Published:Updated:

இளைஞனே, இதை நம்பு! அதை நம்பி விடாதே!

இளைஞனே, இதை நம்பு! அதை நம்பி விடாதே!

இளைஞனே, இதை நம்பு! அதை நம்பி விடாதே!
இளைஞனே, இதை நம்பு! அதை நம்பி விடாதே!
 

இளைஞனே, இதை நம்பு! அதை நம்பி விடாதே!
இளைஞனே, இதை நம்பு! அதை நம்பி விடாதே!

சா திக்க வா இளைஞனே... சாதிக்க வா!

எங்கள் அருமை இளைஞனே, நீ எவ்வளவு சிறந்தவன்! துள்ளிக் குதித்த தங்கள் இளமைப் பருவ நினைவுகளைக் கொண்டு, எஞ்சியுள்ள நாட்களை எண்ணிவிட ஏங்குபவர்கள் எத்தனையோ பேர்!

எல்லோரையும் ஏங்க வைக்கக் கூடிய காலத்தைக் கையில் வைத்திருப்பவனே, நீ மனதில் வைக்க வேண்டியவை சில உள்ளன. செவி சாய்ப்பாயா?

இளைஞனே! உனது இந்தப் பருவத்தில்தான் ‘நீ யார்?’ என்பதையும் உனது வீட்டுக்கும் நாட்டுக்கும் என்ன செய்யப் போகிறாய் என்ப தையும் பற்றி நீ சிந்திக்க வேண்டும். நீதான் நமது நாட்டின், சமு தாயத்தின் எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கப் போகிறாய்!

உன்னைப் பற்றிச் சிந்திக்கப் பலரும் தவறுகிறார்கள்; தவறாகச் சிந்திக்கிறார்கள். சமுதாயத்தில் பொறுப்பு மிக்கவர் கள் பார்வையில்கூட நீ சற்று தினவெடுத்தவனாகவே தென் படுகிறாய். ஒளிரும் ஜோதியான உன்னை வளைத்துப் போட்டுத் தங்களது இலக்குகளை அடைய ஆந்தை யாக அலைபவர்கள் பலர். அந்தோ, தீய காரியங்களுக் குச் சமூக விரோத சக்திகள் உன்னை அண்டி, ஆயுதம் எடுக்க வைக்கின்றன.

கவனம் இல்லாததால், நீயும் அவர்களுக்குத் துணை போய் விடுகிறாய். நாட்டுப் பிரச்னைகளை நீ கையில் எடுப்பாய் என நாங்கள் எதிர்பார்க்கும்போது, ஏதோ ஒரு நாயகனின் கட்-அவுட்டுக்குப் பாலபிஷேகம் செய்யப் புறப்படுகிறாயே... நியாயமா இது? இளைஞனே! உனக்காகவே நாடு காத்திருக்கிறது. நாடு, சமுதாயம் மற்றும் உனது உண்மையான நலன் பற்றி நீ சிந்திக்க வேண்டும். சிந்தித்து முன்னேறியவன் வாழ்வில் வியர்வையை மட்டும் சிந்துகிறான்; சிந்திக்காதவன் ரத்தம் சிந்துகிறான்!

சுவாமி விவேகானந்தர் ஒவ்வோர் இளைஞனிடமும் முக்கியமாக ஒன்றை ‘நம்பு!’ என்றார். மற்றொன்றைச் சிறிதும் ‘நம்பி விடாதே!’ என எச்சரித்தார். அவை என்ன?

‘மனிதா, நீ எதையும் சாதிக்க முடியும்!’ என்பதை நம்பு. ‘நீ பலவீனமானவன்!’ என்பதை மட்டும் ஒருபோதும் நம்பி விடாதே. சுவாமி விவேகானந்தரது வீர மொழிகள் ஒன்றிரண்டைக் கேள்... ஒன்றி விடும் உன் மனம், உனது லட்சியத்தோடு.

‘‘என் வீர மகன்களே, நீங்கள் மகத்தான காரியங் களைச் சாதிக்கப் பிறந்துள்ளீர்கள் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள். குட்டி நாய்களின் குரைப்புகளுக்கு அஞ்சாதீர்கள். ஆம், விண்ணிலிருந்து இறங்கும் இடிகளுக்கும் அஞ்சாதீர்கள்! நிமிர்ந்து நில்லுங்கள். வேலை செய்யுங்கள்! யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசட்டும். உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள். உலகம் உங்கள் காலடியில் வந்து விழும். கவலை வேண்டாம். ‘இவரிடம் நம்பிக்கை வையுங்கள்!’ என்றெல்லாம் சொல்வார்கள். ‘முதலில், உங்களிடமே நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள் என நான் சொல்கிறேன்!’ இளைஞனே! இப்படிப்பட்ட வீரியமிக்க கருத்துகளைக் கொண்டு நல்ல பணிகளில் ஈடுபடு. நல்லவற்றை நம்பிக் காரியத்தில் ஈடுபடும்போது உனக்கு முதலில் கஷ்டம் வரலாம். ஆனால், ஒரு கஷ்டம் வந்ததும் அதிலிருந்து அவசரமாகக் கழன்று விடவே நீ பழக்கப் பட்டிருக்கிறாய்.

எதிரிகள் இல்லாமல் எவனாவது வீரனாகி இருக்கிறானா? நீயும் வீரனாக வேண்டும் என்பதற்காகத்தான் உனக்குக் கஷ்டங்கள் வருகின்றன என்பதைப் புரிந்து கொள். கஷ்டம் வருவதே உனக்குத் துணிவைத் தரத்தான். கஷ்டத்தைக் கவனித்துப் பார். அதில் துணிச்சல் தென்படும். நீ சிறகு விரித்தால் துன்பங்கள் தீரும்; மூடி வைத்தால் தேடித் தேடி வரும். ஒரு கவிதை, கேள்:

மலையுச்சிக்குத் தாவித் தாவிச்
சென்றான் தலைவன்.
‘உச்சிக்கு வா’ - தலைவன்
‘மாட்டேன், விழுந்துவிடுவேன்’- தொண்டன்
‘வா மகனே’
‘பயமாக இருக்கிறது’
‘நான் இருக்கிறேன், வா’
தொண்டன் வந்தான் உச்சிக்கு!
உன்னதமான அழகு உச்சியில்!
‘இந்த அழகை என்றும் அனுபவிக்க ஆவலா?’
‘ஆம் தலைவா’
திடீரென தொண்டனைத் தள்ளினான் தலைவன்.
ஆ, ஆச்சரியம்!
விழுந்தவன் சிறகடித்துப் பறந்தான்!
சிரமங்கள் வந்தபோதுதான்
சிறகுகள் இருப்பதை உணர்ந்தான்!

இளைஞனே, இதை நம்பு! அதை நம்பி விடாதே!

சிரமங்கள் வந்தால் சிறகுகள் விரியுமா? இது வெறும் கவிதை இன்பம் என்று நினைத்து விடாதே. ஓர் உண்மைச் சம்பவத்தை உரைக்கிறேன்... கவனி!

திருநெல்வேலியில் உள்ள குக்கிராமம் நடுவக் குறிச்சி. அங்கு நாகபார்வதி என்பவள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். ‘நாலு பேருக்கு நல்லது செய்து வாழ வேண்டும்!’ என்ற எண்ணம் அவளுக்கு இயல்பாக இருந்தது. சீட்டு ஆடுவதும் ஆல மரத்தடியில் தூங்கி வழிவதும், கோலி அடிப்பதுமாக இருந்த அந்த ஊரிலுள்ள அண்ணன்- தம்பிகளை அவள் கவனித்து வந்தாள். அவர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய நினைத்தாள். ஓய்வு நேரத்தில் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தாள். அப்போதுதான் அவள் அந்த அறிவிப்பைப் படித்தாள்.

இளம் உள்ளங்களின் லட்சியக் கனவு களை ஊக்குவித்து, அவர்களிடம் உள்ள சக்திகளை வெளிக்கொண்டு வர ஒவ்வொரு வருடமும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ‘தேசிய இளைஞர் தினப் போட்டி’யை நடத்தி வருகிறது. 2003-ஆம் ஆண்டு நடந்த போட்டியில் சுமார் பத்தாயிரம் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அந்த வருடத்தில் நடந்த போட்டிக்கான பல கேள்விகளுள் ஒன்று - சுவாமி விவேகானந்தர் பாராட்டும்படி நீங்கள் செய்த சிறந்த ஒரு செயலை ஆதாரபூர்வமாக எழுதி அனுப்புங்கள் என்பதாகும். இதைப் பார்த்த நாகபார்வதி ஆழ்ந்து சிந்தித்தாள். என்ன செய்தால், சுவாமி விவேகானந்தரின் பாராட்டைப் பெறலாம் என்று தினமும் யோசித்து வந்தாள். அவரது நூல்களைப் படித்து வந்தாள்.

ஒரு நாள் பள்ளி முடிந்து தனது கிராமத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். வழியில் ஓரிடத்தில் குடி சைகள் வரிசையாக இருந்தன. வீட்டிலுள்ளவர்கள் கூலி வேலைக்குச் சென்றிருந்தார்கள். அப்போது திடீரென அழுகுரலும் கூக்குரலும் கேட்டன. என்ன நடந்தது? ஆ, ஐயோ! குடிசை ஒன்றில் தீப்பிடித்து எரிகிறதே! அதைப் பார்த்த பலரும் ‘ஐயோ, குடிசை எரிகிறதே!’ என்று புலம்பினார்கள். ஆனால், தீயை அணைக்க யாருக்கும் அந்த அவசரத்தில் சிந்தனை ஓடவில்லை. ஒரு சில நொடிகள் சென்றிருக்கும். திடீரென்று அந்தக் குடிசையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.

இளைஞனே, இதை நம்பு! அதை நம்பி விடாதே!

‘‘ஐயோ, குடிசையில் குழந்தை இருக்கிறதே... யாராவது காப்பாற்றுங்கள்!’’ என்று மேலும் குரல் வந்தது. கத்தத் தெரிந்த ஜனங்களுக்குக் காப்பாற்றத் தெரியவில்லை. நாகபார்வதி, நிலை மையை ஒரே கணத்தில் புரிந்து கொண்டாள். தனது ஆடைகளை இறுக்கிக் கட்டிக் கொண்டு எரியும் குடிசைக்குள் வேகமாகப் புகுந்தாள். கண நேரத்தில் கைக்குழந்தையுடன் வெளியே வந்து விழுந்தாள். அவளுக்கு உயிர் இருக்கிறதா என்று பலர் பார்த்தார்கள். அவளது வாழ்க் கையில் உயிரோட்டம் இருப்பதைச் சிலரே கவனித்தார்கள். முகத்தில் நீர் தெளித்ததும் குழந்தையும் நாகபார்வதியும் கண் திறந்து பார்த்தனர். குழந்தை தனது நலத்தை, அழுது காட்டியது; நாகபார்வதி தனது வெற்றியைப் புன்னகை மூலம் வெளியிட்டாள். அதற்குள் சிலர் அங்குமிங்கும் ஓடி அக்னியை அணைத்து விட்டார்கள்.

‘ஐயோ, ஐயோ’ என்று ஆரம்பத்தில் கத்தியவர் கள் இப்போது நாகபார்வதியை ‘ஆஹா, ஓஹோ’ என்று புகழ்ந்தார்கள். ஆனால், எளிய- திட மான உள்ளம் படைத்த நாகபார்வதி அந்தப் பாராட்டை ஏற்கவில்லை. இந்தச் சம்பவத்தை தேசிய இளைஞர் தினப் போட்டிக்காக எழுதி அனுப்பிய நாகபார்வதி முடிவில் இவ்வாறு குறிப் பிட்டிருந்தாள்:

‘எல்லோரும் பாராட்டி னார்கள். எனக்குத் தெரி யும் நான் அவ்வளவு பெரிய தைரியசாலி இல்லை. ஆனால், சிக்க லான நேரத்தில் எனக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என்று யோசித் தேன். ஆழ்ந்த யோசனைக்குப் பின், உணர்ந்தேன். எனது தைரியம் விவேகானந்தரிடம் இருந்து வந் தது. ‘சுவாமி விவேகானந்தரின் பாராட்டை எப் படிப் பெறுவேன்?’ என்ற ஒரே சிந்தனைதான் என் உள்ளமெல்லாம் அப்போது நிறைந்திருந்தது. அதனால்தான் அது நடந்தது!’

இந்தச் சம்பவத்தை ஆதாரபூர்வமாக எழுதியிருந்த நாகபார்வதிக்கே சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

ஆகவே இளைஞனே, நீயும் சாதிக்கப் பிறந்த வன் என்பதை நம்பு. உன்னை உடலாலும், மனதாலும் பலவீனப்படுத்தும் எதையும் கால் விரலாலும் சீண்டிப் பார்க்காதே. இந்த மண்ணின் மேம்பட்ட மைந்தன் ஆவதும் மண்ணுக்கு இரையாவதும் உன் கையில்தான். இதை மறந்து விடாதே!

அடுத்த கட்டுரைக்கு