Published:Updated:

தமிழ் வாழ்க!

நாளை நமக்காக!திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்

##~##

நாம் கடந்துவந்த காலங்கள் சிலவற்றை இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இப்படியும் ஒரு காலம் இருந்ததா என்று மனம் யோசனையில் ஆழ்கிறது.

அப்படியொன்றும் மிகப் பழங்காலம் அல்ல அது. ஓரளவு அண்மைக் காலம்தான். அப்படியான ஓர் அண்மைக் காலத்தில்தான் இந்தி எதிர்ப்பு, தமிழகமெங்கும் அலையடித்தது. 'இந்தி ஒழிக!’ என்ற முழக்கம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விண்ணை அதிர வைத்தது. இந்தி எதிர்ப்புக்காக நீண்ட நெடிய ஊர்வலங்கள் நடந்தன. அதன்பொருட்டுத் தீக்குளித்து உயிரிழந்த இளைஞர்கள்கூட உண்டு. மொழிப் போர்த் தியாகிகள் என்று அவர்களை நாம் கௌரவித்தோம். அது கடந்த காலம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், இப்போது அந்த அலையின் சிறுவீச்சைக் கூடக் காணோம். அந்த எதிர்ப்பலை முற்றிலுமாக அடங்கிவிட்டது.

காலம் வேகமாக மாறுகிறபோது, உணர்வுகளும் மாறத்தான் செய்கின்றன. யதார்த்தத்தை உணர்கிறபோது, நாம் கொண்ட லட்சியங்களின் அழுத்தம் சற்று மங்கித்தான் போகிறது. இந்தி எதிர்ப்பைத் தூண்டிய தலைவர்களின் குடும்பத்தாரே இந்தியைக் கற்று, மத்திய அரசில் செல்வாக்கு பெற விரும்புகிறார்கள்.  

தமிழ் வாழ்க!

உண்மையில், இந்தி எதிர்ப்பு என்ற சொற்றொடரே சரியல்ல; அது இந்தி ஆதிக்க எதிர்ப்பு என்றுதான் இருந்திருக்க வேண்டும்.

ஒரு மொழி மற்ற மொழியினரிடம் ஆதிக்கம் செலுத்துவது எதற்காக? அவரவர் மொழி அவரவருக்கு என்று எல்லா மொழியினரும் ஆனந்தமாக வாழ வேண்டியதுதானே?

வட இந்தியாவில் பணி புரிய இந்தி தேவைப்படுமானால், தமிழர்கள் தாமாக இந்தி கற்றுக்கொள்ளப் போகிறார்கள்.

தேவை என்று வருகிறபோது, நாமாக விரும்பி ஒன்றைப் பயில்வது என்பது வேறு; நம் மேல் ஒன்றைத் திணிப்பது என்பது வேறு. அதனால்தான் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து அத்தகைய உணர்வலைகள் அன்று தமிழகமெங்கும் எழுந்தன.

ரயில் பலகைகளில் உள்ள இந்தி வார்த்தைகள் தார் பூசி அழிக்கப்பட்டன. இந்தி ஆதிக்கத்துக்கு ஆதரவாகப் பேசிய வட இந்தியத் தலைவர்களின் முகத்தில் கரிபூசிய உணர்வு அதன்மூலம் அன்றைய இளைஞர்களுக்கு ஏற்பட்டது. பள்ளிகளிலிருந்து இந்தி முற்றிலுமாக விரட்டி அடிக் கப்பட்டது.

'இந்தி குதிரை பாஷை; அதனால்தான் அதன் ஒவ்வொரு வாக்கியமும் ஹை ஹை என்று முடிகிறது!’ என மேடைகளில் பேசி னார் கண்ணதாசன். 'இந்தி குரங்கு பாஷை. அதனால்தான் அதன் எல்லா எழுத்துக்களும் மேலே ஒரு கொம்பைப் பிடித்துக் கொண்டு தொங்குகின்றன!’ என்று சொல்லிச் சிரிக்க வைத்தார்.

பலரின் தாய்மொழியாக உள்ள ஒரு மொழி குறித்துத் தாம் அவ்விதம் கேலி பேசியதற்காக பின்னாளில் அவர் மனம் வருந்தினார். இந்தி எதிர்ப்பு அவர் மனத்திலிருந்து முற்றிலுமாக அகன்றுவிட்டது. ஒரு மொழியின் உன்னதப் படைப்பாளி எப்படி இன்னொரு மொழியை வெறுப்பவனாக இருக்க இயலும்? அப்படி வெறுப்பவனால் எப்படிப் படைப்பிலக்கியம் படைக்க முடியும்?

இன்றைய இளைஞர்கள் சரியாகவே யோசிக்கிறார்கள். நாம் இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கலாம்; ஆனால், இந்தி மொழியைப் பழிக்கலாமா என்று சிந்திக்கிறார்கள்.  

'தமிழ் ஒழிக!’ என்று யாரேனும் சொன்னால், நமக்கு எவ்வளவு கோபம் வரும்? அதே கோபம்தானே 'இந்தி ஒழிக!’ என்று சொல்லும்போது, இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்கும் ஏற்படும்? 'தாய்ப்பால் தமிழ் இருக்க, நாய்ப்பால் இந்தி எதற்கு?’ என்று சுவர்களில் எழுதி வைத்திருந்தோமே, அதைப் படித்து அவர்கள் எவ்வளவு மனம் வருந்தியிருப்பார்கள்?

நாம், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழகத்தில் வாழும் இந்தியர்களோடு இணைந்து வாழ்கிறோம். இந்தக் கூட்டுறவுக்கு மொழி வெறுப்பு உதவாது. மத நல்லிணக்கம் போல் மொழி நல்லிணக்கமும் மிக அதிகமாகத் தேவைப்படும் காலம் இது.

தமிழ் வாழ்க!

மும்பையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களோடு நம் தமிழர்கள் நட்பும் உறவும் கொண்டு இணைந்து வாழ்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெங்களூர்- அல்சூரில் அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி 2009 ஆகஸ்ட் 9-ம் தேதியன்று, கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா முன்னிலையில், திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார். சென்னை- அயனாவரம் பூங்காவில் கருணாநிதி முன்னிலையில், எடியூரப்பா சர்வக்ஞர் சிலையைத் திறந்து வைத்தார். மொழி நல்லிணக்கம் உருவாவதற்கு, இரண்டு உயர்ந்த பழங்கவிஞர்களின் சிலைத் திறப்பின் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதாகவே இந்த நிகழ்வுகளை நாம் கொள்ள வேண்டும்.

'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்!’ என்று பாரதி சொன்னது ஏன்? நம் மொழியில் இல்லாதவை பிற மொழியில் இருக்கக்கூடும் என்பதை உணர்ந்துதானே? ஷேக்ஸ்பியர், காளிதாஸன் ஆகியோரின் கவிதைகளை மொழிபெயர்த்து, அதையும் தமிழுக்குக் கொண்டுவந்து தமிழை மேலும் வளப்படுத்த வேண்டும் என்பதுதானே பாரதியின் விருப்பம்! தனித்தமிழ் அன்பரான மறைமலை அடிகள், காளிதாஸனின் சாகுந்தலத்தைத் தமிழில் மொழிபெயர்த்தது அந்தக் கண்ணோட்டத்தில்தானே?

குமரகுருபரர் காசிக்குச் சென்றார். அங்கே, தமது அற்புதமான இந்திப் புலமை காரணமாக, இந்தியில் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து வந்து கேட்டு மெய்ம்மறந்தார் ராம பக்தர் ஒருவர். மாபெரும் கவிஞரான அவர், கம்பராமாயணம் போல் இந்தியில் ஒரு ராமாயணம் இல்லையே என ஏங்கினார். அந்த ஏக்கத்தின் காரணமாகத் தாமே தம் தாய்மொழியான இந்தியில் ஒரு ராமாயணம் இயற்றி, இந்தி இலக்கிய உலகில் அழியாப் புகழ்  பெற்றார். அவர்தான் துளசிதாஸர்.

துளசி ராமாயணத்துக்கு உத்வேகம் கொடுத்தது கம்பராமாயணம் என்பதில் நமக்குப் பெருமை. அந்தத் துளசி ராமாயணத்தைப் படித்து, குறைந்தபட்சம் அதன் தமிழ் மொழிபெயர்ப்பையாவது படித்து நாம் அனுபவித்தால்தானே, எவ்வகையில் எல்லாம் துளசிதாஸர் கம்பனைத் தொட்டும் மாறுபட்டும் சென்றிருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து மகிழ முடியும்? இந்தியை வெறுத்தால் துளசி ராமாயணத்தின் நயங்களை நாம் அனுபவிப்பது எப்படி?

ஏழு வார்த்தைகளில் திருவள்ளுவர் சொன்ன திருக்குறளை நாம் அனுபவிக்கிறோம். எட்டு வார்த்தைகளில் கபீர்தாஸ் சொன்ன தோஹாக்களை நாம் அனுபவிக்க வேண்டாமா?

பிறமொழி வெறுப்பு என்பது உண்மையான தாய்மொழிப் பற்று ஆகாது. தாய்மொழியை நன்கு கற்பதே சரியான தாய்மொழிப் பற்று.

தமிழ் உணர்வுகளைத் தூண்டிய கட்சிகள் தமிழ்நாட்டில் உண்டு. ஆனால், அந்தக் கட்சிகளின் தொண்டர்களில் எத்தனை பேருக்குத் தொல்காப்பியரையும் இளங்கோவையும் புதுமைப்பித்தனையும் அழகிரிசாமியையும் தெரியும்? தமிழறிவு இல்லாத வெற்றுத் தமிழ்ப் பற்றால் என்ன பயன்? அது வெறும் அரசியல்.

அண்மையில், பாலுமகேந்திராவின் இயக்கத்திலும் நடிப்பிலும் 'தலைமுறைகள்’ என்றொரு படம் வந்திருக்கிறது. உண்மையான தமிழ்ப் பற்று என்ன என்பதை அந்தப் படம் பொட்டிலடித்தாற்போல் சித்திரிக்கிறது. தமிழர்கள் வீட்டில் ஆங்கிலத்தில் ஏன் பேசிக் கொள்ளவேண்டும்? தாய்மொழியான தமிழ் என்ன பாவம் செய்தது? எந்த ஆங்கிலேயராவது வீட்டில் தமிழில் பேசிக் கொள்கிறார்களா? இவ்விதம் நம்மை யோசிக்க வைக்கிறது அந்தப் படம்.

தமிழ் வாழ்க!

'தமிழில் உள்ள திருமூலர், பட்டினத்தார் போன்றோரின் இலக்கியங் களைத் தமிழர்கள் பயிலாவிட்டால், அவர்களின் பாரம்பரிய சொத்தைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்ளாவிட்டால், அவர்கள் தமிழர்களாக இருந்து என்ன பயன்?’ என்று கேள்வி கேட்கிறது அந்தப் படம். தமிழ்ப் பற்றை உயர்த்திப் பிடிக்கும் அந்தப் படம், பிறமொழி வெறுப்பை ஒருசிறிதும் தூண்டவில்லை. பேரனுக்குத் தமிழ் கற்றுத் தரும் தாத்தா, அந்தப் பேரனிடமிருந்தே ஆங்கிலம் கற்கத் தயாராக இருக்கிறார். இந்தப் படம் சொல்லும் செய்திகளை இளைஞர்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

கணிப்பொறியிலும் கைபேசியிலும் தமிழைக் கொண்டுவந்து விட்டோம். இன்னும் தோன்றும் எல்லா விஞ்ஞானப் புதுமைகளையும் தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும்.

மொழிப் பற்று வேறு; மொழி வெறி வேறு. மொழிப் பற்று நம் மொழியை வளப்படுத்தும். மொழி வெறி அடுத்த மொழியினரின் மனத்தைக் காயப்படுத்தும். நாம் அடுத்த மொழியினரைக் காயப்படுத்துவானேன்?

ஏற்கெனவே ஏற்படுத்திய காயங்களுக்கு இனியாகிலும் மருந்திடுவோம். மொழி நல்லிணக்கத்தை வளர்ப்போம். தமிழில் பேசி, தமிழில் எழுதி, தமிழில் படித்து, தமிழைப் படித்து தமிழர்களாக வாழ்வோம். இதுவே சரியான தாய்மொழிப் பற்று!

(சிறகு விரிப்போம்)