மாற்றம் பிறக்க, வாழ்க்கை சிறக்க... தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை #AshWednesday

இயேசு கிறிஸ்து தன் இறைப்பணிவாழ்வைத் தொடங்கும் முன்பு 40 நாள்கள் நோன்பிருந்ததைச் சுட்டிக்காட்டி இந்த வழக்கம் அறிமுகம் செய்யப்பட்டது.
மரணிக்கப் பிறந்தவர்
விண்ணின் சுதன்
அதை தரணிக்குச் சொல்லுது
சாம்பல் புதன்
சாம்பல் புதனில் மாற்றம் பிறக்கும்,
பாவம் அழிந்தால் வாழ்க்கை சிறக்கும்.
நெருப்பில் குருத்து ஓலைகள் இறக்கும்,
நேசன் உயிர்ப்பு விண்ணைத் திறக்கும்.
மக்களின் பாவங்களை ஏற்று அவர்களுக்காக உயிரைத் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் பாடுகளை உலகிற்குச் சொல்லத் நம்மை தயார் செய்யும் நாளாக `சாம்பல் புதன்' (Ash Wednesday) இருக்கிறது. இயேசு கிறிஸ்து தன் இறைப்பணிவாழ்வைத் தொடங்கும் முன்பு 40 நாள்கள் நோன்பிருந்ததைச் சுட்டிக்காட்டி இந்த வழக்கம் அறிமுகம் செய்யப்பட்டது. இன்றிலிருந்து கிறிஸ்தவர்களின் தவக்காலம், தொடங்குகிறது.

தவக்காலத்தில், 18 வயதுக்கு மேற்பட்டோர் 60 வயதுக்கு உட்பட்டோர் அனைவரும் வாரத்தில் ஒருநாளாவது உண்ணா நோன்பு இருக்க வேண்டும். உண்ணா நோன்பு என்பது காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிகழ்வாகும். விவிலியத்தில், நோவா காலத்தில் 40 நாள்கள் இரவும் பகலும் மழை பெய்தது. இஸ்ரவேல் மக்கள் 40 ஆண்டுகளாகப் பாலைவனத்தில் கடவுளால் நெறிப்படுத்தப்பட்டனர்.

மோசே சீனாய் மலையில் 40 நாள்கள் தங்கியிருந்து திருச்சட்டம் பெற்றார். இயேசு அலகையால் சோதிக்கப்படுவதற்கு முன் 40 நாள்கள் உண்ணா நோன்பிருந்தார். இவற்றின் அடிப்படையில் 40 நாள்கள் என்பது வருந்தி மனம் மாற்றம் பெற்று, இறைவனின் கொடைகளையும் வரங்களையும் பெறும் காலமாகக் கருதப்படுகிறது.
தற்போது நமக்குக் கிடைத்த இந்த 40 நாள்களும் மனமாற்றத்திற்கான ஒரு காலமாகவே கருதப்படுகிறது. மனிதர்கள் தங்களின் மனம் போன போக்கில் பாவங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மனம் திருப்புவதற்கு ஒரு வாய்ப்பாகத் தவக்காலத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இதற்கு அடையாளமாகவே நெற்றியில் சாம்பல் பூசப்படுகிறது. சாம்பல் தவத்தின் தொடக்கம். தவங்கள் மீட்பில் கொண்டு சேர்க்கும். மனிதன் தன்னை உணர்ந்து மனம் திரும்பி வர வேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாக உள்ளது.
`இப்போதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்துடன் என்னிடம் திரும்பி வாருங்கள்' என்கிறார் ஆண்டவர்.

அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், பொறுமை உள்ளவர், பேரன்பு மிக்கவர் - என யோவேல் இரண்டாம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் விவிலியம் படித்தல், ஜெபம் செய்தல், நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களுக்காக மனம் வருந்துதல், உண்ணா நோன்பிருந்து ஜெபித்தல், பிறருக்கு உதவி செய்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்கலாம். இந்த வருடம், பிப்ரவரி 26-ம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கும் தவக்காலம், ஏப்ரல் 5-ம் தேதி குருத்தோலை ஞாயிறும், ஏப்ரல் 09-ம் தேதி புனித வியாழனுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 10-ம் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனிதவெள்ளி அனுசரிக்கப்பட்டு, 12-ம் தேதி இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தத் தவக்காலத்தில், நாம் மனம் திரும்பி, நம் பாவங்களை ஏற்றுக்கொண்டு, பிறர் மீது வைத்துள்ள கோபம், பொறாமை, வஞ்சகம், பழி வாங்கும் எண்ணம் ஆகியவற்றைத் தவிர்த்து, அன்பு, கருணை, இரக்கம் ஆகிய குணங்களைப் பெற்று, நம்முடைய மண்ணுலக வாழ்வை, நாம் செய்யும் இரக்கச் செயல்களால் அழகாக்குவோம். அதற்கு ஒரு வாய்ப்பாக இந்தத் தவக்காலத்தைப் பயன்படுத்துவோம். சாம்பலை நெற்றியில் பூசிக்கொண்டு பாவத்திலிருந்து விடுதலை பெறத் தயாராவோம்.