Published:Updated:

மனிதம் வளர்போம்! - லதானந்த்

கருமித்தனம்

மனிதம் வளர்போம்! - லதானந்த்

கருமித்தனம்

Published:Updated:
மனிதம் வளர்போம்! - லதானந்த்

'பணத்தை விரயம் செய்தால், பண வரவு நின்றுவிடும். அதுவே, பணத்தை நல்ல விஷயங்களுக்குத் தாராளமாகச் செய்தால், அபரிமிதமாக வரும்!'

- மகாஸ்ரீ அரவிந்த அன்னை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனிதம் வளர்போம்! - லதானந்த்

தேவையற்ற செலவைச் செய்யாமல் இருந் தால், அது சிக்கனம். செலவு செய்ய வேண்டிய தருணத்தில், செலவழிக்காமல் இருப்பது கருமித்தனம். சிக்கனம்- பாஸிட்டிவ் குணம்; கருமித்தனம்- நெகட்டிவ் குணம். கருமித்தனத்தை யும் கஞ்சத்தனத்தையும் 'லோபம்’ என்பார்கள். இன்றைய இளைஞர்களின் பாஷையில் கருமிகளின் பெயர், 'கஞ்சூஸ்’.

காமம், கோபம், மோகம், ஆணவம், பொறாமை, கருமித்தனம் ஆகியன மனிதனின் துர்க்குணங்கள். 'தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு’ என்கிறார் திருவள்ளுவர். அதாவது, நாம் உழைத்துச் சம்பாதிக்கும் பொருளெல்லாம், பிறருக்குப் பயன்படுவதற்காகவே என்கிறார் வள்ளுவர். ஆனால், தங்களது நியாயமான தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்துகொள்ள விரும்பாமல், பணத்தைப் பொத்திப் பொத்திப் பாதுகாப்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்கின்றனர், கருமிகள்!  

'பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்; கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயினபின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்’

என்கிறார் தமிழ் மூதாட்டி ஒளவையார். 'எச்சில் கையால் காக்கையை ஓட்டாதவன்’ என்றொரு சொலவடை நம் பக்கத்தில் உண்டு. அதாவது, சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது காகத்தை விரட்டினால், கையில் உள்ள சோற்றுப் பருக்கைகள் வீணாகிவிடுமே என்று யோசிக்கிற அளவுக்கு அத்தனைக் கருமித்தனமாக இருப்பவர்களை அப்படிக் குறிப்பிடுவார்கள்.  

##~##
உடைகளைத் தைக்கக் கொடுக்கும் போது, 'வளருகிற பையன்தானே’ என்பதற்காகத் 'தொளதொள’வென சட்டை, பேன்ட் தைத்துக் கொடுக்கும்படி டெய்லர்களை வற்புறுத்துவதுகூட ஒரு வகையில் கருமித்தனம்தான். தங்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைக்குக் கூடச் செலவு செய்யாமல் பணத்தை மிச்சம் பிடிப்பார்கள் சிலர். ஆரம்பத் திலேயே கவனித்திருந்தால் சொற்பச் செலவுடன் குணமாகியிருக்க வேண்டிய நோய், கருமித்தனத்தால் பெரும் செலவில் கொண்டு தள்ளுவதும் நடக்கிறது.

முதல் நாள் சமைத்த உணவு லேசாகக் கெட்டுப் போயிருந்தாலும், அதனைக் குப்பையில் கொட்ட மனமின்றி, வயிற்றுக் குள் தள்ளி, உடல்நலம் கெட்டு மருத்துவச் செலவு செய்வோரும் உள்ளனர். இதனை, 'றிமீஸீஸீஹ் ஷ்வீsமீ ஜீஷீuஸீபீ யீஷீஷீறீவீsலீ’ என்பார்கள்.

மனிதம் வளர்போம்! - லதானந்த்

வாகனங்களில் பிரேக் கட்டைகள் தேயத் துவங்கும்போதே செலவைப் பார்க்காமல் மாற்றிவிட வேண்டும். இல்லையெனில், விபத்துக் களைச் சந்திக்கும் நிலை ஏற்படும். கல்விக்காகச் செய்கிற செலவை முதலீடு என்பதாக ஒரு சிலர் நினைப்பதில்லை.

வட்ட வடிவமாக விரிக்கக்கூடிய விசிறி களைப் பார்த்திருப்பீர்கள். அப்படியரு விசிறியை ஒருவர் பல வருடங்களாக வைத்திருந்தார். அதிகம் பழசாகாமல் இருந்த அந்த விசிறியைப் பார்த்து அதிசயித்துப் போன அவரின் நண்பர் ஒருவர், 'எப்படி இந்த விசிறி இன்னும் புதிதாகவே இருக்கிறது?’ என்று கேட்க, அவர் சொன்னார்... ''விசிறியை முழுசாப் பிரிக்க மாட்டேன். பாதியளவு பிரிச்சு விசிறிக் கொள்வேன்!''

இவர் இப்படியெனில், இன்னொருவர் வேறு விதம். அவருடைய விசிறி, பல வருடங்களாகப் புதிதாகவே இருந்தது. அவரிடம் இது குறித்துக் கேட்டதற்கு, ''நான் விசிறியை முழுசா விரிச்சு வைச்சுப்பேன். ஆனா, அதை அசைச்சுக் காற்று வாங்க மாட்டேன்; என் தலையை யும் முதுகையும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமா அசைச்சுப்பேன்'' என்றாராம். தமிழ்த் திரைப்படம் ஒன்றில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சுருளிராஜன், இப்படியான கருமித்தனங்களைப் பலமாக நையாண்டி செய்திருப்பார். சிரிக்க மட்டுமல்ல; சிந்திப்பதற்கும் உகந்த காட்சிகள் அவை.

பிறருக்குப் பயன்படுத்தாமல் பதுக்கி வைத்திருக்கும் கருமியின் செல்வம், ஊரின் மையப் பகுதியில் இருக்கிற விஷக் கனிக்கு இணையானது என்கிறார் வள்ளுவர்.

'நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.’

அந்த ஊரிலேயே பலருக்கும் தெரிந்த மிகப் பெரிய கருமி அவர். பணத்தைப் பொத்திப் பொத்தி வைத்திருப்பார். ஒருமுறை, அவரைக் கடும் நோய் தாக்கியது. சோதித்துப் பார்த்த மருத்துவர், அவருடைய ஆயுளுக்குக் கெடு விதித்தார். இன்றோ, நாளையோ என மரணப் படுக்கையில் கிடந்தார் அந்தக் கருமி. அவருடைய சிந்தனை யெல்லாம், பெட்டியில் உள்ள பணத்தின் மீதே இருந்தது. மனைவியை அழைத்து, ''இதுவரை சேர்த்து வைத்திருக்கும் பணத்தை விட்டு இறந்து போக மனம் வரவில்லை. எனவே, நான் இறந்ததும் எவருக்கும் தெரியாமல் என்னுடைய சவப்பெட்டியில் எல்லாப் பணத்தையும் வைத்துப் புதைத்து விடு!'' என்று சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்து போனார்.

கருமியின் மனைவி கெட்டிக்காரி. அவள் என்ன செய்தாள் தெரியுமா? பெட்டியில் இருந்த பணத்தையெல்லாம், தன்னுடைய வங்கிக் கணக்கில் போட்டுக் கொண்டாள். அந்தத் தொகைக்கு கணவரின் பெயருக்கு ஒரு 'செக்’ எழுதி, அவரது சவப்பெட்டியில் வைத்துப் புதைத்துவிட்டாள்.

ஆக.. பண விஷயத்தில் ஊதாரியாக இருக்காதீர்கள்; அதே நேரம், கருமியாக- கஞ்சனாக இருப்பதும் சரியல்ல! அப்படி கருமியாகத்தான் இருப்பேன் என்றால், பேச்சில் கஞ்சத்தனத்தைக் காட்டுங்கள். குறைவான பேச்சு, நிறைவான நிம்மதியைக் கொடுக்கும்.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism