Published:Updated:

மேலே... உயரே... உச்சியிலே..! - 22

பாரம் சுமக்காமல், பணி செய்! வெ.இறையன்பு, ஓவியம்: அனந்த பத்மநாபன்

மேலே... உயரே... உச்சியிலே..! - 22

பாரம் சுமக்காமல், பணி செய்! வெ.இறையன்பு, ஓவியம்: அனந்த பத்மநாபன்

Published:Updated:
மேலே... உயரே... உச்சியிலே..! - 22

குழந்தைகளைக்கூட படிப்படியாக முதிர்ச்சியுடன் வளர்க்க வேண்டும். வாழ்க்கையின் சிரமமான பகுதிகளை அனுபவிக்க, அவர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும். கங்காருபோல குட்டிகளை கெட்டியாக இழுத்துப் பிடித்தால், பிறகு அவை கீழே குதிப்பதற்கு விரும்பவே விரும்பாது. தொடக்கத்தில் அரவணைப்பு தேவை. ஆனால், வளர வளர அவர்களை வாழ்க்கையின் நிஜங்களுக்குத் தயார்ப்படுத்துவது அவசியம்.  

பருந்துகள் கூடு கட்டும்போது ஒரு நுட்பத்தைக் கையாளுகின்றன.  முதலில், அவை கூர்மையான, குத்தக்கூடிய பொருட்களைக் கொண்டு தங்கள் கூட்டைக் கட்டுகின்றன. பிறகு, அவற்றின்மேல் கம்பளி போன்ற பொருட்களைப் பரப்புகின்றன. பின்னர் அவற்றுக்கு இரையான கோழி போன்றவற்றின் இறகுகளை அந்தக் கூட்டின்மீது பரப்புகின்றன. பின்னர் ஆடு, மாடு போன்றவற்றின் ரோமத்தைக் கொண்டு வந்து மேலே வைத்து, பஞ்சணை போன்ற சுகத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அழகான கூடு, சொகுசாக இருக்கும். அங்குதான் பருந்துகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடக்கத்தில் அந்தக் குஞ்சுகள் இதமான அந்தச் சூழலில் வசதியாக வளர்கின்றன. பின்னர் தாய்ப் பருந்து, ஆடு மாடு போன்றவற்றின் உடல் ரோமங்களை நீக்கிவிடும். இப்போது சொகுசு கொஞ்சம் குறைந்துவிடுகிறது. சில நாட்கள் இதற்குக் குஞ்சுகள் பழகியதும், பறவைச் சிறகுகளையும் பருந்து அப்புறப்படுத்திவிடும். பின்னர், கம்பளி போன்ற மெத்தென்ற பொருட்களையும் அகற்றிவிடும். இறுதியாக, குத்தக்கூடிய பொருட்களோடு அந்தக் கூடு திகழும். குஞ்சுகள் போதிய அளவு வளர்ந்திருக்கும். அவை அந்தக் கூட்டில் சிரமப்படாமல் இருக்க, பறந்து சென்றுவிடும். இப்படித்தான் கழுகு தன் குஞ்சுகளை முதிர்ச்சி அடையவைக்கிறது.

இப்படித்தான், பள்ளிக்கூடத்திலும், வேலை பார்க்கும் இடங்களிலும் சிறிது சிறிதாக நாம் சின்ன பிரச்னைகளிலிருந்து பெரிய சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்கு ஊழியர்களைத் தயார் செய்யவேண்டும். அவர்களுக்கு எடுத்த எடுப்பில் கடினமான சூழலைத் தந்தால், மிரண்டு ஓடிவிடுவார்கள்.   படிப்படியாகத்தான் ஒரு பணியாளரை ஐக்கியப்படுத்திக்கொள்ள வேண்டும். பருந்து குஞ்சுகளுக்குச் செய்வது போன்ற அணுகுமுறை அவசியம். ஆனால், அது பறந்து செல்ல அல்ல; பிரச்னைகளை சவாலாக ஏற்றுப் பணியாற்ற!  

நேர்மையான பணியாளர்களைத் தேர்ந்தெடுப் பதில்தான் நிர்வாகத்தின் வெற்றி அமைந் திருக்கிறது. தொடக்கத்திலேயே மோசமான பணியாளர்கள் வாய்த்தால், நிர்வாகத்தின் நிம்மதி கெட்டுப்போகும். இப்போது மைய அரசால் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ். பணிக்கான தேர்வில், அறவுணர்வு பற்றியும் ஒரு தாள் இடம் பெற்று இருக்கிறது. ஒருவருடைய நியாய உணர்வு குறித்த கேள்விகள் அதில் கேட்கப்படுகின்றன.  

நம் நாட்டில், பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்த கதை ஒன்று உண்டு.  

'நாட்டில் வரி வசூலிக்க ஒரு நேர்மையான ஆளைக் கண்டு பிடிக்கவேண்டுமே, என்ன செய்யலாம்?' என்று ஓர் அரசன் தன் மந்திரியைக் கேட்டான். அதற்கு மந்திரி, 'கவலைப்படா தீர்கள். இந்த வேலைக்கு யார் யார் மனு போட்டிருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் அரண்மனைக்கு நாளை வரச் சொல்லுங்கள்; அவர்களில் நேர்மையான ஆளை நான் கண்டுபிடித்துக் கொடுக்கிறேன்' என்றார்.

அடுத்த நாள் காலையில், எல்லா மனுதாரர் களும் அரச சபையில் அரசர் முன் கூடினர். மந்திரி அவர்களைப் பார்த்து, 'நீங்கள் எல்லோரும் நாட்டியம் ஆடுங்கள்! யார் நன்றாக ஆடுகிறீர்கள் என்று பார்க்கவேண்டும்' என்றார்.

மேலே... உயரே... உச்சியிலே..! - 22

ஒருவரைத் தவிர, மற்ற எல்லாரும் ஆடாமல் பேசாமல் நின்றனர்.  ஒருவர் மட்டும் குதித்து குதித்து ஆடினார்.

'இவர்தான் நேர்மையான மனிதர். இவரைத்தான் நீங்கள் வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும்' என்று சொன்னார் மந்திரி.

'எப்படிச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டார் அரசர்.

'இவர்கள் எல்லாரையும் ஓர் இருட்டு அறையின் வழியாக இந்தச் சபைக்கு வரும்படி ஏற்பாடு செய்திருந்தேன். அந்த இருட்டு அறையில், திறந்த சாக்குகளில் நிறைய பொற்காசுகள் வைத்திருந்தேன். நடனம் ஆட மறுத்தவர்களைச் சோதனை போடுங்கள்; தங்க நாணயங்கள் கிடைக்கும். ஆடினால், எங்கே இடுப்பிலிருந்து நாணயங்கள் கீழே விழுந்து தங்களைக் காட்டிக் கொடுத்துவிடுமோ என்று பயந்துதான் இவர்கள் ஆடவில்லை'  என்றார் மந்திரி.

பணியைச் செய்கிறபோது, சிலர் அதிகமான பதற்றத்துக்கு ஆளாகிவிடுவார்கள். இப்போது சின்ன வயதிலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இதயக்கோளாறு போன்ற பல உபாதைகளுக்கு ஆளாகிவிடுவது வாடிக்கையாக இருக்கிறது. சிரமப்பட்டுச் சம்பாதித்த பணத்தைப் பலர் மருத்துவமனைகளுக்குச் செலவிடுவதைப் பார்க்கிறோம். இதற்குக் காரணம், செய்கிற பணியை எப்படி எடுத்துக்கொள்வது என்பது தெரியாததுதான்.

பலர் உலகத்தையே தாங்கள்தான் தாங்குவது போல நினைத்துக்கொண்டு பணியாற்றுகிறார்கள். அது அவர்களுக்கு மிகப் பெரிய சிரமத்தைக் கொடுத்துவிடுகிறது. மன அழுத்தத்தைக் கொடுத்துவிடுகிறது. அவர்களுடைய மனம் இயல்பாகச் சிந்திக்க முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகிறது. இதிலிருந்து சற்று விலகி நின்று பணியை அணுகினால், மன அழுத்தமும் இருக்காது; சிறப்பாகவும் பணி புரிய முடியும்.

இது குறித்து, நம் நாட்டில் கதை ஒன்று உண்டு.  

ஓர் அரசன் மிகவும் பொறுப்புடன் தனது நாட்டை ஆண்டு வந்தான். ஆனால், அவனுக்குத் திருப்தி இல்லை.  தினமும் புதுப் புது பிரச்னைகள்; அவற்றைத் தீர்ப்பதற்குள் அடுத்த பிரச்னைகள். சலித்துக் களைத்துப் போனான் மன்னன்.  

காட்டில் ஒரு ஞானி இருப்பதாகக் கேள்விப் பட்டு, அவரைத் தேடிச் சென்று, காலில் விழுந்தான். 'குருவே! என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. தினம் தினம் புதுப் புதுப் பிரச்னைகளைச் சமாளித்துச் சமாளித்து, எனக்கு அலுத்துவிட்டது. நான் அயர்ந்துவிட்டேன். தாங்கள்தான் எனக்கு ஏதாவது வழி சொல்ல வேண்டும்' என்று கேட்டான்.  

'அரசாங்கத்தை  நிர்வகிப்பது அத்தனை கஷ்டமாக இருக்கிறது என்றால், பேசாமல் அதை விட்டுவிடேன்' என்றார் ஞானி.  

அரசனுக்கோ பொறுப்பைப் பிறரிடம் ஒப்படைக்கத் தயக்கம். நாடு குட்டிச்சுவராகி விடுமோ என்கிற கலக்கம்.

'அரசாங்கத்தை உன் மகனிடம் ஒப்படைத்து விட்டு, நீ காட்டுக்கு வந்துவிடு!' என்றார் ஞானி.

'என் மகன் சிறுவன். என்னாலேயே தாங்க முடியாத அரச பாரத்தை அவன் தாங்குவானா, சுவாமி?' என்று கேட்டான் மன்னன்.

'அப்படியானால் உன் ராஜ்யத்தை என்னிடம் ஒப்படைத்துவிடு; நான் கவனித்துக்கொள்கிறேன்' என்றார் ஞானி.

'தாராளமாகத் தருகிறேன். அதில் எனக்கு மகிழ்ச்சியே!' என்றான் மன்னன்.

'சரி, உன் ராஜ்யத்தை எனக்குக் கொடுக்கிறேன் என்று சத்தியம் செய்து கொடு!'

ஞானி கேட்டபடியே, அரசன் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு, அரண்மனைக்குத் திரும்பக் கிளம்பினான்.

''சரி, அடுத்து என்ன செய்வதாக இருக்கிறாய்?'' என்று கேட்டார் ஞானி.

'அரண்மனை பொக்கிஷத்திலிருந்து கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு,  அடுத்த நாட்டுக்குப் போய் வியாபாரம் செய்து பிழைக்கலாம் என்று பார்க்கிறேன்' என்றான் மன்னன்.

'முடியாது! அரண்மனை பொக்கிஷம் இப்போது எனக்குச் சொந்தம்.'

'ஆமாம். தாங்கள் சொல்வது சரிதான்! சரி, வேறு எங்காவது சென்று ஏதேனும் வேலை செய்து பிழைத்துக்கொள்கிறேன்!''

'வேறு எங்கோ எதற்காகச் செல்லவேண்டும். எனக்கு இத்தனை பெரிய ராஜ்யம் இருக்கிறது. நீ என்னிடமே ஏதாவது வேலை செய்து பிழைக்கலாமே?'

'மகிழ்ச்சி! என்ன வேலை தருகிறீர்களோ, உத்தரவிடுங்கள்! செய்கிறேன்.'

'நீயோ அரசனாக இருந்து அரசாங்கத்தை நிர்வகித்துப் பழகியவன். எனவே, இந்த ராஜ்யத்தை எனக்குப் பதிலாகக் கவனித்து நடத்து. உனக்குச் சம்பளம் மட்டுமே தரப்படும். நல்லது கெட்டதுக்கு நான் பொறுப்பு!'

அரசன் அன்றுமுதல், ஞானியின் சேவகனாக இருந்து அரச நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பித்தான். என்ன ஆச்சர்யம்! முன்பு என்ன காரியங்கள் செய்தானோ, அவற்றையேதான் இப்போதும் செய்தான். ஆனால், நிம்மதியாகத் தூங்கினான். அவனையும் மீறி தவறுகள் நடந்தால், அவன் அதற்காகக் கவலைப்படவில்லை. அரசாங்கம் ஞானியினுடையது; அது அவர் பொறுப்பு என்று தன் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினான்.  

ஒரு மாதம் கழித்து, ஞானி அவனைப் பார்க்க வந்தார்.

'எப்படி இருக்கிறது புது வேலை?' என்று கேட்டார்.

'நிம்மதியாக இருக்கிறேன், சுவாமி!' என்றான் அரசன் மகிழ்ச்சியாக.

'அரசாங்கம் உன்னுடையது என்று நினைத்துக் கொண்டிருந்தபடியால் நீ அவதிப்பட்டாய். அரசு உன்னுடையது அல்ல என்ற எண்ணம் வந்ததும், உனக்கு நிம்மதி ஏற்பட்டுவிட்டது. இந்த அரசு உனக்கு முன்னாலும் இருந்தது; உனக்குப் பின்னாலும் இருக்கப்போகிறது. ஆகவே, பற்றற்று கடமையைச் செய்தால்தான் மனிதன் இன்பமாக வாழலாம். இந்தப் பாடத்தை உனக்கு அறிவுறுத்துவதற்காகத்தான் ராஜ்யத்தை எனக்குக் கொடுக்கச் சொன்னேன்' என்றார் ஞானி. பணியை பாரமாக நினைக்காமல், கொண்டாட்டமாக நினைக்க வேண்டும்; பதக்கமாக நினைக்காமல், சேவையாக நினைக்க வேண்டும். பதவி, நம் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு தள்ளாடுவதற்காகவோ, தடுமாறுவதற்காகவோ அல்ல. விலகி நின்று பார்த்தால் எந்தப் பிரச்னையையும் தெளிவாக அணுகலாம். நமது அடுத்த தலைமுறையையும் பொறுப்பாக உருவாக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் விட்டுச்சென்ற பணி தொய்வு ஏற்படாமல் தொடரும்.

  (இன்னும் மேலே...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism