Published:Updated:

`இந்து சமயம்' பெயர் நீக்கப்பட்ட அறநிலையத்துறை அலுவலக போர்டு - போர்க்கொடி தூக்கிய இந்து அமைப்புகள்!

இந்து சமயம் என்ற பெயர் இல்லாமல் வைக்கப்பட்டுள்ள போர்ட்
இந்து சமயம் என்ற பெயர் இல்லாமல் வைக்கப்பட்டுள்ள போர்ட்

இது குறித்து சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் அமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜா புகைப்பட ஆதாரத்துடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்குப் புகார் அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 490 கோயில்கள் உள்ளன. திருவிதாங்கூர் மன்னர்கள் ஆண்ட கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை தாலுகாவை உள்ளடக்கிய கோயில்கள் அனைத்தும் சுசீந்திரம் இணைக்கப்பட்ட அல்லது இணைக்கப்படாத திருக்கோயில்கள் என்றே அழைக்கப்பட்டு வந்தன. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவை அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்கள் என்ற பெயரின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதன் தலைமை அலுவலகம் சுசீந்திரத்தில் அமைந்துள்ளது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜாகோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், வேளிமலை குமாரசுவாமி கோயில், திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோயில், பன்னிரு சிவாலயங்கள் எனப் பிரசித்திபெற்ற திருக்கோயில்கள் கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்களின் கட்டுப்பாட்டில் வருகின்றன. இந்தக் கோயில்களை நிர்வகிக்க இணை ஆணையர், தொகுதி கண்காணிப்பாளர்கள், கோயில் ஸ்ரீகாரியம் என அழைக்கப்படும் மேலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை அதிகாரிகள் உள்ளனர்.

நாஞ்சில் ராஜா
நாஞ்சில் ராஜா

நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா கோயில் வளாகத்தில் நாகர்கோவில் தொகுதி இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த போர்டில், 'தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை, கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள், சுசீந்திரம், கண்காணிப்பாளர் அலுவலகம் நாகர்கோவில் தொகுதி' என போடப்பட்டிருந்தது.

இதுகுறித்து சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் அமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜா புகைப்பட ஆதாரத்துடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்குப் புகார் அளித்தார். இதையடுத்து நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த போர்டு அகற்றப்பட்டது. இதுகுறித்து நாஞ்சில் ராஜா கூறுகையில், "இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கன்னியாகுமரி மாவட்ட கோயில்கள், தேவசம்போர்டு கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்டவைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

போர்டு அகற்றப்பட்ட நிலையில் அலுவலகம்
போர்டு அகற்றப்பட்ட நிலையில் அலுவலகம்

அப்போது நாகர்கோவில் நாகராஜா கோயில் கட்டுப்பாட்டில் உள்ள இந்து மத சித்திரா நூலகத்தைப் பார்வையிட்டார். அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தியுடன் நானும் கலந்துகொண்டேன். அமைச்சர் ஆய்வுசெய்தபோது இது 'சித்திரா இந்து சமய நூல் நிலையம்' என நான் சொன்னேன். அதற்கு அமைச்சர் சேகர்பாபு 'நூல் நிலையம் என வைத்திருப்பார்கள் இந்து நூல் நிலையம் என வராது' என்றார். ஆனால் இந்த நூலகத்தின் பெயர் சித்திரா இந்து மத நூல் நிலையம் என நான் விவாதம் செய்தேன்.

அதன் பிறகுதான் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து சமயம் என்பதை எடுத்துவிட்டு வெறும் அறநிலையத்துறை என வைத்துள்ளனர். இதுபற்றி நான் புகார் அளித்த பிறகு போர்டு அந்த இடத்தில் இருந்து மாயமாகியுள்ளது" என்றார்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம், "அந்த போர்டு, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அங்கே வைக்கப்பட்ட ஒன்று. புதிதாக அங்கே எந்த போர்டும் மாற்றப்படவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பு, அதை அங்கே யார் வைத்தார்கள் என்பதும் தெரியவில்லை. இப்போதுதான் அதைப் பார்த்துவிட்டு, சிலர் புகார் அளித்திருக்கிறார்கள். புகார் வந்ததும், அதற்கு மதிப்பளித்து அந்த போர்டை அகற்றிவிட்டோம். விரைவில் வேறு போர்டு வைக்கப்படும்" என்றார்.
அடுத்த கட்டுரைக்கு