Published:Updated:

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை இன்று மாலை திறப்பு; புதிய மேல்சாந்தி பொறுப்பேற்கிறார்!

சபரிமலை

சபரிமலை புதிய மேல்சாந்தியின் கையைப் பிடித்து ஐயப்ப சன்னிதானத்துக்கு அழைத்துச் செல்லும் தந்திரி ஐயப்பன் மூல மந்திரமும், பூஜை முறைகளையும் உபதேசிப்பார்.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை இன்று மாலை திறப்பு; புதிய மேல்சாந்தி பொறுப்பேற்கிறார்!

சபரிமலை புதிய மேல்சாந்தியின் கையைப் பிடித்து ஐயப்ப சன்னிதானத்துக்கு அழைத்துச் செல்லும் தந்திரி ஐயப்பன் மூல மந்திரமும், பூஜை முறைகளையும் உபதேசிப்பார்.

Published:Updated:
சபரிமலை
ண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் திருநடை இன்று மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திருநடையைத் திறக்கிறார்.

பின்னர் மாளிகைப்புறம் சன்னிதான மேல் சாந்திக்குக் கோயிலுக்கான சாவி மற்றும் திருநீறு வழங்கப்படும். தொடர்ந்து பதினெட்டாம் படியில் இறங்கிச் சென்று ஆளி நெருப்பு பற்றவைக்கப்படுகிறது.

அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்துக்குச் செல்வதற்காக பதினெட்டாம் படி திறக்கப்படுகிறது. ஏற்கெனவே சபரிமலை புதிய மேல்சாந்தியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கண்ணூரைச் சேர்ந்த ஜயராமன் நம்பூதிரி, மாளிகைப்புற சன்னிதானத்துக்கு ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோர் மேல்சாந்தியாக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சபரிமலை புதிய மேல்சாந்தியின் கையை பிடித்து ஐயப்ப சன்னிதானத்துக்கு அழைத்துச் செல்லும் தந்திரி ஐயப்பன் மூல மந்திரமும், பூஜை முறைகளையும் உபதேசிப்பார்.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியான நாளை அதிகாலை 4 மணிக்குப் புதிய மேல்சாந்தி ஜயராமன் சபரிமலை திருநடையைத் திறந்து பூஜைகள் மேற்கொள்வார். அதிகாலை 4.30 மணி முதல் 11.30 மணிவரை நெய்யபிஷேகம் நடைபெறும். டிசம்பர் மாதம் 26-ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். டிசம்பர் 27-ம் தேதி மதியம் மண்டல பூஜையும் நடைபெறும். அன்று மாலை நடை சார்த்தபடும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்கு ஜோதி தரிசனம் நடைபெறும். ஜனவரி 20-ம் தேதி சபரிமலை நடை சார்த்தப்படுகிறது.

சபரிமலை தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் முன் பதிவு அவசியம். ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்கள் எருமேலி, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்துகொள்ளலாம். இதற்காக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் எதாவது ஒன்றின் ஒரிஜினல் கையில் வைத்திருக்க வேண்டும். கேரளா மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நிலக்கல்லுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிலக்கல்லில் இருந்து ஒரு நிமிடத்துக்கு ஒரு பேருந்து பம்பைக்குப் புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பம்பை
பம்பை

ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களின் ஆவணங்கள் பம்பையில் ஸ்கேன் செய்தபிறகு மலை ஏற அனுமதிக்கப்படுகின்றனர். பம்பையில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எருமேலியில் இருந்து கரிமலை வழியாகப் பெருவழிப் பாதையிலும், புல்மேடு பாதைவழியாக சபரிமலை செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பம்பையில் பக்தர்கள் வசதிக்காகத் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இருமுடி கட்டுகளில் பிளாஸ்டி பொருட்கள் கொண்டுவரவேண்டாம் என கேரள அரசு அறிவித்துள்ளது.