Published:Updated:

ஆயுளை அதிகரிக்கலாம்!

மேலே... உயரே... உச்சியிலே..! - 9வெ.இறையன்பு, ஓவியம்: அனந்த பத்மநாபன்

ஆயுளை அதிகரிக்கலாம்!

மேலே... உயரே... உச்சியிலே..! - 9வெ.இறையன்பு, ஓவியம்: அனந்த பத்மநாபன்

Published:Updated:
ஆயுளை அதிகரிக்கலாம்!
##~##

ரு சின்ன புதிர்... சட்டென்று பதில் சொல்லுங்கள், பார்ப்போம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சில நாய்கள் ஏகாந்தமான சாலையில் சென்று கொண்டிருக்கின்றன. ஒரு நாய்க்குப் பின்னால் இரண்டு நாய்களும், ஒரு நாய்க்கு முன்னால் இரண்டு நாய்களும், ஒரு நாய் நடுவிலும் சென்றுகொண்டிருக்கிறது. அப்படியென்றால், இந்த வரிசையை அமைக்க மிகக் குறைவாக எத்தனை நாய்கள் தேவைப்படும்?

பெரும்பாலானோர் 'ஐந்து நாய்கள்’ என்றுதான் பதிலளிப்பார்கள். ஆனால், மூன்று நாய்கள் என்பதுதான் சரியான விடை.  எனவே, கணிதமாக இருந்தாலும் சரி, பொருளாதாரமாக இருந்தாலும் சரி... குறைந்த எண்ணிக்கையில் அதிக பயனைப் பெறுவதுதான் சரியான விடையாக இருக்கமுடியும்.

எதையும் அவசரப்பட்டுச் செய்துவிடக்கூடாது. ஆழ்ந்து யோசிக்க வேண்டும். எந்தப் புதிருக்கும் எளிதான விடை இருக்கக்கூடும். ஆனால், ஏதோ நுட்பம் இருப்பதால்தான், அந்த விடை எளிதாகத் தெரிந்துவிடாதபடி, புதிராக ஆக்கப்பட்டுள்ளது. எனவே, சரியான விதத்தில் யோசித்து, சரியான விடையைக் கண்டுபிடிக்க வேண்டும். தொடர்ந்த பயிற்சியின் மூலம், இதை நம்மால் சாதிக்க முடியும்.  

இந்தியாவில், விக்கிரமாதித்தன் கதைகள் மிகவும் புகழ் வாய்ந்தவை. அதில் சொல்லப்பட்டிருக்கும் புதிர்கள் பலவற்றுக்கு விடை காண்பது சிரமம். வழக்கமான யோசனை யில் இருப்பவர்களால் அந்தப் புதிர்களுக்கு விடைகாண முடியாது.  

விக்கிரமாதித்தன் கன்னியாபுரி மன்னன். அவனது பிரதம மந்திரி, பட்டி என்பவன். தேவலோகத்தில் இந்திரன் சபையில் ஊர்வசி, ரம்பை இருவரில் யார் அதிக சிறப்பு வாய்ந்த நடன மாது என்கிற போட்டி ஏற்பட்டது. தீர்ப்பு வழங்க விக்கிரமாதித்தன் அழைத்துச்செல்லப்பட்டான்.  

முதலில், ரம்பையின் நடனம் ஆரம்பமாயிற்று. அவள் ஆடல் கண்டு அனைவரும் மயங்கினர். அடுத்து, ஊர்வசியும் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் சிறப்பாகவே ஆடினாள்.  

இருவரின் நடனத்தையும் கண்டுகளித்த விக்கிரமாதித்தன், இருவரும் இணைந்து நடனமாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதன்படி, மறுநாள் இருவரின் நடனமும் நடப்பதாக முடிவானது.  

இதனிடையில், நந்தவனம் சென்று, தேவலோக புஷ்பங்களைப் பறித்து வந்து, இரண்டு பூச்செண்டுகள் தயார் செய்தான் விக்கிர மாதித்தன். மறுநாள் நடனப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ரம்பை, ஊர்வசி இருவரிடமும் ஆளுக்கொரு பூச்செண்டைக் கொடுத்து, ''நீங்கள் வெறும் கையோடு நடனமாடுவதைவிட, கையிலே பூச்செண்டைப் பிடித்துக்கொண்டு ஆடினால் அலங்காரமாக இருக்குமே!' என்றான்.

ரம்பையும் ஊர்வசியும் மிக மகிழ்ச்சியுடன் அந்தப் பூச்செண்டைக் கையில் பிடித்தபடி ஆடினார்கள். சிறிது நேரத்தில், ரம்பையின் நடனம் பிசகியது. கால்கள் தடுமாறின. அவள் பூச்செண்டைத் தூக்கியெறிந்துவிட்டாள். ஆனால், ஊர்வசியோ இறுதிவரை பூச்செண்டைப் பிடித்தபடி நேர்த்தியாக ஆடினாள்.

ஆயுளை அதிகரிக்கலாம்!

'ஊர்வசியின் நடனமே நுட்பமானது. ஊர்வசியே வென்றாள்' என்று தீர்ப்புக் கூறினான் விக்கிரமன்.

'அது எப்படி?' என்று இந்திரன் கேட்டான்.  

ஊர்வசியிடமிருந்து பூச்செண்டைத் திரும்ப வாங்கி, அதனுள் தான் வைத்துத் தைத்த வண்டை எடுத்து அவையினரிடம் காண்பித்த விக்கிரமன், 'இந்தப் பூச்செண்டை ஊர்வசி மிருதுவாகக் கையாண்டதால், வண்டு கொட்டாமல் செம்மையாக ஆடினாள். ரம்பை இதை இறுக்கிப் பிடித்ததால், வண்டு கொட்டி, அவள் நடனம் தடுமாறியது; செண்டையும் தூக்கியெறிந்தாள்!' என்றான்.  

விக்கிரமாதித்தனின் மதி நுட்பத்தை உணர்ந்து மகிழ்ந்த இந்திரன், ஒரு சிம்மாசனத்தை அளித்து, 'இதில் அமர்ந்தபடி, ஆயிரம் ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வருவாய்' என்று வரமளித்தான்.  

இதை அறிந்த பட்டி, தானும் அதிக ஆண்டுகள் வாழ வேண்டுமன்று காளியை நோக்கித் தவம் இருந்தான்.

'நீ கேட்கும் வரம் கைகூட வேண்டுமென்றால், விக்கிரமாதித் தனின் தலையை இந்தப் பீடத்தில் வைக்க வேண்டும்' என்றாள் காளி. பட்டி உடனே அரண்மனைக்குச் சென்று, உறக்கத்திலிருந்த விக்கிரமனை எழுப்பி, 'அரசே! ஒரு காரியத்துக்காக உங்கள் தலை தேவைப்படுகிறது!' என்றான்.

'மகிழ்ச்சி! எடுத்துச் செல்!' என்றான் விக்கிரமன்.

விக்கிரமாதித்தனின் தலையை வாளால் வெட்டி எடுத்துச் சென்று, தேவியின் பலிபீடத்தில் வைத்தான் பட்டி. காளி மனம் மகிழ்ந்து, அவனுக்கு 2,000 ஆண்டு ஆயுளையும், மேலும் பல சிறப்புகளையும் அளித்தாள்.

பட்டி சத்தமாகச் சிரித்தான்.

காளியம்மன் காரணம் கேட்க, 'எங்கள் அரசன் தேவர் களிடம் ஆயிரம் ஆண்டு ஆட்சி புரிய வரம் வாங்கி வந்து சில மாத காலம்கூட ஆகவில்லை; அதற்குள் கழுத்து அறுபட்டு, அவன் தலை உன் பலி பீடத்தில் இருக்கிறது. தேவாதி தேவர்களின் வரம் இந்த நிலைக்கு உள்ளானால், நீ கொடுத்த வரம் எப்படிப் பலிக்கும் என்பதை எண்ணியே சிரித்தேன்' என்றான் பட்டி.

'பட்டி, என் வார்த்தைக்கு பங்கம் வராது. நான் சொல்கிறபடி செய். உன் அரசன் உயிர் பிழைப்பான்!'' என்ற தேவி, எலுமிச்சம்பழமும் திருநீறும் தந்து, விக்கிரமனின் தலையை எடுத்துச் சென்று அவனது உடலில் பொருத்தி, கும்ப தீர்த்தத்தைத் தெளித்து, திருநீற்றைத் தடவுமாறு தெரிவித்தாள்.

பட்டி அவ்விதமே செய்ய, விக்கிரமாதித்தன் உயிர் பெற்றான். அவனிடம் பட்டி, தான் அம்மனிடம் 2,000 ஆண்டு ஆயுளைப் பெற்று வந்த தகவலைக் கூறினான்.

'பட்டி! தேவர்கள் எனக்குக் கொடுத்த ஆயுளோ ஆயிரம் ஆண்டு. நீ இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ ஆயுள் பெற்று வந்துள்ளாய். நாம் இருவரும் சம ஆயுள் வாழ வழியில்லாமல் போய்விட்டதே?' என்றான் விக்கிரமாதித்தன்.

ஆயுளை அதிகரிக்கலாம்!

'அரசே! வருந்தாதீர்கள். உங்கள் ஆயுள் ஆயிரம் ஆண்டு என தேவர்கள் உங்களுக்கு வரம் தரவில்லை. ஏறிய சிம்மாசனத்திலிருந்து இறங்காமல் ஆயிரம் ஆண்டுக் காலம் ஆட்சி புரிவீர்கள் என்றுதான் அருளியிருக்கிறார்கள். எனவே, நீங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து, ஆறு மாதம் ஆட்சி புரியுங்கள். பின்பு, காடுகளில் சஞ்சரித்து ஆறு மாதங்களைக் கழியுங்கள். இப்படிச் செய்தால், தங்களுக்கு ஆயுள் 2,000 ஆண்டு ஆகிவிடும்' என்று யோசனை சொன்னான் பட்டி. அதன்படியே இருவரும் 2,000 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்கிறது கதை. மாற்றி யோசிப்பதற்கான கதையாக இது இருக்கிறது.

விக்கிரமாதித்தனின் கதையைப் படிக்கும்போது, பைபிளில் வருகிற சாலமன் மன்னன் நம் நினைவுக்கு வருகிறார். புத்திக் கூர்மையிலும், மாற்றிச் சிந்திப்பதிலும் இணையற்ற மன்னனாக இருந்தார் சாலமன்.

ஒருநாள், விலைமாதர்கள் இருவர் அரசர் முன்னிலையில் வந்து நின்றனர். அவர்களுள் ஒருத்தி, 'இந்தப் பெண்ணும் நானும் ஒரே வீட்டில் குடியிருக்கிறோம். சில மாதங்களுக்கு முன்பு, நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தேன். என் குழந்தை பிறந்த மூன்றாம் நாள், இவளும் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்த வீட்டில் எங்கள் இருவரைத் தவிர, வேறு யாரும் இல்லை. இரவில் தூங்கும்போது, இவள் தன் குழந்தைமீது புரண்டதில், அது மூச்சடைத்து இறந்துபோயிற்று. இவள் நள்ளிரவில் எழுந்து, என்னருகில் கிடந்த என் குழந்தையை எடுத்துத் தன் அருகில் கிடத்திக்கொண்டுவிட்டு, இறந்துவிட்ட தன் குழந்தையை என் அருகில் போட்டுவிட்டாள். விடியற்காலையில் பிள்ளைக்குப் பால் கொடுக்க நான் எழுந்தபோது, ஐயோ... அது செத்துக்கிடந்தது. வெளிச்சத்தில் பிள்ளையை உற்றுப்பார்த்தபோதுதான், அது நான் பெற்ற குழந்தை அல்ல என்று தெரிந்தது. இவளிடம் இருப்பதே என் குழந்தை. என் குழந்தையை இவளிடமிருந்து மீட்டுத் தாருங்கள்!' என்று கதறிறாள். 'இல்லை! இவள் பொய் சொல்கிறாள். இது என் குழந்தைதான்!  செத்துப்போனது இவள் பிள்ளை!' என்றாள் மற்றவள். இவ்வாறு, உயிரோடு இருக்கும் அந்தக் குழந்தை தன்னுடையதுதான் என்று இருவருமே சாதித்தனர்.

அரசர், 'சரி, இருவருமே இது உங்கள் குழந்தை என்கிறீர்கள். எனவே, வேறு வழியில்லை'' என்றவர், படை வீரன் ஒருவனை அழைத்து, 'உயிரோடிருக்கும் இந்தக் குழந்தையை சரிபாதியாக வெட்டி, ஆளுக்கொரு பாதியாகக் கொடுத்துவிடு!'' என்று ஆணையிட்டார்.

உடனே, ஒருத்தி பதறித் துடித்து, 'வேண்டாம் அரசே!  குழந்தையைக் கொல்ல வேண்டாம். அதை அவளிடமே கொடுத்துவிடுங்கள்' என்று வேண்டினாள். மற்றவளோ, 'அது எனக்கும் வேண்டாம்; உனக்கும் வேண்டாம். மன்னரின் தீர்ப்பே சரியானது. அதை இரண்டாக வெட்டுங்கள்' என்றாள். உடனே அரசர், 'அந்தக் குழந்தையை முதல் பெண்ணிடம் ஒப்படையுங்கள்!  அவள்தான் அதன் தாய்!' என்றார்.

இப்படி, வேறுபட்டுச் சிந்திப்பதே அறிவாளிகளின் இலக்கணம்.

நவீன சாலமன் கதை ஒன்றும் உண்டு.

இரண்டு பெண்கள் ஓர் இளம்பெண்ணுடன் அவைக்கு வந்து, ''இவள் என் மருமகள். என்னோடு அனுப்பிவைக்க வேண்டும்'' என்று வாதாடினார்கள். சாலமன் போலவே இந்த நவீன சாலமனும், அந்தப் பெண்ணை இரண்டாக வெட்டித் தரும்படி ஆணையிட்டான். அப்போது ஒருத்தி 'வேண்டாம்’ என்று பதற, மற்றொருத்தியோ சிரித்துக்கொண்டிருந்தாள்.  

உடனே, 'மருமகள் வெட்டுப்பட வேண்டும் என விரும்பியவளே உண்மையான மாமியார்’ என்று நவீன சாலமன் தீர்ப்பளித்ததாக, மாற்றி யோசித்த ஒருவர், இணையத்தில் நகைச்சுவைக் கதை ஒன்றை உலவவிட்டிருக்கிறார். நகைச்சுவையை ரசிக்கலாம். மற்றபடி, இந்தக் கதையில் நமக்கு உடன்பாடு இல்லை.

(இன்னும் மேலே...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism