Published:Updated:

பலத்தை பலவீனமாக்குதல்!

மேலே... உயரே... உச்சியிலே..! - 6வெ.இறையன்பு, ஓவியம்: அனந்த பத்மநாபன்

பலத்தை பலவீனமாக்குதல்!

மேலே... உயரே... உச்சியிலே..! - 6வெ.இறையன்பு, ஓவியம்: அனந்த பத்மநாபன்

Published:Updated:
பலத்தை  பலவீனமாக்குதல்!
##~##

சிலர் அசாத்தியமான பலத்தை ஒரு கோணத்தில் பெற்றிருப்பார்கள். அது அவர்களுக்கு அவாவையும், ஆணவத்தையும் தந்துவிடும். இறுதியில் அவர்களின் பலமே அவர்களை வீழ்த்திவிடும்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம்மிடமிருந்து ஒன்றைக் கற்றுக்கொண்டு நம்மையே எதிர்க்கத் துணிபவர்கள் இருப்பார்கள். நாம் வளர்த்துவிட்டவர்களே நம் மார்பில் பாயக் காத்திருப்பார்கள். யார் எப்போது எப்படி மாறு வார்கள் என்பது புரியாத புதிராக இருப்பதுதான் வாழ்க்கை. அந்தச் சூழலைச் சமாளிக்க மாற்றி யோசிப்பது அவசியம் என்பதைப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.    

பஸ்மாசுரன் என்கிற அரக்கன் இருந்தான். இரக்கமில்லாதவர்கள் அனைவரும் அரக்கர்களே! அவன், சிவனை எண்ணிக் கடுமை யான தவம் இருந்தான். சிவபெருமானே நேரில் தோன்றினார். அவர் கால்களில் விழுந்து துதித்தான் பஸ்மாசுரன். அவரிடம் வரமும் கேட்டான். ''நான் யார் தலையில் கை வைத்தாலும், அவர்கள் பஸ்பமாக வேண்டும்!'' என்பதே அந்த வரம். சிவனும் அவன் விரும்பிய வரத்தைத் தந்தார்.

அசுரனுக்கு அளவில்லா மகிழ்ச்சி!  

'எனக்கு ஒரு சந்தேகம்' என்றான்.

'என்ன சந்தேகம்?'

'எனக்கு நீங்கள் கொடுத்த வரம் பலிக்குமா?'

'கண்டிப்பாகப் பலிக்கும்!'

பலத்தை  பலவீனமாக்குதல்!

பஸ்மாசுரன் வரத்தைப் பரிசோதித்துப் பார்க்க, அதைக் கொடுத்த சிவனாரின் தலையிலேயே கை வைக்க நெருங்கினான். அவர் மறைந்தார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்டு, திருமால் அழகான மோகினியாக உருவெடுத்து வந்தார். அழகியைக் கண்டு மயங்கிய அசுரன், அவளை அடையத் துடித்தான்.   மோகினியோ 'நான் ஆடும் நடனத்தை அப்படியே நீ ஆடினால் உன்னை மணப்பேன்' என்றாள். பஸ்மாசுரன் ஒப்புக்கொண்டு மோகினியின் நடன அசைவுகளை அச்சு அசலாக அபிநயம் பிடித் தான். ஒரு கட்டத்தில் மோகினி தன் கையைத் தலைமேல் வைத்து ஓர் அபிநயம் செய்ய, அதை அப்படியே  செய்த பஸ்மாசுரன் சாம்பலானான். இதுதான் வரமே சாபமான கதை.

கடவுளேயானாலும் மாற்றி யோசித்தால்தான் அரக்கர்களை அழிக்கமுடியும். இப்படித்தான், மனிதனாலும் மரிக்கக்கூடாது, விலங்கினாலும் அழியக்கூடாது என்று வரம் பெற்று மக்களைத் துன்புறுத்திய ஹிரண்யகஸிபுவை மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து... மனிதனாகவும் இல்லாமல், விலங்காகவும் இல்லாமல், பகலும் இரவுமற்ற அந்திம வேளையில், பூமியிலும் படாமல் ஆகாயத்திலும் இல்லாமல் மடியில் கிடத்தி அவனை ஆயுதமில்லாமல் தனது கூரிய நகங்களால் கிழித்துக் கொன்றார்.  

பஸ்மாசுரனின் கதையைப் போலவே அழிந்த, அரக்க குணம் கொண்ட ஒரு மனிதனின் கதைதான், ஆர்.கே. நாராயண் எழுதிய 'மால்குடியின் மனிதக் கொல்லி’ என்கிற நாவல்.

வாசு என்பவன் விலங்குகளின் தோல்களில் வைக்கோலைத் திணித்து 'மாதிரி’களைச் செய்கிறவன். இரக்கமில்லாதவன். நன்றியுணர்வு துளியும் இல்லாத நயவஞ்சகன். தொடக்கத்தில் நல்லவனைப்போல நடித்து மால்குடியிலிருக்கும் நடராஜன் என்பவனுடன் சிநேகிதம்

செய்துகொள்கிறான். ஐந்நூறு விசிட்டிங் கார்டுகள் அடிக்க வேண்டுமென்று நடராஜனின் அச்சகத்துக்கு வரும்போது, அவன் அறிமுகமாகிறான்.  கெஞ்சிக் கேட்டு கொஞ்ச நாட்கள் இருப்பதாக மட்டும் சொல்லி, நடராஜனின் அச்சகத்தில் ஒரு பக்கத்தில் குடியிருக் கிறான். அதற்குப் பிறகு, அந்த இடத்தை காலி செய்ய மறுக்கிறான். அவன் விலங்குகளை வேட்டையாடிக்கொண்டு வந்து அந்த இடத்தையே நாறடிக்கிறான். வாடகை கட்டுப்பாட்டுக் குழுமத்திடம் நடராஜனுக்கு எதிராகப் புகார் செய்து, வீட்டைக் காலி செய்ய மறுக்கிறான். மொத்தத்தில் அவன் ஒரு மனிதக்கொல்லியாக இருக்கிறான்.

வாசுவின் பலமே அவனுடைய உறுதியான கைதான். அவன் யாரை அறைந்தாலும் அந்த நபரின் மண்டை பிளந்துவிடும். அந்த அளவுக்கு வலிமை! ஒருநாள் அவன் இறந்துகிடக்கிறான். பிரேதப் பரிசோதனை செய்தபோது அவன் உடலில் விஷமோ, கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறியோ இல்லை. அவன் தனது நெற்றியில் அமர்ந்த கொசுவை பலமாக அடித்தபோது, நெற்றிப்பொட்டில் இருந்த நாடி சேதமாகி, அவன் இறந்துவிட்டான் என்பது தெரிய வருகிறது. கிட்டத்தட்ட வாசுவின் கதையும் பஸ்மாசுரனின் கதை போலத்தான். ஆனால், இது இயல்பாக நடந்தது. யாரும் அவன் மறைவுக்காக மாற்றி யோசிக்கவில்லை.  

கிரேக்கப் புராணத்தில் ஹெர்குலஸ் என்கிற பெயர் பிரபலம். வலிமைக்கு அடையாளமான பெயர். மகத்தான காரியத்தைச் செய்தால், ஹெர்குலியஸ் சாதனை என்று அழைப்பார்கள்.  ஹெர் குலஸின் பிறப்பு சுவாரசியமானது. ஜீயஸ் என்கிற ஜூபிடர் தேவன், அல்க்மெனே என்கிற ராணியிடம் அவள் கணவனின் உருவில் உறவுகொண்டதால் பிறந்தவன் ஹெர்குலஸ். கிட்டத்தட்ட இந்திரன்- அகலிகை கதைபோலத்தான்! இந்தச் செய்தி ஜீயஸின் மனைவி ஹீராவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அவனைக் கொல்ல எட்டாவது மாதத்திலேயே விஷப் பாம்புகளை அனுப்பினாள். ஹெர்குலஸ் பயமின்றி அவற்றைப் பிடித்துக் கழுத்தை நெரித்துக் கொன்றான். ஹீரா அதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. பன்னிரண்டு விதமான கடுமையான இலக்குகளைத் தீர்மானித்து அவற்றை அவன் சாதிக்கவேண்டும் என்று தூண்டிவிடுகிறாள்.  

அந்த நிபந்தனைகளில் ஒன்றுதான், ஹைட்ரா என்கிற பாம்பை அவன் கொல்லவேண்டும் என்ப தும்! ஹைட்ரா என்பது தண்ணீரில் இருக்கும் ஒரு விசித்திரப் பாம்பு. அதற்கு எக்கச்சக்க தலைகள்.

பலத்தை  பலவீனமாக்குதல்!

ஒரு தலை துண்டிக்கப்பட்டால், அந்த இடத்தில் இரண்டு தலைகள் முளைக்கும். அதன் மூச்சுக் காற்றே நச்சுத்தன்மை கொண்டது. அதைச் சுவாசித்தால் மரணம் நிச்சயம். அதன் ரத்தமும் விஷத்தன்மை வாய்ந்தது. அது போகிற தடமெல் லாம் ஆபத்தை விதைத்துவிட்டுப் போகும்.  

ஹெர்குலஸ் வீரத்துடன் அதை வீழ்த்த நெருங்குகிறான். ஒரு தலையை வெட்டினால், இரண்டு தலைகள் முளைக்கின்றன. உடனே, அவன் தன் உறவினன் அயோலஸை உதவிக்கு அழைக்கிறான். ஹெர்குலஸ் தலையை வெட்டியதும், அயோலஸ் ஒரு தீப்பந்தத்தால் அந்தக் கழுத்தைப் பொசுக்கிவிடுவான். அதனால் இரண்டு புதிய தலைகள் முளைக்க வழியில்லாமல் போய்விடுகிறது.

ஹெர்குலஸ் வெற்றி பெறுவதைப் பார்த்த தும், அவனைத் துன்புறுத்துவதற்காக ஹீரா ஒரு ராட்சத நண்டை அனுப்புகிறாள். ஹெர்குலஸ் அந்த நண்டைத் தன்னுடைய கால்களால் மிதித்து நசுக்குகிறான்.  ஹைட்ராவுக்கு இன்னமும் சாகாத ஒரு தலை மிச்சம் இருக்கிறது. அந்தத் தலையை அதீனா என்கிற தேவதை கொடுத்த தங்க வாளால் வெட்டி நிபந்தனையைப் பூர்த்தி செய்யும் ஹெர்குலஸ், அந்த  ஹைட்ராவை யும், நண்டையும் வானத்தில் எறிந்து நட்சத்திரக் கூட்டங்களாக ஆக்கினான் என்று சொல்லுவார்கள்.  

ஹெர்குலஸின் இந்தச் சாதனை ஓர் உண்மையை உணர்த்துகிறது. எப்போதும் பிரச்னையைப் பாதியில் விடாமல், அதை முழுவதுமாகப் பொசுக்கி அழிப்பதுதான் மிகச் சிறந்த வழி. அரைகுறையாகக் கையாளப்படுகிற பிரச்னைகள் மீண்டும் மீண்டும் தலைதூக்கிக்கொண்டுதான் இருக்கும். எதிரி என்று வந்துவிட்டால், சுவடே இல்லாமல் அழிப்பதுதான் ராஜதந்திரம். இதில் எந்தவிதமான பாரபட்சமும் காட்டக்கூடாது என்பதற்கு இந்தியச் சரித்திரம் சான்று!  

மாற்றி யோசிப்பது மற்றவர்களின் கவனத்தைத் திசைதிருப்பி, நம் விழிப்பு உணர்வைச் சரியான திசைநோக்கிச் செலுத்துவதில் அடங்கியிருக்கிறது. சதுரங்க விளையாட்டில், எதிராளியின் கவனத்தைத் திசை திருப்ப, எளிதாக ஒரு காயை வெட்டுக் கொடுப்பார்கள். எதிராளியும் 'ஆகா! நமக்கு ஒரு காய் கிடைத்தது!’ என்று நினைத்து, ஆட்டத் தையே இழந்துவிடுவார்.  

முல்லாவின் கதையன்று உண்டு.முல்லா தினமும் அண்டை நாட்டுக்கு ஒரு கோவேறு கழுதையின்மீது செல்வார். சோதனைச் சாவடியில் இருப்பவர்கள், முல்லா எதையாவது கள்ளக்கடத்தல் செய்கிறாரா என்று அவருடைய கழுதை யின் மேலிருக்கும் கோணியைச் சோதனை போடுவார்கள். வைக்கோலைத் தவிர, வேறு எதுவும் இராது. இப்படியே ஒரு மாதம் நடந்தது. ஒருநாள், முல்லா வெறுமனே பக்கத்து நாட்டுக்கு நடந்து சென்றுகொண்டி ருந்தார். அப்போது சோதனைச் சாவடியில் இருந்தவர்கள் அவரிடம், 'இத்தனை நாளாக எதற்குக் கழுதையில் போய்க்கொண்டிருந்தீர்? எங்களுக்கே தெரியாமல் அப்படி என்னதான் கடத்தினீர்?' என்று கேட்டார்கள்.

''நான் கழுதைகளைத்தான் கடத்தினேன். அந்த ஊரில் கோவேறு கழுதைக்கு கிராக்கி அதிகம்!' என்று முல்லா சொன்னபோது, அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.  

நீதியரசர் நாகமுத்து அவர்கள் ஒருமுறை என்னிடம் ஒரு புதிர் போட்டார். 'இரண்டு சகோதரிகள்; இருவருக்குமே திருமணம் ஆகவில்லை. அவர்களுடைய விதவைத் தாயார் மட்டுமே உடன் இருக்கிறார். ஒரு நாள், தாய் இறந்துவிடுகிறாள்.ஈமச்சடங்கு நடக்கிறது. அதில் அழகான ஒரு வாலிபன் கலந்துகொள்கிறான். அவனைப் பார்த்ததும் பெரிய மகளுக்குப் பிடித்துப் போகிறது. மணந்தால் அவனைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால், அதற்குப் பிறகு எந்த இடத்திலும் அவனைக் காணவே முடியவில்லை. ஒருநாள், அவள் தன்னுடைய தங்கையையே கொலை செய்துவிடுகிறாள். ஏன்?'

பெரும்பாலானோர், 'ஒருவேளை தங்கை அவனை நேசித்ததாலோ?’ என்று நினைக்கக் கூடும். ஆனால், விடை வேறு!

'அந்த அழகான வாலிபனை ஈமச்சடங்கின் போது மட்டும்தான் அவள் கண்டாள். அதற்குப் பிறகு, அவன் அவள் கண்ணில் படவேயில்லை. எனவே, இன்னோர் ஈமச் சடங்கு நடந்தால்தான் அவனை மறுபடி சந்திக்க முடியும் என்கிற எண்ணத்தில், தங்கையையே கொலை செய்துவிட்டாள்!’

மனித மனம் எப்படியெல்லாம் பிறழ்வுடன் சிந்திக்கிறது என்பதை நீதியரசர் இந்தப் புதிரின் மூலம் எனக்கு விளக்கினார்.

(இன்னும் மேலே...)