Published:Updated:

சுகி.சிவம் பதில்கள்!

சுகி.சிவம் பதில்கள்!

சுகி.சிவம் பதில்கள்!

சுகி.சிவம் பதில்கள்!

Published:Updated:
இளைஞர் சக்தி
கேள்வி - பதில்
சுகி.சிவம் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நன்மை செய்தால் கெடுதல் வருகிறதே?!

சுகி.சிவம் பதில்கள்!

‘எங்கள் மதம் மற்றும் கடவுளைக் காப்பாற்றுகிறோம்’ என்று, தங்களையே மாய்த்துக் கொள்ளும் இளைஞர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

_ மாதவன், திருவாரூர்

‘இறைவா! இவர்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள். இவர்களை அறிவு வசம் செலுத்த உன்னால் மட்டுமே முடியும்!’ என்று கண்ணீரோடு பிரார்த்திக்கிறேன். காரணம், மனிதன் வாழ்வதற்காக - வாழ்வாங்கு வாழ்வதற்காகத் தோன்றியதே மதம். அதற்காக உயிரை விடுவதோ, பிறரை அழிப்பதோ ஒருபோதும் மதத் தன்மை ஆகாது. அது மதத் தன்மைக்கு முற்றிலும் விரோதமானது.அது மட்டுமல்ல... தங்கள் கடவுளை இவர்கள் காப்பாற்றுவதாகப் பேசுவது பெரும் பிழை! கடவுள்தான் எல்லோரையும் காப்பாற்றுகிறார். அப்படியிருக்க, இவர்கள் எப்படி கடவுளைக் காப்பாற்ற முடியும்? இவர்களால் காப்பாற்றப்பட வேண்டிய அளவுக்கு கடவுள் பலவீனமானவர் அல்ல! தாங்கள் குறிப்பிடும் கருத்து, தீவிரவாதிகளின் மூளைச் சலவை... அவ்வளவே! தீவிரவாதம் ஒருபோதும் மதத் தன்மையாகிவிட முடியாது. நாத்திகத்தை விடவும் அது கடவுளுக்கு எதிரானது; மனித குலத்துக்கு ஆபத்தானது!

எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணத்துடன் செயல்படும்போது அது, சில நேரம் நமக்கே கெடுதலாகி விடுகிறதே... ஏன்?

- வி. ராணி, குடவாசல்

எப்போதும் அப்படி ஆகிவிடும் என்று சொல்ல முடியாது. எல்லோருக்கும் நல்லதே நினைத்து, நல்லதே செய்து, நன்றாக வாழ்ந்து முடிந்த பலரை நான் அறிவேன்.

சில நேரம், பிறருக்கு நாம் நல்லது செய்தாலும், நமக்குக் கெடுதல் வருவதும் உண்டு. அதற்குப் பிறரது பிழையான பண்பு, சுயநலம் அல்லது சூழ்நிலை காரணமாக இருக்கலாம். நமது ஊழ்வினை கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். அப்படிக் கெடுதல் வந்தாலும், நல்லது செய்திட நீங்கள் தயார் என்றால், நீங்கள் தெய்வ நிலை பெறுகிறீர்கள். நல்லது நடந்தால் மட்டுமே நல்லது செய்வேன் என்றால், நீங்கள் மனித நிலை. கெடுதல் வந்தாலும், வராவிட்டாலும் பிறருக்குக் கெடுதலே செய்வேன் என்றால், நீங்கள் அசுர நிலையில் இருக்கிறீர்கள் என்று பொருள்.

சுகி.சிவம் பதில்கள்!

என் உழைப்பின் மூலம், முன்னுக்கு வந்தவர்கள் என் தம்பிகள். ஆனால், அவர்கள் உடல் உழைப்பைக் கேவலமாக நினைக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள், டி.வி-யில் உங்களது உரையை விடாமல் கேட்கிறார்கள். அவர்கள் மனதில் படும்படி இரண்டு வரி சொல்லுங்களேன்!

- பவானிசங்கர், ஈரோடு

‘வியர்வை உப்பாக இருக்கலாம் - ஆனால், அதன் மூலம் வாழ்வை இனிப்பாக்கலாம்!’ - இதைச் சொன்னவர் அப்துல் கலாம். இதைச் சொல்லிச் சொல்லி நீங்கள் ஜமாய்க்கலாம்!

நான் மகரிஷி மகேஷ் யோகியின் தியான முறையால் கவரப்பட்டு அதில் ஈடுபட்டேன். ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், வேதாத்ரி மகரிஷியின் குண்டலினி யோகத்திலும் ஈடுபாடு உண்டு. ஸ்ரீவித்யா உபாசகியான என் அம்மாவின் வற்புறுத்தலுக்கு இணங்க, ஸ்ரீசக்ர பூஜை செய்து வருகிறேன். எல்லாம் சரியாகத் தோன்றுகிறது. ‘ஆனாலும் எதை விடுவது... எதைத் தொடர்வது... எல்லாவற்றையும் கடைப்பிடிக்கலாமா?’ என்று ஒரே குழப்பமாக உள்ளது. தங்களது அறிவுரை தேவை.

- ரமணி, நங்கநல்லூர்

சுகி.சிவம் பதில்கள்!

நல்லன எல்லாவற்றையும், நாமே செய்துவிட முடியாது. ஆனால், நாம் செய்யும் எல்லாவற்றையும் நல்லதாகச் செய்ய முடியும். இந்த வாசகத்தை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். வெவ்வேறு மனோபாவம், இயல்பு கொண்ட பல வித மக்களுக்கு வழிகாட்ட பல்வேறு குருமார்கள், பல விதமான வழிகளைக் காட்டி உள்ளனர். இதில் ஏதேனும் ஒன்றின் மூலம்தான் ஆன்மிகப் பயணம் செய்ய முடியும். மதுரைக்கு திண்டுக்கல் வழியாகவும் போகலாம். வேறு வழியாகவும் போகலாம். ரயிலிலும் போகலாம். சாலை மார்க்கமாகவும் போகலாம். வாகனம் மற்றும் பாதையை முடிவு செய்து விட்டுப் பயணம் புறப்பட வேண்டும். இதை விடுத்து அடிக்கடி பாதையை மாற்றக் கூடாது. அடிக்கடி வாகனம் மாறுவதும் சுலபமல்ல.

எனவே, ஒரு குரு... அவர் காட்டும் வழி- இதுவே உத்தமம். மாறி மாறிப் பயணப்படாதீர்கள். ஒரு நோய்க்கு சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அலோபதி, ஹோமியோபதி ஆகியன தனித் தனி மருந்துகள் தரும். எனினும், ஒரு மருத்துவர்- ஒரு மருத்துவ நெறியே பாதுகாப்பானது. ஒரே நோய்க்கு சித்தா, ஆயுர்வேதம், அலோபதி, ஹோமியோபதி என்று எல்லா மருந்துகளையும் ஒன்றாக உள்ளே தள்ளக் கூடாது. மருந்தே சிக்கலாகி விடும்!

அதுபோல பூஜை, தியானம், வழிபாடு, யோகம் இப்படி எல்லா வற்றையும் ஒருவரே செய்துவிட முடியாது. இதனால் நேரமும், வாழ்வும்கூட தடுமாறிப் போகும். மனதுக்குப் பிடித்த மார்க்கம் ஒன்றைத் தேர்வு செய்து, அதை முழுமையாகப் பின்பற்றுவது பாதுகாப்பானது.

மரணம் குறித்து முன்கூட்டியே தெரிய வந்தால்?

- விக்கிரமாதித்தன், ஜேடர்பாளையம்

‘எப்படியும் நமக்கு ஒரு நாள் மரணம் வரும்!’ என்பது இப்போதே அதாவது முன்கூட்டியே ஜேடர்பாளையம் விக்கிரமாதித்தனுக்குத் தெரியாதா என்ன? எல்லோருக்குமே தெரியும்! ஆனால், எவரும் அதை லட்சியம் செய்வதில்லை. மரணத் தேதி முன்கூட்டியே தெரிந்தால் மட்டும், ஏதோ செய்து விடுவது போல நமக்குள் பேசிக் கொள்கிறோம். ஒரு நிகழ்ச்சி சொல்லட்டுமா?

‘ஏழு நாளில் மரணம்’ என்று மகரிஷி ஒருவர் மகாராஜாவை சபித்து விட்டார். மகாராஜா பயந்து போனான். அவனைப் பார்க்க வந்த மிகப் பெரிய ஞானி ஒருவர் சொன்னார்: ‘‘மகாராஜா, நீ அதிர்ஷ்டசாலி... பாக்கியவான். உனக்கு, ‘நிச்சயம், ஏழு நாட்களுக்குள் மரணமில்லை!’ என்ற உறுதியாவது இருக்கிறது. எங்களுக்கு அப்படியில்லை. எப்போது வேண்டுமானாலும் மரணம் வரும் என்ற அச்சம் இருக்கிறது. அதனால், எப்போதும் நல்லதே செய்ய வேண்டி இருக்கிறது!’’

‘திருத்திக் கொள்ள வாய்ப்பு இல்லாதபடி திடீர் என மரணம் வந்து விடுமோ?’ என்ற ரகசியம்தான், வாழ்வின் ஆச்சரியம்!

சுகி.சிவம் பதில்கள்!

இறக்கும் உயிர்கள் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபிறவி அடைகின்றன என்கிறார்கள். அப்படியெனில், நம் முன்னோரும் மறு பிறவி எடுத்திருப்பார்களே... அவர்களுக்கு திவசம் செய்வது வீண்தானே?

- மு. மதிவாணன், அரூர்

சுகி.சிவம் பதில்கள்!

எந்த நல்ல காரியமும் வீணாவதில்லை. நாம், நம் முன் னோரை நினைத்து வழிபட்டு, தான- தருமங்கள் செய்வதன் மூலம் ஏற்படும் புண்ணிய பலன்கள் யாவும் அவர்களைச் சென்றடையும். இந்து மதக் கோட்பாட்டின்படி பிறக்கவும் வழி உண்டு. அல்லது காலம் வரும் வரை பிறவாதிருக்கவும் வாய்ப்புண்டு. பிறந்திருந்தாலும் - பிறவாதிருந்தாலும் இந்தப் புண்ணிய பலன்கள் யாவும் அந்த ஆத்மாவையே சேரும். பழைய பாவங்களால் பிறந்து, ஒரு வேளை இந்தப் பிறவியில் துன்பப்பட்டுக் கொண்டிருந்தாலும், இந்தப் புண்ணிய பலன் அவர்கள் துயரத்தைக் குறைக்கும். நன்மை செய்யும். காஞ்சி மகா ஸ்வாமிகள், ‘இந்த ஜன்மத்தில் அவர் ஒரு மாடாகப் பிறந்து, வண்டி இழுத்துக் கொண்டிருந்தாலும் நீங்கள் திதி கொடுத்த மறு நிமிடம் மாட்டுக்கு உரியவர் மனம் இளகி, மாட்டுக்கு ஒரு பிரி வைக்கோலாவது எடுத்துப் போடுவார்... கவலை வேண்டாம்!’ என்கிறார். யோசிக்க வைக்கும் நியாயம் இது.

கடவுள் நம்பிக்கையில் எனக்குத் தடுமாற்றம் இருக்கிறது. மறுக்க முடியாதபடி ஒரு விளக்கம் தருவீர்களா?

- யோகேஸ்வரன்

மன்னிக்கவும். விளக்கம் தர இயலாது. காரணம் ‘நம்பிக்கை உடையவருக்கு எந்த விளக்கமும் தேவைப்படாது. நம்பிக்கை அற்றவருக்கு எந்த விளக்கமும் பயன்படாது’ என்று நான் படித்திருக்கிறேன். நீங்கள்?

தத்துவப் பின்னணி தெரியாமல், பெரும்பாலோர் பூஜை- வழிபாடுகள் செய்கிறோமே. அதனால் உரிய பலன் கிடைக்குமா?

- ஜீவா

கிடைக்கும். டாக்டர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளில் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே அவற்றைச் சாப்பிடுகிறோம். பலன் இல்லாமலா போய் விடுகிறது? அதே மாதிரிதான் நம் குலகுரு, புரோகிதர் அல்லது ஆசார்யர் சொல்லிக் கொடுத்த பூஜை- வழிபாடுகள் செய்யும்போது தத்துவப் பின்னணி தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் கிடைக்கும். தெரிந்தால் மகிழ்ச்சி கூடலாம். அது இன்னும் நல்லது!