Published:Updated:

மேலே... உயரே... உச்சியிலே... - 16

ஆன்மிகத்திலும் மாற்றி யோசியுங்கள்! வெ.இறையன்பு, ஓவியம்: அனந்த பத்மநாபன்

மேலே... உயரே... உச்சியிலே... - 16

ஆன்மிகத்திலும் மாற்றி யோசியுங்கள்! வெ.இறையன்பு, ஓவியம்: அனந்த பத்மநாபன்

Published:Updated:
மேலே... உயரே... உச்சியிலே... - 16

புதிய சிந்தனைகளைச் சொல்லுகிறபோது, இறைத் தூதர்களையும் சோதனைக்கு உட்படுத்துவது மனித இயல்பு.  எதையும் சந்தேகத்துடன் பார்ப்பது நம்முடைய பழக்கம்.  ஒருவரை மகத்தானவர் என்று ஒப்புக்கொள்வதற்கு நமக்குத் தயக்கம்.

இயேசுபிரான் மக்களிடையே விழிப்பு உணர்வை, தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருந்ததால் தான் அவர்மீது பலர் வெறுப்புடன் இருந்தார்கள். அவர் குறித்த தீய எண்ணத்தை எப்படியாவது ஏற்படுத்திவிட வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்தார்கள். விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணைக் கொண்டுவந்து நிறுத்தி, அவரிடம் கேள்வி கேட்டுத் திக்குமுக்காட வைக்க நினைத்தார்கள்.  ஆனால், மாற்றி யோசித்த இயேசுபிரான், 'குற்றமில்லாதவர்கள் முதலில் கல்லை எறியட்டும்’ என்று சொன்னதும், அவர்கள் தலைகுனிந்து கலைந்து சென்றார்கள்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயேசு உருவகக் கதைகளால் பேசினார். அவர் சொன்ன உவமைக் கதை இது.  ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டு, நீண்ட காலம் நெடும் பயணம் மேற்கொண்டார். பருவகாலம் வந்ததும், ஒரு பணியாளரை அனுப்பினார். ஆனால், தோட்டத் தொழிலாளர்கள் அந்தப் பணியாளரை நையப்புடைத்து வெறுங்கையுடன் அனுப்பினர். மீண்டும், உரிமையாளர் வேறு ஒரு பணியாளரை அனுப்பி வைத்தார். அவர்கள் அவரையும் நையப்புடைத்து, அவமதித்து, வெறுங்கையராக அனுப்பினார்கள். மூன்றாம் முறையாக உரிமையாளர் அனுப்பியவரையும் அவர்கள் காயப்படுத்தி வெளியே தள்ளினர். திராட்சைத் தோட்ட உரிமையாளர் மிகக் கவலையுடன், ''இனி நான் என்ன செய்வேன்? என் அன்பு மகனை அனுப்பலாம். ஆனால், அவர்கள் அவனையாவது மதிப்பார்களா?'' என்று எண்ணியபடியே, மகனை அனுப்பி வைத்தார். தோட்டத் தொழிலாளர்கள் அவனைக் கண்டதும், ''இவன்தான் சொத்துக்கு உரியவன். நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அதன்பின் சொத்து நம்முடையதாகிவிடும்'' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். அதன்படியே, அவர்கள் அவனைத் திராட்சைத் தோட்டத்துக்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள்.

திராட்சைத் தோட்ட உரிமையாளர் அதன்பின் அவர்களை என்னதான் செய்வார்? அவரே நேரில் வந்து, அந்தத் தொழிலாளர்களை நீக்கிவிட்டு, திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் குத்தகைக்கு விடுவார்...

இயேசு சொன்ன இந்த உவமைக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், ''ஐயோ! அப்படி நடக்கக்கூடாது!'' என்று பதறினார்கள். ஆனால், இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ''கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று என்று மறைநூலில் எழுதியிருப்பதன் பொருள் என்ன? அந்தக் கல்லின் மேல் விழுகிற எவரும் நொறுங்கிப்போவார். அது யார்மீது விழுமோ அவரும் நசுங்கிப்போவார்' என்றார்.  

மேலே... உயரே... உச்சியிலே... - 16

மறைநூல் அறிஞர்களும் தலைமைக் குருக்களும் தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை உணர்ந்து கொண்டு, அப்போதே இயேசுவைப் பிடிக்க வழிதேடினார்கள், ஆனால், மக்களுக்கு அஞ்சினார்கள்.

ஆகவே, அவர்கள் இயேசுவைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார்கள். நேர்மையாளர் போன்று நடித்து, அவரது பேச்சில் குற்றம் காண ஒற்றர்களை அனுப்பிவைத்தார்கள். அவரை ஆளுநரின் ஆட்சி அதிகாரத்திடம் ஒப்புவிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஒற்றர்கள் அவரிடம், ''போதகரே! நீர் சொல்வதும் கற்பிப்பதும் சரியே! நீர் ஆள் பார்த்துச் செயல்படாதவர்; கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீஸருக்கு நாம் கப்பம் கட்டுவது முறையா, இல்லையா?'' என்று கேட்டார்கள். அவர்களுடைய சூழ்ச்சியை இயேசு தெளிவாகப் புரிந்து கொண்டார். அவர்களிடம் ஒரு நாணயத்தைக் காட்டி, ''இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?'' என்று கேட்டார். அவர்கள், ''சீஸருடையவை' என்றார்கள். அவர் அவர்களை நோக்கி, ''அப்படியானால் சீஸருக்கு உரியவற்றை சீஸருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்'' என்று சொன்னார். மக்கள் முன்னிலையில் இயேசுவின் பேச்சில் அவர்களால் குற்றம் காண இயலவில்லை. அவருடைய மறுமொழியைக் கண்டு, அவர்கள் வியப்புற்றுப் பேசாதிருந்தார்கள்.  

நீதியரசர் அக்பர் அலி அவர்கள், நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் அமர்ந்திருக்கும்போது, ஒருவர் கூடை நிறைய பேரீச்சம்பழங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். உடனே நபிகள், தன் மருமகன் அலி அவர்களிடம் அந்தக் கூடையைக் கொடுத்து, எல்லோருக்கும் பேரீச்சம்பழங்களைப் பிரித்துக் கொடுக்குமாறு கூறினார். அதற்கு அலி அவர்கள், ''நீங்கள் கொடுப்பதைப்போலக் கொடுக்கட்டுமா, அல்லது இறைவன் கொடுப்பதைப் போலக் கொடுக்கட்டுமா?' என்று கேட்டார். அதற்கு அண்ணல், ''நான் கொடுப்பதைப்போலக் கொடு!' என்று சொன்னார். உடனே அலி, அனை வருக்கும் சமமாக அந்தப் பேரீச்சம்பழங்களைப் பிரித்துக்கொடுத்தார்.  

சில நாட்கள் சென்றன. ஒருவர் ஒரு கூடை நிறைய பேரீச்சம்பழங்களைக் கொண்டுவந்து கொடுத்தார். அண்ணல் அவர்கள் வழக்கம்போல் அதை அலியிடம் கொடுத்து, பிரித்துக் கொடுக்கும்படி சென்னார்கள்.மறுபடியும், ''நீங்கள் பிரித்துக்கொடுப்பதைபோலப் பிரித்துத் தரவேண்டுமா, அல்லது இறைவன் கொடுப்பதைப்போலத் தரவேண்டுமா?'' என்று கேட்டார் அலி. ''இந்த முறை இறைவன் கொடுப்பதைப்போலத்தான் கொடேன்'' என்றார் அண்ணல். உடனே அலி அவர்கள், சிலருக்கு அதிகமாகவும், சிலருக்குக் குறைவாகவும், சிலருக்கு ஒன்றும் கொடுக்காமலும் அந்தக் கூடையை காலி செய்தார்.  

பழம் கிடைக்காதவர்கள் நபிகளிடம் வந்து புகார் செய்தார்கள்.  அதற்கு நபிகள் அவர்கள், ''இறைவன் அப்படித்தான் செய்வான். சிலருக்கு அதிகமாகவும், சிலருக்குக் குறைவாகவும், சிலருக்கு ஒன்றும் கிடைக்காமலும் போய்விடும். அதிகம் கிடைத்தவர்கள் ஒன்றும் கிடைக்காதவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம்'' என்று எடுத்துச் சொன்னார்.  மனித நேய மாண்பை இதைவிட யாரும் அழகாக எடுத்துச் சொல்ல முடியாது.

பல குழுவினரிடமிருக்கும் சண்டையை, மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு முன்பே, மாற்றி யோசித்ததால் தீர்த்துவைத்தவர் நபிகள் நாயகம். அவருக்கு 35 வயதாகும்போது, மக்காவில் உள்ள 'கஅபா’வை குரோசியர்கள் புதுப்பித்தார்கள். சிதிலம் அடைந்திருந்த அதிலிருந்த சில பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றதால், அதைப் புதுப்பிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.  'கஅபா’வை புதுப்பிப்பதில் ஒரு நிபந்தனை உண்டு. தூய்மையான வருமானத்தைக்கொண்டே அதைச் செப்பனிட வேண்டும்.  

பழைய கட்டடத்தை இடிப்பதில் அனைவருக் கும் தயக்கம் இருந்தது. வலீத் இப்னு முகிரா முதலில் கடப்பாரையை எடுத்து இடிக்க ஆரம் பித்ததும், மக்கள் தயக்கம் விலகி, ஒத்துழைப்பு தந்தார்கள். 'கஅபா’வைப் பல பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு கோத்திரத்தாரும் ஒவ்வொரு பகுதியைக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர். அங்கு, 'ஹஜ்ருல் அஸ்வத்’ என்கிற ஒரு கல் இடம் பெற்றிருந்தது. அது சொர்க் கத்தில் இருந்து வரவழைக்கப்பட்டதாக ஐதீகம். அதற்கான இடம் வந்தபோது, அதை அதற்குரிய இடத்தில் வைப்பது யார் என்ற பிரச்னை எழுந்தது.

வாதம் வலுத்து, ஒரு கட்டத்தில் சண்டை மூளும் அபாயம் ஏற்பட்டது. அப்போது முகிரா, ''இப்புனித பள்ளிவாசலில் முதன்முதலாக நுழைபவரை நடுவராக்கி, அவரது ஆலோசனையை அனைவரும் ஏகமனதாக ஒப்புக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்.  இந்தக் கருத்தை அனைவரும் மனமார ஏற்றனர்.

மக்கள் ஆவலுடன் காத்திருக்க, நபி அவர்களே முதலாவதாக நுழைந்தார்கள். அண்ணலைக் கண்ட மக்கள், ''இதோ, முகமத் வந்து விட்டார். இவரே நம்பிக்கைக்கு உரியவர்' என்று ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் விவரத்தைக் கூறினர்.

நபிகள் அனைத்து கோத்திரத்தினருக்கும் திருப்தி ஏற்படவேண்டும் என்று நினைத்தார். ஒரு விரிப்பை வரவழைத்து, அதன் நடுவே ஹஜ்ருல் அஸ்வத்தை வைத்தார். எல்லாக் கோத்திரத்தின் தலைவர்களையும் அழைத்து, விரிப்பின் ஓரங்களைப் பிடித்துத் தூக்குமாறு கூற, அவர்கள் அப்படியே செய்தனர். 'கஅபா’வுக்கு அருகில் அதைக் கொண்டு வரச் சொல்லி, தன் கரத்தால் ஹஜ்ருல் அஸ்வத்தை எடுத்து உரிய இடத்தில் வைத்தார் நபிகள். இது அனைவரும் ஒப்புக்கொண்ட மிக அழகிய தீர்வாக இருந்தது.  

நபிகளின் மாற்றுச் சிந்தனையால், கோத்திரத்தாரிடையே ஏற்படவிருந்த பூசல் மிகச் சாமர்த்தியமாகத் தீர்த்துவைக்கப்பட்டது.

பிட்டுக்கு மண் சுமந்த கதையும் ஒரு மாறுபட்ட சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதுதான். பரியை நரியாக மாற்றிய சிவபெருமான், அரிமர்த்த பாண்டியன், மாணிக்கவாசகருக்குத் தண்டனை தந்தது குறித்த உண்மை நிலையை உணர்த்த, வைகையாற்றில் வெள்ளம் வரச்செய்கிறார். வெள்ளமோ கரையை உடைத்துக்கொண்டு ஓடுகிறது. மீண்டும் வெள்ளம் வராமல் இருக்க, கரையை உயர்த்தும் பணியில் மக்களை மன்னன் ஈடுபடச் செய்கிறான். பிட்டு தயாரிக்கும் பெண்மணி, தனக்கு வாரிசு இல்லாததால் யாரை தன் சார்பாக வேலைக்கு அனுப்புவது என்று குழம்பி நிற்கும்போது, சிவபெருமான் இளைஞனாக வருகிறார்.

அவர் கூலியாக பிட்டைச் சாப்பிட்டுவிட்டு, மண் சுமப்பதாக ஒத்துக்கொள்கிறார். வேலையைப் பார்வையிட மன்னனே வருகிறான். இளைஞன் வடிவில் வந்த சிவபெருமானோ தாறுமாறாகப் பணியைச் செய்ய, கோபமடைந்த பாண்டிய மன்னன், அவர் முதுகில் பிரம்பால் ஓர் அடி வைக்கிறான். அந்த அடி மன்னன் உட்பட அனைவரின் முதுகிலும் விழுகிறது.   மன்னன் உண்மையை அறிந்தான்.

இது வெறும் பொழுதுபோக்குக் கதையல்ல. அரிய உண்மையை வித்தியாசமாக நமக்கு உணர்த்துகிற கதை. நாம் யார் மீது அடித்தாலும், அந்த அடி நம்மையே வந்து அடையும்; நாம் யாருக்கு எந்தத் தீங்கு செய்தாலும், அது நம்மையே வந்து தாக்கும் என்பதையே மிக நேர்த்தியாக இந்தத் திருவிளையாடல் கதை நமக்குத் தெரிவிக்கிறது.

அடுத்தவர்கள்மீது கூச்சப்படாமல் பழியைச் சுமத்துபவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதுதான் ஆன்மிகவாதிகளும் புராணங்களும் நமக்குத் தொடர்ந்து உணர்த்துகிற பாடங்கள்!

(இன்னும் மேலே...)