலை இளைஞர் குழாமுக்கு அளித்தார். பிறப்பின் பயனை - அதாவது ஆத்ம லாபத்தை ஈட்டித் தரும் தகவல்களைத் தொகுத்து, நூறு செய்யுளில் அடக்கி வைராக்ய சதகம் என்ற நூலை முதியவர்களுக்கு வழங்கினார். இப்படி அறநெறி, இல்லறம், ஆன்மிகம் மூன்றையும் ஒருங்கே இணைத்து மனித இனத்துக்கு வழி காட்டியாக மாறினார்.

பர்த்ருஹரியின் துயரம், அவரை அறத்திலிருந்து நழுவ விடவில்லை. முருகனின் ஏமாற்றம், அவரது அவதார இலக்கிலிருந்து திசை திருப்பவில்லை. புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதைகள், தோற்றத்தில் விளையாட்டுத் தனமாகத் தென்பட்டாலும் அறநெறிகளின் விளக்கம் அவற்றுள் ஒளிந்திருக்கும். ‘மிகப் பழைமையானது ஆனால், என்றும் புதுப் பொலிவோடு திகழ்வது!’ என்ற விளக்கம் ‘புராணம்’ என்ற சொல்லுக்கு உண்டு (புராபி நவம் புராணம்).

துயரமும் ஏமாற்றமும் வாழ்க்கையில் தென்படும். இளைஞர்கள் குழாம், துயரத்தில் துவண்டு போகாமலும் ஏமாற்றத்தால் நிலைகுலையாமலும் இருக்க வேண்டும் என்ற படிப்பினையை ஓர் அரசனும், ஓர் ஆண்டியும் நமக்கு ஆடிக் காட்டினார்கள்.