Published:Updated:

மரணத்தையும் வெல்லலாம்!

மேலே... உயரே... உச்சியிலே - 3வெ.இறையன்பு

மரணத்தையும் வெல்லலாம்!

மேலே... உயரே... உச்சியிலே - 3வெ.இறையன்பு

Published:Updated:
மரணத்தையும் வெல்லலாம்!
##~##

 மாற்றி யோசிப்பவர்கள் மிகப்பெரிய நெருக்கடியையும் நொறுக்கித் தள்ளிவிடலாம். அதைத்தான் நமது புராணங்களும், இதிகாசங்களும் சொல்லி, நம்மை உற்சாகப்படுத்துகின்றன.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அஸ்வபதி என்றொரு மன்னர். அவருக்கு ஓர் அழகான ஆரணங்கு. அவள் பெயர் சாவித்திரி. திருமணப் பருவம் வந்தது. அவள் விரும்புகிறவனைக் கணவனாகத் தேர்ந்தெடுக்க  தந்தை அவளுக்கு வாய்ப்பு தந்தார்.  சாவித்திரி தனக்கேற்ற கம்பீரத்துடன் ஒருவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினாள்.  எனவே, தங்க ரதத்தில் ஏறி சிப்பாய்களோடு தூர தேசங்களுக்கு எல்லாம் பயணம் செய்தாள். ஆனால், பயனில்லா பயணம்.  

ஓர் இளவரசனைக்கூட சாவித்திரிக்குப் பிடிக்கவில்லை. அவள் ஒரு புனித ஆசிரமத்துக்கு வந்தாள். அங்கு அன்பும், அமைதியும் தவழ்ந்ததால் விலங்குகளுக்குக்கூட பயம் இல்லை. அந்த அமைதிப் பிரதேசத்தில் த்யுமத்சேனா என்ற மன்னன் சடாமுடியுடன் வசித்திருந்தான்.  இப்போது அவன் ராஜ்ஜியம் இல்லாத ராஜா. எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டு, அரசையும் இழந்து, பருவம் கடந்ததால் பார்வையையும் இழந்து வறுமையோடு அங்கு வாழ்ந்தான். அவன் மனைவியும், மகனும் அங்கு கடுந்தவத்தில் காலத்தைக் கழித்தனர். அந்த இளைஞனின் பெயர் சத்தியவான்.  

சாவித்திரி அந்த ஆசிரமத்தைக் கடக்கும்போது, முனிவராய் இருக்கும் த்யுமத்சேனாவுக்கு மரியாதை செலுத்தத் தோன்றியது. அவள் அவ்வாறு செய்யும்போது, அவள் பார்வை சத்தியவான் மீது பட்டது. மாட- மாளிகைகளில் இருந்த இளவரசர்களால் ஈர்க்கப்படாத அவள், மடத்திலே இருந்த சத்தியவானிடம் இதயத்தைக் கொடுத்தாள்.  மடத்தைக் கொடுத்தால் இடத்தைப் பிடிப்பது இதுதான்!

சாவித்திரி, அப்பாவின் அரண்மனைக்குத் திரும்பி வந்தாள்.  அஸ்வபதி, ''மகளே, நீ யாரையாவது மணக்க விரும்புகிறாயா?'' என்று கேட்டார். சாவித்திரியின் கன்னங்கள் நாணிச் சிவந்தன. மன்னர் புரிந்துகொண்டார்.

'அந்த இளவரசனின் பெயர் என்ன?''

''அவர் இளவரசன் அல்ல; அரசை இழந்த மன்னனின் மகன். அரச வாழ்க்கையில் இல்லாமல் ஆசிரம வாழ்க்கையில் இருக்கும் சந்நியாசி. அறுசுவையை உண்ணாமல் வேர்களையும், தழைகளையும் தின்னும் ஏழை''

அரசன் விவரத்தை அறிந்து, அங்கு எதேச்சையாக வந்திருந்த நாரத முனிவரிடம் அறிவுரை கேட்டான். நாரத முனிவர், அது மிகவும் அபசகுனமான தேர்வு என்று குறிப்பிட்டார். மன்னன் துருவித் துருவிக் கேட்டான்.  

'இன்னும் பன்னிரண்டு மாதங்களில் அந்த இளைஞன் இறந்துவிடுவான்' என்றார் நாரதர்.  

அரசன் சாவித்திரியிடம், 'கணவன் இறந்தால் நீ கைம்பெண்ணாகிவிடுவாய். நன்றாக யோசித்துப் பார்.. உன் தேர்விலிருந்து விலகு' என்று வற்புறுத்தினார்.

'கவலைப்படாதீர்கள் தந்தையே! வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டு வாழ என் கற்பு இடம் தராது.  ஒரு பெண் ஒருமுறையே கணவனைத் தேர்ந்தெடுக்க முடியும். அதற்குப் பின் விலக முடியாது!' என்று அவள் வலியுறுத்தினாள். அடம்பிடித்தாள்.

அரசன், அவள் சொல்லைக் கடைப்பிடித் தான். அவள் சத்தியவானைக் கைப்பிடித்தாள்.  

நாரதர் சொன்னது நடப்பதற்கு மூன்று நாட்களே கெடு இருந்தது. சத்தியவான் எந்த நாளில் இறப்பான் என்பது அவளுக்குத் தெரிந்தும், அவனிடமிருந்து அதை மறைத்தாள்.  கடுமையான விரதம் இருக்க ஆரம்பித்தாள். கெடு விதிக்கப்பட்ட நாள் வந்தது.  அவளும் கணவனோடு உணவைச் சேகரிக்கச் சென்றாள். சத்தியவான் தலை சுழல சாய்ந்தான்.  அவள் அவனைத் தன் மடியில் கிடத்திக் கொண்டாள்.

மரணத்தின் தூதுவர்கள் அவன் உயிரைக் கவர வந்தார்கள். ஆனால், சாவித்திரி இருந்த இடத்தைச் சுற்றி நெருப்பு வளையம் இருந்ததால், அவர்கள் பயந்து ஓடினார்கள். யமனே அங்கு வந்தான்.  அவன் அந்த நெருப்பு வளையத்துக்குள் நுழைந்தான்.

மரணத்தையும் வெல்லலாம்!

'மகளே! இந்த உடலுக்கு உரிய உயிரைக் கொடுத்துவிடு. மரணம் என்பது நிகழ்ந்துதான் தீர வேண்டும்'' என்று யமன் கூறினான். அவன், சத்தியவானின் ஆத்மாவை எடுத்துக்கொண்டு  செல்லும்போது, யாரோ பின்தொடர்ந்து வருவதைக் கண்டான். பார்த்தால் சாவித்திரி.  

'மகளே, ஏன் என்னைப் பின்தொடர்கிறாய்?' என்று கேட்டான்.  

'கணவனைப்  பின்தொடர்வது மனைவியின் கடமை' என்றாள் அவள்.  

'நீ, உன் கணவனின் உயிரைத் தவிர, வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள்; தருகிறேன்' என்றான் யமன்.  

உடனே சாவித்திரி  வரம்கேட்டாள். 'யமதர்ம ராஜாவே! என் மாமனார் அவர் இழந்த கண்  பார்வையைத்  திரும்பப் பெற்று   மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்!'

'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லிவிட்டு யமன் சென்றான்.  மறுபடியும் யாரோ பின்தொடரும் ஓசை.

'மகளே, ஏன் இன்னும் பின்தொடர்கிறாய்?'

'என் மனம் என் கணவன் பின்னாலேயே வந்து கொண்டிருக்கிறது. அவர் ஆத்மாவோடு என் ஆத்மாவும் கலந்துவிட்டது. எனவே, என் உடல் அதைப் பின்தொடர்கிறது'' என்றாள் சாவித்திரி.

அவள் சாதுரியத்தைக் கண்டு மகிழ்ந்த யமன், 'இன்னொரு வரம் கேள், உன் கணவனின் உயிரைத் தவிர' என்றான்.

'என் மாமனார் இழந்த அரசையும், செல்வத்தையும் திரும்பப் பெறவேண்டும்' என்றாள் சாவித்திரி.

'நீ கேட்ட வரத்தைத் தந்தேன். கவர்ந்த உயிரை மட்டும் நான் திருப்பித் தர முடியாது' என்று சொல்லிவிட்டு யமன் செல்லத் தொடங்கினான். மறுபடியும் சாவித்திரி தொடர்ந்தாள்.

'இப்போது என்ன வரம் வேண்டும்?' என்று யமன் கேட்டபோது, 'என் மாமனாரின் ராஜ மரபு துண்டிக்காமல் தொடர வேண்டும். அவர் ராஜ்யம் சத்தியவானின் மகன்களுக்குச்  சென்று சேர வேண்டும்' என்றாள் அவள்.

அவளுடைய சாமர்த்தியத்தைக் கண்டு யமனே வியந்தான். அவள் கேட்ட வரத்தைத் தருவதைத் தவிர, அவனுக்கு வேறு வழியில்லை. நேரடியாகக் கணவனின் உயிரைக் கேட்காமல் வாரிசு வேண்டுமென்று கேட்டு கணவனின் உயிரையும், ராஜ்ஜியத்தையும், மாமனாரின் பார்வையையும், பகைவர்கள் வெல்ல முடியாத அளவுக்கு பலத்தையும் ஒருங்கே பெற்றாள் சாவித்திரி.

மதியோகிகள் மரணத்தையும் வெல்வார்கள் என்பதற்கு இந்தப் புராணக் கதை சான்று. மாற்றி யோசிப்பது ஆபத்துகளில் இருந்து காப்பதுடன், ஏற்பட்டிருக்கும் விபத்தையும் வெல்ல உதவும்.  

வித்தியாசமாகச் சிந்திப்பவர்கள் கருங்கல் பாறையையும் கசிய வைப்பார்கள் என்பதற்கு நாட்டுப்புறக் கதையன்று சான்றாக இருக்கிறது.  

போஜராஜனைப் பார்ப்பதற்கு, கவி ஒருவர் நீண்டநாட்களாக முயன்று கொண்டிருந்தார். காவலாள் ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணத்தைச் சொல்லி அவரைத் தடுத்து வந்தான்.  'இப்போது அரசர் குளியல் அறையில் இருக்கிறார், இப்போது சாப்பிடுகிறார், இப்போது தூங்குகிறார், இப்போது அந்தப்புரத்தில் இருக்கிறார்!' என்று ஏதாவது ஒரு காரணத்தை அவன் சொல்லுவான்.

ஒருநாள், அரசன் உள்ளூர்க் கோயிலுக்குச் சென்றிருந்த நேரம் பார்த்து, அந்தக் கவியும் அங்கே போனார். கோயிலில் எல்லோருக்குமே அந்தக் கவியின் புலமையில் மோகம் உண்டு.  எனவே, அவரை உள்ளே அனுமதித்தார்கள். அரசன் சிவபெருமானைத் துதித்துக்கொண்டிருந்தபோது, கவி அவர் பின்னால் போய் நின்றார்.  குருக்கள் ஆரத்தி எடுத்தார். அப்போது கவி, 'அங்கே சிவபெருமான் இல்லை!' என்று கத்தினார். பின்னாலிருந்து வந்த ஒலியைக் கேட்டு அரசன் திடுக்கிட்டான். கவியைத் திரும்பிப் பார்த்து, 'எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?'

என்று கண்டிப்போடு கேட்டான்.  'வெகு நாளைக்கு முன்பே சங்கரனார் தமது உடலில் பாதியை நாராயணனுக்குக் கொடுத்துவிட்டார். மற்றொரு பாதியை மலைமகளுக்குக் கொடுத்துவிட்டார். அதனால் அவருடைய அடையாளத்தைச் சுட்டிக்காட்ட ஏதுமில்லை!' என்றார் கவி. 'அவர் தலையில் இருந்த கங்கை எங்கே போயிற்று?' என்று போஜராஜன் கேட்டான். 'அது கடலில் கலந்துவிட்டது!' என்றார் கவி.  

உடனே ராஜா, 'அவர் தலையில் அணியாகத் திகழ்ந்த வெண்மதி என்னவாயிற்று?' என்று கேட்டார். அதற்குக் கவி, 'அது வானத்துக்குச் சென்று, இப்போது அங்கேயே நிலவுகிறது!'

என்றார். அதற்கு போஜராஜன், 'ஆனால், அவருடைய சக்தி மட்டும் கட்டாயம் இருக்க வேண்டுமே?' என்றார். 'அதுவும் இல்லை! அதையும் அவர் தங்களுக்குத் தந்துவிட்டாரே!' என்றார் கவி.

கவியின் இந்த பேச்சைக் கேட்டு அரசன் போஜராஜன் மகிழ்ந்து, புன்னகை பூத்தபடியே, 'எல்லாம் போனாலும் அவருடைய பிச்சைப் பாத்திரம் மட்டும் அவசியம் இருக்குமே!'

என்றான். 'அதுவும் அவரிடம் இல்லை! அதை அவர் எனக்குத் தந்துவிட்டார்!' என்றார் அந்தக் கவி. இதன் மூலம் கவியின் வறுமையை உணர்ந்த போஜராஜன், அவரது வறுமையை அறவே துடைத்து, அவருடைய காவியம் மலரவும் வழி செய்தான்.

எதையும் பக்குவமாகச் சொன்னால், உருகாத மனத்தையும் உருகவைத்துவிடலாம். கடினமான பாறையையும் நெக்குருக வைத்துவிடலாம்.

எப்போதும் ஒருவரிடம் கருத்துச் சொல்கிறபோது, சாதகங்களை முதலில் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு பாதகங்களைச் சொல்லவேண்டும். அப்போதுதான், எதிராளி நம் கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்வார். எடுத்தவுடன் குறைகளைப் பட்டியலிட்டால், நம் கருத்து குறைப்பிரசவமாகிவிடும்.

எந்த ஒரு திட்டத்தைப் பற்றியும் குறிப்பு எழுதும்போது, முதலில் அதிலிருக்கும் நல்ல அம்சங்களைக் குறிப்பிடவேண்டும். பிறகு, அதிலுள்ள பழுதுகளை நயமாகக் கூறுவதோடு, அவற்றை எவ்வாறு களைய வேண்டும், களைந்தால் என்ன நன்மை ஏற்படும் என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். அப்போதுதான், கேளாதாரும் அதைக் கேட்பமொழிபவராக நாம் இருப்போம்.

(இன்னும் மேலே) 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism