Published:Updated:

மேலே...உயரே...உச்சியிலே... - 13

சல்லடையை தண்ணீரால் நிரப்புங்கள்! வெ.இறையன்பு, ஓவியம்: அனந்த பத்மநாபன்

மேலே...உயரே...உச்சியிலே... - 13

சல்லடையை தண்ணீரால் நிரப்புங்கள்! வெ.இறையன்பு, ஓவியம்: அனந்த பத்மநாபன்

Published:Updated:

 வேகமாகச் செல்பவர்கள் விரைவில் இலக்கை அடைவார்கள் என்று நினைக்கிறோம். அது எப்போதும் உண்மையாவது இல்லை. முதலில் நாம் சரியான இலக்கில்தான் செல்கிறோமா என்பது முக்கியம். தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து எவ்வளவு விரைவாகச் சென்றாலும், நம்மால் இலக்கை அடைய முடியாது.  

குறுக்கு வழிகள் எளிதில் வெற்றி பெற வைத்துவிடும் என்பதும் தவறு. சில நேரங்களில் குறுக்கு வழிகளில் செல்லும்போது, பாதையில் இருக்கும் மேடு பள்ளங்களில் வாகனங்கள் ஏறி இறங்கி, பழுதுபட்டு, பயணமே தடைப்பட்டுவிடலாம். எனவே, எப்போதும் ஒரே கருத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு வாழ முடியாது. சூழலுக்கு ஏற்ப உத்திகளும் மாறவேண்டும்.

ரஷ்யாவுடன் நெப்போலியன் போர்புரிந்தபோது, அவர்கள் பயன்படுத்திய பின்வாங்கும் உத்தியே நெப்போலியனை பலவீனம் அடையச் செய்தது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேகமாகச் செல்வதால் மட்டும் விரைவாக  இலக்கை அடைய முடியாது என்பதற்குச் சரித்திரச் சம்பவம் ஒன்றே சாட்சி!

சௌ யங் என்கிற மிங் நாட்டு ஓவியர் 17-ம் நூற்றாண்டில் சீனத்தில் பிரபலமாக இருந்தார். குளிர்கால மாலை நேரம் ஒன்றில், நகரத்தை நோக்கிய பயணம் மேற்கொண்டார். முக்கியமான புத்தகங்களை எடுத்துவர, ஒரு சிறுவனையும் கூடவே அழைத்துச் சென்றார். ஒரு நதியைக் கடந்து அடுத்த பகுதிக்குச் சென்று, பிறகு நகரத்தை நோக்கி நடக்க வேண்டும்.

படகில் செல்லும்போது, ''நகரத்தின் வாயில்கள் மூடப்படுவதற்கு முன் அதை அடையமுடியுமா?'' என்று படகோட்டியிடம் கேட்டார்.

மேலே...உயரே...உச்சியிலே... - 13

''கோட்டைக் கதவுகள் மூடும் முன் செல்ல வேண்டு மென்றால், நீங்கள் வேகமாகச் செல்லக்கூடாது. நிதானமாகத் தான் செல்ல வேண்டும்' என்று மட்டும் சொன்னான் அவன். ஓவியருக்கு அதன் உட்பொருள் விளங்கவில்லை.  

அடுத்த கரையில் இறங்கி நடக்கும்போது, சூரியன் மறையத் தொடங்கினான். வழியில் கொள்ளைக்காரர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, சௌ யங்கும் அந்தச் சிறுவனும் வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள்.  பிறகு ஓடத் தொடங்கினார்கள். மேடு பள்ளமான நிலப்பரப்பில் ஓடுகையில், அவர்கள் தடுக்கி விழுந்தார்கள். அவர்களின் கைகளில் இருந்த புத்தகங்களையும் தாள்களையும் பிணைத்திருந்த கயிறு அறுந்து, நாலா பக்கங்களிலும் அவை சிதறின. இருட்டில் அவற்றைத் தேடி எடுப்பதற்குள் நேரமாகிவிட்டது.  கோட்டைக் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. அப்போதுதான் ஓடக்காரன் சொன்னதன் பொருள் அவர்களுக்குப் புரிந்தது.  எல்லா நேரங்களிலும் வேகம் வெற்றியைத் தருவதில்லை.  விடை தெரியாவிட்டாலும் சாமர்த்தியம் இருந்தால் சுதாரித்துக் கொள்ளலாம் என்பதற்கு, பீர்பாலின் வாழ்க்கை இன்னொரு சான்று.

அக்பருக்கு பீர்பாலிடம் ஏதோ கோபம். அதற்கான விசித்திர தண்டனையாக பீர்பாலிடம் அவர் சற்றுக் கோபமாக, ''நம் நாட்டில் எத்தனை காகங்கள் இருக்கின்றன என்று நாளை மாலைக்குள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்'' என்று கட்டளையிட்டார். பீர்பால் சிறிதும் கலங்கவில்லை.  

மறுநாள் அரசவை கூடியது. ''பத்து லட்சத்து இருபத்தையாயிரத்து முந்நூற்று ஐம்பது காகங்கள் உள்ளன'' என்று பதில் சொன்னார் பீர்பால். உடனே அக்பர், ''இதைவிட அதிகமாக இருந்தால் என்ன செய்வது?'' என்று கேட்டார்.

''வேற்று நாட்டு காகங்கள் விருந்தாளியாக இங்கே வந்திருக்க வேண்டும்'' என்றார் பீர்பால்.  

''ஒருவேளை... குறைவாக இருந்தால்..?''

''நம் நாட்டுக் காகங்கள் வேற்று நாட்டுக்குப் போயிருக்கும்'' என்றார் பீர்பால் அலட்டிக் கொள்ளாமல்.

பீர்பாலின் சாமர்த்தியத்தைக் கண்டு அக்பர் சிரித்துவிட்டார். மாற்றி யோசிப்பவர் என்பதால்தான் இன்று பீர்பால் மேலாண்மை வகுப்புகளில் மேற்கோள் காட்டப்படுகிறார்.

ஒரு மன்னருக்கு நான்கு மந்திரிகள் இருந்தார்கள். மன்னர் விதிக்க முற்பட்ட புது வரி ஒன்றை  எதிர்த்ததால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். அவர்கள் நால்வரும் தெருவழியே போகும்போது, ஓர் ஒட்டகத்தின் காலடிச்சுவடுகளைப் பார்த்தார்கள். அதைப் பற்றித் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அந்த ஒட்டகத்தைப் பறிகொடுத்த சொந்தக்காரன் வந்தான்.  

மேலே...உயரே...உச்சியிலே... - 13

ஒரு மந்திரி அவனிடம், ''உன் ஒட்டகத்துக்கு ஒரு கால் ஊனமா?' என்று கேட்க, அவன் ''ஆமாம்'' என்றான். உடனே இன்னொரு மந்திரி, ''வால் குட்டையாக இருக்குமா?' என்று கேட்டார். அவன் அதற்கும் ''ஆமாம்'' என்றான். மூன்றாமவர், ''ஒட்டகத்துக்கு வயிற்றுவலியா?'' என்று கேட்டார். உடனே அவன் வியந்து, ''ஆமாம்... வயிற்றுவலி உண்டு!'' என்றான். நான்காமவர், ''உன் ஒட்டகத்துக்கு வலது கண்ணில் பார்வை கிடையாதோ?'' என்று கேட்க, அவன் அதற்கும் ''ஆமாம்'' என்றான்.

பிறகு, ''சொல்லுங்கள்... என் ஒட்டகம் எங்கே? பார்த்தீர்களா எங்கேனும்?'' என்று கேட்டான். உடனே அவர்கள் நால்வரும், ''இல்லை. நாங்கள் உன் ஒட்டகத்தைப் பார்க்கவே இல்லை'' என்றார்கள்.

அவன், நேரே மன்னரிடம் சென்று, அவர்கள் தன் ஒட்டகத்தைத் திருடிவிட்டதாகப் புகார் சொன்னான். மன்னர் நால்வரையும் அரசவைக்கு வரவழைத்து, விசாரித்தார். அவர்கள் ஒட்டகத்தைத் தாங்கள் பார்க்கவே இல்லை என்று வாதிட்டார்கள். ''நீங்கள் திருடவில்லையெனில், அந்த ஒட்டகத்தைப் பற்றிய விவரங்கள்  எப்படித் தெரியும் உங்களுக்கு?'' என்று கேட்டார் மன்னர்.

''தரையில் அதன் மூன்று பாதங்களின் அடிச்சுவடுகள் மட்டுமே இருந்தன. எனவே, ஒரு கால்  முடம் என அறிந்தோம். இடது பக்க மரங்களின் இலைகள் மட்டுமே தின்னப் பட்டிருந்ததால், ஒட்டகத்தின் வலது கண்ணில் பார்வைக் கோளாறு எனத் தெரிந்துகொண்டோம். பாதையில் ரத்தத் துளிகள் இருந்தன. ஒட்டகத்தைக் கொசுக்கள் கடித்திருக்க வேண்டும். வால் குட்டையாக இருந்ததால், வாலைக் கொண்டு கொசுக்களை விரட்ட முடியவில்லை. அதேபோல், முன்னிரு அடிகள் தரையில் ஆழமாகப் பதிந்த அளவுக்குப் பின்னிரு அடிகள் படியவில்லை. எனவே, வயிற்றில் வலி இருந்திருக்க வேண்டும் எனக் கண்டுகொண்டோம்'' என்று விவரித்தார்கள்.

அவர்களின் புத்திக்கூர்மையைக் கண்டு, மன்னர் அவர்களை மீண்டும் அரசுப் பணியில் சேர்த்துக் கொண்டார்.

தவறு இழைக்காமல் இருக்க அடுத்தவர்களை எச்சரிப்பது ஒருவித விழிப்பு உணர்வு.  

ஜென் கதை ஒன்றைப் பார்ப்போம்.

ஜென் மாஸ்டர் ஒருவர், அழகான ஒரு பூந்தொட்டியைச்  சீடனிடம் கொடுத்து, அதைப் பத்திரமாக எடுத்துச் செல்லும்படி கூறினார். ''இது மிகவும் விலை உயர்ந்தது. நிறைய வேலைப்பாடுகள் கொண்டது. கீழே போட்டுவிடாதே! அப்படிச் செய்தால், கடும் தண்டனை உண்டு. பத்திரமாக எடுத்துச் செல்'' என்றார்.

உடனே, சீடனும் சரி என்று தலையாட்டினான். உடனே மாஸ்டர், நறுக்கென்று அவன் தலையில் குட்டினார். வலியில் துடித்துப் போனான். ''நான் உடைக்கவே இல்லையே! பிறகு ஏன் குட்டினீர்கள்?'' என்று பரிதாபமாகக் கேட்டான். அதற்கு அவர், ''நீ உடைத்த பிறகு குட்டி என்ன பிரயோஜனம்?' என்றார்.

அந்தச் சீடன், குட்டு வாங்கியதையும் வலியையும் நினைத்துக் கொண்டே, பத்திரமாகப் பூந்தொட்டியை எடுத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்தான்.  

ஜென் கதைகள் எப்போதும் வித்தியாசமான சிந்தனைகளை மையமாகக் கொண்டவை. அவற்றுக்கான கேள்விகள், நமது மாற்றி யோசிக்கும் திறனைச் சோதிப்பவை. அவற்றுக்கான விடைகள் அறிவைத் தாண்டிச் சிந்திக்கும்போதுதான் கிடைக்கும்.  

இளைஞர்கள் சிலர், தியானத்தில் சிறந்து விளங்கும் ஞானி ஒருவரைச் சந்திக்க வந்தார்கள். அன்றாட வாழ்க்கையின் எதிர் விளைவுகளில் இருந்து விடுதலை அடைவது எப்படி என்று  அவரிடம் கேட்டார்கள். தியானம் செய்வதன் மூலம் எப்படி நம் உணர்வுகளை நெறிப்படுத்தலாம் என்பது பற்றி விளக்கினார் அவர்.

முத்தாய்ப்பாக, ''நீங்கள் இந்த உணர்தலை தியானத்தின்போது மட்டும் அடையாமல், வாழ்க்கையின் மற்ற கணங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த ஒட்டுமொத்த பயிற்சியே சல்லடையை நீரால் நிரப்புவது போலத்தான்'' என்று அறிவுறுத்தினார். கூடவே, அவர்களிடம் ஒரு சல்லடையையும் கோப்பையையும் தந்து, அருகில் உள்ள கடலுக்குச் சென்று, சல்லடையில் நீர் நிரப்பும்படி குறிப்பிட்டார். அனைவரும் விடைபெற்றுக் கிளம்பினார்கள். ந்ஷ்ஷ்

ஒருவன் எரிச்சலுடன், ''இது போகாத ஊருக்கு வழியைச் சொல்வது போல! சல்லடையை யாராவது நீரால் நிரப்ப முடியுமா?

நான் ஒரு உபன்யாசத்துக்குச் சென்றாலோ, வழிபட்டாலோ, புனித புத்தகங்களை வாசித்தாலோ, ஏழைக் குழந்தைகளுக்கு உதவினாலோ மேன்மையடைகிறேன். என் குண நலன் கொஞ்சம் முன்னேறுகிறது. அதுதான் சரியான வழி! அதை விட்டுவிட்டு, சல்லடையை நீரால் நிரப்பச் சொல்கிறார். என்ன பைத்தியக்காரத்தனம் இது?'என்று கொந்தளித்தான்.

அந்த இளைஞர்கள் அனைவரும் அமர்ந்து, 'சல்லடையை எப்படி நீரால் நிரப்புவது?’ என்று யோசித்தார்கள். உபதேச நூல்களைப் படித்து, அதிலிருந்து இதற்கு ஏதேனும் வழியைக் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்த்தார்கள். ஒன்றும் புலப்பட வில்லை. அவர்களில் ஒருவன் மட்டும் மறுபடியும் ஞானியைச் சந்தித்து, இது குறித்து விளக்கம் பெற முடிவு செய்தான்.  

ஞானி அந்த இளைஞனிடம், ''சல்லடையை எப்படி நீரால் நிரப்புவாய்?'' என்று கேட்டார். ''அதுதானே விளங்கவில்லை. கோப்பையில் தண்ணீரை அள்ளி அள்ளி சல்லடைக்குள் ஊற்றினாலும், தங்காதே! கீழே போய்விடுமே?''

''ஆன்மிகப் பயிற்சியும் இப்படிப்பட்டதுதான்.  நான் என்கிற எண்ணத்துடன் பாறைமீது நின்றுகொண்டு, தெய்விக உணர்வைத் தேட முயன்றால், அது முடியாமல் போய்விடும். நாம் தெய்விகத்தில் இரண்டறக் கலக்க வேண்டும். அது சல்லடையைத் தண்ணீரால் நிரப்புவதுபோல! புரிகிறதா?' என்ற ஞானி, அந்தச் சல்லடையை அவனிடமிருந்து வாங்கிக் கடலுக்குள் எறிந்தார். அது கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீருக்குள் மூழ்கியது.

''இப்போது பார்... சல்லடை தண்ணீரால் நிறைந்திருக்கிறது.  அதேபோல், தெய்விகத்திடம் உன்னை முற்றிலுமாக ஒப்படைத்துவிட வேண்டும். முழுவதுமாக ஒப்படைப்பவர்களிடம் அந்தச் சக்தி இறங்கிவிடும்!

நாம் சல்லடையாக இருக்கலாம். ஆனால், வடிகட்டாமல் நம்மை ஒப்படைத்தால், அன்பால் நிறைந்து விடுவோம்!

  (இன்னும் மேலே...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism