Election bannerElection banner
Published:Updated:

சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி கேட்டு கோர்ட் படியேறிய 9 வயது சிறுமி... காரணம் என்ன?!

சபரிமலை
சபரிமலை

"கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலை செல்ல இயலவில்லை. இப்போது சபரிமலை செல்லாமல் இருந்தால் இன்னும் 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது" என சிறுமி நந்திதா ராஜ் தனது மனுவில் கூறியிருந்தார்.

கொரோனா பரவலை தடுக்கும்விதமாக மக்கள் கூடும் பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்களிலும் மக்கள் செல்வதில் கட்டுப்பாடுகள் உள்ளன. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் முன்பு பக்தர்கள் சாதாரணமாக சென்று தரிசனம் நடத்தலாம். ஆனால், தற்போது கொரோனா பரவல் காரணமாக அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தினமும் பத்தாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலை தரிசனத்துக்காக செல்லும் பக்தர்கள் ஆன்லைன் வெர்ச்சுவல் கியூ வழியாக முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் மற்றும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் பரிசோதனை சான்றிதழ் ஆகியவற்றுடன் சபரிமலை சென்று தரிசனம் நடத்தலாம்.

சித்திரை விஷூ தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கடந்த 10-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 11-ம் தேதி காலையில் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். 10 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் சபரிமலையில் தரிசனம் நடத்தலாம் என்பது கோயில் விதிமுறைகளில் ஒன்று. ஆனால் சபரிமலை இணையதள விர்ச்சுவல் கியூ-வில் 10 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் முன்பதிவு செய்யும் ஆப்ஷன் இல்லை. 10 வயதுக்குள் சிறுமிகள் சபரிமலை தரிசனம் செய்யாமல் இருந்தால், சுவாமி தரிசனத்துக்காக செல்ல மேலும் 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆன்லைன் புக்கிங்
ஆன்லைன் புக்கிங்

இது குறித்து கேரள மாநிலம் வைக்கம் காட்டிக்குந்து பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி நந்திதா ராஜ் தனது தந்தை அபிராஜ் மூலம் அம்மாநில ஐகோர்ட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "பத்து வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள் சபரிமலையில் தரிசனம் செய்யலாம். ஆனால் வெர்ச்சுவல் கியூ வழியாக முன்பதிவு செய்யும் வசதி ஆன்லைனில் வழங்கப்படவில்லை. ஐயப்ப பக்தர்களான எனது பெற்றோர் என்னை சபரிமலைக்கு அழைத்துச் செல்வதாக ஏற்கெனவே நேர்ச்சை போட்டிருந்தனர்.

ஆனால், சபரிமலை செல்ல ஆன்லைன் புக்செய்ய முடியாத நிலை உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலை செல்ல இயலவில்லை. இப்போது சபரிமலை செல்லாமல் இருந்தால் இன்னும் 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சபரிமலை செல்ல அனுமதிக்க வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட் இதுகுறித்து கேரள தேவசம்போர்டிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அந்த வழக்கை கடந்த 16-ம் தேதிக்கு (நேற்று) மாற்றி வைத்தது.

சபரிமலை
சபரிமலை

நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 9 வயது சிறுமி நந்திதா சபரிமலை செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டது. கொரோனா விதிகள் இருந்தாகும் சிறுமிக்காக சற்று தளர்வு அளித்து சபரிமலைக்கு செல்ல அனுமதிக்குமாறு கோர்ட் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சிறுமி நந்திதாவின் தந்தை மற்றும் உறவினர்கள் இன்று சபரிமலை செல்ல ஏற்கெனவே திட்டமிட்டிருந்தனர். கோர்ட் உத்தரவு காரணமாக அவர்களுடன் சிறுமி நந்திதாவும் சபரிமலை செல்ல வாய்ப்பு உள்ளது. சபரிமலை செல்ல அனுமதி கேட்டு கோர்ட் படியேறிய சிறுமியை கேரளம் ஆச்சர்யத்துடன் பாராட்டி வருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு