கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருச்சிற்றம்பலமேடை என்று அழைக்கப்படும் கனகசபை மீது ஏறி நின்று பக்தர்கள் இறைவனை வழிபடுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு மற்றும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டலின்படி திருச்சிற்றம்பல மேடை தரிசனத்தை நிறுத்தியது தீட்சிதர்கள் தரப்பு.
தொற்று கட்டுக்குள் வந்ததால் கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்திய பிறகும், திருச்சிற்றம்பல தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க மறுத்தனர் தீட்சிதர்கள். அதே நேரம் ஒருசில தீட்சிதர்கள், திருச்சிற்றம்பல மேடை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

“திருச்சிற்றம்பல மேடை தரிசனத்தை ஏலம் எடுப்பதில் தீட்சிதர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால்தான், பக்தர்களை அனுமதிக்க மறுக்கிறார்கள்” என்று குற்றம் சுமத்தினார்கள் பக்தர்கள். அதையடுத்து, திருச்சிற்றம்பல மேடையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஜெமினி ராதா என்பவர் நீதிமன்றத்தை அணுகினார். அதனடிப்படையில், திருச்சிற்றம்பல மேடையில் ஏறி தரிசனம் செய்யப் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மே மாதம் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. ஆனால் அரசாணை வெளியிட்ட பிறகும் தங்களை திருச்சிற்றம்பல மேடையில் நின்று தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தர்களின் புகார்கள் குவிந்தன.
அதனடிப்படையில் பக்தர்கள் கனகசபை மீது நின்று இடையூறின்றி தரிசனம் செய்வதற்கு குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தார் இந்து அறநிலையத்துறையின் இணை ஆணையர் சி.ஜோதி. மேலும், அந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் அதிகாரிகள், அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தேதியில் நடராஜர் கோயிலில் ஆஜராகி, கனகசபை மேடை தரிசனத்தைக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாகக் குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரிகள், கனகசபை தரிசனத்திற்குப் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பொது தீட்சிதர்கள் மற்றும் அவர்களது வழக்கறிஞர் சந்திரசேகர், “நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு அரசாணை பிறப்பிக்க, இந்து அறநிலையத்துறைக்கு எந்தவித அதிகாரமுமில்லை.
இந்த சபாநாயகர் கோயில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தனி சமயப் பிரிவினரான பொது தீட்சிதர்களின் நிர்வாகத்தில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த நிர்வாகத்திலுள்ள கோயிலின் தரிசன முறையில் அரசு எந்தவித அரசாணையும் பிறப்பிக்க முடியாது. எந்த தேவஸ்தானமாக இருந்தாலும், தேவஸ்தானத்தைக் கேட்டுத்தான் தரிசன முறை நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. கோயில் நிர்வாகத்தைக் கேட்காமல் வேண்டுமென்றே, கோயில் எதிர்ப்பாளர்களின் தூண்டுதலின்பேரில் பொது தீட்சிதர்களுக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் இந்த அரசாணையையும், இந்தக் குழுவையும் இந்து அறநிலயத்துறை நியமித்திருக்கிறது” என்றார்.
இது தொடர்பாக அறநிலையத்துறையின் இணை ஆணையர் ஜோதியிடம் கேட்டபோது, “குழு அமைத்ததற்கு ஆட்சேபனை தெரிவித்து எங்களுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை. அவர்கள் அப்படி ஆட்சேபனை தெரிவப்பதாக இருந்தால் நீதிமன்றத்தை அணுகலாம்” என்று முடித்துக்கொண்டார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.