Published:Updated:

மாணவச் செல்வங்களே..!

Vikatan Correspondent
மாணவச் செல்வங்களே..!
மாணவச் செல்வங்களே..!
 


பார், கேள், படி, எழுது!

மாணவச் செல்வங்களே..!
மாணவச் செல்வங்களே..!

ள்ளிப் பருவத்தில் சில ஒழுக்க நெறிமுறைகளுக்கு உட்பட்டு, பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள் மாணவர்கள். இந்தப் பருவத்தில் அவர்களுக்குத் தேவையான பழக்க வழக்கங்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள் பற்றிக் கூறுகிறார், சென்னை பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி குழுமத்தின் தலைவரும் இயக்குனருமான திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி.

அதிகாலை வேளையை ‘பிரம்ம முகூர்த்த’ நேரம் என்பர். அப்போது ஓஸோன் வாயு அதிக அளவில் இருப்பதால் வெட்டவெளியில் நடப்பது, பிராணாயாமம் செய்வது போன்றவை மூளைக்குப் புத்துணர்ச்சி, சுறுசுறுப்பைக் கொடுக்கும். அதன் பிறகு சில நிமிடங்கள் கழித்துப் படித்தால் அப்படியே மனதில் பதியும்.

சில நிமிடப் பிரார்த்தனைகூட மனதை ஒருமுகப்படுத்த உதவும். மனம் ஒருமுகப்பட்டால்தான், எண்ணங்களைக் குவித்து, படிப்பவற்றை மனதில் வாங்கிக் கொள்ள முடியும். கவனம் சிதறாமல் இருக்க அமைதியான சூழலும் உதவும்.

‘டைம் மேனேஜ்மென்ட்’ மிக அவசியம். காலையில் குளித்து முடித்து, படிப்பதற்கென்று நேரம் ஒதுக்கி, அந்த நேரத்தில் தினமும் படிக்க வேண்டும். ஒவ்வொரு தினத்திலும் நேரத்தைத் திட்டமிட்டு, அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலைகளைச் செய்வது எளிதாக இருக்கும்.

‘பார், கேள், படி, எழுது’ என்பதுதான் துல்லியமான படிப்புக்குச் சிறந்த வழி. பாடங்களை முதலில், பார்த்துப் பதிய வைக்க வேண்டும். பிறகு கேட்டுப் பதிய வைக்க வேண்டும் (இப்போது விளம்பரங்களை எல்லாம் மனப்பாடமாகப் பாடுகிறீர்களே... அதே ஸ்டைல்தான்!) அதன் பிறகு படிக்க வேண்டும். இறுதியாக, படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும். எழுதிப் படித்தல் போன்ற நல்ல பிராக்டீஸ் வேறெதுவும் இல்லை. கையெழுத்துப் போடும்போது பார்த்து, எழுத்துக் கூட்டியா போடுகிறோம்? விழி எங்கேயோ பார்க்க, கை தன்னிச்சையாகப் போடுவது, பயிற்சியால் வந்ததுதானே!

உணவு விஷயத்தில் ஜாக்கிரதை தேவை. எதற்காகவும் காலை உணவை தவிர்க்கக் கூடாது. இட்லி, தோசை, பழங்கள், பிரட், சப்பாத்தி, காய்கறித் துண்டுகள் இப்படி ஏதாவது ஒரு சத்தான உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும். பால், சோயா, பருப்புகள் போன்ற ‘புரத’ உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்கள். பழங்களையும் கீரைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நொறுக்குத் தீனி, எண்ணெய், மற்றும் கார வகைகள் ஆரோக்கியத்தைக் கொல்லும் அரக்கர்கள். இவற்றைத் தவிர்ப்பது நலம்!