Published:Updated:

10 அடி குழிக்குள் 48 நாள் விரதம்! - பரபரப்பை ஏற்படுத்தும் ஈரோடு சாமியார்

விரதமிருக்கும் ‘நிஜ ஆனந்த காசி விசுவநாத அடிகளார்’
விரதமிருக்கும் ‘நிஜ ஆனந்த காசி விசுவநாத அடிகளார்’

விளக்கு வெளிச்சத்தில் 10 அடி ஆழமுள்ள குழிக்குள் அமர்ந்திருக்கும் சாமியார், அவ்வப்போது தலைகீழாக நின்று தியானம் செய்கிறார். இதைப் பொதுமக்கள் மிரட்சியுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

சித்தர்கள், சாமியார்களின் செயல்கள் எப்போதுமே பரபரப்புக்குப் பஞ்சமில்லாதவை. சமீபத்தில்கூட சிவகங்கை மாவட்டத்தில் இருளப்ப சுவாமி என்பவர் ஜீவ சமாதி அடையப்போவதாகச் சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல் ஈரோட்டில் ஒரு சாமியார் 10 ஆடி ஆழத்துக்குக் குழி வெட்டி, 48 நாள் விரதத்தில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“நீ எங்கேயோ போகப்போற!” - ‘ஜகா’ வாங்கிய ‘ஜீவசமாதி’ சாமியார் - சிறைக்கு சென்ற
அ.தி.மு.க பிரமுகர்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகாவில் இருக்கிறது நல்லிக்கவுண்டன் புதூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (57). ஆன்மிகம் மற்றும் யோகா மீது ஆர்வம் கொண்டவர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு யோகா பயிற்றுவித்து வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் ஆன்மிகம் மீது தீவிர பற்று ஏற்பட, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டுக் கிளம்பியவர் தன்னை `நிஜ ஆனந்த காசி விசுவநாத அடிகளார்’ என்று சொல்லிக்கொண்டு காசி, கேதர்நாத் எனச் சுற்றித் திரிந்திருக்கிறார்.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை என வீட்டுக்கு அவ்வப்போது வந்து சென்றுகொண்டிருந்தவர், கடந்த வாரம் திடீரென வீட்டுக்கு வந்து `10 அடி ஆழ குடிவெட்டி, அதனுள் 48 நாள்கள் ஆகாரம் இல்லாமல், மெளன விரதம் இருக்கப்போகிறேன்’ என்றிருக்கிறார். ஆரம்பத்தில் அதிர்ந்துபோன குடும்பத்தார் அதன் பிறகு அவருடைய செயலுக்கு ஓகே சொல்லியிருக்கின்றனர்.

விரதமிருக்கும் ‘நிஜ ஆனந்த காசி விசுவநாத அடிகளார்’
விரதமிருக்கும் ‘நிஜ ஆனந்த காசி விசுவநாத அடிகளார்’

அதையடுத்து அவருடைய சொந்த நிலத்தில் 10 அடி ஆழம், 5 அடி அகலத்துக்குக் குழி வெட்டி அதனுள் உட்கார்ந்து கடந்த ஒரு வாரமாக விரதத்தில் ஈடுபட்டு வருகிறார். சிவலிங்கம் மற்றும் நந்தியை வைத்து வேளா வேளைக்கு பூஜை செய்து வருகிறார். சாப்பாடு என எதுவும் கிடையாது. ஒருநாளைக்கு இரண்டு இளநீர் மட்டுமே குடிக்கிறார். யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. எல்லாம் செய்கைதான். அவ்வப்போது குழியினுள் தலைகீழாக நின்று தியானம் செய்கிறார். கூட்டம் கூட்டமாக வரும் பொதுமக்கள் இவற்றையெல்லாம் மிரட்சியுடன் பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.

எதற்காக இந்த விரதம் இருக்கிறீர்கள்? 48 நாள் விரத முடிவில் என்ன செய்யப்போகிறீர்கள்? என நம்முடைய கேள்விகளை ஒரு சீட்டில் எழுதி சாமியாரிடம் கொடுத்து பதில் கேட்டோம். கிட்டத்தட்ட 5 பக்கங்களுக்கு பதில் எழுதிக் கொடுத்தார்.

தலைகீழாக தியானத்தில்  ‘நிஜ ஆனந்த காசி விசுவநாத அடிகளார்’
தலைகீழாக தியானத்தில் ‘நிஜ ஆனந்த காசி விசுவநாத அடிகளார்’

அதில், ``உலக நன்மைக்காகவே இந்த விரதத்தை நான் மேற்கொள்கிறேன். நான் அமர்நாத் யாத்திரையில் இருக்கும்போது பனிப் பொழிவால் என்னுடைய உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்தநேரத்தில் 8 அடி உயரமுள்ள மகான் ஒருவர் என்னுடைய கனவில் தோன்றினார். `உன்னுடைய ஊருக்குச் சென்று 10 அடி பாதாளத்தில் லிங்கத்தை வைத்து மெளனமாக 48 நாள்ள் கடும் தவம் இருக்க வேண்டும்’ எனச் சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். அதையடுத்துதான் இந்த 48 நாள் விரதத்தை நான் செய்து வருகிறேன். இதற்கு முன்பு 20 நாள்கள் வரை இதுபோன்று விரதம் இருந்திருக்கிறேன். விரத முடிவில் 64 அடி உயரத்துக்கு லிங்க வடிவில் கோயில் கட்ட இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

பொதுமக்கள் மட்டுமல்லாது, அரசியல் பிரமுகர்களும் சாமியாரை வந்து பார்த்து ஆசி வாங்கிச் செல்கின்றனர். நாம் சென்றிருந்த சமயம், ஈரோடு மாவட்டம், அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜா கிருஷ்ணன் அவருடைய ஆதரவாளர்களுடன் பெரும் கூட்டமாக வந்து சாமியாரைச் சந்தித்து ஆசி வாங்கிவிட்டுச் சென்றார்.

ஆசி பெறும் அந்தியூர் எம்.எல்.ஏ ராஜாகிருஷ்ணன்
ஆசி பெறும் அந்தியூர் எம்.எல்.ஏ ராஜாகிருஷ்ணன்

2020 ஜனவரி 1-ம் தேதியன்று 48 நாள் விரதத்தை முடிக்கும் சாமியார் `நிஜ ஆனந்த காசி விசுவநாத அடிகளார்’ ஜனவரி 3-ம் தேதியன்று, கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலுமிருந்து சாமியார்கள், சித்தர்கள், அரசியர் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு