Published:Updated:

மனைவியும் மாமியாரும்!

மேலே... உயரே... உச்சியிலே..! - 8வெ.இறையன்பு, ஓவியம்: அனந்த பத்மநாபன்

மனைவியும் மாமியாரும்!

மேலே... உயரே... உச்சியிலே..! - 8வெ.இறையன்பு, ஓவியம்: அனந்த பத்மநாபன்

Published:Updated:
மனைவியும் மாமியாரும்!
##~##

லைகளிலும் மாற்றி யோசிப்பது நிகழ்ந்து வந்திருக்கிறது.  1915-ஆம் ஆண்டு, 'பக்’ என்னும் அமெரிக்கக் கேளிக்கை இதழில், இங்கிலாந்தைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் வில்லியம் எலி ஹில் என்பவர், 'என் மனைவியும், என் மாமியாரும்’ எனும் தலைப்பில் கேலிச் சித்திரம் ஒன்றை வரைந்து, ''இருவரும் இதே படத்தில் இருக்கிறார்கள். கண்டுபிடியுங்கள்' என்று குறிப்பு வெளியிட்டார்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தப் படத்தை உற்றுப் பார்த்தால், ஒரு கோணத்தில் இளம் பெண்ணாகவும், மற்றொரு கோணத்தில் வயதான பெண்ணாகவும் தெரியும். அந்தப் படத்தை ஸ்டீபன் கோவே, 'வெற்றிக்கு ஏழு படிகள்’ எனும் தனது நூலில் பயன்படுத்தியிருப்பார்.  எந்தக் கோணத்தில் பார்க்கிறோம் என்பதே நம் சிந்தனையைத் தீர்மானிக்கிறது. எல்லாவற்றிலும்  இரண்டு கோணங்கள் உண்டு என்பதை வெளிப்படுத்தும்விதமாக, இந்தப் படம் மனவியல் வகுப்புகள் பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

இதை அண்மைக் காலத்தில் மேற்கு கண்டுபிடித்ததைப் போலத் தோன்றினாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த உத்தியை நம் தமிழகத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். கும்பகோணம் தாராசுரம் என்கிற ஊரில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் யானை, காளை ஆகியவற்றைக் கொண்ட ஒரு சிற்பம் இருக்கிறது.  ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் யானையைப் போலவும், இன்னொரு பக்கத்திலிருந்து பார்த்தால் காளையைப் போலவும் தோன்றும் அற்புதச் சிற்பம் இது.  

இதைப் போன்ற நுணுக்கங்களைத் தமிழர்கள் தொன்றுதொட்டுப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். சேலம் தாரமங்கலத்தில் ஈஸ்வரன் கோயில் ஒன்று இருக்கிறது. அந்தக் கோயிலில் வாலி, ஸ்ரீராமன் ஆகிய இருவரின் சிற்பங்களும் இருக்கின்றன. ஸ்ரீராமன் வாலியைக் குறி பார்ப்பதைப் போன்ற அந்தச் சிற்பத்தில், ஸ்ரீராமனின் இடத்திலிருந்து பார்த்தால், வாலி தெரிவான்; ஆனால், வாலி சிற்பத்திலிருந்து பார்த்தால், ஸ்ரீராமன் தெரியமாட்டார். வாலியை ஸ்ரீராமன் மறைந்திருந்து தாக்கினார் என்கிற புராண சம்பவத்தை வெகு அழகாக உணர்த்தும் அற்புதச் சிற்பம் இது. மாற்றி யோசித்ததால் கிடைத்த சிற்பம்.

மனைவியும் மாமியாரும்!

இன்னொரு சிற்பம், ரதி மன்மதன் இருவரையும் சித்திரிக்கிறது.  ரதி சிற்பம் இருக்கிற இடத்திலிருந்து பார்த்தால், மன்மதன் தெரிவான்; ஆனால், மன்மதன் இருக்கிற இடத்திலிருந்து பார்த்தால் ரதி தெரியமாட்டாள். காரணம், பெண்கள் ஆண்களை அவர்கள் அறியாமல் பார்ப்பார்கள் என்பதுதான். எவ்வளவு அழகாக இந்தச் செய்தியை இந்தச் சிற்பம் உணர்த்திவிடுகிறது.  கல்லிலே கவிதைகள் வடிப்பது என்பது இதுதான் போலிருக்கிறது.  

கண்கள் ஏமாற்றக்கூடியவை. வரிசை விளக்குகளில் முதல் விளக்கு அணைந்து, அடுத்த விளக்கு எரிகிறது; பிறகு, இரண்டாவது அணைந்து, மூன்றாவது விளக்கு எரிகிறது; இதேபோல் தொடர்ச்சியாக அடுத்தடுத்த விளக்குகள் அணைந்து எரிகிற மாதிரி செய்தால், விளக்குகள் ஓடுவதைப் போன்ற ஒரு மாயத் தோற்றம் விழிகளுக்குத் தெரியும். இந்தக் கோட்பாட்டுக்கு 'ஃபை கோட்பாடு’ என்று பெயர். இதைக் கல்லிலே செய்து காட்டியவர்கள் தமிழர்கள்.

சுசீந்திரம் போன்ற கோயில்களில் இசைத் தூண்கள் இருக்கின்றன. தட்டுகிற இடத்தைப் பொறுத்து சப்த சுரங்களும் ஒலிக்கின்றன.  இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது என்பதிலிருந்தே, இந்த மண்ணுக்கென்று பண்கள் இருந்தன என்பதை அறியமுடியும்.  

எந்தப் புதுச் சிந்தனையும் திடீரென்று உதித்துவிட முடியாது.  பழைய சிந்தனை கூட்டுப்புழுவாக மாறுகிறபோதுதான், அதிலிருந்து புதுச் சிந்தனை பட்டாம்பூச்சியாக கிளம்பிவருகிறது. இதை டி.எஸ்.எலியட் 'மரபும் தனித்துவமும்’ என்கிற கட்டுரையில் தெளிவாக்கியிருப்பார். இன்றைய கலை வடிவங்கள் நம் முன்னோர்களுடைய கலை வடிவத்தின் தொடர்ச்சியாகவே இருக்கின்றன.

பாரம்பரிய சிந்தனை என்பது வலிமையானது. இன்று நாம் 'விழியியல் காட்சிப்பிழை’ என்கிற ஒன்றை விளக்குகிறோம்.  நாம் தவறான அனுமானத்துக்கு வருகிறோம் என்பதை உணர்த்தக்கூடிய பல படங்களும் நிகழ்வுகளும் இருக்கின்றன. இப்படியரு சிந்தனையை 2500 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கத்தில் செய்தார்கள்.

அதீனா என்கிற தேவதைக்காக, பார்த்தினான் என்கிற கோயில் ஏதென்ஸ் நகரத்தில் அமைக்கப்பட்டது. அதீனா ஏற்படுத்தியதே ஏதென்ஸ் என்பது ஐதீகம். கி.மு. 447-ம் வருடம் கட்டத் தொடங்கப்பட்ட அந்தக் கோயில், வித்தியாசமான அமைப்பைக் கொண்டது. உண்மையில் அதன் தூண்கள் சாய்ந்திருந்தாலும், நேராக இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துபவை.  

மனைவியும் மாமியாரும்!

மனிதர்களின் புத்திக்கூர்மையைப் பரிசீலிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. அவற்றின் வடிவங்கள்தான் மாறுகின்றன. எல்லோருமே வெந்ததைத் தின்று வந்ததைப் பேசி வாழ்ந்துவிட்டுப் போகவில்லை. வித்தியாசமாக ஏதேனும் சிந்திக்க வேண்டும் என்று நினைத்தார்கள். தஞ்சை பெரிய கோயிலின் கூம்பு வடிவ அமைப்பு, இன்றைக்கும் பல வெளிநாட்டுக் கட்டடக் கலைஞர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது.  தமிழக மன்னர்கள் வெளிநாட்டை வெற்றி கொண்டதன் அடையாளமாக அங்கு கோயிலையே கட்டினார்கள். ராஜேந்திர சோழன் மைசூரில் கட்டிய சிவன் கோயிலை இன்றைக்கும் பார்க்கலாம்.  

அகமதாபாத்தில் ரயில் நிலையத்துக்கு அருகில், ஸாதி பஷீர் பள்ளிவாசல் இருக்கிறது. அதில் நான்கு கோபுரங்கள் இருந்தன. அவற்றை 'ஆடும் மினார்கள்’ என்று அழைப்பார்கள்.

அங்கு இப்போது மூன்று மினார்கள் மட்டுமே இருக்கின்றன. ஒரு கோபுரத்தின் மீது ஏறி 90 அடி உயரத்துக்குப் போனால், நகர் முழுவதும் தெரியும். 60 அடிக்கு அப்பால் இன்னொரு கோபுரம் இருக்கிறது. அந்தக் கோபுரத்துக்குச் சென்று, அதை யாராவது பலமாக ஆட்டினால், இந்தக் கோபுரமும் லேசாக அசைவதை உணர முடியும். கட்டடக் கலை ஆச்சரியம் இது!

சூயஸ் கால்வாயை வெட்டிய, பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த பெர்ட்டினான்ட் என்பவரின் பேரன், இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்ட போது, இந்த மினார்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, வைஸ்ராயிடம் அனுமதி கேட்டு, அந்த நுட்பத்தை

அனுபவித்து அறியவேண்டும் என்று ஆவல் கொண்டார். எனவே, ஒரு கோபுரத்தை இடித்துப் பார்த்து, ஆராய்ச்சி செய்ய விரும்பினார். மறுபடியும் அந்தக் கோபுரத்தைக் கட்டித் தருவதாக வாக்குக் கொடுத்தார். மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இருந்தாலும், அவரது ஆர்வத்தையும், அவர் கொடுத்த உறுதிமொழியின் வேகத்தையும் பார்த்துச் சம்மதித்தார்கள். ஆனால், இடித்தவரால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இடித்த கோபுரத்தை மீண்டும் கட்டித் தரவும் இல்லை. அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போய்விட்டார். எனவே, இப்போது மூன்று மினார்கள் மட்டுமே இருக்கின்றன.  

தமிழ்நாட்டின் கோயில்களில், யாளி என்கிற கற்பனை மிருகம் ஒன்று இருப்பதைப் பார்க்கலாம். அதன் வாயில், கல்லொன்று உருளும். கல்லை உருட்ட லாம்; ஆனால், வெளியே எடுக்க முடியாது. எப்படி அந்தக் கல்லை உள்ளே வைத்திருப்பார்கள் என்பது இன்றைக்கும் நாம் ஆச்சரியப்படுகிற சிற்ப நுட்பம்.  

விழியியல் காட்சிப்பிழையைப் பற்றி 2300 ஆண்டுகளுக்கு முன்பே கன்ஃபூஷியஸுக்கும் லாவோட்ஸுவின் சீடர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.  

கன்ஃபூஷியஸ் மேம்போக்கான அறிவுடையவர் என்பது லாவோட்ஸு வின் எண்ணம். அவருடைய அறிவின் விசாலத்தைக் கண்டு கன்ஃபூஷியஸ் மிரண்டது உண்டு. ஒருமுறை, லாவோட்ஸுவின் சீடர்கள் கன்ஃபூஷியஸிடம், 'காலையில் சூரிய உதயத்தின்போது சூரியன் பெரிதாகத் தெரிகிறது. ஆனால், மதியம் சிறிதாகத்தான் தெரிகிறது. காலையிலும் மாலையிலும் பெரிதாகத் தெரியும் சூரியன் சுடுவதில்லை. அருகில் இருக்கிற பொருள்கள்தான் பெரிதாக இருக்கும். எனில், காலையிலும் மாலையிலும்தான் வெயில் அதிகம் சுட்டெரிக்கவேண்டும். ஆனால், மதிய வேளையில்தான் வெயில் கொதிக்கிறது. இது எப்படிச் சாத்தியம்?' என்று கேட்டார்கள்.  

கன்ஃபூஷியஸ் பதில் சொல்ல முடியாமல் திகைத்தார். இது விழியியல் காட்சிப்பிழையால்தான் நிகழ்கிறது. காலையில் உண்மையில் சூரியன் உதயத்தின்போது பெரிதான வடிவத்தில் இல்லை. தரையையட்டி உதயம்

நிகழ்வதுபோல் தோன்றுவதால், நாம் அதைப் பார்க்கிற பொருட்களின் ஊடாக அது பெரிதுபோல் நமக்குத் தோன்றுகிறது. மரங்களின் ஊடாக, அலைகளின் ஊடாக, மலைகளின் ஊடாக அதைக் காண்கிறபோது, அதன் மொத்த வடிவம் நமக்குத் தோன்றி, பெரிதுபோலத் தோன்றுகிறது.  தூரத்தில் இருப்பதால்தான் காலைச் சூரியனையோ, அஸ்தமனச் சூரியனையோ எளிதில் பார்க்க முடிகிறது. நண்பகலில் சூரியனை உற்றுப்பார்த்தால், விழித்திரை எரிந்துவிடும்.

இந்த நுட்பத்தை அப்போதே லாவோட்ஸுவின் சீடர்கள் தெரிந்துவைத் திருந்தார்கள். பழைமையை மறுஉருவாக்கம் செய்கிறபோதுதான் புதுமைக்குப் பல பரிமாணங்கள் புலப்படுகின்றன.  

மனைவியும் மாமியாரும்!

எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கத் தெரிந்தவர்களால்தான் உண்மையை உணரமுடியும். கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி என்கிற அமைச்சர் இருந்தார்.  அவருடைய புத்திக்கூர்மை பலருக்கும் தெரியும். அவரை தில்லி பாதுஷா தனது சபைக்கு வரவழைத்து, அவரின் அறிவாற்றலைச் சோதித்துப் பார்க்க விரும்பினார். ஒரு காவலாளியை தன்னைப் போலவே வேஷமிடச் செய்து, அரியாசனத்தில் அமர்த்தி வைத்துவிட்டு, தான் ஒரு சாதாரண வேலைக்காரனைப் போல வேடமணிந்து, ஒரு மூலையில் ஒதுங்கி நின்றிருந்தார்.

அவைக்குள் நுழைந்த அப்பாஜி அரியணையில் இருந்தவரை ஒரு பார்வை பார்த்தார்; பிறகு, அவையைப் பார்த்தார். பின்னர், காவலாளி உருவத்தில் நின்றிருந்த பாதுஷாவிடம் நேராகச் சென்று வணக்கம் தெரிவித்துவிட்டு, 'பாதுஷா அவர்களே! எதற்காகச் சிரமப்பட்டுக்கொண்டு இங்கே நிற்கிறீர்கள்?' என்று கேட்டார்.

அப்பாஜியின் திறமையைக் கண்டு பாதுஷாவும் சபையோரும் வியப்பும் திகைப்பும் அடைந்தார்கள். பாதுஷா தனது வேடத்தைக் களைந்துவிட்டு, அரியாசனத்தில் அமர்ந்தார். அப்பாஜியையும் ஓர் உயர்ந்த ஆசனத்தில் அமர வைத்தார்.

'அப்பாஜி! சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தது நானல்ல என்று எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?' என்று வியப்பு மேலிடக் கேட்டார் பாதுஷா.

'பாதுஷா அவர்களே! தங்களை அடையாளம் கண்டுகொள்ள நான் அதிகம் சிரமப்படவில்லை. அரியணையில் அமர்ந்திருந்தவரை யாருமே லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. காவலாளி வேடத்தில் நின்று கொண்டிருந்த தங்கள் பக்கமே அவர்கள் பயபக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதை வைத்துத்தான் கண்டுபிடித்தேன்' என்றார் அப்பாஜி.

(இன்னும் மேலே...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism