Published:Updated:

உலகம் முழுதும் தாய்நாடே!

நாளை நமக்காக! திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்

உலகம் முழுதும் தாய்நாடே!

நாளை நமக்காக! திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்

Published:Updated:
##~##

தாய்நாட்டுப் பற்று என்பதுகூட ஒரு குறுகிய மனப் பான்மை என்று கருதும் அளவுக்கு, உலகமே ஒவ்வொரு மனிதனின் தாய்நாடாக மாறவேண்டும் என விரும்பிய மெய்ஞ்ஞானிகள் உண்டு.

''பிரெஞ்சு தேசம் பிறப்பால் என் தாய்நாடு. ஆனால், இந்தியாவையும் என் தாய்நாடாக நான் தேர்வுசெய்துகொண்டிருக்கிறேன்'' என்றார் ஸ்ரீஅரவிந்த அன்னை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகம் முழுவதும் நம்முடையது எனக் கருதத் தொடங்கி விட்டால் இனப் பகைமைக்கோ, மொழிப் பகைமைக்கோ, மதப் பகைமைக்கோ இடமில்லை. 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று கணியன் பூங்குன்றனார் சொன்னது இதைத்தான்.

வருங்கால இளைஞர்கள் இத்தகைய உணர்வு உள்ளவர்களாகத்தான் உருவாவார்கள். உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் மண் எடுத்து வந்து ஆரோவில் அமைப்பை புதுச்சேரியில் உருவாக்கினார் ஸ்ரீஅன்னை. உலக மனிதர்கள் அனைவரின் சகோதரத்துவமே ஸ்ரீஅன்னையின் லட்சியம்.

உலகம் முழுதும் தாய்நாடே!

இந்த லட்சியம், ராமாயண காலத்திலேயே இன்னும் விரிவாக நம் பாரதத்தில் தோன்றிவிட்டது.

'குகனொடும் ஐவரானோம்; குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானோம்; விபீஷணா, உன்னோடு எழுவரானோம்!’ என்று, உடன்பிறந்த மூவரோடு உடன்பிறவாத மூவரையும் சகோதரர் களாக ஏற்றானே ராமபிரான்! அதில், குகன் கீழ்நிலைப்பட்ட வேடன்; இன்னொருவன், வானரம்; மற்றொருவன், பிறப்பால் அரக்கன். இதைவிட உயரிய சகோதரத்துவம் எங்கு உண்டு?

இந்த லட்சிய நிலையை அடைவதில் எத்தனையோ சிக்கல்கள்! எல்லா மனிதர்களும் கடவுளின் பிள்ளை கள் என்ற வகையில் அனைவரும் உடன்பிறந்த சகோதரர்களே என்ற உணர்வை எவ்விதம் தோற்று விப்பது?

இதற்கு ஒரு வழி சொன்னார் டால்ஸ்டாயின் புதல்வர். ஸ்ரீஅன்னை ஒருமுறை ஜப்பான் சென்றார். அங்கே அவரைச் சந்திக்க வந்தார் அவர்.

''அன்னையே! உலகம் முழுவதும் சகோதரர்களாக அன்போடு வாழ, சுலபமான இரண்டு வழிகள் இருக்கின்றன. உலகில் எல்லா ஆண்களுக்கும் ஒருவிதமாகவும், எல்லாப் பெண்களுக்கும் இன்னொருவிதமாகவும் சீருடையைத் தோற்றுவித்துவிடுங்கள். உலக மக்கள் அனைவரும் ஆங்கில மொழியைத்தான் பயன்படுத்தவேண்டும் என்று கட்டளை இடுங்கள். உடையும் மொழியும் ஒன்றானால், பேதங்கள் அகன்று, ஒற்றுமை தோன்றிவிடும்'' என்றார் அவர்.

அதைக் கேட்ட ஸ்ரீஅன்னை கலகலவென நகைத்தார். 'அப்படிப்பட்ட ஒற்றுமை அல்ல கடவுளின் விருப்பம்’ என விளக்கினார். ''நீங்கள் சொல்வது சரி என்றால், கடவுள் ஏன் ஒவ்வொரு மனிதனின் முகத்தையும் வித்தியாசமாகப் படைக்க வேண்டும்? எல்லா ஆண் களின் முகமும் ஒன்றாகவும், எல்லாப் பெண்களின் முகமும் ஒன்றாகவும் அல்லவா இருந்திருக்க வேண்டும்? அப்படி இல்லையே? எனவே, கடவுளின் திட்டம் இதுவல்ல. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே கடவுளின் விருப்பம். நாம் வேறுபாடுகளோடு வாழ்ந்துகொண்டே ஒற்றுமையை நிலைநாட்டுவதன் மூலம் கடவுளின் விருப்பத்தைச் சாதிக்கவேண்டும். எல்லா மொழிகளும், எல்லா இனங்களும், எல்லா மதங்களும் இருக்கட்டும். அவற்றை அந்தந்த வகையில் போஷித்துக் கொண்டே நாம் மகத்தான ஒற்றுமையுடன் வாழ முடியும்'' என்றார் ஸ்ரீஅன்னை.

உலகம் முழுதும் தாய்நாடே!

எத்தகைய விஞ்ஞானபூர்வமான தீர்க்க தரிசனம்! வேற்றுமைகளை ஒருபோதும் ஒழிக்க முடியாது. ஆனால், அந்த வேற்றுமைகளின் ஊடாகவே அன்பென்னும் சரடால் மிகச் சிறந்த ஒற்றுமையை நிலைநாட்டிவிட முடியும்.

'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்றார் தாயுமானவர். தமிழர்கள் மட்டும் இன்புற்றிருக்கவேண்டும் என்று அவர் கேட்கவில்லை. அவரது பிரார்த்தனை எல்லோருக்குமானது. ஒரு தாய் தன் எல்லாக் குழந்தைகளையும் ஒன்றுபோலத்தான் நேசிப்பாள். ஞானிகள் தாயைப் போன்றவர்கள்.

பரமஹம்சர் புல்லில் படுத்திருந்தார். இந்தப் பிரபஞ்சமே தாம்தான் என்ற உணர்வில் தோய்ந்திருந்தார். அப்போது, சற்றுத் தொலைவில் புல்வெளியில் திம் திம் என தரை அதிர நடந்து சென்றார் ஒருவர். 'அங்கே அவர் நடப்பதால், இங்கே என் மார்பு வலிக்கிறதே’ என்றார் பரமஹம்சர். அவர் மார்பு சிவந்து விட்டது. ஞானிகள் உலகம் முழுவதும் தாங்கள் இருப்பதாகவும், உலகமே தாங்கள்தான் என்றும் உணர்வு கொள்வார்கள். அதனால்தான் உலகில் உள்ள அனைவரையும் அவர்களால் சமமாக நேசிக்க முடிகிறது.

ஆனந்தமயி என்றொரு பெண் சித்தர் இருந்தார். மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் சமகாலத்தவர் அவர். இந்திராகாந்தி அவரிடம் ருத்திராட்ச மாலை வாங்கி அணிந்துகொண்டிருக்கிறார். தம் காலத்தில் தமது பிரசன்னத்தாலேயே ஏராளமான பேரை ஆன்மிக அலையில் தோய வைத்தவர் ஆனந்தமயி. அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். தனிமையை வேண்டி, அவர் திடீர் திடீர் என்று பல ஊர்களில் உள்ள பாழடைந்த கோயில்களுக்குப் போய், நிஷ்டையில் தோய்ந்துவிடுவார். ஆனாலும் அடியவர்கள் எவ்விதமோ அவர் அங்கிருப்பதை அறிந்துகொண்டு, அவர் முன் போய், தாங்களும் தியானத்தில் ஆழ்வார்கள்.  

இதைக் கவனித்து வந்த பத்திரிகை நிருபர் ஒருவருக்கு ஆச்சரியம்! ஆனந்தமயி தேவி செல்லுமிடங்கள் எல்லாம் அவரின் அடியவர்களுக்கு எப்படித் தெரிகின்றன? அவர் எங்கு சென்றாலும் எப்படி இவர்கள் போய் இணைந்துகொள்கிறார்கள்?

ஆனந்தமயி தேவியிடமே இதுபற்றிக் கேட்டார் அவர். அதற்கு ஆனந்தமயி சொன்ன பதில்தான் அத்வைதத்தின் விளக்கம். ஆனந்தமயி சொன்னார்... ''என் உடன்வரும் இவர்களெல்லாம் என் உடலின் ஒரு பகுதிதானே? என்னை விட்டுவிட்டு இவர்கள் எங்கே போவார்கள்?''

மனித உடல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அல்ல; ஒரே பேருடலின் தனித்தனிக் கூறுகள்தான் அவை என்று நினைக்க, எத்தனை உயர்வான மனம் வேண்டும்? அப்படியோர் எண்ணம் தோன்றிவிட்டால், அடுத்தவர்களுக்குக் கனவிலும் தீங்கு நினைப்போமா நாம்?

சகோதரத்துவத்தில், மனித குலம் தாண்டிய அடுத்த கட்டத்துக்குச் சென்றார் வள்ளலார். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பயிர்பச்சைகளின் வாட்டத்துக்காகவும் தான் வாடினார். புலாலை மறுத்தவர் அவர். பிற உயிர்களை மட்டுமல்ல, தாவரங்களையும் தம் உயிர்போல் கருதிய அருளாளர்.

உலகம் முழுதும் தாய்நாடே!

புத்தரும் புலால் மறுப்பாளர்தான். பிம்பிசாரன் அரண்மனையில், யாகத்தில் பலியிட ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன. அவற்றில் கால் ஊனமான ஒரு குட்டி ஆட்டின் மீது, புத்தரின் பார்வை விழுந்தது. தமது ரோஜாப்பூ போன்ற கரங்களில், அந்தக் குட்டி ஆட்டை மல்லிகை மாலைபோல் தூக்கிக்கொண்டு, பிம்பிசாரன் முன் சென்றார். மன்னனிடம் தம் விவாதத்தை முன்வைத்தார். அந்தச் சாதுர்யத்தை 'ஆசிய ஜோதி’ என்ற கவிதை நூலில் அழகுபட எழுதுகிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. 'மைந்தருள் ஊமை மகனை மற்றொரு மகன் வாளால் அரிந்து கறி சமைத்தால், தந்தையும் உண்டு களிப்பதுண்டோ?’ என்பது கவிமணியின் தமிழில் புத்தர் வினவும் வினா. பிம்பிசாரன் மனம் மாறினான் என்பதைச் சொல்லவா வேண்டும்? மனிதர்களுக்கு இணையாக ஆடுகளையும் சகோதரர்களாக நினைத்த புத்தரின் மனநிலை எத்தனை உயர்வானது!

உமர்கயாமின் பாடலொன்று பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை பொருட்களையுமே சகோதர பாசத்துடன் காண்கிறது. உமர்கயாம் கவிதைகளை எளிய தமிழில் மொழிபெயர்த்த கவிமணி, அந்தச் சிந்தனையையும் அழகாக எழுதுகிறார்.

ஒரு குயவன் பானை செய்வதற்காக மண்ணைப் பிசைந்து கொண்டிருந்தான். அவன் மண்ணைப் பிசைவது, உமர்கயாமின் மனத்தைப் பிசைகிறதாம். கவிதை இப்படிச் செல்கிறது...

'மண்ணை எடுத்து ஒரு குயவன் மயக்கிப் பிசையும் வேளையிலே
திண்ணை அருகே சென்றிருந்தேன், செய்யும் செயலும் கண்டிருந்தேன்.
அண்ணா மெல்ல மெல்ல என அமைந்த அழுகைக் குரல் கேட்டேன்.
கண்ணிற் காணாத் தன் நாவால் களிமண் கரைவது என உணர்ந்தேன்!’

இத்தகைய சிந்தனைகள் பரவுமானால், நாம் சுற்றுச்சூழலில் பாதிப்பை உருவாக்குவோமா? நாடு, மொழி, இனம், மதம் இவற்றால் பேதங்கள் பாராட்டுவோமா?

உலகின் எந்த நாட்டுக்கும் விசாவோ, பாஸ்போர்ட்டோ இல்லாமல், நம் சொந்த நாடு என்ற உணர்வோடு போய்வரும் காலம் இன்றில்லா விட்டாலும், என்றேனும் ஒருநாள் உருவாகத்தானே வேண்டும்? அதுதானே நாகரிகத்தின் வளர்ச்சி? அந்த நாளின் வருகையைத் துரிதப்படுத்தும் வகையில் நாம் எப்படி இன்று நடந்துகொள்ளப் போகிறோம் என்பதுதான், இப்போது நம் முன் உள்ள கேள்வி!

(சிறகு விரிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism