Published:Updated:

சபரிமலை: "கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி; நெய்யபிஷேகமும் செய்யலாம்!"- தேவசம் அமைச்சர் அறிவிப்பு

சபரிமலை
News
சபரிமலை

"தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் கொண்டு செல்லும் நெய், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். சபரிமலை தரிசனத்துக்கு தினசரி 60,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்" என கேரள தேவசம் அமைச்சர் அறிவித்துள்ளார்.

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலகால மகரவிளக்கு பூஜைகள் நவம்பர் 16-ம் தேதி முதல் நடைபெற்றுவருகின்றன. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் மிகக்குறைந்த அளவே அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்த ஆண்டு பக்தர்கள் வருகையால் சபரிமலை களைக்கட்டுகிறது. ஆரம்பத்தில் 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் படிப்படியாக அந்த எண்ணிக்கை 40,000 ஆக உயர்த்தப்பட்டது. கார்த்திகை மாத தொடக்கத்தில் சுவாமி ஐயப்பன் சாலை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், பாரம்பர்ய நீலிமலை வழியாகவும் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பம்பா நதியில் நீராடும் வகையில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பம்பா நதி
பம்பா நதி

ஆனால், பக்தர்கள் தேங்காயில் அடைத்துக் கொண்டுச் செல்லும் நெய் ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படாமல் இருந்தது சபரிமலை செல்லும் பக்தர்களின் பெரும் மனக்குறையாக இருந்துவந்தது. பக்தர்கள் நெய்த் தேங்காயை உடைக்காமல், முழுதாக கவுன்ட்டரில் கொடுக்கும் நிலை இருந்துவந்தது. மேலும் உரிய ரசீதுபெற்று மற்றொரு கவுன்ட்டரில் அபிஷேக நெய் வாங்கிக்கொள்ளும் நடைமுறை இருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஐயப்பன் சந்நிதானத்தில் நெய்த் தேங்காயை உடைத்து, நெய்யை பக்தர்கள் நேரடியாக அபிஷேகத்துக்குக் கொடுத்தால்தான் சபரிமலை சென்று வழிபட்ட பூரண மன திருப்தி கிடைக்கும். கொரோனாவை காரணம்காட்டி பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யை அபிஷேகம் செய்ய தடை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணனின் அலுவலக செய்திக்குறிப்பு மூலம் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியகியுள்ளது.

சபரிமலை தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள்
சபரிமலை தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள்

"பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யை நேரடியாக சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம். தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் கொண்டு செல்லும் நெய், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். சபரிமலை தரிசனத்துக்கு தினசரி 60,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கானன பாதை என அழைக்கப்படும் பெருவழி பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்" என தேவசம்போர்டு அமைச்சரின் அலுவலக செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.