சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ஆஹா ஆன்மிகம்!

எழுமின்... விழிமின்..!

ஆஹா ஆன்மிகம்!

டவுளைத் தேடுவதும், அதன் மூலமாக தன்னையே அறிவதும்தான் ஆன்மிகத்தின் அடிப்படை நோக்கம். ஆலயம், வழிபாடு, பூஜைகள், வேண்டுதல் எல்லாமே கடவுள் தேடலுக்கான பால பாடங்கள். இந்தத் தேடல் எந்த தேசத்து இளைஞர்களிடம் இருக்கிறதோ, அந்த நாடு மிகச் சிறப்பான நாடாக வளரும். அந்த நாட்டில் அமைதி நிலவும்; வன்முறை அகலும்; வறுமை ஒழியும்; செல்வம் பெருகும்!

'இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்!’ என்பர் பெரியோர். 'என்னிடம் நூறு இளைஞர்களைக் கொடுங்கள்; இந்த இந்தியாவை இன்னும் செழிப்பான தேசமாக மாற்றிக் காட்டுகிறேன்’ என்றார் சுவாமி விவேகானந்தர். இளைஞர்களின் சக்தி அத்தகையது!

ஆன்மிகம் என்பது முதியவர்களுக்கானதா? இளைஞர்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் இல்லையா? இன்றைய இளைஞர்களில் எத்தனை பேர் ஆன்மிகவாதிகளா இருக்கிறார்கள், எத்தனை பேர் பக்தி சிரத்தையாக இருக்கிறார்கள், கோயி லுக்குப் போகிற வழக்கமெல்லாம் உண்டா என்று அறிய, சென்னை லயோலா கல்லூரி, விவேகானந்தர் கல்லூரி மற்றும் நியூ கல்லூரி மாணவர்கள் சிலரைச் சந்தித்தோம்.

சந்தித்த இடம்... சென்னையின் புகழ்பெற்ற ஸ்பென்ஸர் பிளாஸா. சந்தித்தது ஷாப்பிங் மால் என்றாலும், அங்கே பேசியவை அனைத்தும் பக்தியும் ஆன்மிகமும்தான்!  

அங்கே இருந்த கடை ஒன்றில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்து கீதோபதேசம் செய்யும் ஓவியம் ஒன்று காணப்பட்டது. 'இது என்ன தெரியுமா?’ என்று கேட்டதும், ''என்னங்க... எல்.கே.ஜி. குழந்தைகிட்ட கேட்டாக் கூட சொல்லிடுமே! மகாபாரதத்தில் பகவத்கீதை ஒரு முக்கியமான போர்ஷன். ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்த காட்சியைத்தான் ஓவியமா வரைஞ்சிருக்காங்க'' என்றார் லயோலா கல்லூரி மாணவர் கைலாஷ். விஸ்காம் முதல் வருடம் படிக்கிறார்.

ஆஹா ஆன்மிகம்!

''எனக்குச் சொந்த ஊர் சிவகாசி. இப்போ படிக்கிறதுக்காக சென்னைக்கு வந்து, ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சிட்டிருக்கேன். நான் மிஸ் பண்ற விஷயங்கள்னா அப்பா, அம்மா, எங்க தெரு நண்பர்கள், என் பள்ளித் தோழர்கள்... முக்கியமா பத்ரகாளி அம்மன்.

சின்னதா ஒரு துக்கம், கவலைன்னாலும், எங்க ஊர்ல இருக்கிற பத்ரகாளியம்மன் கோயிலுக்கு ஓடிருவேன். என்னவோ தெரியலை... அங்கே போயிட்டு வந்ததுமே, என் கவலை மொத்தமும் காணாமப் போயிருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்த தெய்வம் பத்ரகாளியம்மன். இப்பக்கூட, மனசுல எதுனா குழப்பமோ பயமோ வந்துச்சுன்னா, 'அம்மா பத்ரகாளி... ஊரை விட்டுத் தனியா இங்கே வந்து உக்காந் திருக்கேன். நீதான் எனக்குப் பக்கபலமா இருக்கணும்’னு வேண்டிக்குவேன். சிவகாசி போனீங்கன்னா, அவசியம் பத்ரகாளியம்மனை மறக்காம தரிசனம் பண்ணிட்டு வாங்க. நல்லது நடக்கும்!'' என்று அருள்வாக்கு சொல்பவர்போலத் தெரிவித்தார் கைலாஷ்.

''அட... நீங்க சிவகாசியா? எங்க மாவட்டக்காரரு தான் நீங்க. எனக்கு விருதுநகர் சொந்த ஊரு!'' என்று பளீர் சிரிப்பும், உற்சாகமுமாகப் பேச வந்தார் சரவணன். விவேகானந்தர் கல்லூரியில், பி.காம் முதல் வருடம் படிக்கிறார்.

ஆஹா ஆன்மிகம்!

''எனக்கு எங்க அம்மாவை ரொம்பப் பிடிக்கும். அதனாலேயே அவங்க செவ்வாய், வெள்ளிகள்ல தவறாம கும்பிடுற ஸ்ரீகாமாட்சி அம்மனையும் எனக்குப் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு. 'கண்ணு சரவணா... ஊர் விட்டு ஊர் போய்ப் படிக்கப் போறே. நீ தங்கிருக்கிற ரூம்ல இதை எப்பவும் வைச்சு, கும்பிடுப்பா! உனக்கு எப்பவும் அவ துணை இருப்பா’னு சொல்லி, அம்மன் படத்தைக் கொடுத்தாங்க. தினமும் ஒரு பத்து நிமிஷமாவது அம்மனுக்கு முன்னாடி நின்னு வேண்டிக்கிட்டுதான் காலேஜ் போறேன்'' என்று சொல்லும் சரவணனுக்கு, சுவாமி விவேகானந்தர் மீது மிகுந்த பற்று உண்டாம்.

''சுவாமி விவேகானந்தரோட 'எழுமின், விழிமின், உழைமின்’கிற உபதேசம் ஒண்ணே போதுமே! அதை உறுதியா கடைப்பிடிச்சு வாழ்ந்தாலே நிம்மதியான, நிறைவான வாழ்க்கை வாழலாம். அவர்தான் எனக்கு ரோல் மாடல்!'' என்கிறார் சரவணன்.

லயோலா கல்லூரியில், சவுண்ட் இன்ஜினீயரிங், இரண்டாம் ஆண்டு படிக்கிறார் குமரன். ''பாடி லூகாஸ்கிட்டதான் எங்க வீடு. அங்கே இருக்கிற திருவலிதாயம் சிவன் கோயிலுக்குப் போயிருக்கீங்களா? ஒரேயொரு தடவையாவது வந்து தரிசனம் பண்ணுங்க. அவ்ளோ பிரமா தமான கோயில் அது! எங்க அம்மா- அப்பா ரெண்டு பேருக்குமே ரொம்பப் பிடிச்ச கோயில், இதுதான்! பிரமாண்டமான பிராகாரமும் குரு பகவான் சந்நிதியுமா கோயிலைப் பார்க்கும்போதே, மலைப்பா இருக்கும். இந்த மலைப்பும் வியப்பும் எத்தனை முறை கோயிலுக்குப் போனாலும் எனக்கு ஏற்படுதுங்கறதுதான் ஆச்சரியம்!'' என்ற குமரன்,

''நண்பர்களே! ஒரு ஞாயிற்றுக்கிழமை, லீவு நாள்ல சொல்லுங்க. திருவலிதாயம் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போறேன். அன்னிக்கி எங்க அம்மா கையாலதான் எல்லாருக்கும் மதிய உணவு!'' என்று சொல்ல... எல்லோர் முகத்திலும் மலர்ச்சி!

''எனக்குச் சொந்த ஊரு நாமக்கல். நீங்க யூகிக்கிறது கரெக்ட்! என் இஷ்ட தெய்வம், நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர்தான். ஓங்கி உயர்ந்து நிக்கிற அவரோட சந்நிதிக்கு முன்னால வெறும் தூசு மாதிரி நின்னு, தரிசனம் பண்ணிட்டு வரும்போது, 'ஆஞ்சநேயர் இருக்க, பயம் எதுக்கு?’ன்னு மனசுக்குள்ள ஒரு தைரியமும் பலமும் வரும் பாருங்க... அடடா! அற்புதம்!'' என்கிற ஈஸ்வர், லயோலா கல்லூரியில், விஸ்காம் முதல் வருடத்து மாணவர்.

''எனக்கு தஞ்சாவூர். அங்கே பெரியகோயிலுக்கு எத்தனை முறை போயிருப்பேன்கிறதுக்கு என்கிட்ட கணக்கு இல்லை. ஆனா, ஒவ்வொரு முறை போகும்போதும், அந்த பிரகதீஸ்வரரும் அவரோட 216 அடி விமானமும் பார்க்கவே பிரமாண்டமா இருக்கும். அடேங்கப்பா... நுணுக்கி நுணுக்கி எத்தனை நுட்பமான வேலைகள் பண்ணியிருக்காங்க தெரியுமா?'' என்கிறார் லயோலா கல்லூரி மாணவர் சண்முக பாண்டியன்.

ஆஹா ஆன்மிகம்!

''ஆமாம் நண்பா... இதுமாதிரி தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம்னு ஏகப்பட்ட கோயில்கள் இருக்கு. அவற்றைப் பார்க்கறதுக்கு இந்த ஒரு ஜென்மம் போதாதுன்னு எங்க அப்பா சொல்லுவார். ஒரு டூர் புரொகிராம் மாதிரி போட்டுக்கிட்டு, அந்தப் பக்கத்துல நிறைய கோயில்களுக்குப் போயிட்டு வரணும்'' என்று சொல்லும் லயோலா மாணவர் டெர்ரி, லயோலாவில் விஸ்காம் படிக்க சீட் கிடைக்க வேண்டும் என்று மனதாரப் பிரார்த்தனை செய்து, அந்த வேண்டுதல் நிறைவேறியது என மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகத் தெரிவித்தார்.

இந்த கல்லூரி மாணவர்களிடம் பேசியதில், ஆன்மிகமும் பக்தியும் முதியவர்களிடம் மட்டு மல்ல; இளைஞர்களிடமும் தழைத்துள்ளது என்பது புரிந்தது. இன்னும் தொடர்ந்து... கல்லூரிதோறும் சென்று இளையோர் ஆன்மிகத்தில் சங்கமிப்போம்!

- இ.லோகேஸ்வரி, படங்கள்: ப.ஓவியா