Published:Updated:

அன்னை காட்டிய வழி!

அன்னை காட்டிய வழி!

அன்னை காட்டிய வழி!

''நீ கோழை இல்லை. அளவற்ற ஆற்றலும் வீரமும் உன்னுள்ளே புதைந்து கிடக்கின்றன. நீ சிங்கத்தைப் போல் சிலிர்த்து எழு'' என்று வீர இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

ஒரு தீபத்தின் சுடர் இன்னொரு தீபத்தை ஏற்ற உதவுவதுபோல், துணிவுடைய ஒருவன் தன்னைச் சேர்ந்த மற்றவர்களிடமும் துணிவை, வீரத்தை ஏற்படுத்துகிறான். தனியொரு மனிதனின் வீரம், ஒரு சமுதாயத்தையே வீறுகொண்டு எழவைத்த கதைகள், நம் தேசத்தின் வரலாற்றுப் பக்கங்களில் நிறைய உண்டு.

சரி! வீரம் எத்தகையதாக இருக்க வேண்டும்?

பாண்டிச்சேரி ஸ்ரீஅரவிந்த அன்னை வீரத்தின் தன்மைகளை விவரிப்பதுடன், அதன் வகைப்பாடுகளையும் தமக்கே உரிய பாணியில் மிக எளிமையாக விளக்கியிருக்கிறார்...

தற்காக்கும் வீரம்...

வீரமானது பல தடைகளையும் கஷ்டங்களையும் வென்று வெற்றிக்கான கதவைத திறக்கும் வல்லமை படைத்தது.

நீ தண்ணீரில் விழுந்துவிடுகிறாய். பெரும் நீர்ப்பரப்பைக் கண்டு நீ அஞ்சவில்லை. உனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த ஆசிரியரை நன்றியுடன் வாழ்த்திவிட்டு, உன்னுடைய கைகளையும் கால்களையும் பயன்படுத்தி அலைகளுடன் போராடி, தப்பித்துக் கரையேறிவிடுகிறாய். இவ்வாறு நீ  துணிச்சலுடன் நடந்துகொள்கிறாய்.

நீ உறங்கிக் கொண்டிருக்கிறாய். 'தீ’ என்று கூச்சல் கேட்டதும் விழித்துக்கொள்வாய். படுக்கையில் இருந்து குதித்தெழுகிறாய். தீயின் செந்நாக்குகளைக் காண்கிறாய். அதைக் கண்டு நீ பயந்து நடுங்கவில்லை.  அந்த புகை, தீப்பொறிகள், ஜ்வாலையினூடே பாய்ந்து தப்பித்து விடுகிறாய்.

இந்த உதாரணங்களில் காட்டப்பட்ட துணிவு, தங்களையே காப்பாற்றிக் கொள்வதற்கான துணிவாகும். இதைவிடவும் உயர்ந்ததான வீரம் ஒன்று இருக்கிறது. அது பிறருக்காக அபாயத்தை எதிர்கொள்ளும் வீரம்.

அன்னை காட்டிய வழி!

பிறரைக் காக்கும் வீரம்...

வரலாற்று நூல்களிலும், செய்தித் தாள்களிலும் இத்தகைய தீரச் செயல்களைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். தீப்பிடித்துக் கொண்ட வீடுகளில் சிக்கிக்கொண்டிருக்கும் மனிதர்களை தீயணைக்கும் படையினர் காப்பாற்றியதையும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுத்த செய்திகளையும், பூகம்பத்தின்போது இடிபாடுகளுக்கு இடையே மாட்டிக்கொள்ளும் அபாயத்தையும் பொருட்படுத்தாமல், அதனுள்ளே அகப்பட்டுக்கொண்ட மக்களை, வெளியே தூக்கி வந்து காப்பாற்றிய மனிதர்களைப் பற்றியும் படித்திருப்பீர்கள். இதுவெல்லாம் மற்றவர்களைக் காக்க வெளிப்படுத்தும் வீரம் ஆகும்.

தார்மிகத் துணிவு!

ராமாயண விபீஷணனின் வீரம் சற்று மாறுபட்டது. இலங்கை வேந்தனான ராவணன், ராமனின்  மனைவியான சீதாதேவியை அபகரித்துக் கொண்டுவந்து அசோக வனத்தில் சிறைப்படுத்தினான்.

பெரும்புகழ் படைத்த ராமன் சீதை இலங்கையில் இருப்பதை அறிந்து, வானர சேனையின் துணையுடன் அவளை மீட்கப் புறப்பட்டான். ராமன் வந்துவிட்டான் என்பதை அறிந்த ராவணன் துணுக்குற்றான். இந்த நிலையில் அவனிடம் இரண்டுவிதமான அறிவுரைகள் கூறப்பட்டன.

அவனுடைய சிங்காதனத்தைச் சூழ்ந்திருந்த பிரதானிகள் கூட்டம், ''தேவர்களையே வென்ற உமக்கு ராமனையும் வானரர்களையும் வெல்வது பெரிய காரியமா?'' என்றது.

ஆனால், ராவணனின் தம்பியான விபீஷணனோ மெள்ள அண்ணனை நெருங்கி, இவ்வாறு கூறினான்:

''அண்ணா நீர் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் இந்த அழகிய இலங்கைத் தீவை ஆள விரும்பினால் சீதையை விட்டுவிடும். அவள் இன்னொருவரின் மனைவி. நீர் ராமனிடம் மன்னிப்பு வேண்டினால், அவர் மறுக்கமாட்டார். கர்வத்தினால் முட்டாள்தனமான காரியத்தைச் செய்யாதீர்'' என்றான்.

அறிவிற் சிறந்த மால்யவானும் விபீஷணனின் பேச்சை கேட்டு நடக்கும்படி வேண்டினான். ஆனால் ராவணனோ அவர்களிடம் சீறி விழுந்தான். அவனது கோபம் கண்டு மால்யவான் பயந்து ஒதுங்கினான். ஆனால் விபீஷணன் அஞ்சவில்லை.

''அண்ணா! ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் அறிவோ மடைமையோ குடியிருக்கிறது. அறிவு இருந்தால் அவனுடைய வாழ்வு செவ்வனே செல்கிறது. மடைமை இருந்தால் எல்லாம் தவறாகச் செல்கின்றன. அண்ணா, நீர் உமது இதயத்தில் மடைமைக்கு இடம் கொடுத்துவிட்டீர்கள். ஏனெனில், தவறான ஆலோசனை சொல்பவர்களுக்கு நீர் செவி சாய்க்கிறீர். அவர்கள் உம்முடைய உண்மையான நண்பர்கள் அல்ல'' என்று தைரியமாக எடுத்துச் சொன்னான்.

அப்படியும் விபீஷணனின் கருத்தை ராவணன் ஏற்கவில்லை. அவனைக் காலால் உதைத்துத் தள்ளினான். துயரம் நிறைந்த உள்ளத்துடன் அண்ணனின் மாளிகையை விட்டு வெளியேறினான் விபீஷணன்.

அவன் அச்சம் என்பதே அறியாதவன். அவன் காட்டியது தூலத் தூணிவு. ஏனெனில் அவன் ராவணனின் தண்டனைக்கு அஞ்சவில்லை. அது மனத் துணிவு ஆகும். அவனைப் போலவே வீரமுடைய மற்ற பிரதானிகள் பேசத் துணியாத சொற்களை அவன் அரசனிடம் பேசினான். மனத்தின் இந்தத் துணிவுக்கு தார்மீக துணிவு என்று பெயர்.

ஆக, மூன்று வகையான துணிவுகளைப் பற்றி பார்த்தோம். எவ்வித ஆரவாரமும் இல்லாத பயனுள்ள சிறந்த காரியங்களை சாதிக்கும் அமைதியானதொரு துணிவும் உண்டு.

நதிக்கரையோரம் அமைந்திருந்தது அந்த கிராமம். அங்குள்ள மக்கள் இதுவரையிலும் சித்தார்த்தரது உபதேசத்தைக் கேட்டது இல்லை. எனவே, அந்த கிராமத்துக்குச் சென்று போதனைகள் செய்ய தீர்மானித்தார்.

ஆற்றின் கரையோரம் கிளை விரித்து நின்ற ஒரு பெரிய மரத்தின் அடியில் சாக்கிய முனி அமர்ந்திருந்தார். மறு கரையில் கிராமத்து மக்கள் கூடியிருந்தார்கள். பகவான் பேசத் தொடங்கி அன்பு, தூய்மை ஆகிய தமது தர்மத்தை உபதேசித்தார்.

ஏதோ மந்திர சக்தியினால் நிகழ்ந்தது போல், அவருடைய சொற்கள் ஓடும் தண்ணீரின் மீது மிதந்து சென்று கிராம மக்களின் செவிகளில் விழுந்தன. ஆனால், அந்த கிராமத்து மக்கள் பகவானின் உபதேசத்தில் நம்பிக்கை வைக்க மறுத்து, அவருக்கு எதிராக முணுமுணுத்தனர்.

ஒரே ஒருவன் மட்டும் அவருடைய உபதேசத்தை இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு, அவர் அருகில் நெருங்க விரும்பினான்.

அன்னை காட்டிய வழி!

ஆற்றைக் கடக்க பாலமும் இல்லை; தோணியும் இல்லை. ஆனால் துணிச்சலும் ஆர்வமும் மிகுந்த அந்த மனிதன், ஆற்றின் தண்ணீரின் மீது நடக்க ஆரம்பித்துவிட்டான். நடந்து புத்த பகவானை அணுகி, அவரை வணங்கி, அவருடைய அமுத மொழிகளைக் கேட்டு, மேலும் பெருமகிழ்வு கொண்டான்.

உண்மையிலேயே அந்த மனிதன் ஆற்றின் மேல் நடந்து சென்றானா என்பது நமக்குத் தெரியாது. எனினும் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு வேண்டிய துணிவும் ஆர்வமும் அவனுக்கு இருந்தன.

ஆழமான ஆறுகளை கடக்க ஒருவகைத் துணிவு வேண்டும். நல்வழியில் இறங்க இன்னொரு வகைத் துணிவு வேண்டும். நல்வழியில் இறங்குவதைவிடவும், அதைவிட்டு விலகாமல், தொடர்ந்து அதில் சென்றுகொண்டிருக்க இன்னும் அதிகத் துணிவு வேண்டும்.

''நல்லதைச் செய்யுங்க, செய்துவிட்டு நல்ல செயல் தனக்கு உரிய நல்ல பலனைக் கட்டாயம் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்'' என்று உபதேசிப்பார் புத்தர்.

''கோழியைப் பாருங்கள். அது முட்டையிட்டு அடைகாக்கிறது. தன்னுடைய சின்னஞ்சிறு குஞ்சுகள் தங்களின் அலகுகளால் முட்டையை உடைத்து வெளிவர முடியுமோ முடியாதோ என்று அவை அலட்டிக்கொள்வது இல்லை. அதேபோன்று உங்களுக்கும் பயம் இருக்கக் கூடாது. நான் போதிக்கும் சீரிய தர்மத்தை நீங்கள் விடாது கடைப்பிடித்து வந்தால், நீங்களும் ஞான ஒளியைப் பெறுவீர்கள்'' என்று அறிவுறுத்துவார்.

உண்மைதான். நேரிய வழியில் நடத்தல், புயல், இருள், துன்பம் ஆகியவற்றைக் கண்டு பயப்படாமல் என்ன நேர்ந்தாலும் விடாமுயற்சியுடன் எப்போதும் முன்னோக்கியே செல்லுதல். இவையே உண்மையான தீரம் ஆகும்.

(பாண்டிச்சேரி ஸ்ரீஅரவிந்த ஆச்ரம வெளியீடான அமர கதைகள் நூலில் இருந்து...)

தொகுப்பு: கா. ராஜேஸ்வரி, தூத்துக்குடி

அடுத்த கட்டுரைக்கு