Published:Updated:

பண்டர்பூரில் உற்சாகமிழந்த ஆஷாதி ஏகாதசி விழா - முதல்வர் உத்தவ் மகாபூஜை செய்து வழிபாடு!

விட்டல் கோயிலில் முதல்வர் உத்தவ் உத்தவ் தாக்கரே வழிபாடு
விட்டல் கோயிலில் முதல்வர் உத்தவ் உத்தவ் தாக்கரே வழிபாடு

ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் பண்டர்பூரில் நடக்கும் ஆஷாதி ஏகாதசி விழா இந்த ஆண்டு பொலிவு இழந்து காணப்பட்டது. முதல்வர் உத்தவ் தாக்கரே தனது மனைவியுடன் அதிகாலையில் பூஜை செய்து விட்டல் பகவானை வழிபட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் பண்டர்பூரில் உள்ள விட்டல் மந்திர் மகாராஷ்டிராவில் உள்ள புனித ஸ்தலங்களில் மிகவும் முக்கியமானது ஆகும். இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆஷாதி ஏகாதசியன்று மகாராஷ்டிரா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வர்காரி பக்தர்கள் கால்நடையாக வந்து விட்டல் பகவானை வழிபடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வர்காரி கால்நடை யாத்திரைக்கு மாநில அரசு தடை விதித்திருந்தது. வர்காரி யாத்திரையை அனுமதிக்கவேண்டும் என்று கோரி விஷ்வ இந்து பரிஷத் போராட்டமும் நடத்தியது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே
File Photo

செவ்வாய்க்கிழமை ஆஷாதி ஏகாதசி விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து பாரம்பர்ய முறைப்படி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது மனைவியுடன் அதிகாலை 2.30 மணிக்கு மகாபூஜை செய்து விட்டல் மற்றும் ருக்மனி தேவியை வழிபட்டார். அவருடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரேயும் கலந்து கொண்டார். கொரோனா விரைவில் ஒழியவும், மகாராஷ்டிராவில் உள்ள அனைவரின் நலனுக்காகவும் பூஜை செய்ததாக உத்தவ்தாக்கரே பின்னர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

முதல்வருடன் ஒவ்வொரு ஆண்டும் வர்காரி இனத்தை சேர்ந்த ஒரு தம்பதியும் பூஜை செய்ய அனுமதிக்கப்படும். இந்த ஆண்டு கேசவ் கோல்தே மற்றும் இந்துபாய் தம்பதி முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன் சேர்ந்து பூஜை செய்தனர். புனேயில் இருந்து ஆன்மிக குருக்கள் தியானேஷ்வர் மற்றும் துகாராம் ஆகியோரின் காலணிகள் ஒவ்வொரு ஆண்டும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பண்டர்பூர் எடுத்து வரப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆன்மிக குருக்களின் காலணிகள் அலங்கரிக்கப்பட்ட பஸ் ஒன்றில் குறைந்த அளவு வர்காரி பக்தர்களுடன் பண்டர்பூர் கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

`அம்பிகையின் சிறுவிரல் மோதிரம் ஆதிசேஷன்' என்றால் பிரபஞ்சத்தில் பெரியது எது? - தினம்தோறும் திருவருள்

பூஜைக்கு பிறகு உத்தவ் தாக்கரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

"இங்கு லட்சக்கணக்கான வர்காரி பக்தர்களை பார்த்திருக்கிறேன். கடல் போன்று பக்தர்கள் கூட்டத்தை பார்த்திருக்கிறேன். அது போன்ற கூட்டத்தை மீண்டும் காண விரும்புகிறேன். எனவே விரைவில் கொரோனா ஒழிய வேண்டும் என்று விட்டல் பகவானிடம் வேண்டிக்கொண்டேன். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கால்நடையாக நடந்தே விட்டல் மந்திருக்கு வருவது வழக்கம். அப்படி வருபவர்களில் ஏராளமானோர் தரிசனத்திற்காகக் கருவறைக்குக் கூட செல்லாமல் வெளியிலிருந்து சாமி கும்பிட்டுவிட்டு கடமை முடிந்ததாகச் செல்வதுண்டு.

வர்காரி பக்தர்கள் (கோப்பு காட்சி)
வர்காரி பக்தர்கள் (கோப்பு காட்சி)

இந்தப் பக்திதான் பக்தர்களை கால்நடையாக வரவைக்கிறது. இதுவே நமது மாநிலமும், நாடும் இணைந்து இருக்க வலுவான அடித்தளமாக அமைக்கிறது. பண்டர்பூரில் மகாபூஜை செய்ய எனக்கு அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்கள், கற்கள், சிலைகள் ஏதோ ஒன்றை நமக்கு உணர்த்துகின்றன. இந்தப் பாரம்பர்யத்தை உலகத்திற்கு வெளிப்படுத்தும் திட்டத்தை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு