Published:Updated:

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

கண்ணுக்குக் கண்ணாக...!

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

கண்ணுக்குக் கண்ணாக...!

Published:Updated:
வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

'கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்’ என்பார்கள். நேருக்கு நேர் கண்கூடாகப் பார்த்தால்கூட, அது பொய்யாகிவிடலாம். அதாவது, கண்கள் ஒன்றைப் பார்க்க, புத்தி வேறொரு விதமாக யோசிக்கலாம். பார்த்த விஷயத்தை வேறொரு விதமாக நம் மூளையானது யோசித்தால், அது பொய்யாகத்தானே முடியும்! உண்மை எப்படித் தெரியும்? உண்மையை எவ்விதம் உணரமுடியும்?

இவை ஒரு பக்கம் இருக்க... நம் கண்களேகூட, நம்மைப் பல தருணங்களில் ஏமாற்றிவிடுகின்றன, அல்லவா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'டேய்... நெடுநெடு உசரமும் சுருட்டைத் தலையுமா, கொஞ்சம் கூன் போட்டாப்ல, கால் அகட்டி நிப்பியே... அது மாதிரியே நேத்து ஒருத்தர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்ல நிக்கிறதைப் பாத்தேன்டா! சத்தியமா நீன்னே நினைச்சுட்டேன். அடடா... பார்த்து எத்தனை வருஷமாச்சுன்னு, விறுவிறுன்னு உன் பின்னாடி நைஸா வந்து, உன் முதுகுல சர்ப்ரைஸா பொளேர்னு ஒரு போடு போடலாம்னு பக்கத்துல வந்தா... ப்ச்... அது நீயில்ல! நல்லவேளை... அந்த ஆசாமி முதுகுல அடிக்கலை. தப்பிச்சேன்டா சாமி!’ என்று நண்பர்களுக்குள்ளான இந்த உரையாடல், கிட்டத்தட்ட எல்லாரின் வாழ்க்கையிலும் வெவ்வேறு விதமாக நிகழ்ந்திருக்கும். ஆக, நம் கண்ணே நம்மைச் சில தருணங்களில் ஏமாற்றிவிடுகிறதல்லவா?!

உயரத்தையும் சுருட்டை முடியையும் பார்த்து நம் நண்பனைப் போல் இருக்கிறானே என்று நினைப்பது ஒரு பக்கம்... வேலை முடிந்து, நம் வீடு இருக்கிற பகுதிக்குச் செல்கிற பேருந்து இதுதான் என்று பேருந்து எண்ணை உற்றுப் பார்த்துவிட்டு, ஆனால் வேறு பஸ்ஸில் ஏறிவிடுகிற தருணங்களும் சிலருக்கு நடக்கத்தானே செய்கிறது?!

பிடித்த நடிகர் அல்லது இயக்குநரின் திரைப் படத்தைப் பார்ப்பதற்காக, வேகவேகமாக விழுந்தடித்துக்கொண்டு தியேட்டருக்குச் சென்று, மிச்ச சில்லறையைக்கூடச் சரிபார்க்காமல் அவசர அவசரமாக டிக்கெட் வாங்கிக்கொண்டு, 'படம் போட்டுப் பத்து நிமிஷமாச்சு’ என்ற தகவலைக் காதில் வாங்கியபடி, டிக்கெட்டைக் காண்பித்துவிட்டு அரங்கத்தினுள் சென்றதும் என்ன செய்கிறோம்? ஒரு நிமிடம் நின்று நிதானித்து, இருட்டுக்கும் கண்களுக்குமான பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, எந்த வரிசை, எந்த நாற்காலி என்று மெள்ளப் பார்த்துவிட்டுத்தான் நடப்போம். ஒரு சிலர், திரையில் படம் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, அரக்கப்பரக்க ஓடி, திரை வெளிச்சத்தால் கண்கள் கூச, இருட்டில் தட்டுத் தடுமாறி, தன் இடத்தைக் கண்டுபிடிப்பதற்குள் நாலு பேரின் காலையாவது மிதித்து... கிட்டத்தட்ட அங்கே ஒரு அமர்க்களத்தை உண்டுபண்ணிவிடுவார்கள்.

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி
##~##
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைக்குப் படிப்பது குறைந்து, பார்ப்பது அதிகரித்துவிட்டது. கடந்த பத்துப் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக, நம் வீட்டின் நடுக்கூடத்தில் ஒய்யாரமாக உட்காருவதற்கு தொலைக்காட்சிப் பெட்டிக்கு இடம் ஒதுக்கித் தந்திருக்கிறோம். காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு ஆகியவற்றைத் தட்டைப் பார்த்துச் சாப்பிடுகிறவர்களைவிட, டி.வி. பெட்டியைப் பார்த்தபடி சாப்பிடுகிறவர்கள் அதிகரித்துவிட்டனர். போதாக்குறைக்கு, டி.வி. நிகழ்ச்சியின்போது முக்கியமான விருந்தாளி வந்துவிட்டால்கூட நாம் அசருவதில்லை. என்றைக்கோ ஒருநாள் வருகிற அந்த மனிதருக்குத் தரவேண்டிய மரியாதையை கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு, எப்போதும் நம்முடனேயே இருக்கின்ற தொலைக்காட்சிப் பெட்டிக்கே முதல் மரியாதையை வழங்குகிறோம்.

அடுத்ததாக, 15, 20 வருடங்களுக்கு முன்பெல்லாம், அலுவலகங்களில், ஊழியர்களின் மேஜைகளில் கட்டுக்கட்டாகக் காகிதங்களும் கோப்புகளும் செங்கற்களை அடுக்கி வைத்திருப்பதுபோல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி, அந்த அறை முழுக்கப் பரண்களிலும் தரைகளிலும் இண்டு இடுக்குகளிலும் பல வருடத்துக் கோப்புகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட, அந்த அறை முழுவதும் கோப்புகளின் வாசனை குடிகொண்டிருப்பதால், அந்த நெடியில் நம்முடைய மூக்கும் சுவாசமும் ரொம்பவே பாதிக்கப்படும். 'டஸ்ட் அலர்ஜி’யால் அவதிப்பட்ட அன்பர்கள் பலர், பிற்பாடு மனவளக்கலைப் பயிற்சிக்கு வந்து, மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு, அதிலிருந்து நிவாரணம் அடைந்திருக்கின்றனர்.

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

சமீப வருடங்களாக, அலுவகத்தில்  பேப்பர் கட்டுகளும் கோப்புகளும் இல்லை. அந்தக் காகிதங்களில் உள்ள குறிப்புகளையெல்லாம் சின்னப் பெட்டிக்குள் பதிவு செய்துகொண்டாகிவிட்டது. தொலைக்காட்சிப் பெட்டிக்கு நிகரான அளவுக்கு, வீட்டுக்கு வீடு அதிகரித்துவிட்ட அந்தப் பெட்டியின் பெயர்... கம்ப்யூட்டர்.

கம்ப்யூட்டர் வந்ததில் இருந்து அலுவலகக் கோப்புகள், தூசிகள், அலர்ஜிகள், ஆஸ்துமா ஆகிய பிரச்னைகளில் இருந்து ஓரளவுக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்பது உண்மைதான்! ஆனால், கத்தி போச்சு வாலு வந்தது என்கிற கதையாக, கம்ப்யூட்டர் வந்துவிட்டதைச் சொல்லிப் புலம்புகிற அன்பர்களையும் அறிவேன். காகிதங்களும் கோப்புகளின் தூசியும், மூக்கையும் மூச்சையும் துளைத்து தும்மிக்கொண்டே இருக்கச் செய்தன என்றால், தொலைக்காட்சிப் பெட்டிகளும் கம்ப்யூட்டர் பெட்டிகளும் நம் கண்களை ஏகத்துக்கும் கசக்கத்தான் செய்கின்றன.

ஆம்... கண்களுக்கான சில முக்கியமான பயிற்சிகள் குறித்துத்தான் சொல்லப் போகிறேன்.  

'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பார்கள். கண்கள் இருந்தால்தான், ஓவியங்களை ரசிக்கவோ, வரையவோ முடியும். ஓர் ஊரில் இருந்து அடுத்த ஊருக்குச் செல்வதற்கும், அந்த ஊரின் செழிப்பையும் சிறப்பையும் பார்த்து அறிந்து, உணர்ந்து சிலிர்ப்பதற்கும், கண்களின் ஒளியில் எந்தச் சேதாரமும் இல்லாதபடி பார்த்துக்கொள்ளுதல் அவசியம்!

நான் முன்பே சொன்னது போல, நம் உடலின் எல்லாப் பாகங்களையும் 'கண்ணைப் போல பாதுகாக்க வேண்டும்’ என்பது அவசியம். அப்படியிருக்க... கண்களை எந்த அளவுக்குக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும் என்று யோசியுங்கள்.

கண்ணுக்கு அதிகம் வேலை கொடுப்பதே வேலையாகிவிட்ட இந்த உலகில், கொஞ்சம் கண்களுக்கு பயிற்சிகளும் கொடுப்போமே! அந்தப் பயிற்சிகள், கண்களின் அயர்ச்சியைப் போக்குவதோடு, பல்வேறு கண் உபாதை களில் இருந்தும் காக்கும் என்பது உறுதி!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism