Published:Updated:

நாளை நமக்காக!

உயர்வென்ன தாழ்வென்ன! திருப்பூர் கிருஷ்ணன்

நாளை நமக்காக!

உயர்வென்ன தாழ்வென்ன! திருப்பூர் கிருஷ்ணன்

Published:Updated:
##~##

லப்புத் திருமணம் எல்லாக் காலங்களிலும் நடந்திருக்கிறது. இப்போதும் நடக்கிறது. இது புதிதல்ல. ஆனால், கலப்புத் திருமணம் செய்துகொள்கிறவர்கள் தங்களின் உயர்வு மற்றும் தாழ்வு மனப்பான்மையில் இருந்து முற்றிலுமாக விடுபட வேண்டியது முக்கியம். தொடர்ந்து நடத்தப்போகும் வாழ்வின் போக்கில், எங்கேனும் ஒரு துளி ரேகை சாதி உணர்வை யாரேனும் ஒருவர் காட்டினாலும் வாழ்க்கை நரகம்தான் என்பதில் சந்தேகமில்லை.

மனித சாதி என்ற ஒரு சாதிதான் இயற்கையானது; இயல்பானது, மற்றவை கற்பிதம் செய்து வைக்கப்பட்டவை என்பதை மணமகன், மணமகள் இருவரும் திருமணத்துக்கு முன்பாகவே நன்றாக உணர்ந்து உறுதி செய்துகொள்ள வேண்டும். ஆழ்மனத்திலிருந்து சாதி தொடர்பான உயர்வு, தாழ்வு உணர்வு முற்றிலும் நீங்கியிருந்தால்தான் கலப்பு மணங்கள் மங்கலத்தைத் தரும். இல்லாவிட்டால் கொஞ்ச காலத்துக்குப் பிறகு சிக்கல்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மணமகன்- மணமகள் இருவரிடம் மட்டுமல்லாமல், அவர்களின் உறவினர் அனைவரிடமும் இத்தகைய உயர்ந்த மனப்போக்கு தோன்றவேண்டும்! அது சாத்தியமில்லாதபட்சத்தில், கலப்பு மணம் செய்துகொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவரையருவர், அவர்களுடைய இருதரப்பு உறவினரிடமும் விட்டுக்கொடுக்காத அளவு திடமான மன உறுதி பெற்றிருக்க வேண்டும். இப்போது அத்தகைய நல்ல தம்பதிகளின் எண்ணிக்கை பெருகிவருகிறது என்பது சமுதாய வளர்ச்சியின் அடையாளம். இன்னும் பெரிய அளவில் நிலைமை சீராக வேண்டியிருக்கிறது.  

நாளை நமக்காக!

கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களை நிராகரிக்கும் வழக்கம் இன்று பெரிதும் குறைந்துவிட்டது. காரணம், கால நிர்பந்தம்தானே தவிர, பண்பாட்டு வளர்ச்சி அல்ல என்பதுதான் சோகம்!

இறந்த குழந்தைக்கு உயிர்கொடுக்க, இறப்பே நடக்காத இல்லத்திலிருந்து ஒரு கைப்பிடி கடுகு வாங்கிவரச் சொன்னாரே மகான் புத்தர்... அதுபோல், கலப்புத் திருமணமே நடக்காத வீட்டிலிருந்து ஒரு கைப்பிடி அட்சதை வாங்க இன்று இயலாது என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். அடுத்து, தங்கள் வீட்டில் என்ன நிகழுமோ என்ற எச்சரிக்கையால்தான் அவர்கள் விமர்சனம் செய்யாமல் இருக்கிறார்களே அன்றி, தங்கள் மனம் எல்லா சாதியினரையும் ஏற்கும் வகையில் விசாலமானது என்பதால் அல்ல!

பாண்டவர்கள் அந்தணர்களாக வேடம் பூண்டுதான் திரௌபதியின் சுயம்வரத்தில் கலந்துகொண்டார்கள். எனவே, அந்தணர்கள் சத்திரியர்களை மணந்துகொள்ளும் வழக்கம் முன்பு இருந்திருக்கிறது என்று தெரிகிறது.

நாளை நமக்காக!

மண்ணிலிருந்து பிறந்த சீதை என்ன சாதி? அவள் சத்திரியரான ஜனகரால் வளர்க்கப்பட்டதால் சத்திரியப் பெண் ஆகிவிடுவாளா? அப்படியானால், பிறப்பு சாதியைத் தீர்மானிப்பதில்லை. வளர்ப்புதான் தீர்மானிக்கிறது என்றுதானே பொருள்?

நாயன்மார்களிலும், ஆழ்வார்களிலும் எல்லாச் சாதியைச் சேர்ந்தவர்களும் இருந்திருக்கிறார்கள். இறையருளைப் பெற சாதி என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. இறையருள் பெற்ற அடியவர்களை எல்லாச் சாதியினருமே கொண்டாடியிருக்கிறார்கள்.

நந்தனாரை இறைவன் தீக்குளிக்க வைத்தது ஏன் என்பதற்கு பேரறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் ஓர் அருமையான விளக்கம் சொல்வார். தில்லை வாழ் அந்தணர்களே நந்தனாரின் பக்தியைக் கண்டு அவரைப் பணிந்தார்கள் என்றும், தீக்குளிக்கச் சொன்னது அவர்களல்ல என்றும், இறைவனே என்றும் விளக்கி, அதற்கு மேலும் ஒரு விளக்கம் சொல்வார் அ.ச.ஞானசம்பந்தன்.

நந்தனார் மனத்தில், தான் தாழ்ந்த சாதி என்ற தாழ்வு மனப்பான்மை இருந்தது. அது மறைய வேண்டும். அவர், தான் மறுபிறப்பெடுத்ததாக நம்பினால் அன்றி, அவருடைய ஆழ் மனத்தின் தாழ்வு மனப்பான்மையை நீக்க வேறு வழியில்லை. எனவே அவரைத் தீக்குளிக்கச் செய்து, அதிலிருந்து எழுந்து மறு பிறப்படைந்ததாக அவரை உணரச் செய்தார் இறைவன் என்பது அ.ச.ஞா. விளக்கம்.

இன்றும் பாரத தேசத்தின் பெருமைமிக்க குடிமக்களான தலித் சமூகத்தினரால் தேசம் பலதுறைகளில் வளர்ச்சி அடைகிறது. ஆனாலும், சிலர் மனத்தில் தங்களின் பிறப்பு (சாதி) குறித்த தாழ்வு மனப்பான்மை இருக்குமானால், அது சமுதாயத்தைப் பாதிக்கவே செய்யும்.  உயர்ந்த மனப்பான்மையை உயர் சாதியினர் தங்கள் மனத்திலிருந்து முழுவதுமாக ஒழிப்பதோடு, தாழ்ந்த மனப்பான்மையைத் தாழ்ந்த சாதியினரும் தங்கள் மனத்தை விட்டுப் பூரணமாய் ஒழிக்க வேண்டும். எதிர்கால இந்தியா சாதி உணர்வற்ற சமுதாய மேம்பாடு காண இவ்விரண்டும் நிகழ்வது அவசியம்.

நாளை நமக்காக!

புராணங்களில், இத்தகைய உயர்வு - தாழ்வு மனப்பான்மைகளைத் தோற்றுவிக்கும் ஆழ்மன எண்ணங்களை மாற்றுவதற்கு தீக்குளிக்கச் செய்வது ஓர் உத்தியாகப் பயன்பட்டிருக்கிறது. சீதாப் பிராட்டி தீக்குளிக்கக் காரணம், ராமபிரான் அவள் கற்பை சந்தேகப்பட்டதனால் அல்ல. தனக்கு நம்பிக்கை இருந்தாலும் சமூகம் நம்புவதற்காக ராமன் சீதையைத் தீக்குளிக்கச் செய்தான் என்று சொல்வதும் சரியல்ல. சீதை தீக்குளித்தால், அக்னி அவளைச் சுடாது என்று ராமனுக்கு முன்பே தெரியும். சுந்தரகாண்டத்தில் அனுமனின் வாலில் வைக்கப்பட்ட நெருப்பு, சீதை இருந்த அசோக வனத்தை எரிக்கவில்லை என்பதை அனுமன் மூலமாக ராமபிரான் முன்னரே அறிந்துதானே இருப்பார்? எனவே, ராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னது வேறு ஒரு காரணத்துக்காக.

சீதை, தன் மகனைப் போன்ற இலக்குவனைச் சொல்லினால் சுட்டாள். நாவினால் சுட்ட வடு, சுடப்பட்டவனை வருத்தாமல் சுட்டவளை வருத்திக்கொண்டிருந்தது. 'என் மைத்துனனைத் தகாத வார்த்தை சொல்லி வைதேனே’ என்று அவள் உள்ளம் உருகிக் கரைந்தது. இனி, அவள் அயோத்தியில் முன்போல் இலக்குவனை மகனாகக் கருதித் தாயன்போடு பழகி வாழவேண்டும். எனவே, தன் ஆழ்மனக் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட அவள் அக்னிப் பிரவேசம் செய்ய நேர்ந்தது என்பது அ.ச.ஞா. விளக்கம். லட்சுமணனே சீதை சொன்னபடி விறகுகளை அடுக்குவதையும் சேர்த்து எண்ணிப் பார்த்தால், இதன் தத்துவத்தை நாம் உணர இயலும்.  

ஆக, மனம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. உயர்வு மனப்பான்மையோ, தாழ்வு மனப்பான்மையோ இல்லாமல் இயல்பாக எல்லோரும் வாழவேண்டும். அதற்கு மானிடக் குலம் வழி காண வேண்டும். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று பாரதி சொன்னதும் மனம் பற்றிய விளக்கம்தான். மகுடம் பற்றிய விளக்கமல்ல. தலித் மக்களும் சரி, பெண்களும் சரி... எல்லோரும் இந்நாட்டு மன்னராகும் சம அந்தஸ்து பெற்றவர்களே!

தன் மனைவிக்கு பெண்ணுரிமையை வழங்குவதாகப் பிதற்றினார் ஒரு கணவர். இவர் என்ன வழங்குவது? வழங்கும் நிலையில் இவர் உயர்வானவராகவும், வாங்கும் நிலையில் இவர் மனைவி தாழ்வானவராகவும் இருக்கிறார் என்பதுதானே இந்த வாக்கியத்தின் உட்பொருள்? அந்தக் கணவர் மனத்தின் ஆழத்தில் மனைவியை விடவும் தான் உயர்வு என்ற கண்ணோட்டம் பதுங்கியிருப்பதே இப்படிப்பட்ட அற்பத்தனமான பேச்சுகளுக்குக் காரணம்.

இத்தகைய உயர்வு மனப்பான்மை இல்லாத இயல்பான ஆண்களும் வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். வை.மு. கோதைநாயகியின் கணவர் பார்த்தசாரதி தன் மனைவியைத் தனக்கு இணையாக மதித்தவர். தன் மனைவியின் இலக்கியக் கலையுலக வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டியவர். ஒரு தகப்பன், தன் மகளின் வளர்ச்சியைப் பார்த்துப் பெருமிதப்படுவதுபோல், தன் மனைவி வளர்ச்சியிலும் அவர் பெருமிதம் கண்டார். அதனால்தான் என்.சி. வசந்த கோகிலத்துக்கு இணையான மிகச் சிறந்த பாடகியாகவும், நூற்றுக்கும் மேலான நாவல்களைப் படைத்த மிகச் சிறந்த எழுத்தாளராகவும், மகாத்மா காந்தியால் கவரப்பட்ட மாபெரும் சுதந்திரத் தியாகியாகவும் கோதைநாயகியால் பரிமளிக்க முடிந்தது.

சதாசிவம் என்ற உன்னதமான ஆண்மகன் இல்லையென்றால் எம்.எஸ். என்ற அந்த தெய்வீகப் பெண்மணியின் பெருமை எப்படி வெளிப்பட்டிருக்கும்? தன் மனைவியை மகள்போல் கருதி, அவருடைய வளர்ச்சியில் சதாசிவம் காட்டிய அக்கறைதானே எம்.எஸ்-ஸை மகசேசே விருதுபெறும் அளவு உயர்த்தியது!

ஆனால், நம் நாட்டின் கொடுமை என்ன வென்றால், எல்லாக் கோதைநாயகிகளுக்கும் எல்லா எம்.எஸ்-களுக்கும் பார்த்தசாரதிகளும் சதாசிவம்களும் கிடைத்துவிடுவதில்லை. அதனால்தான் காலொடிக்கப் பட்ட மயில்களும், நாக்குத் தைக்கப்பட்ட குயில்களும் அடுப்படியில் சமையல் வேலைகளில் தங்களின் தெய்வீக ஆற்றல்களைத் தியாகம் செய்துகொண்டிருக்கின்றன.

'பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும்’ என்றான் பாரதி. தாங்கள் உயர்வு, பெண்கள் தாழ்வு என்ற எண்ணத்தை அடிமனத்திலிருந்து கிள்ளி எறிந்து, தங்கள் உயர்வு மனப்பான்மையில் இருந்து ஆண்கள் விடுபட்டாலன்றி, வையம் பேதைமையற்று ஓங்க வழி ஏது?

புதிதாய்க் கல்வி கற்று பெரும் அதிகாரிகளாக உயர்வு பெறும் பெண்கள், திடீரெனத் தங்களுக்கு உயர்வு மனப்பான்மை தோன்றாமலும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஆண்- பெண் இருவரும் முகத்தின் இரு கண்கள் போன்றவர்களே! இவர்களில் எள்ளளவு உயர்வோ தாழ்வோ இல்லை என்பதை இரு தரப்பினரும் உணர்தல் அவசியம். ஆணையும் பெண்ணையும் கண்களுக்கு ஒப்பிடக் காரணம், இரு கண்களாலும் கிட்டுவது ஒரே பார்வைதான். இருவரும் இணைந்து நடத்துவது அன்பான அந்நியோன்னியமான ஒரே இல்லற வாழ்வுதான். இந்தத் தெளிவு வந்துவிட்டால், கணவன்- மனைவியிடையே உயர்வென்ன தாழ்வென்ன!

சாதி, மத ரீதியாகவோ, ஆண், பெண் என்ற வகையிலோ உயர்வு- தாழ்வு மனப்பான்மை இல்லாமல், எல்லோரும் சமம் என்று இயல்பாக வாழப் பழகினால், சொர்க்கம் வேறெங்கும் இல்லை; நம் வீட்டிலும் நாட்டிலும்தான் இருக்கிறது. சொர்க்கத்தை நோக்கிப் பயணப்படுவோம்!

(சிறகு விரிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism