மயிலாடுதுறை காவிரித் துலாக்கட்டத்தில் 16 தீர்த்தக் கிணறுகள் அமைந்துள்ள புனிதமான இடத்தில் ஆடி அமாவாசை தினமான இன்று (18.7.2022) முன்னோர்களுக்கு திதி கொடுத்து பலிகர்ம பூஜைகள் செய்து, பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை நகரின் நடுவே காவிரி ஆறு ஓடுகிறது. காசிக்கு நிகரான ஆறு புனிதமான தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். ரிஷப தேவருக்கு ஏற்பட்ட செருக்கை அடக்க சிவபெருமான் அளித்த சாபம் நீங்க, ரிஷபதேவர், இங்குபாயும் காவிரியில் நீராடியதாக புராண வரலாறு கூறுகிறது. இதனால், காவிரி துலாக்கட்டம், ரிஷப தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இங்கு 16 புண்ணிய தீர்த்தக் கிணறுகள் காவிரி ஆற்றின் நடுவில் அமைந்துள்ளன. இதனால், இங்கு நீராடுவது பிறவிப் பாவம் போக்கும் புண்ணிய இடமாகக் கருதப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி உள்ளிட்ட காலங்களில் இங்கு நீராடி, முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காவிரி ஆற்றில் ஆடி அமாவாசை நாளில் பக்தர்கள் கூடி வழிபடத் தடை விதிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் இந்தாண்டு தடை நீக்கப்பட்டதுடன், காவிரியில் அதிகளவு தண்ணீர் செல்வதால் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி அளித்து வழிபாடு செய்தனர்.