Published:Updated:

இளமையின் அடையாளம்... நிதானம்!

நாளை நமக்காக! திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்

இளமையின் அடையாளம்... நிதானம்!

நாளை நமக்காக! திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்

Published:Updated:
##~##

வசரம் என்பதைச் சுறுசுறுப்பு என்றும், நிதானம் என்பதைச் சோம்பேறித்தனம் என்றும் பல இளைஞர்கள் இன்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சுறுசுறுப்பாக இருப்பதாகக் காண்பித்துக்கொள்ளவேண்டி, அவசர அவசரமாகப் பல செயல்களைச் செய்கிறார்கள். அவற்றில், பின்னர் திருத்தவே இயலாத பல தவறுகள் நேர்கின்றன. நிதானமாகச் சிந்தித்துச் செயல்பட்டிருந்தால், அந்தத் தவறுகள் நேர்ந்தே இருக்காது.  

அவசரம் என்பது சுறுசுறுப்பு அல்ல; பக்குவமின்மை. நிதானம் என்பது சோம்பேறித் தனம் அல்ல; மனமுதிர்ச்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பதறிய காரியம் சிதறிப் போகும்’ என்பது நூறு சதவிகித உண்மை. பதற்றம் மனத்தின் ஒருமுனைப்பாட்டுக்கு வழிகோலாது. எனவே, செய்யும் செயலில் முழுவெற்றி கிடைக்காது.  

நாம் செய்யும் எந்தச் செயலையும் முழு மன ஒருமைப்பாட்டுடன் செய்தால்தான், முழு வெற்றி காண இயலும். நிதானம்தான் அந்த ஆற்றலைத் தரும்.

இளமையின் அடையாளம்... நிதானம்!

பல மணிநேரம் மெய்ம்மறந்து கணிப் பொறியில் எழுதிக் கொண்டிருக்கிறோம். பின்பு, அதை நிரந்தரமாகச் சேமிக்க விரும்பி, அதற்கு உரிய பொத்தானை அழுத்துகிறோம். கணிப்பொறி நம்மிடம் சேமிக்க வேண்டுமா, இல்லையா என்று கேட்கிறது.

அப்போது பார்த்து, நம் கைபேசியில் யாரோ கூப்பிடுகிறார்கள். பதற்றத்தில் கணிப் பொறியில் நம் விரல் தவறான இடத்தில் டிக் செய்துவிடுகிறது. ஒரே கணம்தான்... நம் அத்தனை மணி நேர உழைப்பையும் கணிப்பொறி தூக்கி எறிந்துவிடுகிறது. நாம் எழுதிய அனைத்தும் அழிந்துவிடுகின்றன. நம் அத்தனை உழைப்பும் வீணாகிறது.

மீண்டும் அத்தனையையும் நினைவிலிருந்து எழுத முற்பட்டால்கூட, முன்னர் எழுதி னோமே, அதே உணர்வெழுச்சி மறுபடியும் வருமா? நம் மனம் ஆயாசம் அடைகிறது.

இதற்குக் காரணம் என்ன? கைபேசி சிணுங்கியதால் நம்மிடம் தோன்றிய தேவையற்ற பதற்றம். கைபேசி சிணுங்கட்டுமே? முழுவதும் அடித்துக்கூட நிற்கட்டுமே? பின்னர் எந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தது என்று பார்த்து நம்மால் கூப்பிட இயலாதா என்ன? நம் மனத்தின் பதற்றம், அந்தச் சிந்தனையை நம்மிடம் எழாமல் தடுத்துவிடுகிறது.

பெரும்பாலான இல்லங்களில், அடுப்பில் பாலைப் பொங்கி வழியச்செய்யும் கைங்கரி யத்தை தொலைபேசிதான் நிகழ்த்துகிறது. ஒன்றைக் கவனிப்பதற்குள் இன்னொன்று பாழாகிவிடுகிறது.

இளமையின் அடையாளம்... நிதானம்!

அவசரச் செயல்கள் முழுமையாக நிறைவேறுவதில்லை. அவசரம் வெற்றியை அல்ல, குழப்பங்களையே தோற்றுவிக்கிறது. சில நேரங்களில் உயிரைக்கூடப் பறித்து விடுகிறது. தசரதர் அவசர அவசரமாக ராமனுக்கு முடிசூட்ட நினைத்தார். ஏன் அத்தனை அவசரம்? கேகய நாடு சென்றிருந்த பரதன் வரும்வரை காத்திருந்தால்தான் என்ன? பரதன் வந்த பிறகு, ஒரு நல்ல நாள் கிடைக்காமலா போய்விடும்?

பரதன் வரும்வரை தசரதர் காத்திருந்திருந்தால், கைகேயி வரம் கேட்டாலும், பரதன் நாடாள ஒப்புக்கொண்டிருக்கமாட்டான்.

ஸ்ரீராமன் தலையில் மணிமகுடம் ஏறியிருக்குமே? ஸ்ரீராமனும் காட்டுக்குப் போயிருக்க மாட்டாரே!

தசரதர் அவசர அவசரமாகப் பதறிச் செய்த செயலின் உச்சக் கட்ட விளைவு என்ன தெரியுமா? தசரதரின் மரணம்! ஆம். பதற்றம் அவர் உயிரையே பறித்துவிட்டது.

ஆனால், பாதுகைக்கு முடிசூட்டி பரதன் நாடாண்டபோது, அண்ணா ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகத்தை எதிர்நோக்கிப் பதினான்கு ஆண்டுகள் அல்லவா காத்திருந்தான்? ஒருகணம் தாண்டி வந்தாலும், தான் உயிரை விட்டுவிடுவதாக ஏற்கெனவே அண்ணாவிடம் சொல்லி வைத்திருந்தான். அனுமன் முன்தகவல் தர, உரிய நேரத்தில் ஸ்ரீராமபிரான் வர, ஸ்ரீராம பட்டாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.  

இளமையின் அடையாளம்... நிதானம்!

அந்த வெற்றிகரமான பட்டாபிஷேக நிகழ்ச்சிக்குக் காரணம், அப்போது யாருக்கும் எந்த அவசரமும் இல்லை. ஒவ்வொரு புள்ளியாக வைத்து, மெள்ள மெள்ளக் கோலம் போடுவதுபோல், பார்த்துப் பார்த்து எல்லாச் செயல்களும் செய்யப்படுகின்றன. சடையப்ப வள்ளலின் முன்னோர் மணி முடியை எடுத்துக் கொடுக்க, வசிஷ்டர் அதை வாங்கி ஸ்ரீராமபிரானின் தலையில் சூட்டினார் என்கிறார் கம்பர். அவசரத்தால் முன்னர் நடைபெறாமல் போன முடிசூட்டு விழா, நிதானத்தால் பின்னர் கோலாகலமாக நடைபெறுகிறது.

மரத்தின் அடியில் அமர்ந்திருந்த கண்ண பிரானின் பாதங்களைப் பார்த்த வேடன், ஒரு கவிஞனாகத்தான் இருக்கவேண்டும்! தூய வெண்ணிறப் பாதங்களைப் பார்த்ததும், புறா என்று தோன்றியதே அவனுக்கு? அவன் எய்த அம்பு, ஸ்ரீகண்ணனின் உயிரை ஒரு நொடியில் கவர்ந்துவிட்டது. கண்ணனின் திருவடிகளைப் பற்றிய எல்லோருக்கும் முக்தி என்றால், கண்ணனை முக்தி அடையச் செய்த அம்புக்கும் முக்திதான் கிட்டியிருக்கும்.

எப்படியேனும் எதையேனும் வேட்டை யாடிவிட வேண்டும் என்ற ஒரு வேடனின் பதற்றம், ஓர் இதிகாச நாயகனை இவ்வுலகைத் துறக்கச் செய்துவிட்டது. பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட போரில் தன் மேல் ஓர் அம்பும் தாக்காமல் தேரோட்டியவனை, ஒரு வேடனின் பதற்றத்தால் எய்யப்பட்ட அம்பு, கொள்ளை கொண்டுவிட்டது! ஒருவனின் பதற்றம் அவனைப் பாதித்தால் நியாயம்; அது அடுத்தவனைப் பாதித்து, அவன் உயிரையே பறித்தது என்ன நியாயம்?

மகான் ஸ்ரீஅரவிந்தர் கல்வியை முடித்துக் கொண்டு இங்கிலாந்திலிருந்து கப்பலில் இந்தியா திரும்பி வந்தார். அவர் ருமேனியா என்ற கப்பலில் வருவதாக, அவரின் தந்தை கிருஷ்ண தனகோஷ§க்குத் தந்தி வந்தது.

இளமையின் அடையாளம்... நிதானம்!

மகனைப் பார்க்கப்போகும் ஆனந்தத்தில் ஸ்ரீஅரவிந்தரின் தந்தை மனம் துள்ளியது. சில மணி நேரங்களில் வந்தது இன்னொரு தந்தி. ருமேனியா என்ற கப்பல் போர்ச்சுகல் கரையோரம் மூழ்கிவிட்டது என்றும், அதிலிருந்த பயணிகள் அனைவருமே இறந்துவிட்டார்கள் என்றும் அந்தத் தந்தி சொல்லிற்று.

அவ்வளவுதான்... இதயத்தைப் பிடித்துக் கொண்டு தடாலென்று கீழே விழுந்தார் ஸ்ரீஅரவிந்தரின் தந்தை. தாளாத துக்கத்தில் அன்றிரவே காலமானார்.

ஆனால், ஸ்ரீஅரவிந்தரின் பயணத் திட்டத்தில் கடைசி நேரத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டு, அவர் எஸ்.எஸ்.கார்த்தேஜ் என்ற இன்னொரு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இப்படி அவரது பயணக் கப்பலை மாற்றி அமைத்த கிரிண்ட்லேஸ் டூரிஸ்ட் நிறுவனம், அந்தத் தகவலை உடனுக்குடன் ஸ்ரீஅரவிந்தரின் தந்தைக்குத் தந்தி மூலம் சொல்லத் தவறிவிட்டது.

கிருஷ்ண தனகோஷ் கொஞ்சம் மனத்தைத் தேற்றிக் கொண்டு காத்திருந்தால், அவரின் உயிர் தப்பித்திருக்கும். செய்தி உண்மைதானா என்று விசாரிக்க முனைந்திருந்தால், மகன் ஸ்ரீஅரவிந்தர் அந்தக் கப்பலில் பயணம் செய்யவில்லை என்ற தகவல் அவருக்குத் தெரிய வந்திருக்கும். செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயாமல் அப்படியே நம்பிய அவசரம்தான் அவர் உயிரைப் பறித்துவிட்டது.

இரு சக்கர வாகனங்களில் பறக்கிறார்கள் இளைஞர்கள். அப்படியென்ன தலைபோகிற அவசரம்? கொஞ்சம் முன்கூட்டியே புறப்பட்டு, நிதானமாகப் போனால்தான் என்ன?

அந்த அவசரத்தில், அவர்களின் செல்போன் ஒலிக்கிறது. செல்போனை தோள்பட்டைக்கும் முகவாய்க்கட்டைக்கும் நடுவே இடுக்கிக்கொண்டே பேசியவாறு, தொடர்ந்து பறக்கிறார்கள் - எதிரே வரும் வாகனம் தங்கள் வாகனத்தோடு மோதிக் கீழே தள்ளும்வரை.

பயணத்தில் செல்போன் பேசியதால் இறந்துபோன இளைஞர்களின் கைபேசிகள் அத்தனையிலும் அந்த நேரத்தில் தொடர்புகொண்டவர் ஒரே நபர்தான். அந்த நபரின் பெயர், யமன்!

செல்போன் பேசியபடியே செய்யும் பயணத்தில் உள்ள ஆபத்தை நாளேடுகளும் ஊடகங்களும் பலமுறை திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லியும் இளைஞர்களில் பலர் திருந்துவதாகக் காணோம். நாம் பேசுகிற பேச்சில் ஓர் ஓட்டம் இருக்கவேண்டியது அவசியம்தான்; ஆனால், ஓடிக்கொண்டே பேச வேண்டியது அவசியம்தானா?

ரயில்களில் கடைசி நேரத்தில் ஓடிவந்து ஏதோ வீர சாகசம் மாதிரி ஏறுகிற இளைஞர்கள் எத்தனை பேர்! இதுவல்ல வீரம். திட்டமிட்டு முன்கூட்டியே வந்து நிதானமாக வண்டியில் ஏறி அமர்வதுதான் வீரம்.

மூச்சுக் காற்றைப் போலவே இதயத் துடிப்பையும் காலம் எண்ணிக்கொண்டிருக்கிறது. அவசரமாகச் செயல்படும் போது இதயம் படபடவெனத் துடித்து, ஆயுள் குறைகிறது. நிதானமாகச் செயல்படுகிறபோது இதயம் பதற்றமில்லாமல் இயங்கி, ஆயுள் கூடுகிறது.  

அவசரம் உயிரைக் குடிக்கும். நிதானம் ஆற்றலைப் பெருக்கும். நிதானமாகச் செயல்பட்டு நீண்ட ஆயுள் பெற்று, வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ஆர அமரச் சுவைத்துப் பருகுவோம்.

நிதானமே இளமையின் அடையாளம்!

(சிறகு விரிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism