Published:Updated:

பணியிலிருந்து விரட்டப்படுகிறார்களா அர்ச்சகர்கள்? - புதிய நியமனங்களும் சர்ச்சைகளும்!

அர்ச்சகர்கள்
அர்ச்சகர்கள்

"இவை சமூகநீதியைப் பாழ்படுத்தும் நோக்கோடு பரப்பப்படும் பொய் அவதூறுகள். அனைவரும் அர்ச்சகராகலாம் என்பதைப் பொறுக்க முடியாமல் இதுபோன்ற தகவல்களைப் பரப்புகிறார்கள்." - முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று 100-வது நாளான கடந்த ஆகஸ்ட் -14 சனிக்கிழமை அன்று, அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் திட்டத்தின் கீழ் 58 பேருக்குத் திருக்கோயில்களில் பணி நியமன ஆணையைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயின்று பல்வேறு வழக்குகளால் பணி நியமனம் கிடைக்காமல் பல ஆண்டுகளாகக் காத்திருந்த பலருக்கும் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 24 பேர் அர்ச்சகர்களாகவும் 4 பேர் மடப்பள்ளிகளிலும் பணி புரிவதற்கான ஆணைகளைப் பெற்றனர். மேலும், ஓதுவார், வாத்தியங்கள் இசைப்போர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கும் ஆணைகள் வழங்கப்பட்டன. பணி நியமனம் பெற்ற 24 அர்ச்சகர்களில் 5 பேர் பட்டியல் இனத்தைச் சேர்த்தவர்கள்.

அர்ச்சகர் நியமனம்
அர்ச்சகர் நியமனம்

கடந்த 2007-ம் ஆண்டு சென்னை பார்த்தசாரதி கோயில், திருவரங்கம், மதுரை, திருவண்ணாமலை, பழநி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் வைணவ, சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. அதில் அனைத்து சாதியிலுமாக 240 பேர் அர்ச்சகர் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 33 பேர் பயிற்சிக் காலத்தின் ஆரம்பத்திலேயே விலகிவிட்டார்கள். 207 பேர் முழுமையான பயிற்சியை முடித்தார்கள்.

இவர்களுக்கு சுமார் 13 மாதங்கள் தமிழ் மந்திரங்கள், பூஜை முறைகள், கோயில் நடைமுறைகள் பயிற்றுவிக்கப்பட்டன. 2008-ம் ஆண்டு இவர்களின் பயிற்சி முடிந்துவிட, சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால் இவர்களுக்கு பணி ஆணை வழங்கக் கூடாது என்று மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆதி சிவாச்சார்யர்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகித் தடை உத்தரவு பெற்றது. பயிற்சி பெற்றவர்களில் சிலர், வெவ்வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்ட நிலையில், 196 பேர் அரசு ஆணைக்குக் காத்திருந்தார்கள். 2011-ல் ஆட்சி மாற்றம் நிகழ, இவர்களின் அர்ச்சகர் பணி நியமனக் கனவும் தடைப்பட்டது.

அ.தி.மு.க ஆட்சியில் 2018-ம் ஆண்டு மதுரை அழகர் கோயில் நிர்வாகத்தின்கீழ் இயங்கும் ஐயப்பன் கோயிலில் மாரிமுத்து என்ற பயிற்சி பெற்ற மாணவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். 2020-ம் ஆண்டு மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள பிள்ளையார் கோயிலில் தியாகராஜன் என்ற மாணவர் நியமிக்கப்பட்டார். தற்போது, தி.மு.க அரசு புதிதாகப் பொறுப்பேற்று 100-வது நாளில், 24 பேருக்கு அர்ச்சகர் பணி நியமன ஆணையை வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஒருபுறம் அரசுக்குப் பாராட்டுகள் வந்துகொண்டிருந்தாலும், மறுபுறம் அதிகளவு சர்ச்சைகளும் எழுந்துள்ளன. `குறிப்பிட்ட ஆலயங்களில் பலகாலம் பணிபுரிந்தோரின் உரிமை, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களின் பணி வாய்ப்பைப் பறிப்பது தவறு. அந்த ஆலயங்களில் பணிபுரிந்த 24 பேரை பணி செய்ய வேண்டாம் என்று வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்’ என்ற ரீதியில் கருத்துகளும், பதிவுகளும் சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டன. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

அர்ச்சகர் நியமனம்
அர்ச்சகர் நியமனம்

அரசுத் தரப்பில், "இதில் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை. ஏற்கெனவே பணியில் உள்ள அர்ச்சகர்களையோ, பட்டாச்சாரியர்களையோ திருக்கோயில்களில் இருந்து வெளியேற்றவில்லை. எவரையும் வெளியேற்றிவிட்டு, புதிய நியமனங்களைச் செயல்படுத்தவில்லை. ஓய்வு வயதைக் கடந்தவர்களுக்குப் பதிலாக... பணித் தேவை உள்ள இடங்களில் புதிய நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. ஓய்வு வயது கடந்தவர்களையும் வெளியேற்றவில்லை; அவர்கள் பணியாற்றவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது’’ என்று விளக்கம் அளித்துள்ளார், இந்து சமய அறநிலைய ஆட்சிதுறை அமைச்சர் சேகர்பாபு.

"இவை சமூகநீதியைப் பாழ்படுத்தும் நோக்கோடு பரப்பப்படும் பொய் அவதூறுகள். அனைவரும் அர்ச்சகராகலாம் என்பதைப் பொறுக்க முடியாமல் இதுபோன்ற தகவல்களைப் பரப்புகிறார்கள். அர்ச்சகர் நியமனத்தில் எவரையும் நீக்கிவிட்டு புதியவர்களை நியமிக்கவில்லை."
என்று தமிழக முதல்வரும் இன்று சட்டசபையில் அறிவித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பிரச்னை குறித்து ஆதங்கத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வரும், சிவாசார்யர்கள் மற்றும் ஆன்மிக அமைப்பினர், "ஆகமங்கள் கூறுவது போல முறைப்படி ஆகமப் பாடங்கள் பயின்றவர்கள் யாரானாலும் கோயில் அர்ச்சகர்கள் ஆகலாம். அதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் வெறும் 13 மாதங்கள் மட்டுமே பயின்று வருபவர்கள் எப்படி முழுமையான யாகங்கள், பூஜைகள், குடமுழுக்குகளைச் செய்ய முடியும்.

மேலும், பல ஆண்டுகளாகக் கோயிலில் பணிபுரிந்த பலரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. அரசுத் தரப்பில் ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள், அந்த வயதைக் கடந்தவர்களுக்குப் பதிலாகவே பணிநியமனம் செய்யபட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால், புதியவர்கள் நியமனம் செய்யப்பட்ட பல கோயில்களில் பல வருடங்களாகப் பணிபுரிந்த அர்ச்சகர்கள், சிவாசார்யர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குப் பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கவேண்டாமா?

இருளப்பசாமி உமாமகேஸ்வரர் கோயில்
இருளப்பசாமி உமாமகேஸ்வரர் கோயில்

அவர்கள், அவசர அவசரமாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். பணித் தகுதி வயதைக் கடந்துவிட்டபடியால், பணி நியமனம் வழங்கமுடியாது என்று நிராகரிக்கப்பட்டுள்ளார்கள். எனில், பணி நிரந்தரம் செய்யப்படுவோம் எனும் நம்பிக்கையில் பல வருடங்களாக அந்த ஆலயங்களில் பணிபுரிந்தவர்களின் நிலை என்னாவது? இது அவர்களின் உரிமையைப் பறிக்கும் செயல் அல்லவா?

இந்த வகையில், பல வருடங்களாக குறிப்பிட்ட ஆலயங்களில் பணிபுரிந்த இளம் வயது அர்ச்சகர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 35 வயது கடந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் நிராகரிக்கப்பட்ட நபர்களும் உண்டு.

மட்டுமன்றி, 2016-ம் ஆண்டு `ஆகம விதிகளுக்கு உட்பட்ட ஆலயங்களில் ஆகமவிதிகளுக்குப் புறம்பாக பணி நியனமம் செய்யக்கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்திருக்கிறது. அந்த வகையில் அரசின் இந்தப் பணி நியமனம் எவ்வகையில் பொருந்தும்?

எல்லாவற்றுக்கும் மேலாக, எத்தனையோ கோயில்கள் பூஜைக்கு வழியின்றி, பூஜைகள் செய்ய அர்ச்சகர்கள் இன்றி இருக்கின்றன. அது போன்ற கோயில்களில் போதுமான ஊதியத்துடன் பணி நியமனம் செய்யலாமே... அரசு ஏன் அதைச் செய்ய மறுக்கிறது?’’ என்கிறார்கள்.

இந்த நியமனம் குறித்த வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், அகில இந்திய ஆதிசைவ சிவாசார்யர்கள் சேவா சங்கம் சார்பில் வழக்குத் தொடுத்துள்ள இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பி.எஸ்.ஆர் முத்துக்குமாரிடம் பேசினோம்.

"நாளை வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், எந்த விவரத்தையும் இப்போது தர இயலாது. நாளை விசாரணைக்குப் பிறகு தருகிறேன்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயில், திருச்சி வயலூர் முருகன் கோயில், மாகாளிக்குடி காளியம்மன் கோயில் - முக்தீஸ்வரர் கோயில், தேனிமலை காளத்தீஸ்வரர் கோயில், திருக்கருகாவூர் பெருமாள் கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில், திருத்துறைப்பூண்டி கோயில், புதுக்கோட்டை நர்த்தன விநாயகர் கோயில் என ஆகம விதிக்குட்பட்ட கோயில்களிலேயே புதிய நியமனங்கள் நிகழ்ந்துள்ளனவாம்.

புதிய நியமனங்கள் நிகழ்ந்த ஆலயங்களில் நிலவரம் என்ன என்பதை விசாரித்தோம். பெரும்பாலும் குறிப்பிட்ட ஆலயங்களில் எவ்வித பிரச்னையும் இல்லை என்றே தெரியவருகிறது. காலி பணியிடங்களிலேயே புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை அறியமுடிந்தது.
கோயில்
கோயில்

`தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமப் பாளையம் காளத்தீஸ்வரர் ஆலயத்தில் பணிபுரிந்து வந்த அர்ச்சகர் நீலகண்டனை வெளியேற்றிவிட்டார்கள்’ என்ற தகவல் பரவவே, அதுகுறித்தும் விசாரித்தோம். அவர், பணிக்காலம் நிறைவடைந்த பின்னரே சென்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.

திருச்சி மாவட்டம் நாகநாதர் சுவாமி கோயிலில் காலியாக இருந்த அர்ச்சகர் பணியிடத்தில் தற்காலிக அர்ச்சகராக இருந்தவர் ஆனந்தன். இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாகத் தற்காலிக அர்ச்சகராகவே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்தக் காலி பணியிடத்தில் வேல்முருகன் என்ற அர்ச்சகரை அரசு நியமித்துள்ளது. இதில்தான் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. 6 வருடங்களாக வேலைபார்த்து வந்தவரை அப்பணியில் இருந்து நீக்கியதால் ஆனந்தன் ஆதங்கப்படுகிறார்.

சம்பந்தப்பட்ட கோயில்களின் அதிகாரிகளிடம் பேசினோம்,

“கோயில்களில் காலியாக இருந்த அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட பணியிடங்களில் தற்போது தகுதியுடையோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த காலிப் பணியிடங்களில் கடந்த சில மாதங்கள், ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர்கள் தற்காலிகப் பணியாளர்கள்தான். அந்தப் பணியிடங்களில் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் பணி ஏற்கும்போது, அவர்கள் பார்த்து வந்த தற்காலிகப் பணியை விட்டுச் செல்வது என்பது வழக்கமான நடைமுறைதான். தற்காலிக பணியில் இணையும்போதே நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுதான் பணியில் சேறுகிறார்கள். இதில் எந்த விதிமீறலும் கிடையாது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு