Published:Updated:

தி.மலை: 3000 ஆண்டுகள் பழைமையான குத்துக்கல், சிற்பங்கள், கல்வெட்டு கண்டுபிடிப்பு! சொல்லும் சேதி என்ன?

"நம் முன்னோர்கள் காலத்திய தடையங்கள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெறும் இவ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டால் நமக்கு பல புதிய தகவல்களும் கிடைக்கக்கூடும்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ளது வெடால் கிராமம். இந்தக் கிராமத்தில்தான் 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த குத்துக்கல், முதலாம் கோப்பெருஞ்சிங்கன் காலத்தைய கல்வெட்டு, இயற்கை குகையில் அமைந்த அழகிய சிற்பங்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை திருவண்ணாமலை மரபுசார் அமைப்பினர் கண்டறிந்துள்ளனர்.
5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை; முன்னோர்கள் ஆயுதம் தீட்டிய இடம் கண்டுபிடிப்பு! வரலாறு சொல்வது என்ன?

இது தொடர்பாக இந்த அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசினோம். "வெடால் கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவர், தங்கள் கிராமத்தில் உள்ள குளத்தின் அருகில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக தகவல் தெரிவித்தார். அதன்படி நண்பர்கள் இருவருடன் இணைந்து அந்த ஊருக்கு கள ஆய்வு மேற்கொள்ள சென்றோம். ஊரின் மேற்கு பகுதியில் ஒரு மலை தென்படுகிறது. அதன் அடிவாரத்தில் உள்ள குளம் ஒன்றில், பெரிய பாறையின் மீது 13 வரிகளில் கல்வெட்டு காணப்பட்டது.

பழைமையான கல்வெட்டு
பழைமையான கல்வெட்டு

சற்று உடைந்த நிலையில் காணப்பட்ட கல்வெட்டை சுத்தம் செய்து ஆய்வு செய்தோம். அந்தக் கல்வெட்டு 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவ மன்னன் முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டு என்பதை கண்டறிந்தோம்.

'ஸ்வஸ்திஸ்ரீ அவனி ஆளப்பிறந்தான்' என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது இக்கல்வெட்டு. இதில் பெரும்பாலான பகுதி நீரில் மூழ்கியபடியே இருந்ததால் அந்தக் கல் சேதமடைந்து, கல்வெட்டும் சிதைந்துள்ளது. இருந்தபோதிலும் அதில் கிடைத்த தகவலை வைத்து பார்க்கும்போது அது ஒரு 'பாடல் கல்வெட்டு' என்பதை அறியமுடிகிறது.

இந்த கல்வெட்டில் கோப்பெருஞ்சிங்கனை, 'காடவராய மகனார்' என்றும், 'தொண்டை நாடு கொண்ட பல்லவாண்டராயன்' என்ற செய்தியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டில்... "வெண்குல தொண்டரைய குலவேந்தன், திசை பூவன காடவராயன், செங்கோற் காடவன், கனலெழியராயன்" என்று கோப்பெருஞ்சிங்கனை சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குத்துக்கல்
குத்துக்கல்
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வயலூர், அத்தி போன்ற ஊர்களில் இது போன்ற பாடல் வடிவிலான கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டு ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இது கோப்பெருஞ்சிங்கனின் தமிழ்ப்பற்றை பறைசாற்றும் மேலும் ஒரு கல்வெட்டு ஆகும்.
திருவண்ணாமலை: சேதமடைந்த நடுகற்களை மீட்டு QR Code மூலம் வரலாற்றைத் தெரியப்படுத்தும் ஆய்வுக் குழு!

இந்த மலையடிவாரத்தை ஒட்டியபடியே மேலும் ஆய்வு செய்தபோது, 3000 வருடத்திற்கு மேல் பழைமையான குத்துக்கள் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தோம். பொதுவாக வரலாற்றுக்கு முந்தைய காலங்களில், இனக் குழுவில் வாழ்ந்த ஒருவர் இருக்கும்போது அவரின் நினைவாகக் குத்துக்கல் வைத்து வழிபடுவது வழக்கமாக இருந்துள்ளது. இன்னும் பல ஊர்களில் குத்துக்கல் மூத்தோர் வழிபாட்டு முறையின் அங்கமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கு காணப்படும் குத்துக்கல்லின் முனையில் சிறிய வட்ட வடிவிலான பகுதி தேய்ந்து பள்ளமாகக் காணப்படுகிறது. சங்கம் மற்றும் சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் வேட்டைக்கும், போருக்கும் செல்லும்போது தங்களின் ஆயுதங்களை இதுபோன்று வழிபடும் குத்துக்களின் மீது சேய்த்து எடுத்துச் சென்றால் அக்காரியம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் இருந்துள்ளது. அதேபோல, இந்தக் குத்துக்கல்லின் மீது ஆயுதங்களைத் தீட்டியதால் அந்தக் குழி ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அனுமானிக்க முடிகிறது. இந்தக் குத்துக்கல்லின் அருகே கல்வட்டம் ஒன்றும் பாதிக்குமேல் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இதன்மூலம் இவ்விடத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் வாழ்ந்து இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.

அதனைத் தொடர்ந்து அங்கு உள்ள மலையின் மீது சுமார் 100 அடி ஏறினால் இயற்கையாக அமையப்பெற்ற குகையில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 20 அடி தொலைவில் உள்ள மற்றொரு இயற்கை பாறையிலான குகையில் புடைப்பாக வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் முனிவர் ஒருவர் லிங்கத்தை வணங்கிய நிலையில் உள்ளவாறு தத்ரூபமாகச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளனர். அதனருகே பிள்ளையார் சிற்பமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவையாவும் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். வள்ளி - தெய்வானை உடன் முருகர் சிற்பம் காணப்படும் இடத்தில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலத்தில், கோபுரத்துடன் கூடிய கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

செஞ்சி: அழியும் தறுவாயில் இருக்கும் பல்லவர் காலத்துப் பொக்கிஷம் காக்கப்படுமா? வலுக்கும் கோரிக்கை!

இந்தக் கோயில் 'கரைகண்டேஸ்வரர் குடைவரை கோயில்' என இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இங்கு குத்துக்கள் காணப்பட்ட இடத்தின் அருகில் விவசாயிகள் சிலர் நிலத்தில் உழுதபோது சுமார் 2000 வருடங்கள் பழைமையான பானை ஓடுகள் நிலத்தின் மேல் பரப்பிலேயே கிடைத்துள்ளது. இதனை வைத்து பார்க்கும்போது இப்பகுதியில் நம் முன்னோர்களின் வாழ்வியல் தொடர்ந்து வந்துள்ளதை அறிய முடிகிறது. மேலும் இவ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டால் நமக்கு பல புதிய தகவல்களும் கிடைக்கக்கூடும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு