Published:Updated:

மேலே... உயரே... உச்சியிலே... - 15

கிழக்கும் மேற்கும்வெ.இறையன்பு, ஓவியம்: அனந்த பத்மநாபன்

மேலே... உயரே... உச்சியிலே... - 15

கிழக்கும் மேற்கும்வெ.இறையன்பு, ஓவியம்: அனந்த பத்மநாபன்

Published:Updated:
மேலே... உயரே... உச்சியிலே... - 15

மாற்றி யோசிப்பது குறித்த மகாபாரதக் கதைகளைப் பார்த்தோம். அதில், பீமன் புருஷாமிருகத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி, வெல்ல முடிந்ததைக் கண்டோம்.

சில நேர்வுகளில் கிழக்கும் மேற்கும் ஒரே மாதிரி சிந்தித்திருக்கின்றன. ராமாயணத்துக்கும் இலியட்டுக்கும் பொதுப் பண்புகள் நிறைய உண்டு. சீதை, விருப்பத்துக்கு எதிராகக் கடத்தப்பட்டாள்; ஹெலன், அவளாக பாரிஸின் அழகில் மயங்கி ஓடிப்போனாள் என்பது மட்டுமே வித்தியாசம். இலியட்டில் வரும் அகிலஸின் குதிகால்கள் மட்டும் ஸ்டைக்ஸ் நதியில் படாததால், அது அவனது பலவீனமான பகுதியாக இருந்தது. அந்த ரகசியத்தை  அறிந்த பாரிஸ், அப்பல்லோ தேவனின் உதவியோடு அதை அம்பால் துளைத்து, மாபெரும் வீரனான அகிலஸைக் கொல்கிறான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேபோல் துரியோதனனின் வாழ்விலும் ஒரு சம்பவம் உண்டு. காந்தாரி தனது கண்கட்டை அவிழ்த்து, துரியோதனனுடைய உடலில் அவர் பார்வை படுகிற இடமெல்லாம் வச்சிரத்தைப் போல் உறுதியாகும், எந்த ஆயுதத்தாலும் துளைக்கப்படாது என்று வரம் அளிக்கப்படுகிறது. ஆனால், வெட்கத்தில் துரியோதனன் தனது தொடைப்பகுதியை மறைத்ததால், அங்கே காந்தாரியின் பார்வை படவில்லை. எனவே, அந்த இடம் மட்டும் பலவீனமானதாக ஆகி விடுகிறது (கர்ணபரம்பரையாகச் சொல்லப்படும் கதை).

'துரியோதனனின் பலவீனம் அவனது தொடைகள்தான். அங்கே அடித்தால் மட்டுமே அவனை வீழ்த்த முடியும்’ என்பதை மிகத் தெளிவாக ஸ்ரீகிருஷ்ணர் அறிந்திருந்தார். குளத்தில் ஒளிந்துகொண்டிருந்த துரியோதனனிடம் பீமன் சண்டைக்குப் போகும் போது, அவர்கள் இருவரும் சம பலத்தில் மோது கிறார்கள். கிருஷ்ணர் தனது தொடையைத் தட்டிக் காண்பித்து, துரியோதனனின் பலவீனத்தை சூசகமாக உணர்த்த, பீமனும் புரிந்துகொண்டு யுத்த சாஸ்திரத்துக்கு எதிராக துரியோதனனின் தொடையில் அடித்து அவனை வீழ்த்துகிறான்.  

கிருஷ்ணருடைய வாழ்க்கைச் சரிதத்தில், வசுதேவருக்குப் பிறக்கும் குழந்தைகள் தன்னு டைய முடிவுக்குக் காரணமாக இருக்கும் என்கிற உண்மையை அறிந்ததும், கம்சன் வசுதேவரைச் சிறையில் பூட்டி, பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் ஒவ்வொன்றாகக் கொல்கிறான். தப்பித்தது கிருஷ்ணர் மட்டுமே! அதன் பின்னாலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது.

தேவகியின் ஆறு குழந்தைகளையும் கம்சன் கொன்றான். ஏழாவதாக ஒரு குழந்தையை கருத்தரித்தாள். அந்தக் குழந்தையை, வசுதேவரின் மற்றொரு மனைவி ரோகிணியின் கருவில் கொண்டுபோய் வைத்தார் இறைவன். இப்படி ஒரு தாயின் கருப்பையில் கருவாகி, இன்னொரு தாயின் கருப்பையில் உருவாகிப் பிறந்தவன் பலராமன். அந்தக் காலத்திலேயே வாடகைத் தாய்மார்கள் பற்றி வியாசர் யோசித்திருக்கிறார்.  

மேலே... உயரே... உச்சியிலே... - 15

எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்தார். அந்தக் குழந்தையை கோகுலத்துக்கு எடுத்துச் செல்லும்படி இறைவாக்கு சொன்னது. அதன்படி, கோகுலத்தில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த பெண் குழந்தையை வசுதேவர் எடுத்துக்கொண்டு, கிருஷ்ணரை யசோதையின் அருகில் வைத்துவிட்டு வந்துவிடுகிறார். அடுத்த நாள், கம்சன் குழந்தையைக் கொல்ல முயலும்போது கையிலிருந்து நழுவி, ஆகாயத்தில் எட்டுக்கரங்களுடன் காட்சி அளித்தது.

கிருஷ்ணர் பிறந்து, அவர் யதுகுலத்தில் நல்ல முறையில் வளர்ந்து வருகிறார் என்பது தெரிந்து, அவரைக் கொல்ல பல முயற்சிகளை எடுக்கிறான் கம்சன். அவற்றிலெல்லாம் தோற்றுப்போகிறான்.  

அதைப்போலவே மோஸஸ், யூதர்களின் விடுதலைக்காகப் பிறக்கவிருக்கிறார் என்கிற தகவலைத் தெரிந்துகொண்டு, எகிப்திய மன்னன், 'எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது ஆண் மகவு பிறந்தால், அதைக் கொன்றுவிடுங்கள்’ என்று ஆணையிட்டான்.

லேபி குலப் பெண்ணொருத்தி கருவுற்று, ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தாள். மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள். அதற்கு மேல் மறைத்துவைக்க முடியாது என்பதால், கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து, நைல் நதிக்கரையிலுள்ள நாணல்களில் நடுவே அதை விட்டுவிடுகிறாள். நைல் நதியில் நீராட வந்த பாரோனின் மகள் அந்தப் பேழையைக் கண்டு, எடுத்துப் போகிறாள். கர்ணன் பிறந்தபோது குந்தியும் இப்படித்தான் செய்தாள்.

புதிய ஏற்பாட்டிலும், ஏரோது அரசன் காலத்தில் பெத்லஹேமில் இயேசு பிறந்தார். பெத்லஹேமிலும் அதன் சுற்றுப்புறம் எங்கும் ஆட்களை அனுப்பி, இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்லப் பணித்தான் ஏரோது. இயேசு, மேரி, ஜோசப் ஆகியோர் எகிப்துக்குச் சென்றுவிட்டதால், உயிர் தப்பினார்கள்.  

ஹோமரின் இலியட் மகா காவியத்தில், தேவர்களில் ஒருசாரார் ட்ராய் நகரத்துக்கும், மற்றொரு சாரார் கிரேக்கத்துக்கும் ஆதரவாக இருப்பார்கள். அதைப்போலவே மகாபாரதத்திலும், அர்ஜுனன் தன் மகன் என்பதால் அவனுக்குச் சாதகமாக நடந்துகொள்கிறான் இந்திரன். கவச குண்டலங்களுடன் பிறந்த கர்ணனை அர்ஜுனனால் தோற்கடிக்கமுடியாது என்பதால், அந்தணன் வடிவத்தில் வந்து, அவற்றை யாசகம் பெறுகிறான். அப்போது, கர்ணனின் தந்தையான சூரிய பகவான் அவனை எச்சரிக்கிறார்.  ஆனாலும், கொடுப்பதே உயர்ந்த நெறி என்பதால், அதிலிருந்து வழுவாமல் சத்தியம் செய்ததை கர்ணன் நிறைவேற்றிவிடுகிறான்.  

மற்றொரு முறை, பரசுராமரிடம் வில்வித்தை கற்கும்போது, வண்டு ரூபத்தில் வந்து கர்ணனின் உடலைத் துளைத்து, அவன் சத்திரியன் என்பதை பரசுராமருக்கு உணர்த்திவிடுகிறான் இந்திரன். அதைப்போல, தேவர்கள் ஒரு பக்கத்துக்குச் சார்பாக இருப்பது மகாபாரதத்தில் காணப்படுகிறது. கிருஷ்ணர் எதையும் தீவிரமாக யோசித்து, மாற்று ஏற்பாடு செய்வதில் வல்லவர். அவருடைய மாற்று யோசனைதான் பாண்டவர்களின் வெற்றிக்கு முழுக்க முழுக்கக் காரணம்.  அதற்காக, அவர் போரின் நியமங்களை பல இடங்களில் மீறுகிறார். நியாயம் வெல்ல வேண்டும், தர்மம் ஜெயிக்கவேண்டும் என்பது மட்டுமே அவருடைய கோட்பாடாக இருக்கிறது.  

கிருஷ்ணர் ஜெயத்ரதனை வீழ்த்த, சூரியன் அஸ்தமித்ததைப்போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதும், தனது கால் கட்டை விரலால் தேரை அழுத்தி அர்ஜுனனின் உயிரைக் காப்பதும் அவருடைய மாற்று யோசனையின் மாதிரிகள்.

கௌரவர்கள் அனைவரும் இறந்துபோனார்கள் என்கிற செய்தி, திருதராஷ்டிரனின் செவிகளில் ஈயத்தைப் பாய்ச்சுகிறது. புத்திர சோகத்தால், தன் நிலையை அவன் முற்றிலுமாக இழந்திருந்தான். இருப்பினும், போரில் வெற்றி பெற்ற தம்பி மகன் தர்மரைக் கட்டித் தழுவிக்கொண்டான். அதில் கடுகளவுகூட அன்பு இல்லை.

தர்மரைத் தழுவிய பிறகு, திருதராஷ்டிரன் பீமனைக் கட்டித் தழுவ விரும்பினான். அப்போது அவன் மனம், பொறாமை நெருப்பால் தகித்துக் கொண்டிருந்தது. 'என் அத்தனை மகன்களையும் கொன்றவன் பீமன்தானே!’ என்று நினைத்தான். ''எங்கே பீமன்?' என்று கேட்டவாறே, பீமனைத் தழுவத் தனது கைகளை நீட்டினான்.

கிருஷ்ணருக்கு திருதராஷ்டிரனின் எண்ணம் தெரியும். அவர் உடனே பீமனைத் தடுத்துவிட்டு, இரும்பால் செய்யப்பட்ட ஒரு பதுமையை திருதராஷ்டிரன் முன் நிறுத்தினார்.

கோபத்தின் உச்சத்தில் இருந்த திருதராஷ்டிரன், அது பொம்மை என்று அறியாமல், ஆத்திரத்தோடு அதைத் தனது இரண்டு கைகளாலும் இறுகக் கட்டித்தழுவினான். அந்த இரும்புப் பதுமை சுக்கல் சுக்கலாக நொறுங்கியது. திருதராஷ்டிரனின் வாயிலிருந்து ரத்தம் வழிந்தது. அவன் கீழே விழுந்தான். சஞ்சயன் திருதராஷ்டிரனைத் தூக்கி நிறுத்தி, அவன் கோபத்தை ஆற்றினான். கோபம் நீங்கிய திருதராஷ்டிரன், தன் நிலை உணர்ந்து, தனது செயலுக்கு மிக வருந்தி, 'பீமன் இறந்துபோய் விட்டான்’ என்று எண்ணி, மிகுந்த துயரம் அடைந்தான். 'பீமா... பீமா’ என்று அரற்றினான். கிருஷ்ணர் நடந்ததை விவரித்து, அவனுக்குப் புத்திமதி கூறினார். அதற்குப் பிறகு நல்ல உள்ளத்தோடு பாண்டவர்களிடம் திருதராஷ்டிரன் நடந்துகொண்டான்.

இப்போது, ஜப்பான் போன்ற நாடுகளில் ஒரு முறை உண்டு. அலுவலகத்தில் எந்த மேலதிகாரி அல்லது சக ஊழியர் மீதாவது கோபம் வந்தால், அருகில் இருக்கும் அறைக்குச் சென்று, அங்கு இருக்கும் பன்ச் பேகில் ஆத்திரம் தீரக் குத்தவேண்டும். அது கோபத்தை தணிக்கிற வழி! சில விநாடிகளில் வன்மம் தீர்ந்ததும், சகஜமாகிவிடுவார்கள் என்கிறது உளவியல்.

இந்தக் கோபத்தைத் தணிக்கும் மந்திரத்தை அப்போதே மகாபாரதம் கூறியிருக்கிறது.

(இன்னும் மேலே...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism