Published:Updated:

மேலே... உயரே... உச்சியிலே... - 14

பந்தயத்தில் ஜெயிக்கலாம்! வெ.இறையன்பு, ஓவியம்: அனந்த பத்மநாபன்

மேலே... உயரே... உச்சியிலே... - 14

மாற்றி யோசிப்பவர்கள் தங்களுடைய பலத்தை மட்டுமே முழுதாக நம்புவதில்லை. எதிராளிகள் எப்படிச் சிந்திக்கிறார்கள் என்பதையும் யோசிக்கிறார்கள். 'எதிரி பலசாலி’ என்கிற எண்ணத்துடன் போட்டியில் ஈடுபடுபவர்களே முந்த முடிகிறது. எதிரி ஏதேனும் ஒன்றில் பலவீனமாக இருந்தால், அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்காதவர்களே போரில் வெற்றி பெறுகிறார்கள்.

பக்கவாட்டுச் சிந்தனையில் புகழ்பெற்ற புதிர் ஒன்று உண்டு. அண்ணன், தம்பி இருவரும் இரட்டையர்கள். ஆனால், அண்ணனுக்கு இரண்டு நாள் முன்பு பிறந்தநாள் கொண்டாடுகிறான் தம்பி. இது எப்படிச் சாத்தியம்?  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விடை எளிது. தாய் நிறை கர்ப்பிணியாகப் படகில் பயணம் செய்கிறாள். சர்வதேச நாள் எல்லையைக் கடப்பதற்கு முன்பு, அந்த நாட்டில் தேதி மார்ச் 1. அன்று, அண்ணன் பிறக்கிறான். எல்லையைக் கடந்த மறு நிமிடமே தம்பி பிறக்கிறான். அந்த நாட்டில் தேதி பிப்ரவரி 28. எனவே, தேதி கிரமப்படி தம்பி பிப்ரவரி 28 அன்றும், அண்ணன் மார்ச் 1-ம் தேதியும் பிறந்ததாகக் கணக்கு. லீப் வருடம் வருகிறபோது தம்பி, அண்ணனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பிறந்த நாள் கொண்டாடுவான்.

பொதுவாக, இரட்டைக் குழந்தைகளில் முதலாவதாகப் பிறக்கும் குழந்தையை அண்ணன் என்றும், அடுத்துப் பிறப்பதைத் தம்பி என்றும் நாம் குறிப்பிடுகிறோம். ஆனால், அறிவியல்ரீதியாகப் பார்த்தால், முதலில் கருவாகிற குழந்தை இரண்டாவதாகத்தான் ஜனிக்கும். எனவே, முதலில் தம்பியும், அடுத்து அண்ணனும் பிறக்கிறார்கள் என்பதே அறிவியலாளர்கள் சொல்லும் உண்மை. எனினும், உலகத்துக்கு அறிமுகமாகிற தேதியை வைத்தே நாம் அண்ணனா, தம்பியா என முடிவு செய்கிறோம்.

பந்தயத்தில் வெற்றிபெறுவதென்பது, அதைக் குறித்துப் பல கோணங்களில் சிந்திப்பதில் இருக்கிறது.  ஒருவருடைய ஆசை என்ன, விருப்பம் என்ன, எதில் அவா என்பதையெல்லாம் அறிந்துகொண்டு, அதற்கேற்ப நடந்துகொள்கிறவர்கள் பணியில் முன்னேறுகிறார்கள். இது சரியா, தவறா என்பது, வேறு பிரச்னை. மக்களுக்குக் கண்ணில் தெரிவதுதான் மகத்தான சாதனை என எண்ணப்படுகிற காலத்தில் நாம் வாழ்கிறோம். கடவுளுக்குக்கூடப் பிடித்தமானதை வைத்துப் படைக்கிறோம். பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை, கிருஷ்ணனுக்குச் சீடை, பாடிகாட் முனியப்பனுக்குச் சுருட்டு என்று நமக்குப் பிடித்ததை கடவுள் பெயரைச் சொல்லிப் படைத்து அனுபவிக்கிறோம்.  

ஒருவரை வெல்ல அல்லது கவர, அவர்களுக்கு என்ன பலவீனம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வேகமாக ஓடக்கூடிய புருஷாமிருகத்தை வெல்வதற்கு, அதன் பலவீனத்தை அறிந்துவைத்திருந்தான் பீமன். புருஷாமிருகம் மிகச்சிறந்த சிவ பக்தன். எங்கேயாவது சிவலிங்கத்தைப் பார்த்துவிட்டால், சிவ பூஜையை முடித்துவிட்டுத்தான் அது பயணத்தைத் தொடரும்.  

மகாபாரதத்தில் இந்த உத்தியை பீமன் எப்படிக் கையாண்டான் என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. தர்மர் ராஜசூய யாகம் செய்யத் தொடங்கினார். யாக சாலையைத் தூய்மை செய்வதற்காக, அவர் பீமனை அழைத்து, 'பீமா! நீ போய் புருஷாமிருகத்தை அழைத்து வா!' என உத்தரவிட்டார்.

புருஷாமிருகம் என்பது, அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு விலங்கு. புதுமனை புகுவிழாவின்போது பசுவையும், கன்றையும் புதுமனையில் உலாவரச் செய்வதைப்போல, யாக சாலையில் புருஷாமிருகத்தை உலா வரச்செய்வார்கள். அதை முன்னிட்டே தர்மர் அந்த மிருகத்தை அழைத்து வருமாறு பீமனிடம் சொன்னார். பீமனும் சென்று புருஷாமிருகத்தை அழைத்தான். அது வருவதற்கு ஒப்புக்கொண்டது.  என்றாலும், ஒரு நிபந்தனை விதித்தது.

மேலே... உயரே... உச்சியிலே... - 14

'பீமா! நான் உன் பின்னால் வருகிறேன். ஆனால், உனக்கும் எனக்கும் எப்போதும் நான்கு காத தூரம் இடைவெளி இருக்க வேண்டும். இந்த இடைவெளி குறைந்தால், நான் உன்னைப் பிடித்துக் கொன்று தின்றுவிடுவேன். இதற்கு நீ ஒப்புக்கொண்டால், உன்னுடன் வருகிறேன்' என்றது. பீமன் ஒப்புக்கொண்டான்.

புருஷாமிருகம், 'அப்படியென்றால் சரி, நீ முன்னால் ஓடு! நீ நான்கு காத தூரம் தாண்டியதும், நான் இங்கிருந்து புறப்படுவேன்' என்றது.

மிருகமாக இருந்தாலும், என்னவொரு நீதி, நியாயம்?!

ஓட்டம் துவங்கியது. வேக வேகமாக ஓடிய பீமனைப் பின்தொடர்ந்து ஓடிய புருஷாமிருகம், ஒரு கட்டத்தில் பீமனை நெருங்கிவிட்டது. உடனே பீமன், புருஷாமிருகத்தின் பார்வையில் படும்படியாக ஒரு சிவலிங்கத்தை வைத்துவிட்டு, மேலே ஓடினான். புருஷாமிருகம் சிவலிங்கத்தைப் பார்த்ததும், தனது வழக்கப்படி சிவபூஜையைச் செய்துவிட்டு, மீண்டும் ஓட்டத்தைத் தொடங்கியது.

அதற்குள் பீமன் வெகு தூரம் ஓடிவிட்டான். எனினும், சற்று நேரத்துக்குள்ளாகவே புருஷாமிருகம் பீமனை நெருங்கிவிட்டது. பீமன் மீண்டும் ஒரு சிவலிங்கத்தை வைத்துவிட்டு, ஓட்டமாய் ஓடினான். புருஷாமிருகமும் சிவ பூஜையை முடித்துவிட்டு, பிறகு ஓட்டத்தைத் தொடர்ந்தது.

இதே உத்தியைக் கையாண்டு வேக வேகமாக ஓடிய பீமன், தனது எல்லைக்குள் ஒரு காலை வைத்தான். அடுத்த கால், எல்லைக்கு வெளியே இருந்தது. புருஷாமிருகம், பீமனின் அந்தக் காலைப் பிடித்துக்கொண்டு, 'பீமா! உன்னைப் பிடித்துவிட்டேன். இனி நீ, எனக்கு உணவாக வேண்டிதுயதான்' என்றது.

பீமனோ அதை மறுத்தான். 'இல்லை, இல்லை! என் எல்லைக்குள் நான் காலை வைத்துவிட்டேன்' என்று வாதாடினான்.

மேலே... உயரே... உச்சியிலே... - 14

முடிவாக, 'தர்மரிடம் போய்ச் சொல்லலாம். தர்மம் தவறாத அவர் என்ன தீர்ப்பு சொல்கிறாரோ, அதன்படி செய்யலாம்’ என்று ஏகமனதாக முடிவானது.

பீமனும் புருஷாமிருகமும் தர்மரிடம் போய், நடந்ததைச் சொன்னார்கள். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த தர்மர், 'பீமா! உன்னுடைய ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லையில் இருக்கும்போது, அது உன்னைப் பிடித்துவிட்டதால், உன் உடலில் சரிபாதியை புருஷாமிருகத்திடம் கொடுத்து விடுவதுதான் நியாயம்!' என்று தீர்ப்பு வழங்கினார்.

சொந்தத் தம்பியாக இருந்தாலும், அவனுக்குச் சாதகமாக பாரபட்சமாகத் தீர்ப்பு வழங்காமல், தர்ம நெறிப்படி நடந்துகொண்ட தர்மரை அனைவரும் பாராட்டினார்கள். புருஷா மிருகமும் தர்மரைப் பாராட்டி விட்டு மறைந்தது.

தர்மரின் நடுநிலை தவறாத தன்மை, பீமனின் உயிரைக் காத்தது. தந்திரத்தோடு இயங்குவதற்கு பீமனும், தந்திரம் தோற்கும்போது நியாயமே வெல்லும் என்பதற்கு தர்மரும் உதாரணமாகிறார்கள்.

தெளிவான நோக்கம் இல்லாமல் இலக்கை மட்டும் நிர்ணயித்துக்கொள்பவர்கள், மூடர்களாகவே பயணம் செய் வார்கள் என்பதை விளக்க, கிழக்கத்திய நாடுகளில் நாட்டுப்புறக்கதை ஒன்று உண்டு.

கிராமத்தில் வசித்த முட்டாள் ஆசாமி ஒருவனுக்கு, எப்படியாவது பெரியதொரு நகரத்தைப் பார்க்க வேண்டும், அப்படியான மாநகரில் வசிக்க வேண்டும் என்று ஆசை. ஒருநாள், தைரியத்தைத் திரட்டிக்கொண்டு, குடும்பத்தினரை கிராமத்திலேயே விட்டுவிட்டுக் கிளம்பிவிட்டான்.

முதல்நாள், வழியில் ஒரு சத்திரத்தில் தங்கினான். நகரம் இருக்கும் திசையை நோக்கியவாறு தனது காலணிகளை வைத்துவிட்டுப் படுத்தான். அப்போதுதான் பாதை மறக்காமல் இருக்குமாம். இதை அறிந்த அந்தச் சத்திரத்தின் நிர்வாகி, அந்தக் கிராமத்தானிடம் ஒரு வேடிக்கை செய்ய நினைத்து, அவன் தூங்கும்போது காலணிகளை கிராமத்தை நோக்கியவாறு திருப்பி வைத்துவிட்டார்.  

மறுநாள், அவன் எழுந்தான். செருப்பின் முனை சுட்டிய திசையை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவன் வந்த இடம் அவனுடைய சொந்த ஊரைப்போலவே இருந்தது. இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும், அவன் வசித்த தெருவைப் போலவே தோன்றியது. அந்தத் தெருவில் அவனது குடும்பத்தைப் போலவே ஒரு குடும்பம் இருக்கிற வீடு தென்பட்டது. அதில் அவனது குடும்பத்து மனிதர்கள் மாதிரியே சிலர் வசிப்பதாக அவனுக்குத் தோன்றியது. தானும் அங்கேயே, அவர்களுடனேயே வாழ்வது என்று முடிவு செய்து, வாழ்நாள் முழுவதும் அங்கேயே கழித்தான்.

பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடுபவர்கள் செக்குமாடாகவே இருந்துவிடுகிறார்கள். இன்னும் சிலரோ, பயன்படாத சிலவற்றைக் கைகளில் தூக்கிக்கொண்டு அலைகிறார்கள். அவர்களது சிந்தனைகள் காலாவதியானவையாக இருக்கின்றன.  

இரண்டு பேர் நடைபயிலச் சென்றார்கள். ஒருவனிடம் குடை இருந்தது. அவர்கள் பாதி வழி சென்றதும், மழை பெய்யத் தொடங்கியது. குடை கொண்டு வராதவன், குடையுடன் இருந்தவனிடம், ''உன் குடையை விரியேன்!' என்றான்.

'இதனால் எந்தப் பயனும் இல்லை' என்றான் குடை வைத்திருந்தவன்.

'ஏன் அப்படிச் சொல்கிறாய்? நாம் நனையாமல் இந்தக் குடை காப்பாற்றாதா?'

'இந்தக் குடை முழுவதும் துளைகளாக இருக்கின்றன. சல்லடையைப்போல இருக்கிறது இது!'

'பிறகு, ஏன் இதைக் கொண்டு வந்தாய்?'

இந்தக் கேள்விக்கு, குடை வைத்திருந்தவன் சட்டென்று பதில் சொன்னான்... 'இன்றைக்கு இப்படி மழை பெய்யும் என்று எனக்கு ஜோசியமா தெரியும்?'

நாமும் இப்படித்தான், மழை பெய்யாது என்கிற தைரியத்தில் ஓட்டைச் சிந்தனைகளை தூக்கிக்கொண்டு அலைகிறோம்.

மழை- வெள்ளம் குறித்த எச்சரிக்கைக் கூட்டத்துக்கு வருகிறவர்களில் பலரும் வெள்ளம் வராது, புயல் வராது என்ற எண்ணத்திலேயே இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். வெள்ளம் வரும்போது கைகளைப் பிசைவார்கள். பணம் வருகிறபோதே சேமிக்க வேண்டும். அப்போதுதான் வளமாக வாழலாம். உடல் நன்றாக இருக்கும்போதே உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் நலமாக வாழலாம்.

(இன்னும் மேலே...)