Published:Updated:

ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?!

நாளை நமக்காக! திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்

ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?!

நாளை நமக்காக! திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்

Published:Updated:
##~##

வாழ்க்கையை எப்படி மனத்தளவில் எதிர்கொள்வது? இது ஒரு சிக்கலான கேள்வி. உண்மையில் அவரவர் வாழ்க்கையை அவரவர் மனத்தளவில் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் ஞானமே! அந்த ஞானத்தைப் பெற்றுவிட்டால், நாம் எல்லோரும் ஆனந்தமாக வாழலாம்.

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை. ஏன் வெவ்வேறு மாதிரி அமைகிறது என்ற கேள்விக்கு அறிவியலால் எந்த பதிலும் தர இயலவில்லை. ஆனால், 'கர்மவினையே காரணம்’ என்று ஒரு பதில் தருகிறது ஆன்மிகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விதி என்பதை ஆங்கிலத்தில் ஃபேட் (fate) என்கிறோம். உண்மையில், விதி என்பது ஃபேட் (fate) அல்ல; அது ரூல் (rule) என்றே கொள்ளப்படவேண்டும். ஆமாம், யாராலும் மாற்ற இயலாத சட்டம் அது.

ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச்செயல் இருக்கிறது என்கிறது பௌதிகம் சார்ந்த நியூட்டனின் மூன்றாம் விதி. இந்த விதி மனித வாழ்க்கைக்கும் பொருந்தும். நாம் இப்பிறவியிலோ முற்பிறவியிலோ செய்த ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை கட்டாயம் உருவாகும். அதையே கர்மவினை என்கிறோம். இப்படியோர் ஆன்மிக விதி இயங்குகிறது என்பதை உணர்ந்துகொண்டால், பல தீர்க்கமுடியாத பிரச்னைகள் குறித்து நம் மனம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், அமைதியுறும்.

ஒருவருக்கு ஆட்டிஸம் குறையுடன் பிள்ளை பிறக்கிறது. என்ன செய்வது இப்போது? வாழ்நாள் முழுதும் அதைப் பற்றிப் புலம்பிக்கொண்டே வாழ்வதா? அல்லது, சவாலாக ஏற்று, அந்தக் குழந்தையை இயன்றவரை சிறப்பாக வளர்ப்பதா?

ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?!

நண்பர் ஒருவர் அத்தகைய மகனைப் பெற்றவர். நண்பரின் மனைவியிடம் அந்த மகனைப் பற்றிக் கனிவோடு விசாரித்தபோது, அவர் சொன்னார்... ''சூது வாது அறியாதவன் என் மகன். அவனை 20 வருடங்களாக வளர்த்து வருகிறேன். அவன்தான் என் கடவுள். சொர்க்கத்தைவிட்டு, கடவுள் என் வீட்டில் வந்து பிறந்திருப்பதாகவே உணர்கிறேன். அவனைக் குளிப்பாட்டும்போது, கடவுளுக்கு அபிஷேகம் செய்வதாக நினைத்துக்கொள்கிறேன். சோறூட்டும்போது இறைவனுக்கு நிவேதனம் செய்வதாக உணர்கிறேன். என் தெய்வம் சாப்பிடுவதாக பாவனை காட்டாது; நிஜமாகவே சாப்பிடும்!''

சொல்லிவிட்டு, நெகிழ்ச்சியுடன் விழிகளைத் துடைத்துக் கொண்டார் அவர். மகனை இறுக அணைத்துக் கொண்டார். தன் குறையை நிறையாக்கிக்கொண்டு, வாழ்க்கையைப் பிடிப்புள்ளதாக, அர்த்தமுள்ளதாக அவர் மாற்றிக்கொண்டுவிட்டார்.

''ஒருவேளை, போன பிறவியில் இவனது உழைப்பை எந்த விலையும் கொடுக்காமல் நான் வாங்கிக்கொண்டேனோ என்னவோ? அதற்காகத்தான் இந்தப் பிறவியில் இவனுக்குச் சேவை செய்து அந்தக் கடனைத் தீர்க்கிறேனோ, யாருக்குத் தெரியும்? ஆனால், இந்தப் பிறவியில் இவன் இல்லாமல் எனக்கு வாழ்வே இல்லை!'' என்று அந்த அம்மாள் சொன்னது, ஆழ்ந்து யோசித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.

96 வயதுவரை வாழ்ந்த தன் கணவரைப் பரிவோடு  பராமரித்து வந்தார் 85 வயது மூதாட்டி. கணவர் காலமானபின்பு அவர் சொன்னார்... ''கடந்த இரண்டு மூன்று ஆண்டுகள் அவர் குழந்தை போல் மாறிவிட்டார். பல் அத்தனையும் போய்விட்டது. தலைமுடி உதிர்ந்துவிட்டது. குளிப்பாட்டுவது முதல் உணவூட்டுவது வரை எல்லாம் நான்தான் என் கணவருக்குச் செய்யவேண்டியிருந்தது. இதனால் என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைத்ததாக உணர்ந்தேன். அவர் போனபின்பு அந்தப் பணிவிடைகளுக்கு இனி வாய்ப்பில்லை. இப்போது என் வாழ்வு வெறுமையானதாக உணர்கிறேன். என் நேரத்தை என்ன செய்வதென்று தெரியாமல், ராம நாமத்தை ஜபித்துக் கொண்டும், அவருக்குப் பணிவிடை செய்த காலங்களை மனத்தில் அசைபோட்டுக்கொண்டும் எஞ்சிய வாழ்வைக் கழித்துவருகிறேன்!''

ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?!

ஒருவருக்கு மனநிலை சரியில்லாத மனைவி. கணவர் சற்றும் அலுப்படையவில்லை. குளிப்பாட்டிவிடுவது, கூந்தலைப் பின்னி விடுவது, உணவூட்டிவிடுவது என ஒரு குழந்தையைப்போல் இப்போதும் அவரைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொள்கிறார்.

'வேறு பெண் மனைவியாகக் கிடைத்திருந்தால் தேவலாம் என்று நினைத்ததுண்டா?’ என்று கேட்டதற்கு, அவர் மிக நெகிழ்வோடு சொன்னார்...

''என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி இது? இவள்தானே என் மனைவி? பிறகு, வேறு பெண் என்ற சிந்தனை எதற்காக? வேறு ஒரு பெண்மணி என் அம்மாவாக இருந்திருந்தால் தேவலாம் என்று நினைப்போமா நாம்? தானே அமைவதுதானே அம்மா, சகோதரி, மகள் என்கிற உறவெல்லாம்? அதுபோல், நான் தேர்வு செய்திருந்தாலும், இவள் என் மனைவியாக எனக்கு அருளப்பட்டவள்.

இவளுக்குச் செய்யும் பணிவிடைகளை நான் சேவையாகக் கருதவில்லை; இது என் கடமை. என்னையே சார்ந்திருக்கும் இவள் சில நேரங்களில் என் கையை இறுகப் பற்றிக்கொண்டு தன் அன்பைத் தெரிவிப்பாள். அந்த நேரங்களில் என் கண்களில் நீர் வழியும். இவ்வளவு அன்பை எந்த மனைவியும் தன் கணவனிடம் செலுத்தியிருக்க முடியாது என்று தோன்றும். ஒரு மனைவிக்கு இத்தகைய பணிவிடைகளைச் செய்யும் வாய்ப்பு பெற்ற என்னைப் போன்ற பாக்கியசாலி உலகில் வேறு யார் இருக்கமுடியும்?''

ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?!

இப்போது புரிகிறதா? அவரவர் வாழ்க்கையை அவரவர் மனத்தளவில் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் உண்மையான ஞானம். அந்த ஞானத்தை அடைய முயல்வதே ஆனந்தத்தின் அடிப்படை. புத்தர், வள்ளலார் போன்றோரெல்லாம் மறைந்துவிடவில்லை. இப்படி நம்மிடையே வேறுவேறு வடிவங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

திருவண்ணாமலை, ஆரணி அருகே அடையபலம் என்ற கிராமத்தைச் சார்ந்த மகான், அப்பய்ய தீட்சிதர். அவருக்கு ஒருநாள் ஒரு விசித்திர எண்ணம் தோன்றியது. தான் சுயநினைவில்லாமல் ஆகிவிட்டாலும், தெய்வத்தையே நினைத்துக்கொண்டிருக்க முடியுமா என்று பரிசோதிக்க ஆசைப்பட்டார்.

அதன் பொருட்டு, ஊமத்தங்காயைத் தின்று, சிறிது காலம் தன்னைப் பைத்தியமாகவே ஆக்கிக் கொண்டு விட்டார். அந்த நிலையிலும் அவர் சிவனை மறக்கவில்லை. அந்தக் காலத்தில் அவர் சிவனைக் குறித்து எழுதிய சுலோகங்கள்தான் 'உன்மத்த பஞ்சசதி’ என்று போற்றப்படுகின்றன.

அவருக்கு அடிக்கடி தாள முடியாத வயிற்றுவலி வருவது உண்டு. அது அவர் முன்வினைப் பயன். அவ்விதம் வயிற்றுவலி வந்த நேரத்தில், அவரைச் சந்திக்க வடக்கிலிருந்து வந்தார் ஒரு மகான். ஆன்மிக சந்தேகங்கள் சிலவற்றை அப்பய்ய தீட்சிதரிடம் கேட்டுத் தெளிவுபெறுவதே அவர் நோக்கம். விரைவில் ஸித்தி அடையும் முடிவில் இருந்தார் அவர்.

வயிற்றுவலி காரணமாக மகானைச் சந்திக்க மறுத்தால், அவர் வருத்தப்படுவாரே என்று யோசித்தார் தீட்சிதர். தன் சீடர்களிடம் மூன்று பலகைகளைக் கொண்டுவரச் சொன்னார்.

ஒன்றில், மகானை அமரச் சொல்லி விட்டு, இன்னொன்றில் தான் உட்கார்ந்து கொண்டார். பின்பு, அருகில் இருந்த மூன்றாவது பலகையில் கை வைத்தார் தீட்சிதர். அவரின் வயிற்றுவலியைப் பலகை வாங்கிக்கொண்டது. எனவே, அது வலியால் நெளிந்து துடிக்கத் தொடங்கியது.

துடிக்கும் பலகையை ஓரமாக நகர்த்தி வைத்த தீட்சிதர், மகானின் கேள்விகளுக்கு பதில் சொன்னார். அதன்பின்பு, வயிற்றுவலியைத் திரும்பவும் வாங்கிக்கொள்ளும் உத்தேசத்தில் பலகையில் கைவைத்தார்.

சட்டென்று அவரின் கையைப் பிடித்துத் தடுத்தார் மகான். ''உங்கள் வயிற்றுவலியைப் பலகையில் எப்படி இறக்கிவைப்பது என்றுதான் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே! பிறகென்ன, வயிற்றுவலி அதிலேயே இருக் கட்டுமே! நீங்கள் நிம்மதியாக இருங்களேன்!'' என்று வேண்டினார். அப்பய்ய தீட்சிதர் கடகடவென்று நகைத்துவிட்டுச் சொன்னார்...

''என் வயிற்றுவலி என் கர்மவினையால் எனக்கு வந்தது. அதை அனுபவித்துத்தான் கழிக்கவேண்டும். பலகையில் இறக்கிவைத்த இந்தக் கொஞ்ச நேர வயிற்றுவலியை நான் இந்தப் பிறவியிலோ மறுபிறவியிலோ அனுபவித்தே ஆகவேண்டும். அதுதான் விதி.

ஆனால், இதை அனுபவிப்பதற்காக நான் இன்னொரு பிறவி எடுக்கவேண்டுமா? இந்தப் பிறவியிலேயே அனுபவித்து என் வினையைக் கழித்துவிட்டுப் போகிறேனே!''

ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை?!

ராமகிருஷ்ண பரமஹம் சருக்கும், ரமண மகரிஷிக்கும், யோகி ராம்சுரத்குமாருக்கும் புற்றுநோய் வருவானேன்?

ஒன்று, அடியவர்களின் பாவங்களைத் தாங்கள் ஏற்றதால், அது வந்திருக்க வேண்டும்; அல்லது, முன்செய்த கர்மவினையாக அது இருக்க வேண்டும். முற்றும் துறந்த முனிவர்களையே கர்ம வினை பீடிக்குமானால், சாதாரண மனிதர்களை அது வருத்தாதா? கண்டிப் பாக வருத்துமல்லவா? ஆனால், அந்த வருத்தத்திலிருந்து மீள்வதற்கு, அவரவர் வாழ்க்கையை அவரவர் எப்படி எதிர் கொள்வது என்பதைக் கற்க வேண்டும்.

நம்மால் முடியக்கூடிய விஷயங்களில் எல்லாம், நாம் என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும். மனித முயற்சியை இறை சக்தி எதிர்பார்க்கிறது. மனிதர்கள் சும்மா இருக்கவேண்டும் என்பது இறை சக்தியின் திட்டமானால், அது மனிதர்களுக்குக் கை கால்களைக் கொடுத்திருக்காது.

ஆனால், நம்மால் முடியாத செயல்கள் என்றும் சில உண்டு. நெருங்கின உறவினரின் மரணம், மருத்துவம் பார்த்தும் தீராத நோய் போன்ற துயரங்கள் அப்படிப்பட்டவை. அவற்றை முன்வினைப் பயன் என்றறிந்து, அமைதியாக எதிர்கொள்ளச் சொல்கிறது நம் ஆன்மிகம்.

வற்றாத அன்பு, தொண்டு மனப்பான்மை இவற்றின் மூலம் முன்வினைப் பயன்களின் துயரைக் குறைக்க முடியும். பக்தியினாலே இந்தப் பாரினில் எய்தும் மேன்மைகளைப் பட்டியலிடுகிறார் மகாகவி பாரதி. பக்தி ஒன்றுதான், நம்மால் தீர்க்கமுடியாத கஷ்டங்களை நாம் தாங்கிக்கொள்ளும் வலிமையைத் தரும்.

துயரங்களைப் புறந்தள்ளி, பிரதிபலன் கருதாத சேவையால் நமது வாழ்க்கையை ஆனந்தமாக மாற்றிக்கொள்வோம். நம்மால் தீர்க்கமுடிந்த விஷயங்கள் அனைத்தையும் தீர்ப்பதற்கு அதிகபட்ச முயற்சி எடுத்துக் கொள்வோம்.

தீர்க்கமுடியாத சிக்கல்களை முன்வினைப் பயன் என்றறிந்து, அமைதியாக எதிர்கொண்டு ஆறுதல்  அடைவோம். இதுவே வாழும் வழி!  

(சிறகு விரிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism