Published:Updated:

மேலே... உயரே... உச்சியிலே... - 20

மகத்தான குருமார்களும் மாசற்ற சீடர்களும்..! வெ.இறையன்பு, ஓவியம்: அனந்த பத்மநாபன்

மேலே... உயரே... உச்சியிலே... - 20

பல மாணவர்கள் குரு பக்தியுடன் நடந்துகொள்வதைப்போல்  பாசாங்கு செய்வார்கள். ஆனால், படிப்பு முடிந்ததும், வழியில் பார்த்தால்கூடத் தெரியாததுபோல் நடந்துகொள்வார்கள்.  உண்மையான விசுவாசிகளை அடையாளம் காண்பது சிரமம். புத்தரின் அருகில் இருந்துகொண்டே அவரைக் கொன்றுவிடத் துடித்த தேவதத்தன், சீடன் என்கிற போர்வையில் ஒளிந்திருந்த நயவஞ்சக சிறுத்தை.

நம் புராணங்களும் சரித்திரங்களும், விசுவாசமான சீடர்களை எப்படி அடையாளம் காண்பது என்று பொறிகளை நமக்குக் காட்டியிருக்கின்றன.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருவரங்கத்தில் ராமாநுஜர் வாழ்ந்த காலம். வீடு வீடாகச் சென்று பிக்ஷை வாங்கி வரவேண்டும். அப்படி ஒருமுறை ராமாநுஜர் பிக்ஷை கேட்கச் சென்றபோது, ஒரு வீட்டுப் பெண் அவருக்கு அன்னமிட்டுவிட்டு, அழுதுகொண்டே உள்ளே சென்றாள். இதை உடையவர் கவனித்துவிட்டார். 'இதில் ஏதோ சூது இருக்கிறது’ என்று அறிந்துகொண்டார். அவள் இட்ட அன்னத்தைப் பரிசோதித்ததில், அதில் நஞ்சு கலந்திருப்பது அவருக்குத் தெரியவந்தது. அவரைப் பிடிக்காத ஆசாமி, அவருக்கு விஷம் கலந்த சோறு அளிக்கும்படி தன் மனைவியை வற்புறுத்தியிருக்கிறான்.

செய்தியைக் கேள்விப்பட்டதும், உடையவருடைய குருவான திருக்கோட்டியூர் நம்பி அவரைப் பார்ப்பதற்காகத் திருவரங்கம் விரைந்தார். குரு வருவது தெரிந்ததும் அவரை எதிர்கொண்டு அழைக்க, ராமாநுஜரும்  ஓடி வந்தார். இருவரும் கடும் வெயிலில் காவிரி மணலில் சந்தித்தார்கள்.  ராமாநுஜர், குருவின் பாதங்களில் விழுந்து வணங்கினார். காவிரி மணல் நெருப்பாகக் கொதித்துக்கொண்டிருந்தது. எனினும், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கிய ராமாநுஜரை எழுந்திருக்கவே சொல்லாமல், மௌனமாக இருந்தார் நம்பி.  

பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ராமாநுஜரின் சீடர்களில்   ஒருவரான கிடாம்பி ஆச்சானுக்கு மாத்திரம் குருவின் இந்தச் செய்கை பொறுக்கவில்லை. 'இதென்ன, அந்தப் பெண் கொடுத்த நஞ்சைக் காட்டிலும், இவரின் செய்கை கொடியதாக இருக்கிறதே' என்று படபடப்புடன் சொல்லி, ராமாநுஜரைத் தூக்கி நிறுத்தினார்.

அதைப் பார்த்து நம்பி சிரித்தார். ''ராமாநுஜரிடம்  உண்மையிலேயே அதிக பக்தி உள்ளவர் யார் என்று சிந்தித்து நின்றேன்.உங்களின் கோபம், நீங்கள்தான் அவர்மீது அதிக பரிவு உள்ளவர் என்று காட்டிவிட்டது. எனவே, நீங்கள்தான் இவருக்கு இனி உணவு தயாரித்துத் தரவேண்டும்'' என்று குறிப்பிட்டார்.    உண்மையான சீடர்களை அடையாளம் காண, அன்று ஞானிகள் இதைப் போன்ற கடுமையான வழிகளைக் கடைப்பிடித்தார்கள்,  

மாணவர்களிடம் புதைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக் கொண்டு வருவதற்கும், அவர்களை நெறிப்படுத்துவதற்கும் சில நேரங்களில் கறாரான, கடுமையான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் எடுக்க வேண்டியது அவசியம். அந்த நேரத்தில் மாணவருக்கு அது வெறுப்பைத் தந்தாலும், பின்னாளில் மேன்மையைத் தருகிற நடவடிக்கையாக இருக்கும்.  

மேலே... உயரே... உச்சியிலே... - 20

பாரசீகத்தின் மன்னர், இளவரசனுக்குக் கல்வி கற்பிப்பதற்கு ஓர் ஆசானை நியமித்தார். இளவரசன் பண்புள்ள, சிறந்த மாணவனாகத் திகழ்ந்தான். இருந்தாலும், ஒரு நாள் அந்த ஆசான் எந்தத் தவறுமே செய்யாத இளவரசனைக் கடுமையாகத் திட்டி அவமானப்படுத்திவிட்டார். முதுகில் ஓர் அடியும் வைத்தார். அன்றிலிருந்து இளவரசனுக்கு ஆசான்மீது வெறுப்பு ஏற்பட்டது.  அந்த அவமானத்தைத் தன் நெஞ்சிலேயே அடைகாத்து வந்தான்.  

இளவரசன் வளர்ந்தார். தந்தைக்குப் பிறகு சிம்மாசனம் அவர் வசமானது. பாதுஷாவாக முடி சூட்டிக்கொண்ட உடனே, முன்பு காரணமின்றித் தன்னை அடித்த ஆசானை வரச் செய்தார்.

'எந்தத் தவறும் செய்யாதிருந்தும், அன்று ஏன் என்னை அநியாயமாக அடித்தீர்கள்?' என்று கேட்டார்.  

'பாதுஷா அவர்களே! ஒருநாள் நீங்கள் சிம்மாசனத்தில் அமரப்போகிறீர்கள் என்பதும், லட்சக்கணக்கான மக்களை ஆளப்போகிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். அப்போது நீங்கள் நீதிபரிபாலனம் செய்ய வேண்டிவரும். வழக்குகள் உங்கள் முன் வரும். தவறே செய்யாத ஒருவர் தண்டிக்கப்பட்டால், அது எவ்வளவு வலியைத் தரும் என்பதை நீங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தால்தான், அதுபோல தவறான நீதியை வழங்கமாட்டீர்கள். எனவேதான், அன்று அப்படி ஒரு செயலை நான் செய்தேன். அதை ஒரு நாளும் நீங்கள் மறக்கமாட்டீர்கள். மறந்தும் நீதி தவறி, நிரபராதிக்குத் தண்டனை அளிக்க மாட்டீர்கள். உங்களை மக்கள் அனைவரும் 'நீதி தவறாத மன்னர்பிரான்’ என்று பாராட்ட வேண்டும் என்பதற்காகவே அப்படியொரு செயலைச் செய்தேன்'' என்றார்.

மன்னர் வியப்பில் உறைந்துபோனார்.  

கற்றுத் தருபவர்களிடம் மரியாதையும், பாசமும் வைப்பது சீடர்களின் பண்பு நலன்களை மேலும் ஒரு படி உயர்த்தும். ஜென் இலக்கியத்திலும் இது உண்டு. மடத்தில் இருக்கும் இளம் துறவிகளை ஞானிகள் கடுமையாகத் தாக்குவது நடக்கும். சண்டைப் பயிற்சிகளின்போது பல கட்டங்களைத் தாண்டுவதற்கு நிறைய முயற்சியும், கடும் உழைப்பும் வேண்டும். உடம்பில் தழும்புகள் ஏற்படவேண்டும். இந்தத் தண்டனைகள் சீடர்களை காயப்படுத்தவோ, அவர்களைக் குன்ற வைக்கவோ அல்ல!  மாறாக, அவர்களுக்கு விழிப்பு உணர்வைக் கற்றுத் தரவே!

சுற்றி நடப்பவற்றைக் கண்களை மூடிக்கொண்டும் கவனிக்கத் தெரிந்தவன்தான் தன்னையே கவனிக்கத் தொடங்குவான் என்பதால், அவர்களுக்கு இப்படியான கடுமையான பயிற்சிகள் அவசியம்.  சீடர்களும் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். இறைமையிடம் ஒப்படைப்பதைப்போல தன்னுடைய ஆசானிடம் தங்களை ஒப்படைப்பதை அவர்கள் இயல்பாகச் செய்வார்கள். அந்தச் சீடர்களின் பக்தியோ நாம் நினைத்துப் பார்க்காத அளவுக்கு அடர்த்தியாக இருக்கும். ஒருபோதும் அவர்கள் தங்கள் குருமார்களின் கண்டிப்புகளை மனத்தில் தேக்கி, மாய்ந்து போவதில்லை.  

சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்... விரஜானந்தரைத் தம் குருவாக ஏற்றுக்கொண்டு, அவருக்கு எல்லாப் பணிவிடைகளும் செய்துகொண்டிருந்தார் சுவாமிஜி தயானந்த சரஸ்வதி.

விரஜானந்தர் பார்வையற்றவர். ஸ்நானம் செய்வதற்காக யமுனா நதி வரை நடந்துசெல்வது அவருக்குக் கடினம். அதற்காக தயானந்தர் யமுனா நதியிலிருந்து தினமும் பன்னிரண்டு குடம் தண்ணீர் கொண்டு வந்து, தம் குருவைக் குளிப்பாட்டுவார். அவர் குடியிருந்த இடத்தைச் சுத்தமாகப் பெருக்கி வைப்பதும் தயானந்தர்தான்.

மேலே... உயரே... உச்சியிலே... - 20

ஒரு நாள், தயானந்தர் தம் குருவின் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் இருந்த குப்பையைக் கவனிக்காமல் விட்டுவிட்டார். குருவின் காலில் அந்தக் குப்பை படவே, அவருக்கு அசாத்திய கோபம் வந்து விட்டது. தயானந்தரின் முதுகில் பளார் பளார் என்று அறைந்தார் அவர்.  

அப்போது தயானந்தர் தம் குருவைப் பார்த்து, 'தயவுசெய்து என்னை முதுகில் அடிக்காதீர்கள். எனக்கு வலிக்கும் என்பதற்காகச் சொல்ல வில்லை. தங்கள் கை வலிக்குமே என்பதற்காகச் சொன்னேன்' என்றார்.

இவ்வாறு, தன்னை அடிக்கும்  குருநாதரின் கை வலிக்கக்கூடாது என்று நினைக்கும் அளவுக்கு அன்பு மிகுந்த  சீடர்கள் அன்றைக்கு இருந்தார்கள். அதனால்தான் அவர்கள் அறிவில் தழைத்து, அகிலத்தையே கவர்ந்தார்கள்.

நம் மனம் எப்போதும், உடனடியாக இனிமை கிடைக்க வேண்டும் என்பதையே நாடுகிறது. சாதித்தவர்கள் அனைவருமே தொடக்கத்தில் பல துன்பங்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட வர்கள். தவம் இருப்பதற்கே தயக்கம் இருந்தால், வரம் எப்படி வாய்க்கும்?

படிக்கிறபோதும் பணிபுரிகிறபோதும் பலர் அப்போது மகிழ்ச்சியாக இருப்பதைப் பற்றி எண்ணுகிறார்களேயொழிய, அதற்குப் பிறகு நிகழக்கூடிய நெருக்கடிகளைப் பற்றி யோசிப்பதில்லை.  

இதுகுறித்து, தாவோவில் ஒரு கதை உண்டு.  

குரங்குகளைக் கவனித்துக் கொள்ளும் ஒருவன், வழக்கமாகக் குரங்குகளுக்கு காலையில் நான்கு பழங்களும், மதியம் மூன்றும், இரவில் இரண்டும் கொடுப்பான்.  

ஒருநாள், அவன் வழக்கத்துக்கு மாறாக காலையில் இரண்டும், மதியம் மூன்றும், இரவு நான்கு பழங்களும் தரத் தொடங்கினான்.  இரவு நேரத்தில் குரங்குகள் அதிக நேரம் உணவு இல்லாமல் இருக்கின்றன என்பதால், இந்த ஏற்பாட்டைச் செய்தான் அவன்.

ஆனால், குரங்குகளுக்குக் கோபம் வந்துவிட்டது. தங்களை அவன் ஏமாற்றுவதாக நினைத்துக் கத்தின; கூண்டுக் கதவுகளை பிடித்து ஆட்டிக் கலவரம் செய்தன. எனவே, அவன் மீண்டும் பழையபடியே பழங்கள் கொடுக்க ஆரம்பித்தான். அவை மகிழ்ச்சி அடைந்தன.

அவன் குரங்குகளுக்குக் கொடுத்த பழங்களின் எண்ணிக்கை, முன்பும் பின்பும் இரண்டும் ஒன்றுதான். ஆனால், கொடுத்த விதம்தான் வேறு! மாணவர்கள் விடுமுறையில் ஜாலியாக ஊர் சுற்றிப் பொழுதை வீணே போக்கிவிட்டு, தேர்வு நேரத்தில் திண்டாடுவதைப் போலத்தான், காலையில் நிறையச் சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று அந்தக் குரங்குகள் நினைத்தன.

நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள், கடினமான பணிகளை எல்லாம் காலையிலேயே செய்து முடித்துவிட்டு, பிறகு மதிய நேரத்தில் எளிய பணிகளை மேற்கொள்வார்கள். அதனால் அவர்கள் பதற்றம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பலர் காலை வேளையில் உல்லாசமாக இருந்துவிட்டு, மாலையில் மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள். உற்சாகத்தைத் தள்ளிப்போடத் தெரிந்தவர்களால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி நடை போடமுடியும்.

தனிமையில் நெடுநேரம் கண்மூடி அமர்ந்திருந்த ஞானியிடம் ஒருவர் கேட்டார்...

'ஐயா! கடவுள் உங்களிடம் என்ன கூறினார்?'

''அவர் எதுவும் சொல்லமாட்டார். கேட்டுக் கொண்டிருப்பார்.''

'அப்படியா..? அவரிடம் நீங்கள் என்ன சொன்னீர்கள்?'

''நானும் எதுவும் சொல்லமாட்டேன். கேட்டுக் கொண்டிருப்பேன்'' என்றார் ஞானி.

ஞானிகளைப் புரிந்துகொள்ள, சொற்களைத் தாண்டிப் பயணிப்பது அவசியம்.  

மகத்தான ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குப் புத்தகங்களின் மூலம் சொல்லிக்கொடுப்பதைவிட, புதிர்களின் மூலம் சொல்லித் தருவார்கள்; சரித்திரத்தின் மூலம் சொல்லிக் கொடுப்பதைவிட, சந்தர்ப்பங்களின் மூலம் சொல்லித் தருவார்கள்; அறிவுரைகள் மூலம் விளக்காமல் அனுபவங்கள் மூலம் ஆழமாகப் பதியவைப்பார்கள்.

அவர்கள் ஒரேமாதிரியான வினாத் தாளை அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிப்பதில்லை; ஒவ்வொரு மாணவரின் தரத்துக்கேற்ப கற்றுத்தரும் முறையைத் தீர்மானிக்கிறார்கள். குப்பியைக் கொண்டுவருபவர்களுக்குக் குடிப்பதற்கும், வட்டிலைக் கொண்டு வருபவர்களுக்கு உண்பதற்கும் அவர்கள் வழங்கி, பசியாற வைக்கிறார்கள்.

(இன்னும் மேலே...)