Published:Updated:

நாளை நமக்காக!

ஊனம் ஒரு குறையல்ல! திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்

நாளை நமக்காக!

ஊனம் ஒரு குறையல்ல! திருப்பூர் கிருஷ்ணன், ஓவியம்: மகேஸ்

Published:Updated:

ஷ்டவக்கிரர், பிறவியிலேயே உடலில் எட்டுக் கோணல்களை உடைய ஒரு துறவி. தத்துவ ஞானியான ஜனகரின் சபையில் அவர் ஒருநாள் நுழைந்தார். வாயில் காப்போன் அவரை மதித்து வரவேற்று, உள்ளே அனுப்பினான். ஆனால், மந்திரிகள் அவரைப் பார்த்ததும், அவரது அஷ்டகோணலை எள்ளி நகையாடிச் சிரித்தார்கள்.

ராஜசபைக்கு மன்னர் ஜனகர் வந்ததும், அஷ்டவக்கிரர் சொன்னார்... ''உன் அரண் மனையில் வாயில்காப்போன் மட்டும்தான் உண்மையான மனிதன். உன் மந்திரிகள் அனைவரும் தோல் வியாபாரிகள். காரணம், அவன்தான் என்னை மனிதனாகப் பார்த்து, உரிய மதிப்புக் கொடுத்து வரவேற்றான். இவர்களோ என் உடம்பைக் கண்டு, என்னைக் குறைவாக மதிப்பிட்டு, நகைக்கிறார்கள்!'

நாளை நமக்காக!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அஷ்டவக்கிரரின் பேச்சைக் கேட்டு, மந்திரிகள் வெட்கித் தலைகுனிந்தார்கள். ஜனகர் அவரது மெய்ஞ்ஞானத்தை உணர்ந்து, அவரின் சீடரானார்.

ஒருமுறை, கானகத்தில் உலவிக்கொண்டிருந்த கந்தர்வன் ஒருவன் அஷ்டவக்கிரரைப் பார்த்து, விழுந்து விழுந்து சிரித்தான். ''எட்டுக் கோணல்காரனே! தவளைபோல் தத்தித் தத்தி நடக்கிறாயே? ஒரே இடத்திலேயே விழுந்து கிடக்க வேண்டியதுதானே?' எனக் கேலி செய்தான்.

மகரிஷி கடும் கோபமடைந்தார். ''மூடனே, எட்டுக் கோணல் என் உடலில் ஏற்பட்டதற்கு நானா காரணம்? இயற்கையின் கோளாறு அது. அதனால் விளையும் சிரமங்களை நான் அனுபவித்துவிட்டுப் போகிறேன். உனக்கென்ன கேடு? என்னை ஒரே இடத்தில் விழுந்து கிடக்குமாறு சொல்ல நீ யார்? என்னை அப்படிச் சொன்ன நீ இனிமேல் ஒரே இடத்தில்தான் கிடப்பாய். என்னைக் கேலி செய்த உன் வாய், உன் வயிற்றுக்கு வரட்டும். உண்பதைத் தவிர, இனி அந்த வாய் கேலி பேசாதிருக்கட்டும்!' என்று சபித்தார் அவர்.

உடனே அவன் உடல் மாறியது. அவன் வாய், வயிற்றில் அமைந்தது. தன் தவற்றை உணர்ந்த அவன், ''எனக்குச் சாப விமோசனம் அருளுங்கள், சுவாமி!' எனக் கதறினான்.

''ராம லட்சுமணர்கள் சீதாதேவியைத் தேடி வரும்போது, அவர்கள் யார் என அறியாமல், நீ அவர்களுக்கு இடையூறு செய்வாய். அவர்கள் உன் கரங்களை வெட்டுவார்கள். அவர்களால் எரிக்கப்பட்ட பின், உன் பழைய உடல் உனக்குக் கிட்டும்' என்று சாப விமோசனம் அருளினார் அஷ்டவக்கிரர். அதுபோலவே பின்னர் ராம லட்சுமணர்களால் அவன் உடல் எரிக்கப்பட்டு, அவனுக்குப் பழைய உடல் கிட்டியது என்கிறது ராமாயணம்.

ஊனமுற்றவர்களைக் கேலி செய்பவர் களுக்குத் தண்டனை உண்டு என்பதே இந்த இதிகாசக் கதை சொல்லும் நீதி.

ஆனால், தமிழ்த் திரைப்படங்கள் பல, ஊனமுற்றவர்களை நகைப்புக்கு உரிய வர்களாகச் சித்திரிப்பதைப் பார்க்கிறோம். அப்படியான காட்சிகளைப் பார்க்கும்போது, நாம் நாகரிக உலகில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது.

நாளை நமக்காக!

வாய்பேச இயலாதவர்களின் சிக்கல்களை விளக்கி, ஜெயபாதுரியும் சஞ்சீவ்குமாரும் பேசாமலே நடித்து வியக்க வைத்த படம் 'கோசிஷ்’. 'கோசிஷ்’ என்பதற்கு 'முயற்சி’ என்று பொருள். சவால்களை எதிர்கொள்ள வாழ்நாள் முழுவதும் அவர்கள் எடுக்கவேண்டியிருந்த கடின முயற்சிகளை, நெஞ்சை உருக்கும் வகையில் விளக்கியது அந்தப் படம். அதே படம்தான் பின்னாளில் கமலஹாசன், சுஜாதா நடிப்பில் 'உயர்ந்தவர்கள்’ என்ற தலைப்பில் தமிழில் வெளியானது. ஜோதிகா நடித்த 'மொழி’ படம்கூட வாய்பேசாதவர்களது சிரமங்களைச் சித்திரிப்பதுதான். இத்தகைய படங்கள் அபூர்வமானவை; போற்றப்படவேண்டியவை.

ஆனால், நகைச்சுவைக் காட்சிகள் என்று வந்துவிட்டால், பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களுக்குக் கொண்டாட்டம்தான். திக்குவாய், கூன்முதுகு, வாய் பேச இயலாமை, காது கேளாமை, பார்வைக் கோளாறு என எந்த ஊனத்தையும் நகைச்சுவையாக்க அவை தயங்குவதே இல்லை. அத்தகைய படங்களை, ஊனமுற்ற நம் நண்பர்களோடு சென்று பார்க்க நேரும்போது, திரையரங்கில் நாம் அடையும் தர்மசங்கடத்துக்கும் வெட்கத்துக்கும் வேதனைக்கும் அளவேயில்லை.  

இப்போது, ஊனமுற்றவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று கௌரவமாக அழைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஊனமுற்றவர்கள் வேறொரு மாற்றுப் புலனில் அபாரமான திறன் பெற்றவர்களாக இருப்பதை நாம் காணலாம். உதாரணமாக, பார்வையற்றவர்களின் செவிப் புலன், நமது செவிப்புலனைவிடப் பல மடங்கு கூடுதல் திறன் பெற்றிருக்கும். நடந்து வரும் ஒலியில் உள்ள வேறுபாட்டைக் கொண்டே யார் வருகிறார்கள் என்று அவர்கள் துல்லிய மாகக் கண்டுபிடித்துவிடுவார்கள்.

சிவானந்தர் காலத்தில் வாழ்ந்த பார்வை யற்றவர் ஒருவர், அபாரமான தொடு உணர்ச்சி பெற்றிருந்தார். விரல்களால் ஒரு துணியைத் தொட்டுத் தடவிப் பார்த்தே, அந்தத் துணி என்ன நிறம் என்று சொல்லிவிடுவாராம். இந்தத் தகவல், சிவானந்தர் எழுதிய 'வாழ்விலும் ஆத்மானுபூதியிலும் வெற்றிக்கு வழி’ என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. கண்ணில்லாத ஒருவருக்கு விரலின் நகக்கண்ணே கண்ணாகி விட்ட அற்புதம் அது!

இடைக்காலத்தில் இளஞ்சூரியர், முதுசூரியர் என இரண்டு புலவர்கள் இருந்தார்கள். இரட்டைப் புலவர்கள் அவர்கள். ஒருவர், வெண்பாவின் முதல் இரு அடிகளைச் சொன்னால், மற்றவர் அதன் கடைசி இரண்டு அடிகளைச் சொல்லிப் பூர்த்தி செய்வார். இந்த இருவரில் ஒருவர் கால் இல்லாதவர். மற்றவர், கண் இல்லாதவர். கால் இல்லாதவர், கண் இல்லாதவரின் தோளில் ஏறிக்கொண்டு வழிசொல்ல, அவர் சொன்ன வழியில் கண் இல்லாதவர் நடப்பார்.

இப்படியாக இவர்கள் ஒருமுறை வந்து சேர்ந்த இடம், மதுரை தெப்பக்குளம். கால் இல்லாதவரைப் படித்துறையில் இறக்கிவிட்டு, கண் இல்லாதவர் வேட்டியைத் துவைத்தார். வேட்டி கை நழுவி நீரில் மிதந்து சென்றுவிட்டது.

இதைப் பார்த்தவாறே அமர்ந்திருந்த கால் இல்லாதவர், 'தண்ணீரில் மறுபடி மறுபடி அடித்துத் துவைத்தால், அந்தத் துணிக்கு உன்மேல் கோபம் வராதா? அதுதான் அது உன் கையை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டது!’ என்று வெண்பாவின் முதல் இரு அடிகளில் தகவலைச் சொன்னார்.

அதற்குக் கண் இல்லாதவர், 'நாம் உடுத்தும் இந்தக் கலிங்கம் (கலிங்கம் என்ற சொல்லுக்கு உடை என்று பொருள்.) போனால் என்ன? நமக்கு நிரந்தரத் துணையாக மதுரைக் கோயிலில் சொக்-கலிங்கம் உண்டு!’ என்று வெண்பாவின் கடைசி இரண்டு அடிகளைப் பூர்த்தி செய்தார்.

அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நீரதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ? எப்படியும்
இக்கலிங்கம் போனால் என் ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை!

இரட்டைப் புலவர்களின் வெண்பாக்கள் இடைக்காலத் தமிழிலக் கியத்தை அணிசெய்யும் அபாரமான கவிதைகள்.

பார்வையற்ற அற்புதமான ஒரு தமிழ்க் கவிஞர், இடைக்காலத்தில் வாழ்ந்திருக்கிறார். அந்தகக் கவி வீரராகவ முதலியார் என்று பெயர். அதேபோல், ஊனக்கண் இல்லாவிட்டாலும் ஞானக்கண் கொண்டு கண்ணனைத் தரிசித்து, வடஇந்தியக் கவிஞர் சூர்தாஸ் பாடிய பாடல்கள், நம் இந்திய பக்தி இலக்கியத்தின் பெரும் செல்வம்.

குமரகுருபரர் பிறந்து பல வருடங்கள் வரை, பேச்சு வராமல் இருந்தார். அவரின் தாய் தந்தையர், திருச்செந்தூர் முருகன் கோயிலில் விரதமிருந்து வேண்டிய பிறகுதான், அவருக்குப் பேச்சு வந்தது. அதன்பின் அவர் பொழிந்ததெல்லாம் கவிமழைதான்.

நாளை நமக்காக!

வாய்பேசாத மூகன், ஆதிசங்கரரின் முன் மட்டும் வாய்திறந்து பேசினான். மீண்டும் வீட்டுக்கு அழைத்துப் போனால், அவனுக்குப் பேச்சு வரவில்லை. சங்கரர் முன் பேசும் குழந்தை சங்கரரிடமே இருக்கட்டும் என்று அவனைச் சங்கரரின் சீடராகவே ஒப்புக்கொடுத்துவிட்டார்கள் பெற்றோர். அந்த மூகன் பின்னாளில் பெரிய கவிஞராக ஆனார். அவர் எழுதியதுதான் 'மூக பஞ்சசதி’ என்ற ஸ்லோகத் தொகுப்பு.

பார்வையற்ற, வாய்பேசாத, காதுகேளாத ஹெலன்கெல்லர் என்ற அற்புதச் சாதனையாளர் பற்றி நாம் அறிவோம். ஒரு கால் இல்லாவிட்டாலும், வாழ்வில் சொந்தக் காலில் நிற்கும் நடிகை 'மயூரி’ சுதாசந்திரன் நம்மிடையே இப்போது வாழும் வரலாறு.

ஊனமுற்றோரின் சிரமங்களைப் பற்றி ஊனமில்லாதோர் முழுமை யாக உணர்வது என்பது சாத்தியமே இல்லை. விளக்கின் சுடரைத் தொட்டவர்க்கே அதன் சூடு தெரியும். ஊனமுற்றோர்தான் மற்ற ஊனமுற்றோரது சிரமங்களைச் சரிவர உணர இயலும்.

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் கால் ஊனமுற்றவருமான ஹெச்.ராமகிருஷ்ணன் ஒருமுறை சொன்னார்... ''ஒருவகையில், நான் என் தாயைவிட என் மனைவியைக் கூடுதலாக மதிக்கிறேன். அதற்கான காரணத்தைச் சொன்னதும், என் தாயும் ஒப்புக்கொண்டார். காரணம் இதுதான். என் தாய்க்கு சாய்ஸ் கிடையாது. வேறு வழியில்லை. நான் மகனாகப் பிறந்துவிட்டேன். என்னை வளர்த்தாக வேண்டியது அவள் கடமை. ஆனால், என் மனைவியின் நிலை அப்படியல்ல. அவளுக்குச் சாய்ஸ் இருந்தும், என்னை விரும்பி மணந்தாளே?''

திருமணம் உள்ளிட்ட பல மங்கலங்கள் பலருக்கு இயல்பாக இருக்கின்றன. ஆனால், ஊனமுற்றோருக்கு அப்படியல்ல; அவர்களுக்கு வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் ஒரு சவால்தான். அதிக சிரமங்கள் இல்லாதிருந்தும் முன்னேறத் தயங்குகிற சராசரி மனிதர்கள் எங்கே? ஊனத்தைப் புறந்தள்ளி, கடின உழைப்பால் மாபெரும் சாதனைகள் புரியும் ஊனமுற்றோர் எங்கே?

அந்தச் சாதனையை மதிக்கத் தெரியாவிட்டாலும் போகிறது; அவர்களின் உடல் ஊனத்தைத் திரைப்படங்களிலும், பிற ஊடகங்களிலும் கேலி செய்யாதிருக்கும் பண்பாட்டையாவது நாம் பெற முயலவேண்டும்.

பிறரின் உடல் ஊனத்தைக் கேலி செய்பவர்கள், மன ஊனம் கொண்டவர்கள் என்பதல்லாமல் வேறென்ன?

(சிறகு விரிப்போம்)