Published:Updated:

"எங்க மண்ணுல கிடைச்ச சாமி இங்கதான் இருக்கும்!"- கரையான்குறிச்சியில் நிகழ்ந்த பக்திப் போராட்டம்

விஷ்ணு சிலை
விஷ்ணு சிலை

இந்தத் தகவல் அரசு அதிகாரிகளுக்குத் தெரிய வர விஷ்ணு சிலையை எடுத்துச் செல்ல வந்தனர். ஆனால் பொதுமக்கள் சிலையை எடுத்துச் செல்ல விடமாட்டோம் என சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் அருகே விவசாயி ஒருவர் வீடு கட்ட குழி எடுத்த போது 8 அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை கிடைத்தது. அந்தச் சிலைக்கு கிராம மக்கள் பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தியதுடன் அதிகாரிகள் சிலையினை எடுத்த செல்ல விடாமல் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அருகே உள்ள கரையான் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். விவசாய வேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் வீடு கட்டுவதற்காக குழி எடுத்தபோது பீடத்தோடு சேர்த்து 9 அடி உயரம் கொண்ட பழைமையான பெருமாள் சிலை பூமிக்கடியல் இருந்து கிடைத்துள்ளது. இதனையறிந்த அப்பகுதியினர் அந்த இடத்தில் திரண்டதோடு பெருமாள் சிலைக்குப் பால் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்ததுடன் தீபம் காண்பித்து வழிபட்டனர். இந்தத் தகவல் அரசு அதிகாரிகளுக்குத் தெரியவர பெருமாள் சிலையை எடுத்துச் செல்ல வந்தனர். ஆனால் பொதுமக்கள் சிலையை எடுத்துச் செல்ல விடமாட்டோம் என சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விஷ்ணு சிலை
விஷ்ணு சிலை

இது குறித்து சரவணனிடம் பேசினோம். "நான் வீடு கட்டுறதுக்கு பில்லர் அமைக்கறதுக்கு ஆட்களை வைச்சு நேற்று குழி எடுத்தேன். சில அடி ஆழம் தோண்டிய பிறகு கடப்பாரையில் ஏதோ ஒன்று பட்டு சத்தம் கேட்டது. நாங்க பெரிய கல்லு உள்ள இருக்குதுனு நெனச்சோம். அப்புறம் லேசா தோண்டினோம். கோபுரக் கலசம் மாதிரி இருந்துச்சு. அப்பறம் வேலையை நிறுத்திட்டோம்.

இன்னைக்கு வழக்கம்போல குழி எடுத்தோம். அப்போதான் உள்ள இருப்பது சாமி சிலைனு தெரிஞ்சிச்சு. இதையடுத்து எங்க பகுதி விஏஓவிற்குத் தகவல் கொடுத்த பிறகு சிலைக்குச் சேதமாகாம தோண்டினோம். 9 அடி உயரத்துல பழைமையான பெருமாள் சிலை கிடைச்சுது.

அப்பறம் எங்க ஊர்காரங்க என் இடத்துக்கு வந்துட்டாங்க. பெருமாள் சிலைக்குப் பால் அபிஷேகம் செஞ்சு பூ மாலை போட்டு தீபாரதணை காட்டி பக்தியோட வழிபட்டாங்க. அப்பறம் ஆர்.டி.ஓ, தாசில்தார் போன்ற அதிகாரிகள் வந்தாங்க. அவங்க பெருமாள் சிலையை எடுத்துட்டு போக நடவடிக்கை எடுத்தாங்க.

சரவணன்
சரவணன்

எங்க ஊர் மக்கள் இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு போராட்டம் நடத்தினாங்க. பெண்கள் அருள் வந்து ஆடினாங்க. அப்போ, 'எங்க மண்ணுல கிடைச்சத நாங்க விடமாட்டோம். இங்கதான் இந்த சாமி இருக்கும்'னு அருள்வாக்குச் சொன்னாங்க. ஊர் பெரியவர்கள், 'எங்க ஊர்ல கிடைச்ச சிலையை நாங்களே வச்சுக்குறோம். கோயில் கட்டி அதில் அந்தச் சாமி சிலையை வைத்து பூஜைகள் செஞ்சு வழிபடறோம். எங்களிடமே விட்டுடுங்க'னு முறையிட்டாங்க.

'பூமிக்கடியில் சிலை கிடைத்தால் அது அரசுக்கு சொந்தமானது. இந்தச் சிலை எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பது உள்ளிட்ட ஆய்வுகள் செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஒத்துழைப்பு கொடுங்க'னு அதிகாரிகள் கேட்டாங்க. ஆனா, சிலையை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவிச்சு ஆண்கள், பெண்கள்னு பலரும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினாங்க. இதனால கொஞ்ச நேரம் பரபரப்பா இருந்துச்சு!" என்றார்.

விஷ்ணு சிலை
விஷ்ணு சிலை

ஊர் பெரியவர் ஒருவர் கூறுகையில், "எங்க ஊர்ல சிவன் கோயில் ஒண்ணு இருக்கு. அந்தச் சிலை, இந்தப் பெருமாள் சிலை கிடைச்ச 500 மீட்டர் தொலைவுல சுமார் 100 வருஷத்துக்கு முன்னாடி குளம் தூர் வாரினப்போ கிடைச்சது. உடனே எங்க முன்னோர்கள் கோயிலைக் கட்டி அதில் சிவன் சிலையை வெச்சாங்க. இன்னைக்கு வரைக்கும் அங்க வழிபட்டு வர்றோம். அதே மாதிரி இங்க கிடைச்சிருக்கும் பெருமாள் சிலைக்கும் கோயில் கட்டி அதை வெச்சு வழிபாடு செய்யணும்" எனக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு