Published:Updated:

இலக்கியத்தில் மாற்று சிந்தனை

வெ.இறையன்பு

இலக்கியத்தில் மாற்று சிந்தனை

வெ.இறையன்பு

Published:Updated:
இலக்கியத்தில் மாற்று சிந்தனை

தமிழ்நாட்டு இலக்கியங்களில் மாற்றி சிந்தித்து பல பாடல்களைப் படைத்தவர்கள் இருக்கிறார்கள். தமிழுக்கே உரிய தனிச் சிறப்பாக சித்திரக்கவி போன்ற வடிவங்கள், நம் முன்னோர் மாற்றி யோசித்ததால் கிடைத்த பொக்கிஷங்கள். அதைப்போலவே வெளிக் கட்டத்தைப் படித்து, அதற்கு உள்ளே இருக்கும் அடுத்த கட்டத்தைப் படித்து, தொடர்ந்து வாசிப்பதன் மூலம் முழுக் கவிதையை ருசிக்கும் வடிவங்களும் தமிழில் உண்டு!  

'சிலேடை’ என்பது தமிழில் உள்ள இன்னொரு வடிவம்.  இரண்டு பொருட்களை ஒரே பாடலின் மூலம் உணர்த்துவது வித்தியாசமான சிந்தனையின் வெளிப்பாடு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விருந்து ஒன்றில் தமிழறிஞரான வெள்ளைவாரணமும், கி.வா.ஜ அவர்களும் அருகருகில் அமர்ந்திருந்தனர். வெள்ளைவாரணம் அவர்களது இலையில் கேசரி பரிமாறப்பட்டது. அவருக்கோ சர்க்கரை வியாதி. எனவே இனிப்பைப் பார்த்து துணுக்குற்று, ''இதை எடுத்துவிடுங்கள்' என்று கத்தினார். உடனே கி.வா.ஜ அவர்கள், ''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!' என்றார். வாரணம் என்றால் 'யானை’ என்று பொருள்; 'கேசரி’ என்றால் சிங்கம். எனவே சிங்கத்தைப் பார்த்து யானை பயப்படுகிறதோ எனும் பொருளில் அவ்வாறு சிலேடையாகச் சொன்னார். இப்படி, வரிக்கு வரி சிலேடை பேசுவது கி.வா.ஜ. அவர்களின் தனித் திறமை.  

தமிழில் சிலேடைகளுக்குப் புகழ்பெற்றவர் கவிகாளமேகம். அவரிடம் ஒருவரை அறிமுகப்படுத்தி, 'இவர் கவிராயர்’ என்று சொன்னார்கள். 'கவிராயர்’ என்பதற்கு கவிகளின் அரசன் என்றொரு பொருள் உண்டு. 'குரங்குகளின் தலைவன்’ என்ற பொருளும் உண்டு. காளமேகப் புலவர் அவரிடம், 'இவர் குரங்கு களின் தலைவன் என்றால், இவருக்கு வால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’ என்று கேலி செய்து பாடினார்.

வால் எங்கே நீண்ட வயிறு எங்கே முன்இரண்டு

கால்எங்கே உள்குழிந்தகண் எங்கே சாலப்

புரவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்

கவிராயர் என்றுஇருந்தக் கால்

தமிழ் இலக்கியத்தில் குறுந்தொகையில் உள்ள இறையனார் என்ற கவிஞர் எழுதிய பாடல் சிந்தனைக்கு உரியது. அது புகழ்பெற்ற புராண திரைப்படமான திருவிளையாடலிலும் இடம்பெற்றது. புறப்பாட்டில் அந்தப் பாடல் ஒலித்து எழுதப்பட்ட விளக்கமே, சுவைபட திரைப்படத்தில் பிரபலமான நடிகர்கள் மூலமாக கையாளப்பட்டு பிரசித்தியானது.  

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!

காமம் செப்பாது, கண்டது மொழியுமோ;

பயலியது கெழீஇய நட்பின் மயில் இயற்

செறி எயிற்று அரிவை கூந்தலின்

அறியவும் உளவோ நீ அறியும் பூவே?

தலைவன் தன் காதலியின் கூந்தல் மணத்தைப் பற்றிச் சிலாகித்து வண்டிடம் கேட்பதைப்போல அமைந்து இருக்கிறது இந்தப் பாடல்.  பல மலர்களை ஸ்பரிசிக்கும் இயல்பு கொண்டதால், 'வண்டே, நீ எத்தனையோ மலர்களை முகர்ந்திருப்பாய். என் மனைவியின் கூந்தலைப்போல மணமுள்ள மலரை நீ பார்த்திருக்கிறாயா?’ என்பதுதான் இந்தப் பாடலின் பொருள்.

இதில் நக்கீரர் குறுக்கிட்டு, 'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமே இருக்க முடியாது’ என்று மட்டையடியாக ஒரு வசனத்தைப் பேசுகிறார்.  

இலக்கியத்தில் மாற்று சிந்தனை

ஆனால்... நம் தலையில் உள்ள முடியின் வேர்களில் இருக்கும் சபாஷியஸ் சுரப்பி கள், ஒருவிதமான எண்ணெய்ப் பசை உள்ள திரவத்தை சுரக்கின்றன. அதனால் தலை பளபளப்பாக இருக்கிறது. சில நேரங்களில் தூசி படிவதற்கும் அதுதான் காரணம்.  அந்த திரவம் தலைக்கு ஒரு வாசனையைத் தருகிறது. ஆகவே, 'மனிதக் கூந்தலுக்கு இயற்கையில் மணம் இல்லை’ என்ற நக்கீரரின் கூற்று தவறு.  

ஆனாலும், புலவர் தந்த பாட்டில் ஒரு பொருள் குற்றம் உண்டு. 'தும்பி’ என்கிற வண்டு பூக்களை ஸ்பரிசிப்பதாகச் சொல்வது, அது தேனை நுகர்கிற பூச்சி என்கிற பொருளில்தான். இலக்கியத்தில்  பெரும்பாலும் தேனீயையும், தேனீ குடும்பத்தைச் சார்ந்த பூச்சிகளையும் வண்டினங்களாகக் கருதும் மரபு ஒன்று உண்டு.  இரண்டும் வெவ்வேறு குடும்பத்தைச் சார்ந்தவை. மலர்களில் மையமிட்டு, மகரந்தச்  சேர்க்கை நடத்த உதவுவது

தேனீ இனத்தைச் சார்ந்த சில பூச்சிகள்தான்.  'பம்புல்  பீ’  என்ற குளவி இனம் வண்டு போல இருக்கும். அது தாமரை, சாமந்தி, சூரியகாந்தி போன்ற மலர்களில் தேன் உண்டு மயங்கிக் கிடக்கும்.  

வண்டுகள் தேனை சேகரிப்பது இல்லை. சில வண்டுகள் பூவையே கடித்துத்  தின்கின்ற வகையைச் சார்ந்தவை. அவற்றுக்கு மகரந்தத்தைப் பற்றியோ, வாசனையைப் பற்றியோ தெரியாது. எனவே, தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.

இலக்கியங்கள் மாயாவாதக் கற்பனை களைச் சொல்லி, நமக்குச் சாதாரண செய்திகளைப் புரியவைக்கின்றன. மகாபாரதத்தில் சந்தனு மகாராஜா, சத்தியவதி என்ற மீனவப் பெண்ணிடம் காதல் கொள்கிறார். அவருக்கு ஏற்கெனவே கங்கையின் மூலம் பிறந்த திறமை வாய்ந்த தேவவிரதன் என்ற மகன் இருக்கிறான்.  ஆனாலும், அவர் உள்ளம் சத்திய வதியை  நாடியது. அவளோ சந்தனுவை மணந்து கொள்ள தந்தையின் மூலம் நிபந்தனை விதிக்கிறாள்.

சத்தியவதியின் தந்தை, 'உங்களைத் திருமணம் செய்து கொண்டால் என் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகளே பட்டத்துக்கு வர வேண்டும்' என்று பிடிவாதம் பிடிக்கிறான். சந்தனு அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதேநேரம், சத்தியவதியை மறக்கமுடியாமல் தவிக்கவும் செய்தார். அவருடைய மனவாட்டத்தை அறிந்த தேவ விரதன் சத்தியவதியின் இல்லத்தை நெருங்கி அனைத்தையும் அறிந்துகொள்கிறான்.

'நான் ராஜ்யத்துக்கு உரிமை கோர மாட்டேன்' என்று சத்தியம் செய்கிறான். ஆனாலும், சத்தியத்தை நம்பாதவளாகவே இருக்கிறாள் சத்தியவதி. 'உனக்குக் குழந்தைகள் பிறந்து, அவர்கள் உரிமை

கோரினால் என்ன செய்வது?' என்று அவளுடைய தந்தை கேட்கிறார். இப்போது தேவவிரதன் இன்னொரு சத்தியம் செய்கிறான், 'நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்'  என்று. அப்பொழுது வானத்திலிருந்து 'பீஷ்ம பீஷ்ம’ என்ற குரல் ஒலிக்கிறது!

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது. சத்தியவதியின் புதல்வன் வாரிசு இன்றி இறந்துபோகிறான். குரு வம்சம் தொடர பீஷ்மரையே தன் மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் தருமாறு  சத்தியவதி கெஞ்சுகிறாள்.  ஆனால் பீஷ்மரோ மறுத்துவிடுகிறார். நியாயப்படியான ஆசைகளே நிறை வேற முடியும். அநியாயமானவை ஏதேனும் ஒரு நொடியில் தூள் தூளாக உடைந்து விடும் என்பதுதான் மகாபாரதம் உணர்த்தும் மகத்தான உண்மை.

வாழ்வைப் பற்றிய சிக்கல்களை முடிச்சுப் போட்டு நம்முன் வைத்து அவற்றை நாம் எப்படி தீர்க்க முயற்சி செய்கிறோம் என்பதை இலக்கியங்கள் பரிசோதிக்கின்றன.

அவற்றில் வரும் திருப்பங்கள் நமக்கான இடைவெளியை கணிசமாக ஏற்படுத்திக் கொடுக்கின்றன. நாம் அந்தச் சிக்கலை தீர்ப்பது குறித்து நம் அளவில் சிந்திப்பதற்கு வாய்ப்பு உண்டு. நாம் அதைப் பயன்படுத்தாமல் போனால், கணக்கைப்  போடாமல் விடையை கடைசிப் பக்கத்தில் பார்க்கும் மாணவனைப்போல, இலக்கியத்தின் சுவாரஸ்யம் பிடிபடாமலேயே போய்விடும்.

(அடுத்த இதழில் நிறைவுறும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism