Published:Updated:

`இந்து சமய அறநிலையத்துறை' எனப் புதிய போர்டு... கண்காணிப்பாளர் அலுவலக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

இந்து சமய அறநிலையத்துறை என புதிய போர்டு
இந்து சமய அறநிலையத்துறை என புதிய போர்டு

"இதற்கு முன்பு அந்த போர்டு வைத்தது யார் என்பது குறித்து தெரியவில்லை. இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் கவனமாக கண்காணிக்கப்படும்" என்றார் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள சுமார் 490 தேவசம்போர்டு கோயில்களும் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் என அழைக்கப்படுகின்றன. இதற்கு தலைமை அலுவலகம் சுசீந்திரத்தில் அமைந்துள்ளது.

திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் இருந்தே பிரசித்திபெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், வேளிமலை குமாரசுவாமி கோயில், பன்னிரு சிவாலயங்கள் என பழைமையான பல கோயில்கள் உள்ளன.

இந்தக் கோயில்கள் ஓர் இணை ஆணையரின் கண்கணிப்புக்கு வருகின்றன. மேலும் நிர்வாக வசதிக்காக தொகுதிவாரியாக பிரிக்கப்பட்டு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் அலுவலகம் நாகர்கோவில் நாகராஜா கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. வைக்கப்பட்டிருந்த போர்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்து சமய என்ற பெயர் இல்லாமல் வைக்கப்பட்ட பழைய போர்ட்
இந்து சமய என்ற பெயர் இல்லாமல் வைக்கப்பட்ட பழைய போர்ட்

அந்த போர்டில், 'தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை, கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் சுசீந்திரம், கண்காணிப்பாளர் அலுவலகம் நாகர்கோவில் தொகுதி' என போடப்பட்டிருந்தது. அதில் 'இந்து சமயம்' என்ற பெயர் விடுபட்டிருந்தது. இதுகுறித்து சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் அமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜா உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். மேலும் தி.மு.க அரசு வந்த பிறகு இந்து சமயம் என்ற பெயர் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய போர்டு அகற்றப்பட்டது.

`இந்து சமயம்' பெயர் நீக்கப்பட்ட அறநிலையத்துறை அலுவலக போர்டு - போர்க்கொடி தூக்கிய இந்து அமைப்புகள்!

இதுகுறித்து விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தத் தகவல் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து மிக வேகமாக புதிய போர்டு பொருத்தப்பட்டது. புதிய போர்டில் இந்து சமய அறநிலையத்துறை என முழுமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக எழுதப்பட்டு பொருத்தப்பட்ட புதிய போர்டு
இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக எழுதப்பட்டு பொருத்தப்பட்ட புதிய போர்டு

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த ஐந்து ஆண்டுகளாக பழைய போர்டு இருந்தது. அதை இதுவரை யாரும் கவனிக்கவில்லை. இப்போது பார்த்து சர்ச்சையை கிளப்பிவிட்டார்கள். விகடன் செய்தி தமிழக முதல்வர் கவனத்துக்குச் சென்றது. அதைத்தொடர்ந்து புதிய போர்டு அமைக்கப்பட்டு, நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுவிட்டது. இதற்கு முன்பு அந்த போர்டு வைத்தது யார் என்பது குறித்து தெரியவில்லை. இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் கவனமாகக் கண்காணிக்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு